கார்ப்பரேட்டுகளின் லாபவெறிக்கு பலியாகும் வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்கள்

வாகன உதிரிபாகங்களின் உற்பத்தி குறையும் போது நிர்வாகம் உற்பத்தியை கணக்கீடுவதற்கு மீட்டர் வைக்கிறது, ஆனால் தொழிலாளர்கள் தங்களது கை விரல்களை இழந்தாலும் ஒரு போதும் பாதுகாப்பு உபகரணங்களை நிர்வாகம் வைப்பதில்லை என்கிறார்கள் 25 வயதான சோனி எனும் பெண் தொழிலாளியும் ஹோண்டா தொழிற்சாலையின் சப்ளையர் நிறுவனத்தில் தன் கை விரலை இழந்த பிரமோத் குமாரும்.

இரு மற்றும் நான்கு சக்கர, கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள்  இல்லாதொரு உலகம் எப்படி இருக்கும் என்பதை எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா?

சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விடுவதாக கற்பனை செய்து பாருங்கள். மொத்த உலகமும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும்.

மனித உழைப்பு தனது ஒவ்வொரு கட்ட வளர்ச்சியினூடாகவும் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைப் புரிந்து கொண்டு, அதனோடு இயைந்தும் முரண்பட்டும் பலவித கருவிகளை உருவாகியதன் நீட்சியே இன்று நாம் காணும் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் பல்வேறு வாகனங்களும் ஆகும்.

இயற்கை வளங்களும்  மனித உழைப்பின் உபரியும் அனைவருக்கும் பொது என்ற நியதிக்கு மாறாக, மனித உழைப்பு சக்தியையும்,  இயற்கைச் செல்வங்களையும் சுரண்டி வாழும் முதலாளித்துவம், இயற்கையையும், லாபத்தையும் தன்னிடத்தில் குவித்து வைத்துக் கொள்கிறது.  

இந்தியாவின்  ஏதோவொரு மூலையில்  வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், தன் இரத்தத்தை வியர்வாக சிந்தி, ஒரு முகம் தெரியாத நம் சக தொழிலாளி கசக்கி பிழியப்படுவதன் மூலம், உற்பத்தியாகும் வாகனங்கள் தான் இந்திய சாலைகளில் ஓடுகிறது.

இந்தியாவின்  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆட்டோமொபைல் துறை 7 சதவிகித பங்களிப்பைச் செலுத்துகிறது. இத்துறை சுமார் 4 கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு வழங்குகிறது. உலகில் உற்பத்தியாகும்  7 கார்களில் ஒரு கார் இந்தியாவிலிருந்து உற்பத்தி செய்யப்படுவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் இத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பைஇந்நிறுவனங்கள் வழங்குவதில்லை.  

 

 

வாகன உற்பத்தி அதிகரிப்புடன் கூடவே வாகன உதிரிபாகத் தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும், மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கின்றன.

சமீபத்தில் சேப் இன் இந்தியா (safe in India foundation) என்ற தன்னார்வ நிறுவனம் வாகனத்தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம்  கடந்த ஆறு ஆண்டுகளாக சுமார் 4000 தொழிலாளர்களுடன் தொடர்பு கொண்டு இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இத்தொழிலாளர்கள்  பல மாநிலங்களில் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள்.

ஹரியானாவின் மாருதி, ஹோண்டா, ஹீரோ, புனே மற்றும் மகாராட்டிராவின் டாட்டா, மஹிந்திரா, தமிழ்நாட்டின் டி.வி.எஸ், அசோக் லேலண்ட் உத்தரகாண்டின் டாட்டா. பஜாஜ்,  மகிந்திரா, இராஜஸ்தானின்  மாருதி, ஹோண்டா, ஹீரோ போன்ற வாகனத் தொழிற்சாலைகளுக்கு சப்ளை செய்யும் வாகன உதிரிபாக தொழிற்சாலைகளின் தொழிலாளர்கள் இவ்வறிக்கையில்   பங்கெடுத்துள்ளனர்.

இந்திய அளவில் அரசினால் (DGFASLI) பதிவு செய்யப்பட்ட கணக்குகளின் படியே 2020 ஆம் ஆண்டில் மட்டும் 3882  தொழிலாளர்கள் ஆட்டோ மொபைல் துறையில்  நடந்த விபத்துகளில் காயமடைந்துள்ளனர். இது பதியப்பட்ட காயங்களின் கணக்கு தான். பதிவு செய்யப்படாத விபத்துக்கள் ஏராளம்.

வாகன தொழிற்சாலைகளும், வாகன உதிரி பாக உற்பத்தி தொழிற்சாலைகளும் தங்களது லாபவெறிக்காக அத்தியாவசியமானப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட வேண்டுமென்றே புறக்கணிப்பதன் காரணமாகத் தொழிலாளர்களுக்கு விபத்துக்கள்  ஏற்படுகிறது.

விபத்துகளைத் தவிர்க்கச் செய்யப்படும் பாதுகாப்புச் செலவினங்களால் முதலாளிகளுக்கு லாபம் குறைவதால் தொழிலாளிகளின் உயிர்களையும், காயங்களையும் ஒரு போதும் முதலாளிகள் பொருட்படுத்துவதில்லை.

ஆட்டோமொபைல் துறையில் காயம் ஏற்பட்டுள்ள தொழிலாளர்கள் பாதிக்கும் மேற்பட்டோர் இயந்திரங்களை இயக்குவதில் பயிற்சி இல்லாதவர்கள் என்றும், 10-12 மணிநேரம் வேலை, குறைந்த கூலிக்காக வேலைப்பார்ப்பதாக இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மகாராட்டிராவின் அகோலாவை  சார்ந்த ஆகாஷ் என்ற தொழிலாளி தான் வலது கையின் மூன்று விரல்களை இழந்தது பற்றி கூறும் போது, அன்று பவர் பிரஸ் இயந்திரத்தின் ஆப்ரேட்டர் விடுமுறை என்பதால், சூப்பர்வைசர் என்னை இயந்திரத்தை இயக்கச் சொன்னார். ஒரு முறை மட்டுமே இயந்திரத்தை இயக்க பயிற்சி அளிக்கப்பட்டது. வேலையின் போது உதிரிபாகங்களை எடுக்க முற்பட்ட போது தன்  மூன்று விரல்களை இழந்ததாக கூறுகிறார்.

பூரண் சிங் எனும் 52 வயதான தொழிலாளி தான் பவர் பிரஸ்சை இயக்கும் போது, தன் 4 கை விரல்களை இழந்ததாக  கூறுகிறார். தொழிற்சாலை எந்த வித இழப்பீடும் தனக்கு அளிக்கவில்லை என்கிறார் இத்தொழிலாளி. தற்போது செக்யூரிட்டியாக வேலை பார்ப்பதாக கூறுகிறார் பூரண்.

 

 

வாகன உதிரிபாகங்களின் உற்பத்தி குறையும் போது நிர்வாகம் உற்பத்தியை கணக்கீடுவதற்கு மீட்டர் வைக்கிறது, ஆனால் தொழிலாளர்கள் தங்களது கை விரல்களை இழந்தால் ஒரு போதும் பாதுகாப்பு உபகரணங்களை நிர்வாகம் வைப்பதில்லை என்கிறார்கள் 25 வயதான சோனி எனும் பெண் தொழிலாளியும் ஹோண்டா தொழிற்சாலையின் சப்ளையர் நிறுவனத்தில் தன் கை விரலை இழந்த பிரமோத் குமாரும். நிர்வாகம் உற்பத்தியை அதிகரிக்க விரும்புகிறது. உதிரிபாகங்கள் தரமாக வெளிவர விரும்புகிறது. தொழிலாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை எந்த முதலாளிக்கும் அக்கறை படுவதில்லை என்கிறார், அஜித் ஷா

  

 

 

 

 

 

 

 

புகைப்படம் : நன்றி- சேப் இன் இந்தியா பவுண்டசேன்

 

ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு தான்  பெரும்பாலும் கொண்டு செல்லப்படுகிறார்கள். காயமடைந்த மூன்று நாட்களுக்கு பிறகுதான் அவர்கள் ஈ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்கிறது இவ்வறிக்கை. இதன் மூலம் காயத்தின் தீவிரத்தை மறைத்து வருகின்றன இந்திய ஆட்டோ மொபைல் துறை கம்பெனிகள். மேலும் காயமடைந்த பெரும்பாலான தொழிலாளர்களுக்கு காயமடைந்த பின்பு தான் ஈ.எஸ்.ஐ கார்டுகள் வழங்கப்பட்டு இருப்பதாக இவ்வறிக்கை கூறுகிறது.

உற்பத்தி! அபரிமிதமான உற்பத்தி! இதை மிக் குறைவான கூலியில் சாதிப்பதன் மூலமே லாப அளவு நிர்ணயிக்கப்படும் என்பது முதலாளித்துவத்தின் அடிப்படை. எனவே பாதுகாப்பான அம்சம் என்பதையெல்லாம் ஆட்டோமொபைல் துறை முதலாளிகள் பொருட்படுத்துவதில்லை.

இந்தப் பகாசுர உற்பத்தி வேகத்தின் காரணமாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் செலவு செய்து லாபத்திலிருந்து ஒரு சிறு பகுதியும் வீணாகி விடக்கூடாது என்கிற முதலாளிகளின் பேராசைக் காரணமாகவும் அடிப்படை அத்தியாவசிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கூட செய்யாமல் விட்டுவிடுவதாலேயே ‘விபத்துகள்’ நடக்கின்றன.

சேப் இந்தியா பவுண்டசேன் அறிக்கை, இந்தியாவில்  பாதுகாப்பு சம்பந்தமான  சூப்பர்வைசர்கள் பணியிடங்கள் பல காலியாக உள்ளன என்கிறது

உலகில் இருசக்கர, மூன்று சக்கர வாகன உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும் கனரக பேருந்து உற்பத்தியில் 2வது இடத்திலும்  கனரக டிரக் உற்பத்தியில் 5வது இடத்திலும்  கார் உற்பத்தியில் 4 வது இடத்திலும் உள்ளது. தொழிலாளர்களோ, அதே வாகன உற்பத்திக்காகவும், முதலாளிகளின் கொள்ளை இலாபத்துக்காகவும், பாதுகாப்பற்ற தொழிற்சாலை சூழலில் தனது உயிரைபணயம் வைத்து  உற்பத்தி செய்கிறார்கள்.

தொழிலாளர்களின் பணிச் சூழல் பாதுகாப்பு, விபத்து தடுப்புப் போன்றவைகளை தொழிற்சாலை முதலாளிகளின் கட்டாயமான பொறுப்பு அல்ல என்றும் இதன் காரணமாக ஏற்படும் விபத்துகளுக்கு தொழிற்சாலைகள் பொறுப்பேற்க வேண்டியதோ ,நட்ட ஈடு தரவேண்டியதோ தேவையில்லை என்றும் தொழிலாளர் சட்டங்கள் மாற்றி உள்ளதுமோடி அரசு. காயமடைந்தது  காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் என்றால் கேள்வி கேட்பார் யாரும் இல்லை. அவர்கள் வாழ்விழந்து அதோகதிக்கு ஆளாகின்றனர்.

 

புகைப்படம் : நன்றி- பிரண்ட்லைன்

மோடி கொண்டு வரும் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை அதிகரிப்பதாக தான் உள்ளது.  வேலை நேரம் அதிகரிக்க அதிகரிக்க விபத்துக்கள் அதிகரிக்கும் என்பது எழுதப்படாத விதி. மேலும் பாதுகாப்பு சம்பந்தமான விசயங்களில் பாதுகாப்பு இன்ஸ்பெக்டர் என்பவரின் வேலையை அரசிடமிருந்து தனியார் கையில் ஒப்படைப்பதாக இருக்கிறது. இச்சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்தால் இன்னும் பல  விபத்துக்கள் ஏற்படுவதும் தொழிலாளர்கள் வாழ்விழப்பதும் அதிகரிக்கும்.

தாமிரபரணி

செய்தி ஆதாரங்கள்:

https://frontline.thehindu.com/the-nation/safe-in-india-foundation-report-on-workplace-accidents-in-auto-hubs-highlights-why-the-problem-is-systemic/article66320815.ece

https://www.safeinindia.org/_files/ugd/5d022b_b38f8ed2c65d42b78e4318d8ba91613d.pdf

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன