மூலதனக் கொள்ளைக்கு எதிராக குமுறி எழும் ஐரோப்பிய தொழிலாளர்கள்!

”இந்த போராட்டம் பிரான்சின் ஆளும் வர்க்கங்களை நிலைகுலைய வைத்து இருக்கிறது. எந்த நிலையிலும் ஓய்வூதிய சட்டத்தை நிறைவேற்றியேத் தீருவோம் என்று மக்ரோன் அரசு துடிக்கும் அதே வேளையில் தொழிலாளர் விரோத மக்ரோன் அரசை ஓய்வு பெற வைப்போம் என தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்”

ஐரோப்பாவின் ஆளும் வர்க்கங்கள்  உருவாக்கிய பொருளாதார நெருக்கடியின் சுமைகளை மக்கள் மீது சுமத்தும்  நடவடிக்கைகளுக்கு  எதிராக அந்நாடுகளின் தொழிலாளி வர்க்கமும் உழைக்கும் மக்களும் அணிதிரண்டு அடுத்தடுத்து நடத்திவரும் போராட்டங்களால் ஐரோப்பிய கண்டமே குலுங்குகிறது , 

ஐரோப்பிய ஆளும் வர்க்கம், தங்களது ஆட்சியை தக்கவைக்க  உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கு சிறு துரும்பை கூட அசைக்காமல், அவர்களை சுரண்டி கொழுத்து  வருகிறது.  ஆனால் உக்ரைன் போரை தொடர்ந்து, ஐரோப்பிய உழைக்கும் மக்களின் துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவாக ஐரோப்பாவின் பெருந்திரளான  உழைக்கும் மக்கள்  அக்கண்டத்தின் பல நாடுகளில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் ஆட்சியை எதிர்த்து வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.   

குறிப்பாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டனில் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் வலுத்து வருகிறது. பள்ளி-கல்லூரிகள், ஆலைகள், அரசு அலுவலகங்கள், இரயில், விமானப் போக்குவரத்து உள்ளிட்டு அனைத்து துறைகளும் செயலிழந்து முடமாகிப் போய் வருகின்றன. தொழிலாளர்களும் மாணவர்களும் இளைஞர்களும் அரசு ஊழியர்களும் அணிதிரண்டு பிரான்சு, பிரிட்டன்  நகரங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில்  ஆர்ப்பாட்டங்கள், பேரணிகளை  நடத்தி வருகின்றனர்.

பிரான்சில் மக்ரோன் அரசின் ஓய்வுதிய சீர்திருத்த மசோதாவிற்கு எதிராக தொழிலாளர்களின் போர்க்கோலம்:

ஓய்வூதியம் கொடுப்பதால் அரசின் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடி செலவாகிறது என்று கூறி ஓய்வூதியம் பெறுவதற்கான வயதை 62-லிருந்து 64-ஆக நீட்டிக்கவும், தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தொடர்ந்து 43 ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற கொள்கையை அறிவித்து ஓய்வூதியத்தையே செல்லாக் காசாக்கத் துடிக்கிறது பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அரசு. பிரான்ஸ் மட்டுமின்றி, பல ஐரோப்பிய நாடுகளும் இதேபோல ஓய்வூதியம் பெறும் வரம்பை உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. இம்மசோதா மூலம் மக்ரோன் அரசு 12.97 பில்லியன் டாலரை மிச்சம் பிடித்து மூலதனக்கும்பலுக்கு வாரி இறைக்க திட்டம் தீட்டியிருக்கிறது

 போராடும் உழைக்கும் மக்கள் அதிபர் மக்ரோனின் ஓய்வூதிய மசோதாவின் பசப்பல்களையெல்லாம் ஏற்கவுமில்லை,  பிரான்சு காவல்துறையின் அடக்குமுறைக்கு அஞ்சவுமில்லை.  முதியோர்களுக்கு முறையான ஓய்வூதியத்தை கொடு! மக்கள் விரோத ஒய்வூதிய மசோதாவை திரும்ப பெறு! இளைஞர்களுக்கு வேலை கொடு! இரானுவத்திற்கான செலவை நிறுத்து! என்பது தான் பிரான்சின் உழைக்கும் மக்களின் கோரிக்கை. ஏறத்தாழ 68 சதவீத மக்கள் இவ்வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆதரித்து அரசின்  ஓய்வூதிய சீர்திருத்த சதித் திட்டங்களை எதிர்க்கின்றனர்.

 ஜனவரி 19 ம் தேதியன்று நடைப்பெற்ற போராட்டங்கள் மற்றும் பேரணியில் சுமார் 20 லட்சம் பேரும் ஜனவரி 31 ம் தேதியன்று நடைப்பெற்ற போராட்டங்களில்  சுமார் 30 லட்சம் பேரும் பல்வேறு நகரங்களில் பங்கேற்றுள்ளனர்.  பாரிசில் மட்டும் சுமார் 4 லட்சம் பேர் போராட்டத்தில்  கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டம் பிரான்சின்  ஆளும் வர்க்கங்களை நிலைகுலைய வைத்து இருக்கிறது. எந்த நிலையிலும் இச்சட்டத்தை நிறைவேற்றியேத் தீருவோம் என்று மக்ரோன் அரசு துடிக்கும் அதே வேளையில் தொழிலாளர் விரோத மக்ரோன் அரசை ஓய்வு பெற வைப்போம் என தொழிலாளர்கள் போராடி வருகின்றனர்.

பிரான்சின் தொழிலாளர்கள் இரவு நேர  ஷிப்ட் பணியினால் ஒவ்வொரு 15 வருடத்திற்கும் 5 வருட ஆயுளை இழக்கிறார்கள் என்கிறது புள்ளி விபரம். தொழிலாளர்கள் ஓய்வு  பெறும் வயதை நீட்டித்து கூடுதலாக இரண்டு வருடங்கள்  பணியில் அமர்த்தினால் அவர்களுக்கு உடல் ரீதியாக சிக்கல்கள் உருவாகுவதோடு தங்களின் இறுதிக் காலத்தில் இன்னல்களுக்கு ஆளாக நேரிடும் என்கிறார்கள் தொழிலாளர்கள்.

.

தொழிலாளர்களின் இரத்தத்தை வியர்வையாக உறிஞ்சி கொழிப்பதால் முதலாளித்துவ உற்பத்தி திறன் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. ஆனால் தொழிலாளிகளின் கூலி குறைந்து கொண்டே செல்கிறது .ஆண்டுதோறும் உருவாகும் உபரி எங்கே செல்கிறது? தொழிலாளர்களின் ஊதியத்திலா?, அவர்களின் ஓய்வூதியத்திலா?  இல்லை! இந்த உபரி செல்வம் மூலதனக் கும்பலுக்குதான் செல்கிறது என்கிறார்கள் போராடும் தொழிற்சங்கத்தலைவர்கள்.  மக்களின் ஓய்வுதியத்திற்கு நிதியை வெட்டும் மக்ரோன் அரசு, பிரான்சு இரானுவத்திற்கு 40 விழுக்காடு நிதியை சமீபத்தில் ஒதுக்கியுள்ளது. இதற்கு போராட்டக்காரர்கள் எதிரிப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஓய்வூதியப் பிரச்சினைதான் போராட்டத்துக்குக் ஆரம்பக் காரணம் என்று கூறப்பட்டாலும், இது மொத்தப் பிரச்சினையின் ஒரு அம்சம்தான். சமூக அநீதிக்கும் முதலாளித்துவத்துக்கு எதிராக, அதாவது மூலதனத்தின் கொள்ளைக்கு எதிராகவே பிரான்சின் உழைக்கும் மக்களின் போராட்டம் வெடித்துள்ளது.

முதலாளிகளைக் காப்பாற்ற  நாட்டின் உழைக்கும் மக்களின் மீது சுமைகளை திணிக்கும் மக்ரோன் அரசு, தங்களது போராட்டத்திற்கு செவி சாய்க்காவிடில்  அடுத்த கட்டமாக  ஒவ்வொரு வார இறுதிகளில் போராட்டத்தை  தொடரப்போவதாகவும்.  மார்ச் 9 ம்தேதி அன்று   நாடு தழுவிய அளவில் போராட்டத்தை நடத்தப் போவதாக  பிரான்சு தொழிற்சங்கங்கள் அறை கூவல் விடுத்திருக்கின்றன.

பிரபுத்துவத்திற்கு கல்லறை கட்டி முதலாளித்துவ ஜனநாயகத்தை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் மக்கள், முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராகவும் அது தோற்றுவிக்கும் ஜனநாயக மாயைகளுக்கு எதிராகவும் களத்தில் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

பிரிட்டன் மக்களின் போராட்டங்கள்:

உக்ரைன் போர்  தொடங்கியதில்  இருந்து பிரிட்டனில் எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஆகிய பிரச்சனைகள் மக்களை நெருக்கடியில் தள்ளியுள்ளது. மக்களின் நிலையை மேம்படுத்த ரிஷி சுனாக் தலைமையிலான வலதுசாரி அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.. இந்நிலையில் பிரிட்டன் உழைக்கும் மக்களின் ஊதியமதிப்பு 2010 ஆம் ஆண்டிலிருந்து  சரிந்து  கொண்டே வருகிறது. மக்கள் ஊதிய உயர்வின்றி பல ஆண்டுகளாக இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

கூடுதலாக ரிஷி சுனாக் அரசு, தொழிலாளர்களை நசுக்க  வேலை எதிர்ப்பு மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இம்மசோதாவை எதிர்த்தும் தங்களின் ஊதிய உயர்வுக்காகவும் பிரிட்டன் மருத்துவத்துறை ஊழியர்கள், பல்கலைக்கழகப் பணியாளர்கள், சுற்றுச்சூழல் துறை ஊழியர்கள் போராடி வருகின்றனர்.

 

 

வேலை எதிர்ப்பு மசோதா என்பது குறைந்த பட்ச வேலையை வழங்காத தொழிலாளர்களை பணியிலிருந்து நீக்க நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கும் உத்தரவிற்கான மசோதாவாகும். இதன் மூலம் வேலை நிறுத்தம் செய்தால் பல தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். பணவீக்கத்திற்கு சமமாக ஊதியத்தை அதிகப்படுத்து! தொழிலாளிகளை அதிரடியாக வேலையிலிருந்து தூக்கியெறியும் வேலை எதிர்ப்பு மசோதாவை திரும்ப பெறு! எனும் கோரிக்கையோடு பிரிட்டன் உழைக்கும் மக்கள் வீதியில்  இறங்கி போராடி வருகின்றனர்.

பிப்ரவரி 1ம் தேதி பிரிட்டனில் பல்வேறு நகரங்க்ளில் நடைப்பெற்ற வேலை நிறுத்த உரிமை பேரணிகளில் மட்டும் 5 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இலண்டனில் மட்டும் சுமார் 40, 000 பேர் பங்கேற்றுள்ளனர்.

பிப்ரவரி 9,10 ம் தேதிகளில் நடைப்பெற்ற போராட்டத்தில் மட்டும் பிரிட்டனின் 150 பல்கலைகழங்களின் சுமார்  70,000 ஆசிரியர்கள் நமது பள்ளிகளை காப்பாற்றுவோம்! என முழக்கத்தோடு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

ஐரோப்பாவில் பரவி வரும் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களை முதலாளித்துவ பத்திரிக்கைகள் தொடர்ச்சியாக மறைத்து வருகிறது. ஆனால் அத் தொழிலாளர்களின் போராட்டங்கள் மூலம் பிறநாடுகளின் தொழிலாளர்கள் பாடம் கற்பதை முதலாளித்துவ வர்க்கம் ஒரு போதும் தடுத்து விட முடியாது!

பிரான்சு, பிரிட்டனில் மட்டும் தொழிலாளர் வர்க்கம்  போராடவில்லை. ஜெர்மன், கீரிஸ், ஸ்பெயின் போன்ற பல்வேறு ஜரோப்பிய நாடுகளிலும் போராடி வருகின்றனர். தொடரும் இப்போராட்டங்களின் ஊடாக, முதலாளித்துவ அரசியலமைப்பு முறையை வீழ்த்தி சோசலிசத்தை நிறுவுவதுதான் ஒரே தீர்வு என்பதை தொழிலாளி வர்க்கம் உணர்ந்து கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை!

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன