இந்திய தலைமை நீதிபதி தலைமையில், உச்ச நீதிமன்ற கொலிஜியத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும் மூத்த நீதிபதிகள் நான்கு பேரும் உள்ளனர். கொலீஜியமே உயர் நீதித்துறையின் நியமனங்கள் பதவி உயர்வுகள் மற்றும் நீதிபதிகள் இடமாற்றம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது.
கொலீஜியம் அமைப்பு பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. கொலீஜியம் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மூலம் உருவான அமைப்பாகும்.
உயர் நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமனமானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் இரண்டு மூத்த நீதிபதிகள் (தற்போது நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி கே.எம். ஜோசப்) ஆகியோர் அடங்கிய கொலிஜியத்தினால் பரிந்துரைக்கப்படுகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதிக்கான வேட்பாளர்கள் உயர்நீதிமன்ற கொலீஜியத்தால் முன்மொழியப்படுகிறார்கள். அதில் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் மூன்று நீதிபதிகள் உறுப்பினராக உள்ளனர். வேட்பாளர்கள் குறித்து மாநில அரசு மற்றும் ஆளுநரின் கருத்துகளைச் சேர்த்த பிறகு, உயர் நீதிமன்ற கொலிஜியம் தனது பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்புகிறது, அது வேட்பாளர்களின் பின்புலத்தைப் பற்றி ஆய்வு செய்து அதன் கருத்துகளுடன் உச்ச நீதிமன்ற கொலிஜியத்திற்கு அனுப்புகிறது.
உச்ச நீதிமன்ற கொலீஜியம் தனது பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்புகிறது. மத்திய அரசு பட்டியலில் உள்ள பெயர்களை அங்கீகரிக்கலாம் அல்லது நிராகரிக்கலாம், வேட்பாளர்கள் குறித்து கூடுதல் விளக்கங்கள் கோரலாம் அல்லது ஆட்சேபனைகளையும் கூறலாம்.
வழிகாட்டுதல்களின் படி, கொலீஜியம் தனது பரிசீலனையின் அடிப்படைடில் ஒரு வேட்பாளரின் பெயரை கைவிடலாம், ஆனால் மத்திய அரசு திருப்பி அனுப்பிய பெயரை கொலீஜியம் மீண்டும் மத்திய அரசுக்கு வலியுறுத்தினால், அரசாங்கம் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
“கொலிஜியம் அமைப்பு இருக்கும் வரை, நாங்கள் அதை பின்பற்ற வையுறுத்துவோம்,” என்று மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் 9 டிசம்பர் 2022 அன்று கூறியது. “கொலீஜியத்தை மாற்றுவதற்கு நீங்கள் சட்டத்தை (sic) கொண்டு வரலாம்… ஆனால் அதுவரை நீங்கள் கொலீஜியத்தைப் பின்பற்ற வேண்டும். .”
“அரசாங்கத்திற்கு வேறு எந்த வழியும் வழங்கப்படவில்லை” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. “பெயர்கள் மீண்டும் வலியுறுத்தப்பட்டால், அவர்களை அரசாங்கம் நியமிக்க வேண்டும்.”
கொலீஜியம் மீண்டும் வலியுறுத்திய போதிலும்(2022 ஜனவரியில்), சுமார் 23 பெயர்கள் மத்திய அரசு நிலுவையில் வைத்துள்ளது. சிலர் இரண்டாவது அல்லது மூன்றாவது முறை கொலீஜியத்தால் வழியுறுத்தப்பட்ட பின்பும் சில நீதிபதி வேட்பாளர் பெயர்கள் மத்திய அரசால் திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் நீதிபதிகளின் விமர்சனத்திற்கு ஆளாகியது மத்திய அரசு.
ஒரு நீதிபதி வேட்பாளரின் பெயர் கொலீஜியம் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டால், அவர் நீதிபதியாக நியமிப்பதற்காக வாரண்டை குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிடும்.
அரசு Vs நீதித்துறை
நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக அரசாங்கமும் உச்ச நீதிமன்றமும் மோதிக்கொண்டிருக்கும் நேரத்தில், வெளிப்படையான அரசியல் சார்பு மற்றும் சித்தாந்தம் கொண்ட கௌரியை நியமனம் செய்ய கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
22 ஜனவரி 2023 அன்று, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீதிபதிகளை நியமிக்க முடிவெடுப்பதன் மூலம் உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பை “ஹைஜாக்” செய்துள்ளது என்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கருத்தை ஆமோதித்து பேசியிருந்தார்.
கடந்த சில மாதங்களாக இந்த மோதல்கள் வளர்ந்து வருகிறது. ரிஜிஜு கொலீஜியம் அமைப்பை “விலகியுள்ளது”, “வெளிப்படத்தன்மையற்றது” மற்றும் “அக்கவுண்டபிலிட்டி இல்லாதது” என்று அழைத்தார். மேலும், உச்ச நீதிமன்றத்தைப் பற்றி அவர், “மக்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றும் மதிப்பிடவும் செய்கிறார்கள்” என்றும், “சமூக ஊடக காலத்தில் எதுவும் மறைக்க முடியாது” என்றும் கூறினார்.
“நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறை மாற்றப்படும் வரை உயர் நீதித்துறை காலியிடங்கள் பற்றிய பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கும்” என்று ரிஜிஜு 15 டிசம்பர் 2022 அன்று ராஜ்யசபாவில் பேசியிருந்தார்.
இது போன்ற கருத்துகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். மேலும், 28 நவம்பர் 2022 அன்று இந்தியாவின் அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணியிடம் “இவ்விஷயத்தை தீர்க்குமாறு” கேட்டுக் கொண்டனர்.
இந்த விவகாரத்தின் தீவிரம் காரணமாக நமது நிருபரிடம் பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர், “நீண்ட காலத்திற்கு முன்பே கொலிஜியம் தனது அதிகாரத்தை அரசிடம் வழங்கியிருந்த போதிலும், மத்திய அரசு ஏன் கொலிஜியத்தை விமர்சிக்கிறது என்பது புதிராக” இருப்பதாகக் கூறினார்.
“ஒரு மட்டத்தில் அரசாங்கத்திற்கும் கொலிஜியத்திற்கும் இடையேயும், மற்றொரு மட்டத்தில் நீதிபதிகள் மத்தியிலும் கடுமையான பேரங்கள் நடப்பதாக” டெல்லி உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சஞ்சாய் கோஸ் கூறுகிறார். 2017 நீதிபதியாக நியமனம். “இது அவர்களுக்கு வேலை செய்தது.”
நீதிபதிகள் நியமனத்திற்கான “தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (2015 இல்) உச்ச நீதிமன்றம் நிராகரித்ததிலிருந்து நீதித்துறை நியமனங்களில் அரசாங்கத்தின் பங்கு ஆழமாகவும் மற்றும் பரவலாகவும் அதிகரித்துள்ளது என்று நான் நினைக்கிறேன்,” என்று கோஸ் கூறினார்.
சௌகிதார் விக்டோரியா கௌரி – பாஜக உறுப்பினர், மோடி ரசிகர்
கௌரி தன்னை பா.ஜ.க.வுடன் இணைத்துக் கொண்டது குறித்தும், தான் பிரதமரின் அபிமானியாகக் இருப்பது குறித்தும் வெட்கப்படவில்லை.
அவரது ட்விட்டர் பக்கத்தில், “சௌகிதார் விக்டோரியா கௌரி” என்று பதிவிட்டிருந்தார். (தற்போது நீக்கப்பட்டுள்ளது) 2019 பொதுத் தேர்தலை ஒட்டி மோடி “மைன் பி சௌகிதார்” அல்லது “நான் ஒரு தேச பாதுகாவலர்” என்ற பிரச்சாரத்தை ஒட்டி கௌரியும் தனது பெயரில் சௌகிதார் என்று சேர்த்தார்.
கௌரியை (8 அக்டோபர் 2010) கேரள மகிளா மோர்ச்சா வின் மாநிலப் பொறுப்பாளராக பாஜக தலைமை நியமித்ததிலிருந்து பாஜக உடனான கௌரியின் தொடர்பு வெளிப்படையாகத் முதன் முதலாக தெரிந்தது. அக்காலகட்டத்தில் மகிளா மோர்ச்சாவின் தலைவராக இப்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சரான ஸ்மிருதி இரானி பொறுப்பில் இருந்தார்.
கௌரி 2014 பொதுத் தேர்தலில் பாஜக விற்காக தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தார்.
2014 பொதுத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து 2015 இல் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்சில் மத்திய அரசின் மூத்த நிலை வழக்கறிஞராக கவுரி நியமிக்கப்பட்டார்.
கௌரி இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலான கே.எம்.நடராஜுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார், இவர் கௌரி நியமிக்கப்பட்ட ஆண்டான ஏப்ரல் 2015 இல் மத்திய அரசால் தென் பிராந்தியத்திற்கான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.
நடராஜ், ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர். தென்னிந்திய உயர் நீதிமன்றங்களில் நீதிபதி நிய்மனங்களில் “வலதுசாரி சித்தாந்த பின்புலம் கொண்ட நபர்களைப் நீதிபதிகளாக தேர்தெடுப்பதில் முக்கிய பங்காற்றக்கூடிய நபர்” என்று பேசிய உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர் தெரிவித்தார். 2009 முதல் 2013 வரை அப்போதைய பாஜக மாநில அரசாங்கத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனரலாகவும் நடராஜ் பணியாற்றியுள்ளார்.
நீதித்துறையின் இந்த மாற்றங்கள் குறித்து முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி லோகுரும் தனது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது சமீபத்திய நேர்காணலில் “அவர்கள் (யூனியன் அரசாங்கம்) தங்களது கருத்துக்களுடன் ஒத்துப்போகின்றவர்களை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறினார்.
2017 ஆம் ஆண்டில், மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நியமனக் குழு, கௌரியை சென்னையில் உள்ள காமராஜர் போர்ட் லிமிடெட்டின் சுயேச்சை இயக்குநராக நியமித்தது, மேலும் 2020 ல் மதுரை பெஞ்சிற்கு மூத்த நிலை வழக்கறிஞரிலிருந்து மதுரை உயர்நீதிமன்றத்தின் மத்திய அரசிற்கான உதவி சொலிசிட்டர் ஜெனரலாக உயர்த்தியது. .
சிறுபான்மையினருக்கு எதிரான அவரது சார்பு இவற்றிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது.
‘இஸ்லாத்தைப் போலவே கிறிஸ்தவமும் மிகவும் ஆபத்தானது’
கிறித்தவத்தை “இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அச்சுறுத்தல்” என்று கௌரி விவரித்தார், மேலும் ரோமன் கத்தோலிக்கர்களின் செயல்பாடுகளால் இந்தியாவின் கலை மற்றும் கலாச்சாரம் கொலைச்செய்யப்படுகிறது” என்று குற்றம் சாட்டினார்.
“பாரதத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளின் கலாச்சார இனப்படுகொலை” என்ற 2018 ல் பேசிய விக்டோரியா கௌரி, ஒரு கிறிஸ்தவ அமைப்பு நடத்திய பரதநாட்டிய நிகழ்வில் கலந்துகொண்ட தனது தனிப்பட்ட அனுபவத்தை அக்காணொலியில் கௌரி விவரித்துள்ளார்.
“இயேசு கிறிஸ்துவைக் குறிக்கும் வகையில் நடராஜப் பெருமானின் போஸ்களை குழந்தைகள் நடனமாடியபோது நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்… அது மிகவும் அருவருப்பாகவும் அசிங்கமாகவும் இருந்தது,” என்றும் “இயேசு கிறிஸ்துவுக்கும் நடராஜப் பெருமானுக்கும் என்ன தொடர்பு?” என்றும் அக்காணொலியில் கவுரி பேசியுள்ளார்.
அதில், இந்து சமயக் கீர்த்தனைகள் எவ்வாறு கிறிஸ்தவ பாடல்களை உருவாக்குவதற்கு “கிறிஸ்தவர்களால் நகலெடுக்கப்படுகின்றன” என்று பேசினார். இது “இடதுசாரி மற்றும் DK உடன் சேர்ந்த செய்யும் ஒரு சதி” என்றும் கூறினார்.
இது “கிறிஸ்துவத்தின் ரோமன் கத்தோலிக்க பிரிவினரின் மிகவும் மோசமான செயல்”, “குறிப்பாக கலை மற்றும் கலாச்சாரத்தை கவனித்துக் கொள்வதற்காக அவர்கள் தங்களுக்குள் ஒரு சிறப்புக் குழுவை நிறுவியுள்ளனர்” என்றார். திராவிட இலக்கியம் என்ற பெயரில், இடதுசாரிக் கருத்தியல் கொண்டு வரப்பட்டு, பிறகு அது மதமாற்றத்திற்காக வழிசெய்கிறது.
“தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு அதிக அச்சுறுத்தல் ஜிஹாத்தா அல்லது கிறிஸ்தவ மிஷனரியா? விக்டோரியா கௌரியின் பதில்கள்”, என்ற தலைப்பில் மற்றொரு காணொலியில் (2018) பேசிய கௌரி, கிறித்துவமும் இஸ்லாமும் “ஆபத்தானவை” என்று குற்றம் சாட்டுகிறார்.
மதமாற்றத்தைப் பற்றி கூறும் போது “அமைதியின் பெயராலும், சேவையின் பெயராலும், அன்பின் பெயராலும் மக்களை கவர்ந்திழுக்க நுட்பமான, நன்கு திட்டமிடப்பட்ட, வழியை கிறிஸ்தவர்கள் கொண்டுள்ளனர்”, என்று அவர் கூறினார், “இந்தியாவைப் பொறுத்த வரையில், இஸ்லாமிய குழுக்களை விட கிறிஸ்தவ குழுக்கள் மிகவும் ஆபத்தானவை என்று நான் கூற விரும்புகிறேன்”. என்றார்.
“தேசிய பாதுகாப்பிற்கு” எந்த மதம் அதிக ஆபத்தை விளைவிக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த கௌரி, தனது சொந்த மாவட்டமான கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாகிவிட்டதாக குற்றம் சாட்டினார்.
“கன்னியாகுமரி மாவட்டத்தில், கிறிஸ்தவர்கள் ஏற்கனவே பெரும்பான்மையாக உள்ளனர்,” “வடகிழக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அங்கு கிறிஸ்தவர்களால் பிரச்சனை நடக்கிறது.”
“எனவே இஸ்லாம் போலவே கிறிஸ்தவமும் மிகவும் ஆபத்தானது” என்று கவுரி கூறினார்.
லவ் ஜிஹாத் & போலி மதச்சார்பின்மைவாதிகள்
கௌரி, இந்து பெண்களை திருமணம் செய்து கொண்டு அவர்களை இஸ்லாத்திற்கு மாற்ற முஸ்லீம்கள் சதி செய்வதாகக் கூறும் சதிக் கோட்பாடான “லவ் ஜிஹாத்” பற்றிய தனது கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.
“மதமாற்றத்தைப் பொருத்தவரை இரண்டுமே (கிறிஸ்துவக் குழுக்கள் மற்றும் இஸ்லாமியக் குழுக்கள்), குறிப்பாக லவ் ஜிஹாத் சூழலில், சமஅளவில் ஆபத்தானவை தான்,” “ஒரு ஹிந்து பெண் ஒரு முஸ்லீம் பையனை திருமணம் செய்து கொண்டு அவர்கள் ஒருவரையொருவர் காதலித்தும், புரிதல்களுடன் வாழ்வதை நான் சிக்கலாகப் பார்க்கவில்லை. ஆனால் திருமணம் செய்த இந்து பெண் முஸ்லீம் கணவருடன் மனைவியாக இல்லாமல் சிரிய பயங்கரவாத முகாமில் இருவ்தால், நான் அத்திருமணத்தில் எனக்கு ஆட்சேபனை உண்டு. அதையே நான் லவ் ஜிஹாத் என்று வரையறுக்கிறேன் என்றார்.
2012 ஆம் ஆண்டு ஆர்கனைசரில் ஒரு கருத்துப் பகுதியில், “சமூக நல்லிணக்கத்தை அழிக்கும் ஆக்கிரமிப்பு ஞானஸ்நானம்”, என்று கிறித்துவம் பற்றிய தனது கருத்துக்களை கௌரி தெரிவித்திருந்தார்.
“கிறிஸ்தவ குறுங்குழுவாதம் மதவெறியின் மூலமான மதமாற்றங்களினால் தொடர்ந்து பெரும்பான்மை இந்துக்களை சிறுபான்மையினராக (கன்னியாகுமரியில்) சுருங்கச் செய்துள்ளது” என்று கௌரி எழுதினார்.
“கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகளின் பட்டியல் முடிவடையவில்லை. ‘கோயில் இருக்கும் இடத்தில், பல தேவாலயங்கள் இருக்க வேண்டும்’ என்பதே அவர்களின் குறிக்கோள்” என்று கவுரி எழுதினார்.
“தேசிய நல்லிணக்கத்திற்காக பெண்களைப் பாதுகாக்கவும்” என்ற தலைப்பில் 2013 ல் எழுதியக் கட்டுரையில், நிர்பயா கற்பழிப்பு பிரச்சனையை ஒட்டி பெண்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றி கவுரி எழுதினார், மேலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான சமத்துவமின்மைக்கு “போலி மதச்சார்பின்மைவாதிகள்” தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.
“மதச்சார்பின்மை, உலகமயமாக்கல், உலகளாவிய சந்தைப்படுத்தல் என்ற பெயரில் போலி மதச்சார்பின்மைவாதிகளின் தொடர்ச்சியான ஆட்சியால் இந்த நாட்டின் மதிப்புகள் மற்றும் ஒழுக்கங்களின் மீது மெதுவாக, நிலையான மற்றும் தொடர்ச்சியான படையெடுப்பினால், சமத்துவம் என்ற வாக்குறுதியை அரசியலமைப்பு அளித்துள்ளது.” என்று கவுரி எழுதினார்.
மூலம்: சௌரவ் தாஸ், Article14
மொழிபெயர்ப்பு: மகேஷ், அழகு