மராட்டிய விவசாயிகளின் போராட்டம் : விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறுமா?

விவசாயிகள் ஒன்று திரண்டு போராடும்போதெல்லாம், அப்போராட்டத்தை கண்டு பயந்து, விவசாயிகளின் கோரிக்கைகளை செயல்படுத்துவதாக ஏய்க்கின்றன ஆளும் வர்க்கங்கள். ஆனால் விவசாயிகளின் கோரிக்கைகளை அவை ஒருபோதும் நிறைவேற்றுவதில்லை.

மோடி அரசின் விவசாய விரோத வேளாண் சட்டங்களுக்கு  எதிராக புதுதில்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்திற்கு பிறகு, மராட்டிய விவசாயிகள் ஒரு நீண்ட பயணத்தை சமீபத்தில் நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில் வெங்காயத்தின் விலை கிலோவிற்கு ரூ 20 முதல் 30 வரை விற்கின்றது ஆனால் மராட்டிய மாநிலம் சோலாப்பூரில் ஒரு விவசாயிக்கு 512 கிலோ வெங்காயம் விற்றதில் வெறும் ரூ2.49 இலாபம் கிடைத்திருக்கிறது.

வெங்காயத்தைப் பறித்து சந்தைக்குக் கொண்டுவரும் கூலிக்குக்கூட  விலை கட்டுப்படியாகாத நிலையில் வெங்காயத்தின்  விலை கிலோவிற்கு ஒரு ரூபாய் என வீழ்ச்சி அடைந்ததால், நாசிக் மாவட்டத்திலும், மராட்டிய மாநிலத்தின் பிற பகுதிகளிலும் விவசாயிகள்  தங்களது வெங்காய பயிர்களை எரித்தும், வெங்காயத்தை சாலைகளில் கொட்டியும் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.

யோலா தாலுக்காவினைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணா என்பவர், வெங்காய விலை கட்டுப்படியாகாததால், மராட்டிய முதல்வருக்கு அழைப்பிதழ் அனுப்பிவிட்டு, தன்னுடைய ஒன்றறை ஏக்கர் வெங்காய பயிர்களை தீவைத்து கொளுத்தியிருக்கிறார். போராட்டத்தின் ஒரு பகுதியாக கோபமடைந்த விவசாயிகள் பிரதமர் மோடிக்கு வெங்காயத்தை தபாலில் அனுப்பி வைத்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக இம்மாநிலத்தில் பல பகுதிகளில் விவசாயிகளின் போராட்டம் வெடித்தது

 

 

இதைத் தொடர்ந்து அம்மாநில சட்டமன்றத்தின் முன் ஆர்ப்பாட்டம் நடத்த, ஆயிரக்கணக்கான விவசாயிகள் மார்ச்13 அன்று நாசிக்கிலிருந்து 200 கீமீ தூர பேரணியை அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைமையின் கீழ் துவங்கினர். விவசாயிகள் தங்களது 17 அம்ச கோரிக்கையை நிறைவேற்றக் கோரி இந்த நீண்ட பயணத்தை நடத்தியுள்ளனர்.

  • வெங்காயம் உட்பட பருத்தி, சோயாபீன்ஸ், பச்சைப் பயறு, பால் போன்ற விவசாயப் பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும்,
  • வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்,
  • நில உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வேண்டும்,
  • விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட  கடன் தள்ளுபடி செய்திட வேண்டும்,
  • மின்சார நிலுவைத் தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும், நாள்தோறும் தொடர்ந்து 12 மணிநேரம் மின்சாரம் வழங்க வேண்டும்.
  • பயிர் சேதங்களுக்கு இன்சூரன்ஸ், ஓய்வூதியத் தொகையை உயர்த்துதல், திட்டப் பணியாளர்களின் ஊதியம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளோடு இந்தப் பேரணி நடைப்பெற்றது.

விவசாயிகளின் தீவிர எதிர்ப்பை கண்டு அஞ்சிய ஆளும் சிவசேனா-பாஜக கூட்டணி அரசு தற்காலிகமாக விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறி பணிந்திருக்கிறது.

இதே போன்ற நீண்ட பயணம், இதே மாநிலத்தில்  2018ம் ஆண்டு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் நடைபெற்றது. அந்த நீண்ட பயணம் அப்போது ஆட்சியிலிருந்த பாஜக தலைமையிலான மாநில அரசை ஸ்தம்பிக்க வைத்தது. ஆனால் அனைத்துக் கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதாக கூறிய அப்போதைய பா.ஜ.க அரசு, பின்னர் அக்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. தற்போது துணை முதல்வராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் தான் 2018 ஆம் ஆண்டில் முதல்வராக இருந்தார். அப்போது வனநிலம், மேய்ச்சல் நிலம், பினாமி நிலம் போன்றவற்றை விவசாயிகள் பெயரில் மாற்றுவதாக வாக்குறுதி கொடுத்தார். நிலங்கள் இன்று வரை விவசாயிகள் பெயரில் பதிவு செய்யப்படவில்லை. மின்கட்டணத்தை உயர்த்தமாட்டோம் என்றார். ஆனால் தற்போதைய மைய அரசின் உத்தரவுக்கு இணங்க  மின் கட்டண உயர்வை அமுல்படுத்த மராட்டிய அரசு தீவிரமாக முயல்கிறது.

 

 

இம்மாநிலத்தில் விவசாயிகளிடம் கடன் தள்ளுபடி திட்டம் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால் டிசம்பர் 2022 வரையிலான நிலவரப்படி விவசாயிகளுக்கான  ரூ 22,000 கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை.

இவ்வாறு இம்மாநிலத்தில் விவசாயிகள் துயரம் நாளுக்குநாள் அதிகரித்து தான் வருகிறது. அரசு புள்ளி விபரப்படியே, மகாராட்டிராவில், கடந்த 2021 ஆம் ஆண்டில் 2743 விவசாயிகளும் 2022 ஆம் ஆண்டில் 2942 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

தற்போதும்  2018 ஆம் ஆண்டை போலவே விவசாயிகளின் வாக்குறுதியை நிறைவேற்றுவதாக அரசு பம்மாத்து காட்டுகின்றது. விவசாயிகள் ஒன்று திரண்டு போராடும் போதெல்லாம், அப்போராட்டத்தை கண்டு பயந்து, விவசாயிகளின்  கோரிக்கைகளை செயல்படுத்துவதாக  ஏய்க்கின்றன ஆளும் வர்க்கங்கள். ஆனால்  விவசாயிகளின் கோரிக்கைகளை  அவை ஒருபோதும் நிறைவேற்றுவதில்லை.

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவேன் என பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த மோடி அரசு,  நாடெங்கும் விவசாயிகள் வாழ்வில் பெரும் துயரத்தை தான் வழங்கியுள்ளது

தில்லியில் விவசாயிகளின் வீரஞ்செறிந்த போராட்டத்தின் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களை அமுல்படுத்தாமல் பின்வாங்கிய மோடி அரசு, கார்ப்பரேட் நலனுக்காக  இந்த சட்டங்களை புறவழியில் எப்படியாவது அமுல்படுத்த வேண்டும் என தொடர்ந்து முயல்கிறது. மராட்டிய மாநில அரசும், விவசாயிகளின் ஒற்றுமையைக் கண்டஞ்சி, தற்காலிகமாக பின்வாங்குவது போல நடித்தாலும், கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றப் போவதில்லை. கடந்த கால அனுபவங்கள் இதைத்தான் நமக்குக் காட்டுகின்றன.

விவசாயிகளின் வாழ்வை பற்றி அக்கறை இல்லாமல் கார்ப்பரேட்டுகளுக்காக மட்டும் இயங்கும் இந்த ஆளும் வர்க்கத்தை தூக்கி எறிவதன் மூலம் தான்  விவசாயிகளின் துயரை தீர்க்க முடியும்.

 

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன