வேங்கைவயல் தாழ்த்தப்பட்டவர் குடிநீரில் மனிதக் கழிவு: ஆதிக்க சாதியினரின் வன்கொடுமை வெறியாட்டம் – வேடிக்கை பார்க்கும் அரசு

அனைத்துச் சமூகங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இதுதான் ‘திராவிட மாடல்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அரசிற்கு நாமகரணம் சூட்டினார். ஆனால் விளிம்புநிலை மக்கள் பிரச்சினையில் திராவிட மாடல் தனது கடைக்கண் பார்வையைக்கூட காட்ட மறுக்கிறது. பொதுவில் கள்ளக்குறிச்சி விவகாரம், ஆசிரியர்கள் – செவிலியர்கள் போராட்டம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். குறிப்பாக வேங்கைவயல் பிரச்சினை இதற்கொரு துலக்கமான எடுத்துக்காட்டு ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் குடிக்கும் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித மலத்தை கலந்துள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனத்தை செய்தவர்களைக் கைது செய்ய போதிய ஆதாரம் இருந்தும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படவில்லை. விசாரணையை இழுத்தடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இப்படை பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்க முயற்சித்தது. இதற்கு கண்டனங்கள் எழுந்ததால் வழக்கு நேர்மையாக நடைபெற வேண்டும் என்று கூறி தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைக்கு ஆளாகி, “இப்படி மலத்தை திண்ண வைத்ததற்கு பதில் எங்களைக் கொன்றுபோட்டிருக்கலாம்” எனக் கதறிக் கொண்டிருக்கும் மக்களைச் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லாமல், வன்கொடுமைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல், தனிப்படை, சி.பி.சி.ஐ.டி. விசாரணை என பல உருட்டுகளை சொல்லி மக்களை ஏய்க்கப்பார்க்கிறது திராவிட மாடல் அரசு.  திமுகவின் திராவிட மாடலில் ஆதி திராவிடர்களுக்கு இடமில்லை போலும்.

இது குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது கூட்டணிக்கட்சிகள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிப்பதற்கு என்னென்ன வழிமுறைகளைக் கையாளப்போகிறீர்கள் என்று கேள்வி கேட்கவில்லை மாறாக முதலமைச்சரின் உருட்டுகளை ஏற்றுக்கொண்டு, தத்தமது பங்கிற்கு மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் கண்கானிப்பாளரும் செய்த செயல்களைப் பாராட்டியும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

தற்போதுவரை குற்றவாளிகளைப் பிடிக்க முடியவில்லை என்ற உண்மை ஒருபுறம் இருக்க, இதுகுறித்து எந்தக்கட்சியும், தொலைக்காட்சியும் பெரிதாக அக்கரை காட்டவில்லை. அம்மக்களின் ஓட்டுகளைப் பெறுவது என்ற வரம்பிற்கு உட்பட்டு தி.மு.க-விற்கு முட்டுக்கொடுப்பதில் தொடங்கி அம்மக்களை சாதிய ரீதியாக பிரிப்பது வரை இக்கட்சிகள் தங்களது நடவடிக்கைகளை செய்து வருகின்றன.

இந்நிகழ்வுக்குப் பிறகு, போலிஸ் விசாரணை பாதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கியே நடந்துள்ளதையும், அதில் போலிசின் அடாவடித்தனங்களையும் ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனல், கரிகாலன் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களின் குரலைப் பதிவு செய்துள்ளார். 

 

பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தமும், ஆதி திராவிட அணி மாநிலத் தலைவர் தடா பெரியசாமியும் வேங்கைவயல் சென்றதோடு, தாழ்த்தப்பட்ட மக்கள் தான் இதனைச் செய்திருக்க வேண்டும் என்ற கருத்தை பரப்பியுள்ளனர். மேலும் அரசு அதிகாரிகளிடமும் இதே கருத்தை வழியுறுத்தியுள்ளனர். அந்தக் கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள ஆதிக்க சாதி முத்தரையர் சங்கம் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஆதரவாக இருக்கிறது. எனவே பாஜக-வினர் இத்தகைய அவதூறுகளைச் செய்வதில் வியப்பேதும் இல்லை.

அதேபோல் பாஜக ஐ.டி பிரிவின் தலைவர் CTR. நிர்மல்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் பாலீதின் பையில் மலத்துடன் சிரித்துக் கொண்டிருக்கும் ஒரு கானொளியைப் பதிவிட்டு  இச்செயலை செய்தவர்கள்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தான் என்று விஷத்தைக் கக்கியுள்ளார். இவர் தனக்குப் பிடிக்காத நபர்களின் மீது இவ்வாறு நடந்துகொள்வது முதல் முறையல்ல ஶ்ரீமதி விவகாரத்திலும் இவ்வாறு தான் பதிவிட்டிருந்தார்.  

உண்மை என்னவென்றால் மலம் கலந்த நீரைக்குடித்த குழந்தைகளும், பெரியவர்களும் டிசம்பர் 24, 25 தேதிகளில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர். வேங்கைவயலில் இருந்து தொடர்ந்து மக்கள் மருத்துவமனைக்கு வந்ததால், குடிக்கும் தண்ணீரில் தான் பிரச்சினை இருக்க வேண்டும் என டாக்டர் கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து 26.12.2022 அன்று அப்பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், சுதர்சன், முரளிராஜா ஆகிய மூவரும் தண்ணீர் தொட்டியில் ஏறிப் பார்த்துள்ளனர். அப்பொழுது தண்ணீர் தொட்டியின் மூடி திறந்திருப்பதையும், மலம் கலந்திருப்பதையும் பார்த்து அதிர்ந்துள்ளனர். அதன்பிறகு ஊர் பெரியவர்களை அழைத்து வந்து காண்பித்துள்ளனர். அப்பொழுது அதனை படமாகவும், கானொளியாகவும் எடுத்துள்ளனர்.

இந்தக் கானொளியை தங்களது வேங்கை வாட்ஸாப் குருப்புக்கு சுதர்சன் அனுப்பியுள்ளார். இதனைத்தான் பாஜக-வின் ஐ.டி. பிரிவு தலைவர்  CTR. நிர்மல்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் மீது சாதி வெறுப்பை உமிழ்ந்துள்ளார். சாதி, மத மோதல்களை தூண்டுவதும், அதில் குளிர்காய்வதும் பாஜக-விற்கும் அதன் தலைவர்களுக்கும் புதிதல்ல. எனவே இவர்களின் கேடுகெட்ட நோக்கங்களைப் புரிந்துகொள்வதற்கு ஒரு வாய்ப்பாக கருதி இவர்களைப் புறக்கணிக்க வேண்டும். 

மேல்நிலைத் தொட்டியில் மனிதக் கழிவு கலந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் பேசுபொருள் ஆகிய பிறகு, முதல்வரின் உத்தரவின் பேரில் அதனைப் பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் நுழையவிடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்து வைத்திருப்பதைக் கண்டு வெகுண்டெழுந்து தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு கோவிலுக்குள் நுழைய முற்பட்டார். அப்பொழுது கோவிலின் சாவியைக் கொடுக்காமல் ஆதிக்க சாதியினர் அரை மணி நேரத்திற்கும் மேலாக அலைகழித்துள்ளனர். அதன்பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறிய பிறகே சாவி கோவிலில் இருப்பதாக கூறியுள்ளனர். 

கோவிலைத் திறந்து தாழ்த்தப்பட்டவர்களை அழைத்து சென்றபோது கோவில் பூசாரியின் மனைவி சிங்கம்மாள் சாமி ஆடியபடி, தாழ்த்தப்பட்ட மக்களை, “நீங்க எல்லாம் உள்ள வரக்கூடாதுன்னு” பேசியிருக்கிறார். மாவட்ட ஆட்சியர் சென்றபிறகு தீட்டு கழிப்பதற்காக கோவிலை ஆதிக்க சாதியினர் சுத்தம் செய்துள்ளனர். இத்தகைய செயல்பாடுகளுக்கு பிறகும் தாழ்த்தப்பட்ட மக்களை குறிவைத்தே முதல்வர் அமைத்த தனிச்சிறப்பு படை விசாரணையை மேற்கொண்டு வந்துள்ளது.

விசாரணையின் பொழுது இளைஞர்களிடம் வீடு கட்டித் தருவதாகவும், இரண்டு இலட்சம் பணம் தருவதாகவும், வேலை வாங்கித் தருவதாகவும் ஆசைவார்த்தை காட்டுவது, கேமராவை ஆஃப் செய்துவிட்டு குற்றத்தை ஒத்துக்கொள்ளும்படி மிரட்டுவது, அடிப்பது, தயவுசெய்து குற்றத்தை ஒத்துக் கொள்ளுங்கடா இல்லைனா மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவன் தான் இக்குற்றத்தைச் செய்துவிட்டான் எனக் கூறி வழக்கை மூடவேண்டியிருக்கும், அது எங்களுக்கு பெருத்த அவமானமாகிவிடும் என்று கெஞ்சியுள்ளனர்.

பிறகு அப்பகுதிப் பெண்களிடம் இரண்டு பெண் காவலர்களை அனுப்பி இப்பதான் உங்க குல சாமிய கும்பிட்டு வர்றோம் திருநீர் எடுத்துக்கங்க என்று கூறி அப்பெண்களை திருநீர் பூச வைத்துள்ளனர். பின்னர் இந்த தெருவுக்குள்ளதான் மலத்த கலந்தவன் இருக்கிறான் என்று குல சாமி சொல்லியிருக்கு, நீங்களும் திருநீர் பூசி இருக்கீங்க அதனால பொய் சொல்லமா யாருன்னு சொல்லிடுங்க எனச் செல்லமாய் மிரட்டியிருக்கிறார்கள். இப்படி ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு நிகரான நம்ம தமிழ்நாடு போலிசின் விசாரணை தொடர்கிறது. 

தாழ்த்தப்பட்டவர்களை குறிவைத்து விசாரணை நடத்தியதை ரூட்ஸ் தமிழ் யூடியூப் சேனலும், சமூக ஆர்வலர்களும், ஜனநாயக சக்திகளும் அம்பலப்படுத்திய பிறகு தற்பொழுது சி.பி.சி.ஐ.டி வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த காலங்களில் சி.பி.சி.ஐ.டி விசாரணையும் குறிப்பிடும்படி இல்லாததைச் சுட்டிக்காட்டி அதுபோல் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது என்றும். இக்குற்றத்திற்கு காரணமானவர்களை உடனே கைது செய்து தண்டிக்கவேண்டும் என்ற குரலும் ஓங்கி ஒலிக்கிறது.

– மகேஷ்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன