மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி! அரசியலற்று, சித்தாந்தமற்று, செயலின்மையில் மூழ்கிக் கிடக்கும் லும்பன் கும்பல் தலைமையில் இயங்கும் வெற்றி-மருது அணியினரின் பரிசீலனைக்கு!

பத்திரிக்கைச் செய்தி

09-02-2023

அரசியலற்று, சித்தாந்தமற்று, செயலின்மையில் மூழ்கிக் கிடக்கும் லும்பன் கும்பல் தலைமையில் இயங்கும் வெற்றி-மருது அணியினரின் பரிசீலனைக்கு!

அன்பார்ந்த தோழர்களே! உழைக்கும் மக்களே! ஜனநாயக சக்திகளே!

2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மக்கள் அதிகாரம் என்ற நமது அமைப்பு பல்வேறு போராட்டங்களையும், அரசியல் இயக்கங்களையும் எடுத்து அரசியல் சக்திகள் மத்தியில் நம்பிக்கைக்குரிய அமைப்பாகத் திகழ்ந்து வருகிறது. 2020-இல் கலைப்புவாத, சீர்குலைவு சக்திகளான காளியப்பன் தலைமையிலான ஒரு கும்பல் சதி செய்து அமைப்பைப் பிளவுபடுத்தியது. அதற்குப் பின் தலைமைக்கு வந்த மருது-வெற்றிவேல் செழியன் ஆகியோருக்குத் தலைமையளிக்கும் ஒரு லும்பன் கும்பலானது செயல்தந்திர பிரச்சாரத்தை கைவிட்டு அமைப்பை மீண்டும் பிளவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டனர். குறிப்பாக, தோழர்கள் முத்துக்குமார், கோபி ஆகியோரை எல்லாவித ஜனநாயக முறைகளையும் மீறி, அமைப்பை விட்டு நீக்குவதாக தான்தோன்றித்தனமாக அறிவித்தனர். தலைமைக்குழுவிலும் பொதுக்குழுவிலும் இருக்கும் தோழர்களை இங்கனம் பொதுக்குழுவின்  அங்கீகாரமின்றி நீக்க முடியாது என்று தெரிந்தும் ஜனநாயக விரோதமாகவும், அமைப்புமுறைக்கு விரோதமாகவும் இவ்வாறு செய்தனர்.

இதுபோன்ற அமைப்புவிரோத ஜனநாயக விரோத கலைப்புவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக 15.06.2022 அன்று  அமைப்பு முறைப்படி மூன்றில் இரண்டு பங்கு (2/3) பொதுக்குழு உறுப்பினர்களின் பங்கேற்புடன் பொதுக்குழு கூட்டப்பட்டு, பழைய தலைமைக்குழு நீக்கப்பட்டு, தோழர் முத்துக்குமாரை மாநிலப் பொதுச் செயலாளராகக் கொண்டு தொடர்ந்து இயங்கி வருகிறோம்.

ஆனாலும் வெளியேற்றப்பட்ட வெற்றி-மருது அணியினரும் காளியப்பன் கும்பலும் தங்களை மக்கள் அதிகாரம் என்று அழைத்துக் கொள்கின்றனர். இதில் வெற்றி-மருது தரப்பினர், 29.01.2023 தேதியிட்ட பத்திரிக்கைச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “எந்த அமைப்பு முறைக்கும் கட்டுப்படாத, அராஜகத்தையே வாழ்வுரிமையாகக் கொண்ட, அமைப்பு விரோத செயல்களையும் கட்டப் பஞ்சாயத்தையுமே நடைமுறையாகக் கொண்ட, கொள்கை-கோட்பாடுகளைப் பற்றிய வாசனைகூட அறியாத தருமபுரி முத்து-கோபி கும்பல் … பல கோஷ்டிகளாகவும் கட்டப் பஞ்சாயத்து வழிமுறைகளையே கொள்கையாகவும் கொண்டுள்ள தருமபுரி முத்து-கோபி கும்பல்..” (29.01.2023 தேதியிட்ட வெற்றி-மருது அணியினரின் பத்திரிக்கை செய்தி) என்றெல்லாம் பலவாறாக எமது அமைப்பின் மாநிலப் பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் மற்றும் தோழர்கள் பற்றிய அவதூறுகளையும் தனிநபர் தாக்குதல்களையும் தொடுத்துள்ளனர்.

வெற்றி-மருது அணியினரின் 29.01.2023 தேதியிட்ட பத்திரிக்கைச் செய்திக்கு மறுப்பு தெரிவிப்பது போல திருவாளர் காளியப்பன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவ்வீடியோவில் எமது அமைப்பின் பொதுச் செயலாளரான தோழர் முத்துக்குமாரை, “சின்னப் பையன், அரசியலோ மார்க்சிய லெனினியமோ தெரியாதவன். கொடுக்கிற வேலையைச் செய்பவன்” என்றெல்லாம் பண்ணையார்த்தனமாகப் பேசியுள்ளார்.

எவ்வித ஆதாரமும் இன்றி போகிற போக்கில் சேற்றை வாரி அடிக்கும் இதுபோன்ற அவதூறுகளுக்கும் தனிநபர் தாக்குதல்களுக்கும் எப்போதும் எமது அமைப்பு பதிலளிப்பதும் விளக்கம் கொடுப்பதும் இல்லை. இப்போதும் இதற்கு நாங்கள் பதிலளிக்கப் போவதில்லை.

மாறாக, எமது அமைப்பு “தமிழினவாதக் கண்ணோட்டத்தில் பிரச்சார இயக்கத்தை எடுத்ததாகவும், காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் கொடூரத் தாக்குதலை மூடி மறைக்கும் துரோகத்தைச் செய்ததாகவும்” வெற்றி-மருது அணியினரின் பத்திரிக்கைச் செய்தியில் வாய்க்கு வந்தபடி உளறியுள்ளனர். இருப்பினும் இவை அரசியல் ரீதியான குற்றச்சாட்டாக இருப்பதால் இது தொடர்பான சிறு விளக்கத்தை எமது ஆதரவாளர்களுக்கும் மக்களுக்கும் கொடுக்க விரும்புகிறோம்.

திருவாளர் காளியப்பன் கும்பல் தலைமையிலான அணிகளையும், அரசியலற்ற, சித்தாந்தமற்ற லும்பன் கும்பல் தலைமையில் இயங்கிவரும் வெற்றி-மருது அணியினரையும் இன்றுவரை நாங்கள் தோழர்களாகவே கருதுகிறோம். எனவே, எமது இந்த விளக்கத்தை விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, சரி தவறுகளைப் பரிசீலிக்குமாறு புரட்சியை நேசிக்கும் அனைத்துத் தோழர்களையும் கேட்டுக் கொள்கிறோம்.

லும்பன் கும்பலின் குற்றச்சாட்டுகள் உண்மையா?
தற்போது, மோடி-அமித்ஷா பாசிச கும்பலின் இந்தி மொழித் திணிப்பை வெறும் மொழித்திணிப்பு என்று தமிழினவாத கண்ணோட்டத்தில் சுருக்கி பிரச்சார இயக்கம் எடுத்திருப்பதும், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை மக்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வெறும் பொருளாதாரப் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்த்து, இயக்கம் எடுத்ததும் … காவி-கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்களின் கொடூரத்தை மறைக்கும் துரோக நடவடிக்கைகளாகும்.” (வெற்றி-மருது அணியினரின் பத்திரிக்கைச் செய்தியிலிருந்து…  அழுத்தம் எமது)

இவ்வாறு கூறும் வெற்றி-மருது அணியினரின் பத்திரிக்கைச் செய்தி, நாங்கள் எங்கனம் இந்தித் திணிப்பை மொழித் திணிப்பு என்று மட்டும் சுருக்கிப் பிரச்சார இயக்கம் எடுத்தோம் என்றோ, எங்கனம் தமிழினவாதக் கண்ணோட்டத்தில் செயல்பட்டோம் என்றோ கூறவில்லை. எங்கள் பிரசுரத்திலிருந்தோ, சுவரெழுத்து, சுவரொட்டி, உரைகள் இவற்றிலிருந்தோ அதற்கான எந்தவித ஆதரத்தையும் மேற்கோளையும் காட்டவில்லை.

எமது இயக்கத்தின் தலைப்பே இந்தி சமஸ்கிருதத் திணிப்பைத் தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்பதுதான். மேலும் எமது அமைப்பால் அச்சடிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கில் விநியோகிக்கப்பட்ட பிரசுரத்திலும் கீழ்க்கண்டவாறு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே தேர்தல், ஒரே கல்விக் கொள்கை என்பதன் தொடர்ச்சியாகவே ஒரே மொழியாக இந்தியைத் திணிக்க முயல்கிறது. இவையெல்லாம் தனித்தனி முன்னெடுப்புகளல்ல. இந்தியாவை ஆரிய பார்ப்பன தேசமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளே!

இந்தியாவின் பன்முகத்தன்மையானது, இந்து ராஷ்டிரத்தை நிறுவத்துடிக்கும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு பெருந்தடையாக இருப்பதால், பாசிச நோகத்துடன் இந்தியைத் தீவிரமாகத் திணித்து வருகிறது. அலுவல் மொழியாகவும் பயிற்று மொழியாகவும் இந்தி திணிக்கப்படும் பட்சத்தில், சமஸ்கிருத வேத புராணக் குப்பைகளை, பார்ப்பனியக் கலாச்சாரத்தை அதிகாரப் பூர்வமாகவே கல்வி நிலையங்களிலிருந்து சகல இடங்களுக்கும் கொண்டு சென்று தமிழ் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின், மொழிகளின் தனித்தன்மையைச் சிதைத்து நாசமாக்கவும் அதன் மூலம் மக்களைக் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் முடியும்.

எனவே, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது இனியும் வெறும் மொழிப்போராட்டம் மட்டுமல்ல. காவி-கார்ப்பரேட் பாசிசத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டமாகவும், தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்துவிட்டு எல்லா தேசிய இனங்களின் மொழிகளையும் சமமாகப் பாவிக்கிற மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.” (எமது அமைப்பு வெளியிட்ட பிரசுரத்திலிருந்து… அழுத்தம் இப்போது கொடுக்கப்பட்டது)

 இவை எங்கனம் தமிழினவாதக் கண்ணோட்டம் என்பதை வெற்றி-மருது அணியினர் தான் விளக்கியாக வேண்டும்.

மேலும், கடந்த அக்டோபர் மாதம் (2022) எமது அமைப்பால் முன்னெடுக்கப்பட்ட ஜி.எஸ்.டி. எதிர்ப்பு இயக்கத்தின் பிரசுரத்தில் கீழ்க்கண்டவாறு தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.

ஒருபுறம் இத்தகைய கார்ப்பரேட் பாசிசத் தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டு நாட்டைத் தீவிரமாக மறுகாலனியாக்கி வரும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பல், மறுபுறம் இசுலாமியர்கள், தலித்துகள், அறிவுத்துறையினர், ஜனநாயக சக்திகள் மீது கொடிய பாசிச பயங்கரவாதத்தை ஏவி நாட்டை இந்து ராஷ்டிரமாக மாற்றத் துடிக்கிறது.” (அக்டோபர் 2022-இல் எமது அமைப்பு சார்பாக வெளியிடப்பட்ட ஜி.எஸ்.டி. எதிர்ப்பு இயக்க பிரசுரத்திலிருந்து…)

உண்மை இப்படியிருக்க, நாங்கள் “ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை மக்கள் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வெறும் பொருளாதாரப் பிரச்சினையாகச் சுருக்கிப் பார்த்து இயக்கம் எடுத்தோம்” என்று இவர்கள் கூறுகிறார்கள். எந்த ஆதாரமும் விவரமும் இல்லாமல் உளறுவதுதான் இப்பத்திரிக்கைச் செய்தியில் வெளிப்படுகிறது. ஏன் இத்தகைய அவதூறுகளை எங்களை நோக்கி வீச வேண்டும் என்பதை நீங்கள்தான் உங்கள் தலைமையிடம் கேட்க வேண்டும்.

தமிழினவாதக் கண்ணோட்டத்தைப் பேசிவருவது யார்?
உண்மையில், உங்கள் தலைமை வெளியிட்டுள்ள பிரசுரங்களிலும், கானொலிகளிலும்தான் தமிழினவாத, தமிழினவெறி, போலி தேசியவாதக் கருத்துக்கள் பல இடங்களில் பேசப்பட்டிருக்கிறது.

உதாரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் “இந்தி எதிப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!” என்ற தலைப்பின் கீழ், இவர்கள் வெளியிட்டுள்ள பிரசுரத்தில்,

தஞ்சை டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு எதிரான போராட்டம், ஸ்டெர்லைட் வேதாந்தாவுக்கு எதிரான போராட்டம் போன்ற கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு தூண்டுகோலாக தமிழ்மொழியும் தமிழ்மண்ணும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் மொழியும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினால் அது  கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு எதிரானதாக மாறும் ஆகவே இந்தித்திணிப்பு காவி பாசிஸ்டுகளுக்கு மட்டுமல்ல; கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கும் ஒரு முக்கியத் தேவையாக இருக்கிறது.” (வெற்றி-மருது அணியினர் வெளியிட்ட பிரசுரத்திலிருந்து…)

என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது முதல் வரியில், தமிழ் மொழி, இன உணர்வுதான் முக்கியப் பங்காக இருந்து மேற்கண்ட போராட்டங்களை இயக்கியதுபோலக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழினவாதக் கண்ணோட்டமில்லையா? மேற்கண்ட போராட்டங்கள் மக்களின் தன்னெழுச்சியானப் போராட்டங்களாகும். ஜல்லிக்கட்டு போலவோ, இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் போலவோ “தமிழன், தமிழ்மொழி” என்ற இன-மொழி உணர்வு பெற்று அதனால் அணிதிரண்டு நடத்தப்பட்ட போராட்டங்களல்ல. தங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தன்னெழுச்சியாக நடத்திய போராட்டங்களாகும்.

அடுத்ததாக, இரண்டாவது வரியில், “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் மொழியும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினால் அது  கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு எதிரானதாக மாறும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படித்தான் மார்க்சியம் போதிக்கிறதா? அப்படியென்றால் எல்லா மாநிலத்திலும் உள்ள (தேசிய இனங்களைச் சேர்ந்த) மக்களும் தத்தம் தேசிய இன, மொழி உரிமைகளுக்கான போராட்டத்தை நடத்தினால் போதுமே! அதுவே தானாக கார்ப்பரேட் கொள்ளைக்கெதிரானதாக மாறிவிடுமே! எதற்காக ஒடுக்கப்படும் வர்க்கங்கள், தேசிய இனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நாடு முழுவதும் தொடுக்கப்படும் கார்ப்பரேட் பாசிசத் தாக்குதலை எதிர்க்க வேண்டும்? அந்த அடிப்படையில் ‘கார்ப்பரேட் பாசிச எதிர்ப்பு’ என்ற அரசியலைக் கைவிட்டு விட்டு இன, மொழி உரிமைகளுக்கான அரசியலை மட்டுமே முன்னெடுத்தால் போதுமே!!

இத்தகைய வாதங்கள் தேசியவாத அரசியலுக்கே மார்க்சியப் போர்வையைப் போர்த்துவதாகும். உண்மையில் இன, மொழி உரிமைகளுக்கான போராட்டங்கள் அதுவாகவே, கார்ப்பரேட்டுகளுக்கெதிரான போராட்டமாக மாறிவிடாது. நாடு முழுவதும் நடத்தப்படும் கார்ப்பரேட் பாசிசத் தாக்குதலை எதிர்க்க வேண்டும் என்ற அரசியல் உணர்வை எல்லாத் தேசிய இன மக்களுக்கும் ஊட்டி தட்டியெழுப்பும்போதுதான், தேசிய இன எல்லை கடந்து வர்க்கம் என்கிற முறையில் அணிதிரட்டும்போதுதான் அத்தகைய போராட்டங்கள் எழும் என்பது மார்க்சியத்தின் பாலபாடமாகும்.

தான் முன்பு பேசிய கருத்துக்கு நேரெதிரான கருத்தை அடுத்த பாராவிலேயே,

மொழி உணர்வும் இன உணர்வும் மட்டுமே பாசிசத்தையோ கார்ப்பரேட்டுகளின் சுரண்டலையோ வீழ்த்திவிட முடியாது. மொழி இன உணர்வுடன் பாட்டாளி வர்க்க உணர்வும் இணையும்போதுதான் ஆர்.எஸ்.எஸ். – பாஜ.க. அம்பானி – அதானி பாசிசத்தை வீழ்த்த முடியும்” (வெற்றி-மருது அணியினர் வெளியிட்டுள்ள அதே பிரசுரத்திலிருந்து…)

என்று இவர்களின் பிரசுரம் கூறுகிறது.

மொழி, இன உரிமைகளுக்காகப் போராடினாலே அது கார்ப்பரேட் கொள்ளைக்கெதிரான போராட்டமாக மாறிவிடும் என்று ஒரு பாராவில் கூறிவிட்டு, அடுத்த பாராவிலேயே மொழி, இன உணர்வு மட்டுமே பாசிசத்தை வீழ்த்தாது அதோடு பாட்டாளி வர்க்க உணர்வும் வேண்டும் என்கிறது இப்பிரசுரம். ஒன்றுக்கொன்று நேரெதிரான, முரணான இரண்டு வாக்கியங்கள் இவை. இவற்றில் எதுவும் இவர்கள் கண்ணோட்டமில்லை. கலவையாக பல கருத்துக்களை உளறுவதுதான் இப்பிரசுரத்தில் வெளிப்படுகிறது.

அடுத்ததாக, இவ்வாறெல்லாம் மொழி, இன உரிமைகளுக்கான போராட்டங்கள் எழுந்து அவை கார்ப்பரேட் கொள்ளைக்கெதிரான போராட்டங்களாக மாறிவிடக் கூடாது அல்லது மாறிவிடுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே கார்ப்பரேட்டுகளுக்கு இந்தித் திணிப்பு தேவைப்படுகிறது என்பதை,

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் மொழியும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினால் அது  கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு எதிரானதாக மாறும் ஆகவே [அதாவது அவ்வாறு மாறிவிடக் கூடாது என்பதற்காக அல்லது மாறிவிடுவதைத் தடுக்கவே] இந்தித்திணிப்பு காவி பாசிஸ்டுகளுக்கு மட்டுமல்ல ; கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்கும் ஒரு முக்கியத் தேவையாக இருக்கிறது.” (வெற்றி-மருது அணியினர் வெளியிட்ட பிரசுரத்திலிருந்து… அடைப்புக்குறிக்குள் இருப்பது நாம் எழுதியது)

என்று இப்பிரசுரம் கூறுகிறது.

இதன்படிப் பார்த்தால் இந்தியைத் திணிப்பதில் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு சொந்த நோக்கம் ஏதும் இல்லை என்று பொருளாகிறது. இத்தகைய போராட்டங்கள் எழுவதைத் தடுக்கும் ‘முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே’ கார்ப்பரேட்டுகள் இந்தித் திணிப்பை ஆதரிக்கிறார்கள் என்று பொருளாகிறது. இந்த வாதம் எவ்வளவு அபத்தமானது.

ஒரே மொழி என்பது எப்போதும் முதலாளிகளின் சந்தை நலனை, சந்தை விரிவாக்கத்தை உள்ளடக்கியதாகும். முதலாளிகள் எப்போதும் சந்தையை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்தே ஒரே மொழி என்ற கொள்கையை ஆதரிக்கிறார்கள். அப்படித்தான் பிரிட்டிஷ் காலத்திலும் சரி, இப்போதும் சரி இந்தியத் தரகு முதலாளிகள் பல்வேறு மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாக இருந்த போதிலும், இந்தியாவின் ஒரே மொழியாக இந்தியைத் திணிப்பதை அவர்கள் ஆதரிக்கிறார்கள். தேவையென்கிறார்கள். பல்வேறு தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவை ஒரே சந்தையாக இணைத்து தங்கு தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்ளவே ஒரே மொழியாக இந்தியைத் திணிப்பதை – தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய காலத்திலும் – இந்தியத் தரகு முதலாளிகள் விரும்புகின்றனர்.

இந்தி-சமஸ்கிருதத் திணிப்பை இவ்வாறு வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்த்துப் புரிந்துகொள்ள முடியாத உங்கள் தலைமை வெளியிட்டுள்ள பிரசுரம்தான் மேற்கண்டவாறெல்லாம் தேசியவாத அரசியலுக்கே மார்க்சிய சாயம் பூச முயல்கிறது.

000

மேலும் மருது என்பவர் பல்வேறு யூடியூப் சேனல்கலுக்குக் கொடுத்துவரும் பேட்டிகளில் இனவாத, இனவெறி, போலி தேசியவாதக் கருத்துக்களுக்கு பலியாகி அதையே தொடர்ந்து பேசி வருகிறார்.

உதாரணமாக, ஜனவரி முதல் வாரத்தில் தமிழ் மிண்ட் யூடியூப் சேனலுக்குக் கொடுத்த பேட்டியில் இனவாத, இனவெறிக் கருத்துக்களை பகிரங்கமாகப் பேசியுள்ளார். “எந்த மாநிலமும், தொழிற்சாலைகள் உட்பட அனைத்து இடங்களிலும் தாய் மண்ணைச் சேர்ந்த மக்களுக்கே 90-95% வேலைவாய்ப்பைக் கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டுவர வேண்டும்” என்று பேசியுள்ளார்.[i] இது அப்பட்டமான இனவாதக் கோரிக்கை இல்லையா?! தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கையால் புலம்பெயர்தல் உலகம் முழுவதும் நடப்பது பாட்டாளி வர்க்கச் சர்வதேசியத்துக்கு ஒரு சாதகமான அம்சமாகும். எனினும், எல்லா நாட்டுப் பாட்டாளி வர்க்கமும் உழைக்கும் வர்க்கங்களும் ஒன்றிணைந்து சொந்த நாட்டு ஆளும் வர்க்கங்களையும் ஏகாதிபத்தியங்களையும் வீழ்த்தும் திசையில் முன்னேற வேண்டும் என்பதே சரியான பாட்டாளி வர்க்க நிலைப்பாடாகும். ஆனால் சொந்த மண்ணின் மக்களுக்குத்தான் வேலை தர வேண்டும் என்பது இனவெறியைக் கிளறி பாட்டாளி வர்க்கத்தைத் துண்டாடும் முதலாளித்துவ தேசியவாத / குட்டிமுதலாளித்துவ தேசியவாத அரசியல் கோரிக்கையாகும். இத்தகைய கோரிக்கையைத் தான் சீமான் மணியரசன் கும்பலும் முன்வைக்கிறது.

மேலும் அக்காணொலியில், “ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கும் இந்தி தெரியும், இங்கு அரசு பதவிகளில் நிரப்பப்பட்டுள்ள வட மாநிலத்தவருக்கும் இந்தி தெரியும், இங்கு புலம் பெயர் தொழிலாளிகளாக வருபவர்களுக்கும் இந்தி தெரியும். இவர்கள் (வட மாநிலத் தொழிலாளிகள்) ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் எளிதாகச் செல்வதற்கும், அதன் மூலம் ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தைக் கைப்பற்ற முயலும் போது இவர்கள் ஐந்தாம் படையாக தமிழகத்தை உள்ளிருந்து தாக்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது” என்று பேசியுள்ளார்.[ii] இவை அப்பட்டமான இனவெறிக் கருத்துக்கள் இல்லையா? வட மாநிலத் தொழிலாளிகளை சீமானும் மணியரசனும் எதிரிகள் போலச் சித்தரித்து தமிழினவெறியைக் கிளறிவருகிறார்கள். இந்திக்காரர்கள் மோடி-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்குச் சாதகமானவர்கள் என்பது அதற்கு அவர்கள் கூறும் முக்கியமான காரணம். அத்தகைய வாதம்தானே இது.

பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பலைச் சேர்ந்தவர்களால் மறைமுகமாக நடத்தப்பட்டு, நடுநிலை போல வேடமிட்டுத் திரியும் “ஆதன் தமிழ்” என்ற சேனலுக்குத் தொடர்ந்து பேட்டியளித்துவரும் மருது, ஒரு பேட்டியில் “இந்திய எல்லையில் சீனா ஒரு சிட்டியையே உருவாக்கியுள்ளது. அதற்கெதிராக துப்பாக்கியைத் தூக்க வக்கில்லாத நீ [மோடி அரசு] தூத்துக்குடி மக்களை எதிர்த்து துப்பாக்கியைத் தூக்குகிறாய்[iii] என்று பேசியுள்ளார். அதாவது, சீனாவை எதிர்த்து சண்டைக்குச் செல்ல மோடி அரசுக்கு வக்கிருக்கிறதா என்று எதிர்க்கட்சிகள் பேசிவரும் போலி தேசியவாதக் கருத்துக்களுக்கு பலியாகி அதையே மருதுவும் பேசுகிறார்.

000

இன்னொரு உதாரணமும் கொடுக்கிறோம். ஆளுநர் ரவியே வெளியேறு (#getoutravi) என்று அஞ்சலட்டை அனுப்பும் ‘இயக்க’த்தை எடுப்பதை ஒட்டி, உங்கள் தலைமை ஒரு பத்திரிக்கைச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு இடத்திலும் ‘பாசிசம்’ ‘காவி பாசிசத்தின் அடியாள் ரவி’ என்கிற ஒரு வார்த்தை கூட இடம் பெறவில்லை. ஆளுநர் ரவி “தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் எதிராகச் செயல்படுவதாக” ‘மட்டும்’ உண்மையில் தமிழினவாதக் கண்ணோட்டத்தில் “சுருக்கி” ‘இயக்கம் எடுத்ததே’ உங்கள் தலைமைதான்.[iv] ஆளுநர் ரவி காவி-கார்ப்பரேட் பாசிச கும்பலின் பிரதிநிதி என்கிற முறையில் செயல்பட்டு வரும்போது, அச்செயல்பாடுகளை காவி-கார்ப்பரேட் பாசிச நோக்கங் கொண்டவை என்று வர்க்க அரசியலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமா? அல்லது, “தமிழ்நாட்டுக்கும் தமிழினத்துக்கும் எதிராகச் செயல்படுவதாக” இனவாதக் கண்ணோட்டத்தில் அரசியலை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமா? ‘தமிழின விரோதி ஆளுநர் ரவியே வெளியேறு’ என்கிற இனவாத உள்ளடக்கத்தை உங்கள் தலைமைதான் வெளிப்படுத்தியிருக்கிறது.

மொழி, இன உணர்வும் பாட்டாளி வர்க்க உணர்வும் எந்த அடிப்படையில் தோன்றி வளர்கிறது. எந்த இடத்தில் வேறுபடுகிறது என்ற அரசியல் புரிதலே இல்லாததையே இவர்களின் மேற்கண்ட செயல்பாடுகள் வெளிப்படுத்துகிறது. அதனால்தான் மொழி, இன உணர்வை பாட்டாளி வர்க்க உணர்வு கடந்து வர வேண்டிய அவசியத்தை உணர முடியவில்லை.

இவ்வாறாக, தங்களுக்கென்று ஒரு சித்தாந்தமோ, அரசியலோ இல்லாத லும்பன் கும்பல் தலைமை வெளியிடும் பிரசுரங்களிலும், கானொலிகளிலும்தான் பல கருத்துக்களைக் கலவையாக உளறுவதும், இனவாத, இனவெறி, போலி தேசியவாதக் கருத்துக்களுக்குப் பலியாகி அவற்றையும் சேர்த்துக் கலவையாகப் பேசுவதும் வெளிப்படுகிறது. இது இவர்கள் அரசியலற்ற, சித்தாந்தமற்ற தன்மையிலானவர்கள் என்பதையே நிரூபிக்கிறது. ஆனால் எமது அமைப்பு தமிழினவாதக் கண்ணோட்டத்தில் செயல்படுவதாக அபாண்படமாக, எவ்வித ஆதாரமுமின்றிக் குற்றஞ்சாட்டுகிறார்கள். இவை ஆத்திரம் தலைக்கேறி உளறும் அவதூறுகளா இல்லையா என்பதைத் தோழர்கள்தான் சிந்திக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

பாசிசத்தை எதிர்த்த போராட்டத்திற்கு துரோகம் செய்வது யார்?
ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு (2021 ஜனவரி – 2022 ஜூன் வரை) மக்கள் அதிகாரம் அமைப்பு சார்ப்பாக காவி-கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து எவ்வித வீச்சான பிரச்சாரத்தையும் போராட்டத்தையும் இயக்கங்களையும் எடுக்காமல் அமைப்பு கிட்டத்தட்டத் தேங்கிக் கிடந்தது. இது காவி-கார்ப்பரேட் பாசிசம் ஏறித் தாக்கும் சூழலில் அரசியல் முன்முயற்சியைக் கைவிடும் துரோகமாகும். அப்போது தலைமையிலிருந்த வெற்றிவேல் செழியன் உள்ளிட்ட தலைமைக் குழுவிடம் தோழர்கள் முத்துக்குமார் உள்ளிட்ட பல கிளைகளைச் சேர்ந்த தோழர்கள் பலமுறை வலியுறுத்தியும் இயக்கம் ஏதும் எடுக்கப்படவில்லை. அதற்குப் பின்பே இவர்கள் அமைப்பைச் செயலின்மையில் தள்ளி முடக்குவதையே நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள் என்ற புரிதலுக்கு வந்தோம். இதைத் தொடர்ந்து 15.06.2022 அன்று பொதுக்குழுவைக் கூட்டி வெற்றி-மருது தலைமையிலானவர்களை அமைப்பிலிருந்து வெளியேற்றி தோழர் முத்துக்குமார் பொதுச் செயலாளராகவும், தோழர் கோபிநாத் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து அமைப்பை ஒழுங்குபடுத்த வேண்டிய பணிகள் இருந்தபோதிலும், பல்வேறு பகுதிப் பிரச்சனைகளுக்கான போராட்டங்கள், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு / வரி உயர்வுக்கு எதிரான இயக்கம், ஆர்ப்பாட்டங்கள், இந்தி-சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்த இயக்கம் போன்றவற்றை எடுத்து காவி-கார்ப்பரேட் பாசிசத்தை மக்கள் மத்தியில் வீச்சாக அம்பலப்படுத்தியும் அமைப்பைக் கட்டி வளர்த்தும் வருகிறோம்.

15.06.2022 இல் எமது அமைப்பின் பொதுக்குழு வெளியிட்ட அறிக்கைக்குப் பின்பு, எவ்விதத்திலும் வாய்திறக்காத இவர்கள் இப்போது பல்வேறு விதத்தில் அவதூறுகளைப் பேசி வருவதற்கு அவர்களுக்கு ஒரு காரணம் இருக்கிறது.

இந்தி சமஸ்கிருதத் திணிப்பைத் தகர்த்தெறிவோம்! இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற தலைப்பின் கீழ் கடந்த ஒரு மாத காலமாக எமது அமைப்பு மக்கள் மத்தியில் எங்கள் சக்திக்குட்பட்ட வகையில் வீச்சாகப் பிரச்சாரம் செய்து வந்ததையும், அதன் தொடர்ச்சியாக திருச்சியில் சனவரி 25-இல் கருத்தரங்கை நடத்தியதையும் அனைவரும் அறிவர். பல்லாயிரக் கணக்கான துண்டுப் பிரசுரங்கள், சுவரெழுத்துக்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் என்று இந்தி-சமஸ்கிருதத்தைத் திணித்து இந்து ராஷ்டிரத்தை நிறுவத்துடிக்கும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பலை அம்பலப்படுத்தி வீச்சான பிரச்சாரம் எமது அமைப்பால் மேற்கொள்ளப்பட்டது.

அமைப்பு பலம் இல்லை, அதனால் இரண்டாயிரம் பிரசுரம் போட்டாலே வீச்சான பிரச்சாரம்தான் என்று சொந்த அணிகளையே ஏமாற்றி வந்தவர்களுக்கு இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தை எமது அமைப்பு வீச்சாக எடுத்துச் சென்றதைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஆத்திரத்திலும், சொந்த அணிகளிடமிருந்து கேள்வி எழுவதை சதித்தனமாக தவிர்க்கவும் மற்றவர்களை அவதூறு செய்வதன் மூலம் தங்களை ‘புனிதர்களாக’, ‘புரட்சியாளர்களாக’ காட்டிக் கொள்ளும் நோக்கிலும்தான் இவர்கள் பல்வேறு அவதூறுகளை அள்ளிவீசி வருகிறார்களேயன்றி வேறொன்றுமில்லை. சொந்த அணிகளை அரசியல் பணிகளில் இருந்து திசை திருப்பவே அமைப்பின் பெயருக்கு பங்கம் விளைந்தாலும் பரவாயில்லையென்று பல்வேறு பிரச்சினைகளை பொதுவெளியில் கிளப்புகின்றனர்.

உண்மையில் இவர்கள் எவ்வித அரசியலும், அமைப்புமுறையும் அற்றவர்களாவர். மொத்த அமைப்பையும் செயலின்மையில் தள்ளுவதே இவர்களின் நோக்கமாகும். அந்த செயலின்மையை மறைத்துக் கொள்வதற்காக யூடியூப் சேனல்களிலும் முகநூலிலும் வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டும், எழுதிக் கொண்டும் வருகிறார்கள். பாசிசத்தை எதிர்த்து இயக்கம் என்று எதையும் எடுக்காமல், இயக்கம் எடுத்ததைப் போல பகட்டாரவாரம் செய்து மக்களையும் சொந்த அணிகளையும் ஏமாற்றுகிறார்கள். இதைப் பற்றி சற்று சுருக்கமாகக் கூறுகிறோம்.

முதலில் ஒரு இயக்கம் எடுப்பது என்றால் – உதாரணமாக இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கம் என்றால் – அந்த இயக்கத்தின் மையக் கருப்பொருளை பல்வேறு வழிகளில் மக்களிடம் பரவலாகக் கொண்டு சேர்க்க வேண்டும். அதற்கு சுவரெழுத்து, சுவரொட்டி, பிரசுரங்கள், இரயில், பகுதி, கடைவீதிப் பிரச்சாரங்கள் என பல வழிகளில் மக்களிடம் செல்ல வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான் அந்த இயக்கத்தின் மையக் கருப்பொருளை மக்களுக்குப் புரியவைத்து, அரசியல் உணர்வூட்டித் தட்டியெழுப்ப முடியும். இந்தக் கண்ணோட்டத்தில்தான் நமது அமைப்பும் நமது தோழமை அமைப்புகளும் கடந்த 30 ஆண்டுகாலமாக பல்வேறு இயக்கங்களை எடுத்துள்ளன.

ஜனவரி மாதம் இவர்கள் இரு இயக்கங்களை எடுத்ததாகச் சொல்கிறார்கள். 1) இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கம் 2) ஆளுநரே வெளியேறு (#getoutravi) இயக்கம். உண்மையில் இவ்விரு இயக்கத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவேயில்லை. இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கத்துக்காக இவர்கள் போட்ட பிரசுரத்தில் பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டம், தெருமுனைக் கூட்டம், நினைவஞ்சலி என இவையனைத்தையும் நடத்தப்போவதாக பகட்டாரவாரமாகப் அறிவித்திருந்தார்கள். ஆனால் பிப்ரவரி 05 ஆம் தேதியாகியும் இன்றுவரை எந்த மாவட்டத்திலும் பொதுக்கூட்டமோ, அரங்கக் கூட்டமோ ஒன்று கூட நடத்தவில்லை. ஓரிரு இடங்களில் தெருமுனைக் கூட்டத்தை மட்டுமே பெயரளவில் நடத்தியுள்ளனர்.

ஜனவரி 20 ஆம் தேதி வரை இவர்கள் எந்த மாவட்டத்திலும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு இயக்கப் பிரசுரங்களை விநியோகித்து பிரச்சாரம் செய்ததாகவோ, மக்களிடம் சென்றதாகவோ தெரியவில்லை. எந்த இடத்திலும் இயக்கத்திற்கான சுவரொட்டி கூட ஒட்டப்பட்டதாகப் பார்க்க முடியல்லை. ஜனவரி 22 ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) மட்டும் சில கடைவீதிகளில் பிரச்சாரம் செய்ததாக முகநூலில் செய்திகளைப் பார்க்க முடிந்தது. இதுதான் இவர்கள் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்க்கும் இலட்சணம்.

மேலும், “ஆளுநரே வெளியேறு” என்று இவர்கள் எடுத்த இயக்கத்திற்கு ஒரு பிரசுரம் கூடப் போடவில்லை. அதை எந்த மக்கள் மத்தியிலும் கொண்டுபோய் பிரச்சாரம் செய்யவும் இல்லை. அஞ்சலட்டை எழுதி தபால் பெட்டியில் போட்டதையே பெரிய ‘புரட்சிகர’ பணியாக முகநூல்களில் பதிவிட்டு கூத்தடிக்கின்றனர்.

இவ்வாறாக, புரட்சியை நேசித்து வந்த அணிகளையும், அமைப்பு முழுவதையும் செயலின்மையில் தள்ளிவிட்டு, அந்த செயலின்மையை மறைக்க பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதைப் போல நாடகமாடி மக்களையும் சொந்த அணிகளையும் ஏய்த்து வருகிறார்கள்.

தோழர்களே! காவி-கார்ப்பரேட் பாசிசம் ஏறித் தாக்கி வரும் இன்றைய சூழலில், இலட்சக்கணக்கான மக்களை அரசியல் உணர்வூட்டித் தட்டியெழுப்பும் மாபெரும் கடமை நம்முன் நிற்கிறது. அதைச் செய்து முடிக்க எமது அமைப்பு எடுத்த இந்தி எதிர்ப்பு இயக்கமும் கூட ஒரு சிறுதுளி தான். இன்னும் இலட்சக்கணக்கில் மக்களைச் சென்றடையவும் அவர்களை அரசியல் உணர்வூட்டித் தட்டியெழுப்பவும் நாம் கண்ணுறங்காமல் பணியாற்ற வேண்டியிருக்கிறது. ஆனால் லும்பன் கும்பலோ இவ்வாறு மக்களிடம் சென்று பிரச்சாரம் செய்வதையே “பிரபலம் தேடும் வேலைமுறை” “குட்டி முதலாளித்துவ வேலைமுறை” “புரட்சிகர அல்லேலூயா வேலைமுறை” என்றெல்லாம் ஏளனம் செய்கிறது. இதன் மூலம் தன் செயலின்மையை மூடி மறைத்து, அதற்கே ‘கோட்பாட்டு’ விளக்கமும் கொடுத்து அதன் மீது படுத்துறங்குகிறது. தான் ஏதோ புரட்சிகரப் பணியைச் செய்து வருவதுபோல நாடகமாடுகிறது.

நமது அமைப்பும் தோழமை அமைப்புகளும் கடந்த 30 ஆண்டுகளாக ‘மாதந்தோறும் இயக்கம் எடுத்தது’ தவறு, வலது சந்தர்ப்பவாதம் என்று இவர்கள் வாதிட்டார்கள். அது “பிரபலம் தேடும் வேலைமுறை” “அணிகள் சித்தாந்த ரீதியில் வளரத் தடையாக இருந்தது” “கைது வழக்குகளை எதிர்கொள்ள முடியாமல் போகிறது” “அவ்வாறு தொடர்ந்து இயக்கம் எடுப்பதால் கட்சி கட்ட முடியாமல் போகிறது” “இது மக்களிடமிருந்து தனிமைப்பட்ட குட்டிமுதலாளித்துவ வேலைமுறை” என்றெல்லாம் இவர்கள் கூறினார்கள் / கூறுகிறார்கள். ஆனால், இப்போது இவர்கள் ஒரே மாதத்தில் இரு இயக்கங்கள் எடுத்துள்ளனரே! அந்த இயக்கத்தில் அறிவித்தபடி, பொதுக்கூட்டம், அரங்கக் கூட்டம் என எதையும் நடத்தாமல் அடுத்து “அதானியைத் தூக்கில் போடு! சொத்துக்களைப் பறிமுதல் செய்!” என இன்னொரு இயக்கமும் எடுத்துள்ளனரே! இதை எப்படிப் பரிசீலிப்பது. எந்தவிதமான செயல்பாடுகளையும் மேற்கொள்ளாமல் எல்லாம் செய்வதுபோல நாடகமாடி அணிகளையும் மக்களையும் ஏமாற்றுவதற்கே இவ்வாறு செயல்படுகிறார்கள். இவைதான் உண்மையில் மக்களிடம் செல்லாமல், எந்த வேலையும் செய்யாமல் பகட்டான அறிவுப்புகள் வெளியிடுவதன் மூலம் மட்டுமே பிரபலத்தை தேடுகின்ற – மக்களை ஏமாற்றுகின்ற – வேலைமுறை ஆகும். இதைத் தோழர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் எனக் கோருகிறோம்.

“காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்” என்பதை நமது கொள்கையாக வைத்துவிடுவதால் மட்டுமே அதை முறியடிக்கும் வேலையை நாம் செய்வதாகப் பொருளாகாது. அதை முறியடித்தாக வேண்டும் என்ற நெருப்பு நம் நெஞ்சில் கணன்று நம்மை இயக்க வேண்டும். அப்போதுதான் அதற்கான வழிமுறைகளைத் தேடுவோம். மக்களிடம் செல்வோம். ஆனால் வெற்றி-மருது அணியினருக்குத் தலைமையளித்துவரும் லும்பன் கும்பலுக்கு அத்தகைய எந்த நோக்கமும் எள்முனை அளவும் இல்லை என்பதையே அவர்களது செயல்பாடுகள் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிண்றன. புரட்சியை நேசிக்கும் அணிகளே இத்தகைய கும்பல் தலைமையில்தான் இயங்கப் போகிறீர்களா என்பதை நீங்களே பரிசீலனை செய்யுங்கள்.

காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பது என்ற மாபெரும் கடமையை நிறைவேற்ற நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். செங்குத்தான மலைப்பாறையின்மீது கரடுமுரடான கற்களைக் கடந்து நாம் ஏறிக் கொண்டிருக்கிறோம். இவர்களுக்கோ முகநூலில் எழுதுவதையும், அவதூறுகளைப் பேசுவதையும், அணிகளை அரசியல் பணிகளில் இருந்து திசைதிருப்ப பல்வேறு பிரச்சனைகளை பொதுவெளியில் கிளப்புவதையும் தவிர வேறு வேலைகள் இல்லை. எனவே, இவர்கள் கிளப்பிவிடும் அவதூறுகளையும், தனிநபர் தாக்குதல்களையும் பொருட்படுத்த வேண்டாம், அவைகளுக்குப் பொதுவெளியில் பதிலளிப்பதும் எதிர்வினையாற்றுவதும் அவசியமற்றது.

அரசியலற்று, சித்தாந்தமற்று, அமைப்புமுறையற்று, செயலின்மையில் முடங்கிக் கிடக்கும் இவர்களை மக்களும் ஆதரவாளர்களும் புறக்கணிக்க வேண்டும் என்றும்; இவர்கள் தலைமையில் இயங்கும் புரட்சியை நேசிக்கும் தோழர்கள் இக்கும்பலைப் புறக்கணித்துவிட்டு எமது அமைப்பில் வந்து இணைய வேண்டும் என்றும் கோருகிறோம்.

தோழமையுடன்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
தொடர்புக்கு – 97901 38614

 

இணைப்புகள்:

[1] தமிழ் மிண்ட் இணையதளத்தில் மருது அவர்களின் பேட்டி, https://www.youtube.com/watch?v=gCuoJC87N4Q&embeds_euri=https%3A%2F%2Fwww.vinavu.com%2F&feature=emb_imp_woyt (21 ஆவது நிமிடம்):

[1] மேற்கண்ட பேட்டி, 22 ஆவது நிமிடத்திலிருந்து…

[1] மருதுவின் பேட்டி, https://www.youtube.com/watch?v=xelN5k8xUrU\

 (32 ஆவது நிமிடம்)

[1] காண்க : #getoutravi இயக்கம் ; வினவு பத்திரிக்கைச் செய்தி https://www.vinavu.com/2023/01/13/jan-25-getoutravi-movement-language-war-martyrs-day-makkal-athikaram/

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன