ஒப்பந்த தொழிலாளர்கள் ஒற்றுமையாக போராடினால் வெல்ல முடியும் என நிரூபித்த யசாகி தொழிலாளர்களின் போராட்டம்!

ஒப்பந்த தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு வேலைக்குச் சேரும் இந்த தொழிலாளர்கள், எத்தனை ஆண்டுகள் வேலை பார்த்தாலும் அவர்களது அனுபவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது, அவர்கள் நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள், அவர்களது சம்பளத்தில் ஒரு ருபாய் கூட அதிகரிக்காது, அவர்கள் மீதான சுரண்டலை தடுக்க சட்டங்களும் கிடையாது. யசாகியில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்தவொரு ஆலையிலும் இருக்கும் நிலைமை இதுதான். 

இன்றைக்கு ஆலைத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்கள் நிரந்தரப் பணியாளர்களாக இல்லாமல் அப்பரண்டீஸ்கள் (Apprentice), பயிற்சி பெறுபவர் (Trainee), நீம் தொழிலாளி, என பல பெயர்களில் பணி நிரந்தரம் இல்லாத ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வேலைசெய்கின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச சட்ட பாதுகாப்பு கூட இல்லாமல் முதலாளிகளின் அப்பட்டமான சுரண்டலுக்கு ஆளாகும் இந்த ஒப்பந்த தொழிலாளர்களின் ஒரே பலம் அவர்களது ஒற்றுமைதான். தொழிலாளி வர்க்கமாக அவர்கள் தங்களது ஒற்றுமையைச் சாதிக்கும் பொழுது மட்டுமே முதலாளி வர்க்கத்தை மண்டியிடச் செய்ய முடியும், தங்களது உரிமைகளைப் பெற முடியும்.

அப்படி ஒரு சம்பவம்தான் யசாகி தொழிற்சாலையில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகரா மாவட்டத்தில் லக்கேனஹள்ளியில் உள்ள யசாகி இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆலையில் சட்ட விரோதமாக 153 தொழிலாளர்கள் ( 60 பெண் தொழிலாளர்கள்) பணிநீக்கம் செய்யப்பட்டதை  எதிர்த்து இத்தொழிலாளர்கள் டிசம்பர் 26ம் தேதி முதல் ஆலை வாயிலின் வெளியே ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் கீழ் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இப்போராட்டம் தொடர்ந்து பதினாறு நாட்கள் கடந்த நிலையில் ஜனவரி 11ம் தேதியன்று  துணை தொழிலாளர் ஆணையர் உடன் நடந்த முத்தரப்பு சமரசக் கூட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் திரும்ப பெறப்படுவார்கள் என யசாகி நிறுவனம் உறுதியளித்தது.

இதன் படி 45 தொழிலாளர்கள் மீண்டும் பணியில் சேர யசாகி மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 108 தொழிலாளர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரியவருகிறது.

ஜப்பானைச் சார்ந்த யசாகி கார்ப்பரேசன் எனும் நிறுவனம் உலகம் முழுவதிலும் சுமார் 62 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் சுமார் 2,50,000 தொழிலாளர்கள் உலகளவில் வேலைப் பார்த்து வருகின்றனர். எலக்டிரிக் ஒயரிங் ஹார்னஸ், எனும் வாகன உதிரிபாகத்தை உலகின் பல்வேறு வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்காக இந்நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. இதன் துணை நிறுவனம் தான் யசாகி இந்தியா பிரைவேட்  லிமிடெட், இது இந்தியாவில் பல மாநிலங்களில் தன் ஆலையை அமைத்து ஒயரிங் ஹார்னஸ்களை இங்குள்ள வாகன தொழிற்சாலைகளுக்காக உற்பத்தி செய்து வருகிறது.

 

 

கர்நாடகாவில் இயங்கும் யசாகி நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் பெரும்பாலான தொழிலாளர்கள், வட-கர்நாடக மாவட்டங்களான கலபுராகி, கொப்பல்,பெலகாவி மற்றும் பிடார் போன்றவற்றை சார்ந்தவர்கள். இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண் தொழிலாளர்கள். இங்கே பணிபுரியும் 3000 தொழிலாளர்களில் வெறும் 130 பேர் மட்டுமே நிரந்தரத் தொழிலாளர்கள். மீதமுள்ளவர்கள் அனைவரும் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.  

மூன்று ஆண்டுகள் பயிற்சியின் போது கசக்கி பிழியப்பட்டு இந்த இளம் தொழிலாளர்கள் ஆலைக்கு வெளியே வீசியெறியப்படுகின்றனர். அல்லது அசோசியட் டிரெய்னி எனும் புதிய பயிற்சி பிரிவில் ஆலையில் மீண்டும் சேர்க்கப்பட்டு சுரண்டப்படுகின்றனர்.  இப்படி எந்தவொரு பயிற்சி தொழிலாளர்களையும் நிரந்தரமாக்காமல் அவர்களின் உழைப்புச் சக்தியை  குறைந்த கூலிக்கு (மாதம் ரூ 10000-12,000 ) சுரண்டி யசாகி ஆலை கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது. பயிற்சி முடிந்த பின்பு அத்தொழிலாளர்கள் வெளியே அனுப்பப்பட்டு, மீண்டும்  புதிய பயிற்சி தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்துவது என தொடர்ந்து பல ஆண்டுகளாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது.

ஒப்பந்த தொழிலாளர்களாக குறைந்த கூலிக்கு வேலைக்குச் சேரும் இந்த தொழிலாளர்கள், எத்தனை ஆண்டுகள் வேலை பார்த்தாலும் அவர்களது அனுபவம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது, அவர்கள் நிரந்தரம் செய்யப்படமாட்டார்கள், அவர்களது சம்பளத்தில் ஒரு ருபாய் கூட அதிகரிக்காது, அவர்கள் மீதான சுரண்டலை தடுக்க சட்டங்களும் கிடையாது. யசாகியில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள எந்தவொரு ஆலையிலும் இருக்கும் நிலைமை இதுதான். 

 

 

ஆரம்பத்தில் பெங்களூரு நகரத்தின் ஜிகினியில் இயங்கிய இவ்வாலை, பின்பு தன் ஆலை வளாகத்தை கர்நாடகவின் ராம்நகரா மாவட்டத்தில் உள்ள  லக்கேனஹள்ளிக்கு மாற்றியது.  புதிய ஆலை தங்களின் இருப்பிடத்தில் இருந்து தொலைவில் இருப்பதாக கூறி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, லக்கேனஹள்ளி ஆலை வளாகத்தில் பணிபுரிந்தால் சம்பள உயர்வு, உணவு, தங்குமிடம் தருகிறோம் என ஆசை வார்த்தை காட்டி பின்பு எதுவும் கொடுக்காமல் நிர்வாகம் ஏமாற்றியுள்ளது.

இப்பயிற்சி தொழிலாளர்களுக்கு உற்பத்தி ஊக்கத்தொகை, விடுமுறை, போனஸ், காலணிகள்/சீருடைகள் உட்பட நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் எந்த வசதியும் கிடையாது. இவர்கள் கூடுதல் நேர வேலை (over time) செய்ய சொல்லி ஆலை நிர்வாகம்  தொடர்ந்து கட்டாயப்படுத்தும்  ஆனால் அதற்கான இரட்டிப்பு ஊதியம் எல்லாம் கிடையாது. சில சமயங்களில் 16 மணிநேரம் ஏன் 24 மணிநேரம் கூட வேலை பார்க்கும் அவல நிலைக்கு ஆளாகின்றனர் யசாகி தொழிலாளர்கள்.

பயிற்சி தொழிலாளர்கள் என பணியமர்த்தப்பட்டு அனைவரும் சட்டவிரோதமாக ( core production) உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நிரந்தர தொழிலாளர்கள் பார்க்கும் அனைத்து  வேலைகளையும் இத்தொழிலாளர்கள் பார்த்து வருகின்றனர். இது போன்ற  தொழிலாளர் சட்ட விதிகளையெல்லாம் யசாகி போன்ற நிறுவனங்கள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.

டிசமப்ர் மாதம் 16 ம்தேதி ஷிப்ட் முடிந்த பின்பு  53 தொழிலாளர்களின் பயோ மெட்ரிக் முறை வேலை செய்யவில்லை. ஆலை நிர்வாகத்திடம் கேட்டதற்கு 53 தொழிலாளர்களையும் பணிநீக்கம் செய்து விட்டதாக ஆலை நிர்வாகம் திமிராக வாய் வழி உத்தரவு போட்டுள்ளது. இதை எதிர்த்து 53 தொழிலாளர்கள் ஆலையினுள் போராட ஆரம்பித்தனர். இவர்களுக்கு உறுதுணையாக மேலும் 100 தொழிலாளர்கள்  ஆலையினுள் நடைப்பெற்ற போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர்.

போராடிய தொழிலாளர்களுடன் எந்த பேச்சுவார்தைக்கு வராமால் நிர்வாகம், இப்போராட்டத்தை கலைக்க, நேரடியாக போலீசை வரவழைத்திருக்கிறது. அஞ்சாமல்  போராடிய தொழிலாளர்கள் அனைவரையும் புகைப்படம் எடுத்து ஆலை நிர்வாகத்திற்கு கொடுத்து தன் கடமையை கண்ணும் கருத்துமாக போலிசார் நிறைவேற்றியிருக்கின்றனர். இப்புகைப்படத்தை கொண்டு, பணிநீக்கம் செய்யப்பட்ட  53 தொழிலாள்ர்களுக்கு ஆதரவாக போராடிய  மற்ற 100 தொழிலாளர்களையும் அடுத்த நாள் யசாகி நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் 60 பேர் பெண்கள்.

இத்தொழிலாளர்கள் அனைவரும் ஐடிஐ முதல் பொறியியல் வரை படித்து விட்டு குறைந்த கூலிக்கு யசாகியில் வேலை பார்த்து வருகின்றனர்.

 

 

தொழிலாளர்களை எந்த வித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்த ஆலை நிர்வாகம் இவர்கள் அனைவரும் அப்ரண்டிஸ் பயிற்சியாளர்கள். இத்தொழிலாளர்களுக்கு நாங்கள் முன்னறிவிப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை என திமிராக கூறியதை தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் கீழ் திரண்டு போராடி முதற் கட்டமாக வெற்றி பெற்றுள்ளனர்.

யசாகி நிறுவனம் மட்டுமில்லை, அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வது என்பது இந்தியாவில் அன்றாட வாடிக்கையாகி விட்டது. யசாகி தொழிலாளர்களை போல தொழிற்சங்கத்தின் கீழ்திரண்டு போராடுவதன் மூலம் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற முடியும். மீதமுள்ள 108 தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனக் கூறி யசாகி தொழிலாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

யசாகி தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன