உலக உழைக்கும் பெண்களின் போராட்ட நாளான மார்ச் 8-ஐ உயர்த்திப் பிடிப்போம்!

சமத்துவம், சுதந்திரம், வாக்குரிமை, 8 மணிநேர வேலை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, ஆணும் பெண்ணும் சமம், ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், ஒரே வேலை நேரம் போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடிய நாளே மார்ச்-8.

1917 மார்ச் 8-இல் தான் ரசிய பெண்-தொழிலாளர்கள் அன்றைய ஆட்சியர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராகப் புரட்சியைத் தொடங்கியதோடு, தொடர்ந்து இடைவிடாமல் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் அர்ப்பணிப்புடன் பங்கேற்றதன் மூலம் 1917 நவம்பரில் சோசலிச அரசு மலர்வதற்கும் சமூக விடுதலைக்கும் மகத்தான பங்கைச் செலுத்தினர்.

 

 

1921-இல் உலக கம்யூனிஸ்ட் பெண்கள் மாநாட்டில்தான் சோசலிசப் புரட்சிக்கு, சமூக விடுதலைக்கு துவக்கமாக அமைந்த 1917 மார்ச்-8 ஐ உலக உழைக்கும் பெண்கள் நாளாக அறிவிக்கப்பட்டது.

உலகம் முழுவதும் மார்ச்-8 ஐ சிறப்பித்துவரும் முற்போக்கு, புரட்சிகர பெண்கள் இயக்கங்கள் முசோலினி பாசிசத்தையும் இட்லரின் நாசிசத்தையும் முறியடிக்க திரளாக அணிதிரண்டு போராடின.

பெண்கள் இயக்கங்கள் தொடர்ந்து அலையலையாகத் திரண்டு போராடியதன் விளைவுதான், வாக்குரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை போன்றவைகளை இன்றைக்கு பெற்றிருக்கிறோம்.

இரண்டாம் உலகப் போரின்போது நேச சக்திகளைச் சார்ந்த பெண்கள் இயக்கங்கள் இழப்புக்கு அஞ்சாமல் களமிறங்கி பாசிச சக்திகளை விரட்டியடிக்க பெரும் பங்காற்றியுள்ளன. ஜனநாயகத்தையும், சுதந்திரத்தையும் மீட்டெடுப்பதற்கு உறுதுணையாக இருந்துள்ளன.

முற்போக்கு புரட்சிகர இயக்கங்களுக்குள் பெண்களைக் கொண்டுவரவும், களத்தில் இறங்கிப் போராட வைக்கவும் உந்து சக்தியாகத் திகழ்ந்தது மார்ச்-8 என்பதை மறுக்க முடியாது.

மறுகாலனியாக்கமானது உலகம் முழுவதும் கொண்டுவந்த ஏற்றதாழ்வு, ஒருபக்கம் செல்வக் குவிப்பு மறுபக்கம் வறுமை அதிகரிப்பு, வாங்கும் சக்தி சரிவு; வேலையின்மை, சம்பளவெட்டு, விலைவாசி உயர்வு, கொரோனாவால் இருந்த சேமிப்பையும் இழந்து வருமானம் இல்லாமல் தவித்தது போன்றவைகளால் ஏற்பட்ட சமூக நெருக்கடி கட்டமைப்பு நெருக்கடியாக உருவெடுத்துள்ளது இதன் விளைவே பாசிசம்.

பாலியல் கொடுமைக்கு ஆளாகி, சிறை சித்திரவதைக்குள்ளாகி, கொலைக்கு ஆளாகி அன்றைக்கு முறியடிக்கப்பட்ட பாசிசம், மீண்டும் கட்டமைப்பு நெருக்கடியால் உலகம் முழுவதும் அரங்கேறி வருகிறது. இன்றைய உலகமய சூழலில் இதன் நீட்டிப்பாக இந்தியாவிலும் இன்று காவி-கார்ப்பரேட் பாசிசம் அரங்கேறி வருகிறது.

 

 

இதன் தொடர்ச்சியாக இந்தியாவிலும் கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தவிர்க்கவும், நிதிமூலதனத்தைப் பெருக்கவும் மோடி அரசு நடத்திவரும் நரவேட்டைகள்தான் எத்தனை. பணமதிப்பழிப்பு மூலம் மக்களின் சிறுவாடைப் பறித்து வங்கியில் கொண்டுவந்து சேர்த்தது. வங்கியில் சேமிக்கப்பட்ட மக்கள் பணத்தை கார்ப்பரேட்டுகளுக்குக் கடனாக வாரி வழங்கியது. கடனைக் கட்டவில்லையெனில் வாராக் கடனாக அறிவித்து வரி ஏய்ப்பை மறைத்தது. கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு வரிச்சலுகைகளை வாரிக் கொடுத்தது. அரசு-பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு விற்றது. கார்ப்பரேட்டுகளின் பங்குகளை வாங்க வைத்தது; அவற்றில் முதலீடு செய்ய வைத்தது; யானைப்பசிக்கு சோளப்பொறி போதாது என்பது போல ரிசர்வ் வங்கிப் பணத்தையும் சுருட்டியது போன்றவைகள் மூலம் கார்ப்பரேட்டுகளுக்குப் பாதை போட்டுக் கொடுத்தது பாசிச மோடி அரசு.

கார்ப்பரேட்டுகளுக்கு வாரிவழங்கிய சலுகைகளால், இவர்களின் வரி ஏய்ப்பை மோசடியை அங்கீகரித்ததால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தி விலைவாசியை உயர்த்தி பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தி இவையனைத்தையும் மக்கள் தலையில் இறக்குகிறது.

மேலும் மக்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களையும், சமூக நலத் திட்டங்களையும் ரத்து செய்து, வதைபிடிக்குள்ளாக்கி அரசின் இழப்புகளை ஈடுசெய்கிறது.

இவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது, குடும்பத்தைப் பொறுப்பேற்று நடத்தும் பெண்களே என்பதை நாம் அறிவோம். ஆண்களின் வருவாய் பற்றாக்குறையை ஈடுகட்ட வாய்ப்பு இல்லையெனில் தவிர்க்கவியலாமல் பெண்கள் வேலைக்குப் போக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. ஆண்களையும் அதிகநேரம், அதாவது நேரம் காலம் இல்லாமல் உழைக்க நிர்ப்பந்திக்கிறது. இருவரும் வேலைக்குப் போவதன் விளைவு, இருபாதிப்புகளை உருவாக்குகிறது. ஒன்று குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்த இயலவில்லை. இரண்டு உடல்நல பராமரிப்பில் அக்கறை செலுத்த இயலவில்லை. இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் இருவரும் ஓய்வின்றி உழைப்பதால் நோய்களால் பீடிக்கப்பட்டு மருத்துவக் கடனுக்கு ஆளாகிறோம். இல்லையேல் சாவை எதிர்நோக்கி பயணிக்கிறோம்.

இவ்வளவுக்கும் காரணமான கார்ப்பரேட்களுக்கு எதிராகப் போராடினால் மோடி அரசோ பொய்வழக்குப் போட்டு சிறையில் அடைக்கிறது. மீறிப் போராடினால் (பி.எப். பணத்தைப் பாதுகாக்கப் போராடிய பெங்களூர் ஆயத்த ஆடை தயாரிக்கும் பெண் தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தியபோல, நஞ்சைக் கக்கிய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடிய பெண்கள், ஆண்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியது போல) ஈவிரக்கமின்ற் சுட்டுக் கொல்லவும் செய்கிறது.

இன்னொருபுறம் பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் போராடும் மக்களை சாதியைக் காட்டி, மதத்தைக் காட்டி பிளக்கிறது. மேலும், இந்து மதவெறியை ஊட்டி சிறுபான்மை மக்களுக்கு எதிரியாக்கி உழைக்கும் மக்களின் – பெண்களின் வர்க்க ஒற்றுமையைச் சிதைத்து கார்ப்பரேட்டுகளுக்கு காலாட்படையாகச் செயல்பட்டு வருகின்றன, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பஜ்ரங்க்தள், இந்துமுன்னணி போன்ற காவி பாசிசப் படைகள்.

நம் வாழ்வைச் சுறையாடி கார்ப்பரேட்டுகளுக்குப் படையல் வைக்கும் கைக்கூலியான பாசிச மோடி அரசும், கார்ப்பரேட்டுகளுக்கு காலாட்படையாகச் செயல்படும் காவி பாசிசப் படைகளும் அடித்து வீழ்த்தப்பட வேண்டியவையே.

காவி-கார்ப்பரேட் பாசிசம், தலித், முசுலீம் கிறுத்துவர்களுக்கு மட்டுமல்ல, இந்து மக்களுக்கே எதிரானது, ஆபத்தானது. இவர்கள் கூறும் வளர்ச்சிப் பாதை என்பது கார்ப்பரேட் சுரண்டலுக்கும் மூலதனக் குவிப்பிற்குமே வழிவகுக்கும்; இதற்காக உழைக்கும் ஆண்களை-பெண்களை வதைப்பதும்தான்.

இதன்படி யோசித்தால் இந்தியாவில் பெரும்பான்மை உழைக்கும் மக்களாகிய ஆண்-பெண் அனைவரும் இந்துக்களே. இதை மறைக்கவே இந்து அல்லாத முசுலீம்-கிருத்துவ மக்களை எதிரியாகக் காட்டி வருகிறது. இதை உணர்ந்து உழைக்கும் மக்கள் வர்க்கமாக ஒன்றினைவதன் மூலம்தான் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க முடியும்.

இன்றைய சூழலில் இந்து, முசுலீம், கிறித்துவர், தலித் என்று பிளவுபடாமல், மக்களின் வாழ்வுரிமையைப் பேணிப்பாதுகாக்கவும், காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்கவும், ஜனநாயக-புரட்சிகர பெண் இயக்கமாக, வர்க்கமாக ஒன்றிணைய மார்ச் 8-இல் உறுதியேற்போம்.

 

 

அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக புரட்சியைத் தொடங்கி வைத்த ரசிய பெண் தொழிலாளர்கள் போல, காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்கும் நாளாக மார்ச் 8-ஐ துவக்கி வைப்போம்.

இனியும்; மார்ச் 8-என்ற பெயரில் ஜாலியாகக் கூடிக் கலைவதை, அழகிப் போட்டி என்ற பெயரில் கூத்தடிப்பதைத் தவிர்ப்போம். உலக உழைக்கும் பெண்களின் போராட்ட உணர்வுகளை, தியாகங்களை வரித்துக் கொள்ளும் வகையிலான நாளாக மார்ச் 8-ஐ முன்னெடுப்போம். எதிர்கால சந்ததிக்கு ஒரு முன்னோடியாக அமைவோம்.

உலக உழைக்கும் பெண்களின் வாரிசுகளாக சமூக விடுதலையே பெண்விடுதலை என்பதை உயர்த்திப் பிடிப்போம். மார்ச் 8-க்குப் பெருமை சேர்ப்போம்.

அஜிதா

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன