போக்குவரத்து துறையை, கார்ப்பரேட்டு கொள்ளைக்கு திறந்துவிடும் திமுக அரசு

மும்பையில் சாதாரண பேருந்துகளை இயக்க தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.55 செலவாகிறது. ஆனால் மின்சார பேருந்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.125 தனியாருக்கு வழங்கபடுகிறது. இவ்வாறு அதிக தொகையை கொடுப்பதால் ஏற்படும் சுமை மக்கள் தலையில் ஏற்றப்படும். பேருந்துகளை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் இந்த ஒப்பந்தத்தின் விளைவாக மக்கள் பேருந்துகளில் பயணிக்கவே முடியாத சூழல் ஏற்படும். முதியவர்கள், மாணவர்கள், ஊனமுற்றோருக்கு கிடைக்கும் இலவச பயணம் உள்ளிட்ட சலுகைகள் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

 

 

தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள், மாநகரம் முதல் பட்டி தொட்டி, மலை கிராமங்கள் வரை இரவு, பகல், மழை, வெயில் என எத்தகைய இடையூறு ஏற்பட்டாலும் பல்வேறு சிரமங்களை கடந்து கிராம்புறங்களிலிருந்து காய்கறி- கீரை, பழங்கள், பால் பொருட்கள் என பலவகையான பொருட்களை அத்தியாவசிய தேவைகளை குறைவான கட்டணத்தில் கொண்டு சென்று சேவையாற்றி வருகிறது, மேலும்  மாணவர்கள், முதியோர், இதயநோய் உள்ளவர்கள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் என பலதரப்பட்டவர்களுக்கும் 28 வகையான பாஸ் மற்றும் கட்டணமில்லா பயணங்கள் அனுமதி அளிக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான் கடந்த மார்ச் ஒன்றாம் தேதியன்று, ஒப்பந்த அடிப்படையில் அரசு பேருந்துகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் இயக்குவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்வதாக செய்திகள் வெளியாகின.

நீண்ட காலமாக மாறி மாறி ஆட்சியில் அமர கூடிய கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு போக்குவரத்து துறையை தனியாரிடத்தில் கொடுக்க திட்டமிட்டு செயல்பட்டு வந்துள்ளதன் வெளிப்பாடே இன்றைக்கு போடப்பட்டிருக்கும்  ஒப்பந்தமாகும்.

போக்குவரத்து துறையை தனியாரிடத்தில் கொடுக்கும் தொழிலாளர் விரோத, மோசடியின் ஒரு பகுதியாக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் தொழிலாளர்களுக்கும், மக்களுக்கும் கொடுத்த காந்திரமான வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு மொத்த மக்களையும் முட்டாளாக்கும், வேலையில் இறங்கியுள்ளனர் ஆட்சியாளர்கள்.

மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது முப்பதாயிரத்திற்கும் அதிகமான பேருந்துகளுடன் தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை மிகப்பெரிய துறையாக மாநிலம் முழுவதும் கிட்டதட்ட எல்லா நகரங்களிலும் சொந்தமாக பணிமனைகள் வைத்துள்ளது. போக்குவரத்துத் துறையில் புரையோடிப் போயிருக்கும் ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளால் இந்தத் துறை தற்போது நட்டத்தில் இயங்குகிறது. நாள் ஒன்றுக்கு ஒன்றரைக் கோடிபேர் பயன்படுத்தும் அத்தியாவசியச் சேவையான போக்குவரத்துத் துறை தமிழ்நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் தற்போது இயங்கிவருகிறது.

இதனை மாற்றி அந்த இடத்தில் தாங்கள் வந்தால் அதன் சொத்துக்களை கபளீகரம் செய்வதுடன், தங்கள் இஷ்டத்திற்கு விலையேற்றி கொள்ளையடிக்கலாம் என்ற நப்பாசையுடன் கார்ப்பரேட்டுகள் நாக்கைத் தொங்கவிட்டுக் காத்திருக்கின்றன.

காலனியாதிக்க காலகட்டத்திலேயே சென்னை நகரத்தில் தனியார் பேருந்துகள் இயங்கி வந்தன. அப்போது தனியார் பேருந்துகள்  மக்களிடம் கட்டண கொள்ளயில் ஈடுபட்டு வந்தது. 1947 காலக்கட்டத்தில் உலகம் முழுவதும் பொதுத்துறைக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. மக்கள் நல அரசுகள் உருவாகி வந்த காலக்கட்டம். அந்த சூழலில் தனியார் பேருந்துக் கட்டண கொள்ளை தொடர்ந்தால் ஆட்சிசெய்ய முடியாது என்ற சூழ்நிலையில் தனியார் கொள்ளைக்கு முடிவுக்கட்ட அன்றைக்கு குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக சென்னையில் உள்ள போக்குவரத்துகள் அனைத்தும் அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அதுமுதல் சென்னையில் 80 ஆண்டுகளுக்கு மேலாக அரசு பேருந்துகளே இயங்கி வருகிறது.

அதிகாரமாற்றத்திற்குப் பிறகு மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் சேவை வழங்க 1950ம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டம் கொண்டுவரப்பட்டது. தனியார் வசமிருந்த போக்குவரத்துக்கள் மக்கள் வரிப்பணத்தில் அரசு துறை போக்குவரத்துக்களாக இயங்க துவங்கின. தமிழ்நாட்டில் 1967 ஆம் ஆண்டு  ஆட்சி பொறுப்பில் இருந்த அண்ணாதுரை தலைமையில் அமைந்த  திமுக அரசு, பெரும்பாலான பேருந்து வழித்தடங்களை அரசுடைமையாக்கியது.

1972ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அரசு, மாநிலம் முழுவதும் எஞ்சியிருந்த தனியார் வழித்தடங்களையும் அரசுடைமையாக்கி மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்களை உருவாக்கியது. இவ்வாறு உருவாகி 50 ஆண்டுகள் ஆனபோதிலும் இன்றும் சில மலை கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி, பேருந்து வசதி இல்லாமல் இருப்பது என்பது நீடித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது திமுக ஸ்டாலின் அரசு, போக்குவரத்துத் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களை அனுமதிப்பது என்று முடிவெடுத்திருப்பது, 80 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு அதவாது தனியார் நிறுவனங்கள்  மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்து மக்களை கொள்ளையடிக்கவே வழிவகுத்துக் கொடுக்கும்.

மேலும் போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான இந்த வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து ஓட்டும் நோக்கத்தோடு கடந்த அதிமுக ஆட்சியில் மோட்டார் வாகனச் சட்டத்திருத்ததில் 288-ஏ பிரிவில் மாற்றத்தை கொண்டுவந்த போது, திமுகவின் தொமுச உட்பட அனைத்து தொழிற்சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அப்போது தாங்கள் கொண்டுவரும் திருத்தத்தின் நோக்கம் தனியார்மயம் இல்லை என்றும், தனியார் பங்களிப்போடு மின்சார பேருந்துகளை இயக்கத்தான் இச்சட்டதிருத்தும் கொண்டுவரப்பட்டது என அதிமுக விளக்கம் கொடுத்தது.

அப்போது எழுந்த கடுமையான எதிர்ப்புக்கு பிறகு அச்சட்ட திருத்தம் கைவிடப்பட்டது. அன்றைக்கு தனியார்மயத்தினை எதிர்த்த திமுக தான் தற்போது போக்குவரத்து துறையை தனியாருக்கு தாரைவார்க்க துடிக்கும் அதே திட்டத்தை கொண்டுவருகிறது.

திமுக விசயத்தில் இது ஒன்றும் புதிது அல்ல, ஆளும் கட்சியாக இருக்கிற போது தனியார்மய கொள்கையை அமல் படுத்துவதும், எதிர் கட்சியாக இருக்கிற போது எதிர்ப்பதும் என்பதுதான் திமுக உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளின் நாடகமாக இருக்கிறது.

ரயில்வே துறையை எப்படி உற்பத்தி, விநியோகம், பராமரிப்பு என பிரித்து, அனைத்தையும் தனியாருக்கு தாரைப்பதற்கான சட்டத்திருத்தங்களை கொண்டு வந்தார்களோ, அதைதான்  போக்குவரத்து துறையிலும் கொண்டு வருகிறார்கள். இதன் மூலம் பணம் இருந்தால் பயணிக்கலாம் என்ற நிலையே உருவாகும்.

ஒருபுறம் புதிய கல்வி கொள்கையை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்று கூறி கொண்டே, மற்றொருபுறம் சில நல்லதை எடுத்துக்கொள்ளலாம் என்று கூறி நயவஞ்சகமாக புகுத்தி வருதைப்போன்றே போக்குவரத்து துறையிலும் நயவஞ்சகமாக செயல்பட்டு வருகிறது இந்த திமுக அரசு.

தற்போது சென்னை மாநகரில் 3200 பேருந்துகளில் 2300 பேருந்துகள்தான் இயங்கி வருகிறது. 900 பேருந்துகள் போதிய ஓட்டுநர், நடத்துனர் இல்லாதததால் இயக்கபடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. புதியதாக ஆட்களை எடுத்து வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பதிலாக  தனியாரிடம் ஒப்படைப்பது என்பது ஒட்டுநர்கள், நடத்துனர்களுக்கு மட்டும் பிரச்சினை அல்ல, ஒட்டுமொத்த  மக்களுக்குமான பிரச்சினை என்பதை நாம் உணரவேண்டும்.

இதற்கு முன்னர் இதே போன்று தனியார்மயமாக்கப்பட்ட மும்பை போக்குவரத்துக்கழகம் நமக்கு ஒரு நல்ல உதாரணம். மும்பையில் சாதாரண பேருந்துகளை இயக்க தற்போது ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.55 செலவாகிறது. ஆனால் மின்சார பேருந்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.125 தனியாருக்கு வழங்கபடுகிறது. இவ்வாறு அதிக தொகையை கொடுப்பதால் ஏற்படும் சுமை மக்கள் தலையில் ஏற்றப்படும். பேருந்துகளை கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கும் இந்த ஒப்பந்தத்தின் விளைவாக மக்கள் பேருந்துகளில் பயணிக்கவே முடியாத சூழல் ஏற்படும். முதியவர்கள், மாணவர்கள், ஊனமுற்றோருக்கு கிடைக்கும் இலவச பயணம் உள்ளிட்ட சலுகைகள் எல்லாவற்றையும் இழக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

மொத்தத்தில் உலக வர்த்தக கழகத்துடன் செய்துக்கொண்ட ஒப்பந்தப்படி உலக பெரும் பணகாரர்களுக்கு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு  பொதுத் துறைகளை விற்று வருகின்றனர். ரயில்நிலையமும், தண்டவாளமும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கிவிட்டு தனியார் ரயிலை அனுமதித்து  நாட்டுவருவாயை கொள்ளையடிப்பது போல, அரசு போக்குவரத்துகளையும்,  வருவாய் வரும் பஸ் ரூட்டுகளை தனியாரிடத்தில் கொடுக்கின்றனர். இதுவே மத்திய மாநில அரசுகளின் வெளிப்படையான திட்டமாக இருக்கிறது.

அதே சமயம் இதனை நியாயப்படுத்த போக்குவரத்துக் கழகங்களில் உள்ள நிர்வாக சீர்கேடுகளையும், ஊழல்களையும் கண்டுகொள்ளாமல் அவற்றை நட்டத்தில் இயங்கும்படிச் செய்வதுடன், தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக நடத்துவது, ஊதிய உயர்வு, போனஸ் பணி நிரந்திர உரிமைகளைத் தராமல் அவர்களை வஞ்சிக்கும் வேலையையும் செய்து வருகிறது. ஓட்டுக்கட்சிகளின் வாலாக மாற்றப்பட்டிருக்கும் போக்குவரத்துத் துறை தொழிற்சங்கங்கள் அரசின் சூழ்ச்சிக்கு எதிராக சிந்திக்க கூட தயாரில்லை.

ஏற்கனவே தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டு, தொழிலாளர்கள் போராடி கொண்டிருக்கும் நிலையில் இத்திட்டம் என்பது “எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக” உள்ளது. விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு என அடுத்தடுத்த சுமைகள் மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், இது மக்களை மிகப்பெரிய நெருக்கடியில் தள்ளிவிடும். எனவே இந்த அபாயத்தை  உணர்ந்து  உழைக்கும் மக்கள் அனைவரும் போக்குவரத்து துறையை பாதுகாத்திட ஒன்றிணைந்து போராட வேண்டும்.

இந்த அரசின் மொத்த திட்டங்களும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கொள்ளையர்களால்  தீர்மானிக்கப்படுகிறது. ஆகையால் அரசோ, அரசியல் கட்சி தலைமைகளோ தொழிலாளர் பிரச்சனைகளை தீர்க்காது. மாறாக, தொழிலாளர்கள் உண்மையை உணர்ந்து சொந்த முறையில்  வெகுமக்களுடன் இணைந்து போராடிதான் தீர்வுகான முடியும்.

 

  • முத்துக்குமார்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன