அதானியைக் காப்பாற்றும் தேசிய பங்குச் சந்தை(NSE)

தேசிய பங்குச் சந்தையோ ஒருபடி மேலே சென்று அதானியின் பங்குச் சந்தை இழப்புகளை சரிகட்டுவதற்கான தற்காலிகத் தீர்வை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. கடந்த மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமத்தின்  ஐந்து நிறுவனங்களை தேசியப் பங்குச் சந்தையின் 14 குறியீடுகளில் பட்டியலிட அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

ஹிண்டன்பெர்க் அறிக்கையைத் தொடர்ந்து, அதானி குழுமத்தின் பங்குகளின் மதிப்பு இறங்கு முகத்திலேயே உள்ளது. வெளிநாட்டு தொழில் நிறுவனங்களும் பங்குச் சந்தை முதலீட்டாளர்ளும் பத்திரிக்கைகளும் அதானி குழும முறைகேடுகளை விமர்சித்து வருகின்றனர். உதாரணமாக அதானியின் ஹைட்ரஜன் எனர்ஜி நிறுவனத்தில் $50 பில்லியன் முதலீடு செய்ய இருந்த டோடல் எனர்ஜி என்ற பிரான்ஸ் எண்ணெய் நிறுவனம் தனது மூதலீட்டை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியாவிலோ எதிர் கட்சிகள் அதானி முறைகேடுகள் குறித்து பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என கோரிவருகின்றனர்.

ஆனால் மோடியோ, 2002 குஜராத் படுகொலையை ஒட்டி இந்திய தரகு முதலாளிகள் தன்னை விமர்ச்சித்திருந்த இக்கட்டான சூழலில் தனக்காக ஆதரவுக் கரம் நீண்டிய தனது கொள்ளைக் கூட்டுக்காரனான, அதானியை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று ‘இராப்பகலாக’ உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலோ தனது பாசிசக் கூட்டாளியைக் காப்பாற்ற இது அந்நிய நாடுகளின் சதி என்றும் இந்தியாவின் மீதான தாக்குதல் என்றும் தேசவெறியை கலந்து உருட்டிக் கொண்டிருக்கிறது.

 

மோடியின் அமைச்சர்கள் அதானியின் முறைகேடுகளைப் பற்றி இன்றுவரை வாயைத் திறக்கவில்லை. மோடி-மீடியாக்களும் அதற்கேற்றார் போல நாயணம் வாசிக்கின்றன. நிம்மி மாமியோ செபி இதனை விசாரிக்கும் என்றார். ஆனால், இந்தியப் பங்குச் சந்தை கட்டுப்பாளரான சேபியோ (SEBI) அதானியின் பங்குச்சந்தை முறைகேடுகள் குறித்து இதுவரை விசாரணையை ஆரம்பிக்கவில்லை. முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைலைர் ரகுராம் ராஜன் “அதானியின் பங்குகளை வைத்துள்ள மொரீஷியஸ் நாட்டு நிதி நிறுவனத்தின் உரிமையாளரை பற்றிய விவரங்களை செபி ஏன் இன்னும் பெறவில்லை? அதற்கு புலனாய்வு அமைப்புகளின் உதவி தேவையா?” என்று விமர்சித்ததிலிருந்தே செபியின் லட்சணத்தை நாம் புரிந்துக் கொள்ள முடியும்.   

ஆனால் தேசிய பங்குச் சந்தையோ ஒருபடி மேலே சென்று அதானியின் பங்குச் சந்தை இழப்புகளை சரிகட்டுவதற்கான தற்காலிகத் தீர்வை அதானி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. கடந்த மாதம் தேசிய பங்குச் சந்தை (NSE) வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமத்தின்  ஐந்து நிறுவனங்களை தேசியப் பங்குச் சந்தையின் 14 குறியீடுகளில் பட்டியலிட அனுமதிப்பதாக அறிவித்துள்ளது.

அதானி போர்ட் மற்றும் செஸ், அதானி எண்டர்பிரைசஸ் இரு நிறுவனங்களும் நிப்டி 50 க்குள் உள்ளன. தற்போது அதானி வில்மர் நிறுவனத்தை நிப்டி அடுத்த 50க்குள்ளும் அதானி பவர் மற்றும் அதானி டோடல் கேஸ் நிறுவனத்தை நிப்டியின் பத்து குறியீடுக்குள்ளும் பட்டியலிட NSE அனுமதித்துள்ளது. தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படுவதால் இந்நிறுவனங்களின் பங்குகளில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு வாய்ப்புக்கள் அதிகம்.

 

 

குறிப்பாக சிறு முதலீட்டாளர்களின் முதலீடுகளை ஈர்ப்பது மிகச்சுலபம். NSE ன் முடிவுக்கு பலத்தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. NSE ன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பங்குச் சந்தை நிபுணர்கள் செபியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் NSEயோ தனது அறிக்கையில், “ஒவ்வொரு ஆறு மாதமும் நிறுவனங்களின் பங்கு மதிப்புகளை பரிசீலித்து அதனடிப்படையில் NSEன் குறியீடுகளில் பட்டியலிடுவது பற்றி முடிவு செய்யப்படும். இது வழக்கமாக நடைபெறுவது தான். 1 ஜூலை 2022 லிருந்து 31 ஜனவரி 2023 வரையிலான ஆறுமாதத்தில் அதானியின் ஐந்து நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் நல்ல நிலையில் இருந்ததின் அடிப்படையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

பங்குச்சந்தை என்பதே ஒரு சூதாட்டம். அச்சூதாட்டத்தில், அதன் விதிகளை அதானி மீறினார் முறைகேடுகளின் மூலம் உலகின் பெரும் பணக்காரர் ஆனார் என்பதே ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டு. அதானி நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜனவரி 24 லிருந்தே குறையத் தொடங்கியது. ஜனவரி இறுதி வராத்தில் மட்டும் பல பில்லியன் டாலரை அதானிக் குழுமம் இழந்துள்ளது. பங்குச் சந்தை முறைகேடுகளின் மூலமாகத்தான் தனது நிறுவனப் பங்குகளின் மதிப்பினை அதானி உயர்த்தியுள்ளார் என்பதே ஹிண்டன்பர்க் அறிக்கையின் பிரதானக் குற்றச்சாட்டு. உலகின் முன்னணி பங்கு குறியீட்டாளர்களான MSCI, S&P Dow Jones, FTSE-Russell ஆகியவை அதானி நிறுவனங்கள் வழங்கி இருந்த குறியீட்டை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளன. பங்கு மதிப்பு வீழ்ச்சியை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் குழுவையும் அமைத்துள்ளது. ஆனால் NSEயோ, அதானி தனது நிறுவனத்தின் பங்கு மதிப்புகளை முறைகேடுகளின் மூலம் உயர்த்தியிருப்பது அம்பலமாகியுள்ள போதும் அதைப் பற்றி விசாரிக்காமல் அப்பங்கு மதிப்புகளின் அடிப்படையாகக் கொண்டே முடிவெடுக்கப்பட்டதாகக் கூறியிருப்பது மிகவும் கேலிக்கூத்தாகும்.

மோடிக்கும்-அதானிக்குமான கள்ள கூட்டு உலகறிந்தது. மோடி ஆட்சிக்கு வந்த கடந்த எட்டாண்டுகளில் அதானி நிறுவனங்கள் அசுர வளர்ச்சியடைந்துள்ளது. மற்ற முன்னணி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் அதானி நிறுவனங்களின் நிகர லாபம் குறைவு என்ற போதிலும் மோடி அரசின் சலுகைகளே அதானியின் பங்கு மதிப்பு உயர்வுக்கு பிரதானக் காரணம். மக்களின் செமிப்பைக் கொண்டுள்ள எல்ஐசி பங்குகள் வீழ்வது பற்றியோ பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி குறைக்கப்படுவது பற்றியோ மோடி அமைச்சரவைக்கு கவலையில்லை. அதானி-அம்பானியின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. இதை நம்பவைக்க இந்து தேசவெறியை துணையாகக் கொள்வது என்பதே இவர்களின் உத்தி. இந்த காவி-கார்பரேட் பாசிசக் கூட்டத்தை ஒழிக்காமல் மக்களுக்கு நன்மையேதும் கிடைக்கபோவதில்லை.

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன