மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இயங்கிவரும் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதில் பாகுபாடு!

 

மக்கள் அதிகாரம் – பத்திரிக்கை செய்தி

31.03.2023

தமிழ்நாடு மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இயங்கிவரும் அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை என்பது ஒரு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகும்.

இந்த கல்லூரியில் ஜூனியர் 1-ல் 50 மாணவர்கள், ஜூனியர் 2-ல் 50 மாணவர்கள் 50 மற்றும் SVS-ல் படித்த 45 மாணவர்கள் என மொத்தம் 145 மாணவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர், இந்நிலையில் மாணவர்களுக்கு கடந்த  4  மாத காலமாக (செப்டம்பர் 2022 முதல் டிசம்பர் 2022 வரை) ஊக்கத் தொகை (4*25000 = 1 இலட்சம்)   கல்லூரி நிர்வாகத்தால் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

இது குறித்து அம்மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் மனு அளித்த போது நிதி கையிருப்பு இல்லை என்று கூறியுள்ளார். தொடர் முயற்சிக்கு பிறகு, 30.03.2023 அன்று  கல்லூரிக்கு நிதி  வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஜூனியர் 1-ல் 50 மாணவர்களுக்கும் மற்றும் ஜூனியர் 2-ல் 50 மாணவர்களுக்கும் நிலுவையில் உள்ள ஊக்க தொகை வழங்கப்பட்டது. ஆனால் SVS கல்லூரி மாணவர்கள் 45 பேருக்கும் வழங்கப்படவில்லை.  இதனை  அறிந்து  நிர்வாகத்தை தொடர்பு கொண்டு கேட்ட மாணவர்களிடம்  பட்ஜெட் இல்லை என்று கல்லூரி நிர்வாகம் பதிலளித்துள்ளது..

ஊக்க தொகை வழங்கப்படாத மாணவர்கள்  கள்ளக்குறிச்சியில் உள்ள SVS என்ற தனியார் கல்லூரியில் 2014 முதல் 2016 ஆம் ஆண்டில் BHMS என்ற படிப்பு படித்த மாணவர்கள் ஆவர்.  அந்த கல்லூரியில் மூன்று மாணவிகள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டனர். இக்கொலைக்கு SVS கல்லூரி தாளாளர் வாசுகியும் அவரது கணவர் சுப்ரமணியமும் தான் காரணம் என அப்போது கைது செய்யப்பட்டதை தமிழ்நாடு மக்கள் நன்கு அறிவர். இதனைத் தொடர்ந்து  அக்கல்லூரி அரசினால் இழுத்து மூடப்பட்டது,

இதனை அடுத்து அங்கு படித்த 45 மாணவர்களும் அரசு உத்தரவு படி மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் உள்ள அரசு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் படித்து வருகிறார்கள். இம்மாணவர்கள் அரசு நடத்திய அனைத்து தேர்வுகளிலும் முறையாக தேர்ச்சி பெற்ற பிறகே பயிற்சி, மருத்துவர்களாக பணியாற்றி வருகிறார்கள், ஆனால் SVS என்ற தனியார் கல்லூரியில் படித்த ஒரே காரணத்திற்காக இவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கபடவில்லை என அறிய முடிகிறது.

இம்மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் பாரபட்சம் காட்டி ஊக்க தொகை வழங்காமல் இருப்பது மிகவும் தவறானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும். எனவே இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை இணை இயக்குனர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட 45 மாணவர்களுக்கும் நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும். அதேபோல் மாணவர்களிடையே பாரபட்சம் கட்டும் முதல்வர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு

முத்துக்குமார்
மாநில செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு,
97901 38614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன