இருமல் மருந்திற்கு பலியாகும் காம்பியா, உஸ்பெகிஸ்தான் குழந்தைகள்: துணை நிற்கும் இந்திய அரசு

200 ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவத்தின் ஆன்மா இலாபத்தில் இயங்குகிறது என்றார் காரல் மார்க்ஸ். அது இன்றளவும் மெய்பிக்கபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே குழந்தைகளின் உயிரைக் குடித்து லாபம் பார்க்கும் மருந்து நிறுவனத்தின் செயல்பாடுகளும், அதற்கு துணை நிற்கும் அரசின் செயல்பாடுகளும் காட்டுகின்றன.

கடந்த அக்டோபர் மாதம், மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில்  72 குழந்தைகள்  இறப்பிற்கு ஹரியானா மாநிலம் சோனிப்பட்டில் உள்ள மெய்டன் என்ற  மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தில் அதிக நச்சுத்தன்மை இருந்ததாகவும், அதனை உட்கொண்டதுதான் காரணம் என்று உலக சுகாதார மையம் எச்சரித்திருந்தது.

இந்த 72 பிஞ்சுக் குழந்தைகளின் மரணம் நம் கண்ணை விட்டு மறைவதற்குள் உஸ்பெகிஸ்தானில் இதைப் போன்றதொரு மருந்தை உட்கொண்ட 18 குழந்தைகள் மரணமடைந்த செய்தி நம்மை தூங்கவிடாமல் துரத்துகிறது.  இதற்கு காரணம் நொய்டாவில் உள்ள மரியோன் பயோடெக் என்ற மருந்து நிறுவனம் தயாரித்த மருந்தில் அதிக நச்சுத்தன்மை இருந்ததாக உஸ்பெகிஸ்தான் அரசு குற்றம் சாட்டியிருக்கிறது.

காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய இரண்டு நாட்டுக் குழந்தைகள் இறப்பிற்கு இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் மருந்துகளில் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்களான டை எத்திலீன் கிளைக்கால் (DEG), எத்திலீன் கிளைக்கால் (EG) ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை ஆய்வகப் பரிசோதனைகள் உறுதி செய்கின்றன.

டை எத்திலீன் கிளைக்கால், எத்திலீன் கிளைக்கால் ஆகிய இரசாயனங்களை (anti freeze agent) தொழிற்சாலைகளில் பெயிண்ட், மை, பிரேக் ஆயில் தயாரிப்பதற்குப் பயன்படுத்துகின்றனர்.

மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது லாபத்திற்காக, நச்சுத்தன்மை இல்லாத புரொபிலின் கிளைக்காலை பயன்படுத்துவதற்குப் பதிலாக தொழிற்சாலை இரசாயனங்களைப் பயன்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்

இந்திய மருந்து நிறுவனங்கள் டை எத்திலீன் கிளைக்கால் பயன்படுத்தி தயாரித்த மருந்துகளை உட்கொண்டு குழந்தைகள் இறப்பது என்பது புதிதல்ல. 1972-ம் ஆண்டிலிருந்து 2020-ம் ஆண்டு வரை சுமார் ஐந்து முறை நடந்துள்ளது.

1972-ம் ஆண்டு சென்னையில் 15 குழந்தைகளும், 1986-ம் ஆண்டு மும்பையில் 14 குழந்தைகளும், 1988-ம் ஆண்டு பிகாரில் 11 குழந்தைகளும், 1998-ம் ஆண்டு புது தில்லிக்கு அருகேயுள்ள குருகிராமில் 33 குழந்தைகளும், 2019-ம் ஆண்டு ஜம்முவில் உதம்பூர் மாவட்டத்தில் 11 குழந்தைகளும் இத்தகைய அதிக நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு நிகழும் மரணங்களுக்கு கலப்படம் செய்யப்பட்ட மருந்துகளே காரணம் என மருத்துவர்கள் கண்டறிவதற்கு கடினமாக இருப்பதால், இம்மருந்துகளை உட்கொண்டதால்தான் இறந்தார்கள் என்று கூறும் எண்ணிக்கையின் அளவும் குறைவானதாகவே இருக்கிறது.

 

 

கலப்படம் செய்யப்பட்ட மருந்தின் காரணமாக மரணம் ஏற்பட்டால், மேலும் இறப்புகள் ஏற்படாமல் தவிர்ப்பது என்பது தான் மருத்துவத்தின் அறநெறி. இதன் மெய்யான பொருள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக் கூடிய இத்தகைய கரைப்பான்களை மருந்தில் கலக்கும் பதத்தில் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து முடக்குவதாகும்.

காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் நடந்த இறப்புகளுக்கு காரணமான ஹரியானாவின் மெய்டன் நிறுவனமும், நொய்டாவின் மரியோன் பயோடெக்  நிறுவனமும் இருமல் மருந்தின் மூலப் பொருட்களாக ஒரே மாதிரியான கரைப்பானை பயன்படுத்தியிருக்க வேண்டும் என ‘ட்ரூத் பில்’ எனும் நூலின் ஆசிரியர்களான தினேஷ் தாக்கூர் மற்றும் பிரசாந்த் ரெட்டி ஆகிய இருவரும் கூறுகின்றனர்.

இப்படி மருத்துவ அறத்திற்குப் புறம்பாகவும், அதிக நச்சுத்தன்மை வாய்ந்த கரைப்பானைப் பயன்படுத்தி வந்திருப்பதையும் அம்பலப்படுத்திய பிறகும் இக்கரைப்பானை விற்பனை செய்யும் வர்த்தகர்களின் பெயர்களையோ, அதன் உற்பத்தியார்களின் பெயர்களையோ இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் வெளியிடவில்லை. ஒருவேளை இப்பெயர்களை வெளியிட்டிருந்தால் இத்தகைய கரைப்பான்களை பயன்படுத்தாமல் தவிர்த்திருக்கலாம். எனவே இந்திய அரசு இத்தகைய குற்றங்களுக்கு துணைபோவதுடன் மற்ற மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இத்தகைய கரைப்பான்களைப் தொடர்ந்து பயன்படுத்த ஊக்குவிப்பதாகவே இருக்கிறது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு  காம்பியாவில் பயன்படுத்திய இருமல் மருந்தில் DEG மற்றும் EG ஆகிய நச்சுப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதை தனது ஆய்வகப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்திய பிறகும் காம்பியாவில் பயன்படுத்திய இருமல் மருந்தில் கலப்படம் இல்லை என இந்திய அரசு சாதிக்கிறது.

இப்படி உண்மைக்குப் புறம்பாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியமும், இந்திய அரசும் பேசுவது முதல் முறை அல்ல. 2019ம் ஆண்டு ஜம்முவின் உதம்பூரில் 11 குழந்தைகள் இறந்து எட்டு மாதங்கள் கழித்து, அதற்கு காரணமான மருந்து நிறுவனத்தின் இருமல் மருந்தை உட்கொண்டு இமாச்சல் பிரதேசத்தின் பாடி எனும் பகுதியை சேர்ந்த இரண்டு வயது குழந்தை மரணித்ததை சண்டிகரின் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அம்பலப்படுத்தியது.

 

 

ஜம்முவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகாவது இந்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் இருமல் மருந்துகளில் கலந்துள்ள மூலப்பொருட்களை ஆய்வு செய்து மரணங்களுக்கான காரணங்களை வெளியிட்டிருக்க வேண்டும். மேலும் இத்தகைய மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை  நாடு தழுவிய அளவில் திரும்பப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் நடந்தது என்ன? ஜம்முவில் 11 குழந்தைகள் இறந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இக்குழந்தைகளின் இறப்பிற்கு காரணமான நிறுவனத்தின் மீது இன்றுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. போலிசு அதிகாரிகளோ, குழந்தைகள் இறப்புக்கு நச்சுப்பொருட்கள்தான் காரணம் என்ற சான்றிதழ் கிடைக்கவில்லை எனக் கடந்த மூன்று ஆண்டுகளாக காரணம் கூறிவருகின்றனர்.  குழந்தைகள் இறப்பில் இந்திய அரசும், போலிசும், வாரியமும் கொண்டுள்ள யோக்கியதை இதுதான். காம்பியாவிலும், உஸ்பெகிஸ்தானிலும் மரணமடைந்த பிஞ்சுக் குழந்தைகளே இதற்கு சாட்சியம்.

குறைந்த பட்சம் இந்திய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் காம்பியாவில் மரணித்த 72 பிஞ்சுக் குழுந்தைகளுக்கு இரங்கள் கூட தெரிவிக்கவில்லை. மாறாக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்தை காம்பியா அரசு பரிசோதிக்காமலேயே நோயாளிகளுக்கு பரிந்துரைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தியது. இந்தியாவில் கூட இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை பரிசோதனை செய்து நோயாளிகளுக்கு கொடுப்பதில்லை. தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக மருந்துக் கட்டுப்பாட்டாளர் வேலை செய்கிறார் என்பதுதான் அனுமானம்.

இந்திய அரசு காம்பியாவின் மீது குற்றஞ்சுமத்திய பின்னர் இது குறித்து உலக சுகாதார அமைப்புடன், இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பேசுவதற்கு முயன்றபொழுது மறுத்துவிட்டார்கள் என ஒரு பொய் செய்தியை ஊடகங்களில் பரப்பினர். காம்பியாவில் நடந்த மரணத்தை விசாரிக்கும் பொறுப்பு அந்த அரசிடம் தான் இருக்கிறது என்ற உண்மை இந்திய அரசிற்கு தெரிந்திருந்தும் உலக சுகாதார அமைப்பின் மீது வீண்பழி சுமத்தியது.

 

 

தற்போது உஸ்பெகிஸ்தானின் மரணம் வெளிவந்த நிலையில் இறப்புக்கான காரணங்களை விசாரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பிடம் இந்திய சுகாதாரத்துறை கூறி வருகிறது.

கடந்த சில வருடங்களில் சுமார் ஐந்து முறை கேரளாவிற்கு தரம் குறைந்த மருந்துகளை விநியோகித்துள்ளதாக மெய்டன் மருந்து நிறுவனத்தின் மீது கேரள அரசு குற்றம் சாட்டியிருக்கிறது. 2011-ம் ஆண்டு பீகார் அரசு இந்நிறுவனத்தை கருப்பு பட்டியலில் வைத்தது, அதேபோல் 2014-ம் ஆண்டு வியட்நாமின் கருப்பு பட்டியலில் உள்ள 66 இந்திய மருந்து நிறுவனங்களில் மெய்டனும் ஒன்று. இந்தனைக்குப் பிறகும் மெய்டன் மருந்து நிறுவனத்தில்  இன்றுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

200 ஆண்டுகளுக்கு முன்பு முதலாளித்துவத்தின் ஆன்மா இலாபத்தில் இயங்குகிறது என்றார் காரல் மார்க்ஸ். அது இன்றளவும் மெய்பிக்கபட்டுக் கொண்டிருக்கிறது என்பதையே குழந்தைகளின் உயிரைக் குடித்து லாபம் பார்க்கும் மருந்து நிறுவனத்தின் செயல்பாடுகளும், அதற்கு துணை நிற்கும் அரசின் செயல்பாடுகளும் காட்டுகின்றன.

தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை குறைந்த கூலிக்கு சுரண்டியும், மூலப்பொருட்களின் செலவைக் குறைப்பதற்காக விலை குறைந்த அதிக  நச்சுத்தன்மை வாய்ந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தியும் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன. இதில் பிஞ்சுக் குழந்தைகள் இறப்பது, இருக்கக்கூடிய சட்டங்களை மீறுவது, பொய் சொல்வது, அதிகார வர்க்கத்தை (காவல்துறை, நீதித்துறை) தனது கைக்குள் வைத்திருப்பது என அனைத்தும் அவர்களது இலாப வெறிக்கு உட்பட்டதுதான் என்பதையே இந்த நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் உணர்த்துகின்றன.

எனவே நவீன தாராளவாத கொள்கைகளைப் பின்பற்றி இம்முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் அரசையும், பிஞ்சுக் குழந்தையென்றும் பாராமல் தனது இலாப நோக்கத்தை மட்டுமே அறமாகக் கொண்டுள்ள இந்நிறுவனங்களையும் தூக்கியெறியாமல் உழைக்கின்ற மக்களுக்கு ஒருபோதும் விடிவில்லை.

  • தாமிரபரணி

 

தகவல் ஆதாரம்

https://indianexpress.com/article/opinion/columns/cough-syrup-deaths-indias-drug-regulator-public-health-crises-public-relations-problems-8352108/

https://thewire.in/rights/jk-no-chargesheet-even-3-years-after-12-children-died-after-consuming-cough-syrup

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன