மார்ச் 19 அரங்கக் கூட்டம் – சென்னை
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!
கடந்த ஜனவரி மாதம் குஜராத் இனப்படுகொலையை மீண்டும் அம்பலப்படுத்தும் விதமாக பிபிசி ஆவணப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அதானியின் பங்குச் சந்தை மோசடியை அம்பலப்படுத்தி ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. இவைகளால் அம்பலாமவதைப் பொறுக்கமுடியாத காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பல் பிபிசி படத்துக்குத் தடைவிதித்தது. தடையை மீறித் திரையிட்ட கல்லூரி-பல்கலை மாணவர்கள் மீது ஏபிவிபி குண்டர்படையை ஏவி கொடூரமான பாசிச பயங்கரவாதத் தாக்குதலை நிகழ்த்தியது. “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி” என்பதற்கு இலக்கணப் பொருத்தமாக இக்கும்பல், “இவையிரண்டும் தேசத்தின் மீதான தாக்குதல்” என்று கூறி மக்களை திசைதிருப்பியது.
மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய எமது அமைப்புகள் சார்பாக, குஜராத் பாசிச இனப்படுகொலையையும், அதானியின் கார்ப்பரேட் கொள்ளையையும் விளக்கி காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பலின் முகத்திரையைக் கிழித்தெறியும் வகையில் சுமார் ஒருமாத காலம் தமிழ்நாடு முழுவதும் விரிவாகப் பிரச்சாரம் செய்தோம். அதன் தொடர்ச்சியாக சென்னையில் மார்ச் 19 ஆம் தேதியன்று ஓர் அரங்கக் கூட்டம் நடத்தினோம். கூட்டத்தில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.
மக்கள் அதிகாரத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் கோபிநாத் அவர்கள் இவ்வரங்கக் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கித் தலைமையுரையாற்றினார். பிபிசி ஆவணப்படத்தை வெளியிடக்கூடாது என்று போலிசு அரங்க உரிமையாளர்களை மிரட்டி அச்சுறுத்தியதையும் காவி பாசிசத்தின் ஏவல்படையாக போலிசு மாறிவருவதையும் விளக்கிப் பேசினார். தேர்தலின் மூலம் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க முடியாது. அப்படிக் கருதுவது ஒரு பிரமை. மாறாக, காவி-கார்ப்பரேட் பாசிசத்துக்கு எதிரான போராட்டக் களத்தை நாம் அனைவரும் இணைந்து கட்டியமைக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பேசினார்.
கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் தோழர் பாலன் குஜராத் இனப்படுகொலையின் வரலாறையும் மோடி-அதானி கூட்டணியையும் விளக்கி விரிவாக உரையாற்றினார். முசுலீம்கள் சபர்மதி ரயிலின் பெட்டியை எரித்து 59 இந்துக்களை கொன்றார்கள் என்பது பச்சைப் பொய். ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. கும்பல்தான் அவர்களைத் திட்டமிட்டுக் கொன்றது. அதையே காரணமாக வைத்து குஜராத் இனப்படுகொலையையும் நிகழ்த்தியது. இவையனைத்தின் மூளையாகச் செயல்பட்டவர் மோடிதான். அதுவரை யாரென்று தெரியாமல் இருந்த மோடி அதற்குப் பின்பு உலகம் முழுவதும் பேசப்படும் தலைவரானார். இந்தப் படுகொலைக்குப் பின்புதான் குஜராத்தில் இந்து முசுலீம் முனைவாக்கம் (Polarisation) தீவிராமானது. இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக குஜராத் மாற்றப்பட்டது. இதே பாணியில் இன்று நாடுமுழுவதும் அப்பாவி இசுலாமியர்கள் இந்துக்களின் எதிரிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். குஜராத்தில் நடந்தது இன்று நாடுமுழுவதும் நடந்து வருகிறது. ஒருவேளை குஜராத் படுகொலை நடக்காமல் இருந்திருந்திருந்தால் மோடி பிரதமராயிருப்பதற்கு வாய்ப்பில்லை. அதானி உலகின் இரண்டாவது பணக்கரனாயிருப்பதற்கும் வாய்ப்பில்லை. எனவே, மோடியும் அதானியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்; பிபிசி ஆவணப்படமும் ஹிண்டன்பர்க் அறிக்கையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என விரிவாக, உரிய ஆதாரங்களோடு, தரவுகளோடு விளக்கி உரையாற்றினார்.
அடுத்ததாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில இணைச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தோழர் ஆளுர் ஷா நவாஸ் “இந்தியாவின் எதிரி காவி பாசிச கும்பல்” என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழகத்தில் கால்பதிக்க பல்வேறு வகைகளில் காவி பாசிச கும்பல் முயன்று வருகிறது. அதற்கு இங்குள்ள சீமான் போன்றவர்கள் துணைநிற்கிறார்கள். நாடு முழுவதும் இந்துக்களின் எதிரிகளாக அப்பாவி இசுலாமியர்கள் முன்னிறுத்தப்படுகிறார்கள். தமிழ்நாட்டிலோ தமிழர்களின் எதிரிகளாக அருந்ததியர்களும் வடமாநிலத் தொழிலாளிகளும் முன்னிறுத்தப்படுகிறார்கள். மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பல் செய்வது இந்துத்துவ பாசிசம் என்றால் சீமான் செய்வது தமிழ் பாசிசம். இவையனைத்துமே அப்பாவி உழைக்கும் மக்களின் உண்மை எதிரியான முதலாளிகளுக்குச் சேவை செய்யும் வகையில், பொய்யான எதிரியை உருவாக்கும் தந்திரங்கள்தான். இவைகளை தமிழக இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டும். இந்திய மக்களின் உண்மையான எதிரியான காவி பாசிச கும்பலை நாம் அனைவரும் இணைந்து முறியடிக்க வேண்டும் என விரிவாக விளக்கி உரையாற்றினார்.
மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் முத்துக்குமார் “அம்பலமாகும் அதானியின் கார்ப்பரேட் கொள்ளை தீர்வு என்ன?” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதானியின் பங்குச் சந்தை மோசடியும் உழைக்கும் மக்களின் மீது தொடுக்கப்படும் விலைவாசி உயர்வும், வரி உயர்வும் வேறுவேறல்ல. இவையிரண்டும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. உதாரணமாக மக்களுக்கு வழங்கப்படும் கேஸ் மாணியத்தை வெட்டி 2.2 இலட்சம் கோடி ரூபாய் பணத்தை மோடி அரசு கொள்ளையடித்துள்ளது. அதேசமயம் கார்ப்பரேட்டுகளுக்கு வரிக்குறைப்பு செய்து 2 இலட்சம் கோடிரூபாயை இழந்துள்ளது. மக்களிடமிருந்து கொள்ளையடிக்காமல் கார்ப்பரேட்டுகளுக்குக் கொடுக்க முடியாது. அதானி விவாகாரத்தில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதைத்தான். 2014 ஆம் ஆண்டில் உலகப் பணக்காரர்கள் 250 இடங்களில் இருந்த அதானி, இன்று 2 ஆம் இடத்திற்கு வந்துள்ளான் என்றால், அதற்கு அவனது திறமையோ உழைப்போ காரணமல்ல. மக்களின் உழைப்பையும், சேமிப்புகளையும், நாட்டின் இயற்கை வளங்களையும் வரைமுறையின்றி சூறையாடித்தான். இதற்கு மோடி அரசு பக்கபலமாக இருந்து செயல்பட்டு வருகிறது. பொதுத்துறை வங்கிகளான எஸ்.பி.ஐ. போன்றவைகளில் உள்ள மக்களின் சேமிப்புகள் வரைமுறையின்றி அதானிக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகள் அம்பலமானதும் “தேசத்திற்கு ஆபத்து” என்று தேசபக்த வேடம் போடுகிறது மோடி அரசு. மோடி-ஆர்.எஸ்.எஸ். சங்பரிவாரங்கள்தான் உண்மையில் தேச விரோத கும்பல். ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயரை சுட்டுக்கொன்ற தேசபக்தன் உத்தம் சிங்கின் திரைப்படம் ஆஸ்கருக்குச் சென்றால் “பிரிட்டிஷ் மனம் புண்படும்” என்று கூறி மோடி அரசு தடுத்துள்ளது. அதேபோல, 1990-களில் கொண்டுவரப்பட்ட காட் ஒப்பந்தத்தின்படித்தான், இந்திய விவசாயத்துறையை பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதியவர் சாவர்க்கர். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைக் காட்டிக் கொடுத்தவர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயி. மோடி அரசோ, ஆர்.எஸ்.எஸ். கும்பலோ ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக எந்த சிறு நடவடிக்கையையும் எடுத்ததில்லை. மாறாக அவர்களின் பாதந்தாங்கிகளாகவே செயல்பட்டு வருகிறார்கள் என்று விளக்கி அம்பலப்படுத்திப் பேசினார். அதேபோல இந்தக் கார்ப்பரேட் கொள்ளைக்கெல்லாம் முடிவுகட்ட இப்பொதுத்துறைகள் அனைத்தும் நிலவுகிற அரசின் கீழ் அரசுடைமையாய் இருக்கும் வரையிலோ அல்லது தனியாருக்குத் தாரைவார்ப்பதன் மூலமோ பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. ஏற்கனவே 1992 ஏப்ரலில் அம்பலமான ஹர்சத் மேத்தா ஊழலில் எஸ்.பி.ஐ. அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் அமைச்சர்களும் ஈடுபட்டுள்ளனர். எனவே இப்பொதுத்துறை நிறுவனங்களையும் வங்கிகளையும் மக்களின் உடைமையாக மாற்ற வேண்டும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் முறைக்கு மாற்ற வேண்டும். இதைத் தவிர வேறு தீர்வேதுமில்லை. அத்தகைய மாற்றத்தைச் சாதிக்க புதிய ஜனநாயக அரசை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை என விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் மக்கள் அதிகாரம் கலைக்குழு தோழர்கள் புரட்சிகரப் பாடல்களைப் பாடினர். சீமானின் அண்டப் புளுகுகளை அம்பலப்படுத்தும் பாடலும், வாரார் வாரார் காவி மோடி என்ற பாடலும் மிகுந்த வரவேற்பையும் கரவொலியையும் பெற்றது.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் சங்கர் நன்றியுரையாற்றினார்.
***