மரபினி பயிர்களுக்கு எதிராக உலக விஞ்ஞானிகளின் போர்க்குரல்

முதலாளித்துவமோ, தனக்கு லாபம் ஈட்டித்தராத இயற்கை, சுற்றுச்சூழல், விவசாயம் பற்றிய அறிவியலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. முதலாளித்துவத்தின்  ஒரே குறிக்கோள் சந்தையும், லாபமும்தான்!

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மரபினி கடுகு பற்றிய விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2002-ல் பி.டி.பருத்தி, 2009-ல் பி.டி.கத்திரிக்காய், ஆகியவற்றைக் கொண்டுவந்தது போல 2016-ல் மரபினி கடுகையும் இந்திய விவசாயத்திற்குள் புகுத்தும் முயற்சி நடந்து பின்னர் அது கைவிடப்பட்டது.  ஆனால் தற்போது 2023ல் மரபினிக் கடுகு மீண்டும் வந்திருக்கிறது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களால் ஒரு நாட்டின் பல்லுயிர் தன்மை அழிதல், மனித உடல்நலனுக்கு கேடு விளைதல், இயற்கையின் சமநிலை சீர்குலைதல், நிலமும் நீரும் நஞ்சாகுதல். சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கபடுதல், எதற்கும் கட்டுப்படாத வீரிய களைச்செடிகள் உருவாகுதல் போன்ற பல ஆபத்துகள் உருவாகும் என உலகம் முழுக்க பல்வேறு விஞ்ஞானிகள் எச்சரித்து வருகிறார்கள்.

ஆனால் முதலாளித்துவமோ, தனக்கு லாபம் ஈட்டித்தராத இயற்கை, சுற்றுச்சூழல், விவசாயம் பற்றிய அறிவியலை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. முதலாளித்துவத்தின்  ஒரே குறிக்கோள் சந்தையும், லாபமும்தான்! அறிவியல் ரீதியாகவே மரபணு தொழில்நுட்பம் மனிதகுலத்திற்கு ஆபத்தானது என்பதற்கு ஏராளமான சான்றுகளை உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

 

 

மரபணு மாற்றப்பட்ட (GM) பயிர்களின் தொழில்நுட்பத்தை ஆய்வு செய்த பல புகழ்பெற்ற விஞ்ஞானிகள் இது மிகவும் ஆபத்தான தொழில்நுட்பம் என்று தெளிவான முடிவுக்கு வந்துள்ளனர். ஒரே ஒரு உதாரணத்தைக் கூறினால், பல நாடுகளைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானிகளின் அமைப்பான  இண்டிபெண்டன்ட் சயின்ஸ் பேனல் (ISP) மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் பல்வேறு அம்சங்களைப் ஆய்வுசெய்த பிறகு, இவ்வகைப் பயிர்கள் உறுதியாக நிராகரிக்கப்பட வேண்டும் என்கின்றனர்.

அமெரிக்காவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் விளைவிக்கும் ஆபத்தைப் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், அந்நாட்டின் மரபினி பயிர்கள், அதன் வர்த்தக பங்காளிகளால் சந்தைபடுத்தபடுவதற்கு மறுக்கப்பட்டு வருகின்றன. இதனால் பன்னாட்டு நிறுவனங்கள் தங்க்களது சந்தைக்காக வளரும் நாடுகளில் மரபினி பயிர்களை பயிரிட பல வருடங்களாக முயன்று வருகின்றன.

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தில் முன்பு பதவி வகித்த ஹென்றி மில்லர் என்பவர், “அமெரிக்க அரசுக்கும் மரபனு மாற்றப்பட்ட பயிர்களை விற்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரம் தொடர்புடைய காரணங்களைக் கூறி இத்தகைய நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்க கூடாது என்று அரசு தரப்பிலிருந்து எழுதப்படாத உத்தரவுகள் உள்ளன” என்கிறார்.

ஜெப்ரி ஸ்மித் எனும் அமெரிக்க மரபியல் விஞ்ஞானி, “ஜெனடிக் ரவுலட்” எனும் தனது புத்தகத்தில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த ஆய்வுகளை கேள்விக்குள்ளாக்குகிறார்.. உணவுப் பொருட்கள் மீதான ஆய்வுக்கு இந்த பன்னாட்டு நிறுவனங்கள், அதிக உணர்திறன் கொண்ட சிறிய விலங்குகளுக்கு பதில், வயதான விலங்குகளை பயன்படுத்துகின்றன என்று பன்னாட்டு நிறுவனங்களின் ஆய்வுகள் எப்போதும் இழிநிலையிலேயே இருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது ஆய்வு நிறுவுவதற்கு தேவையான புள்ளி விபரத்திற்கு மிக குறைவான மாதிரிகளை (low samples) பயன்படுத்துகின்றன என்று தனது நூலில் குறிப்பிடுகிறார்.

மேலும் பரிசோதனையின் போது இந்நிறுவனங்கள் நடத்தும் தில்லுமுல்லுகளைப் பற்றி குறிப்பிடும் போது, மரபணு மாற்றப்பட்ட பயிர்களின்  ஆய்வுகளின் போது மரபணு கூறுகளை நீர்த்து  போகச் செய்தல்,  தனது முடிவுக்கு ஏற்றப்படி மாதிரிகளை தயாரித்தல் (Over cook samples), பொருத்தமற்ற கட்டுப்பாடுகளை முடிவுகளோடு ஒப்பிடுதல், விலங்குகளுக்கான உணவளிக்கும் கால அளவை குறைத்தல், ஆய்வின் போது விலங்குகள் இறந்து போனாலோ, நோய்வாய்ப்பட்டாலோ நிறுவனங்கள் அதனை ஒரு போதும் பொருட்படுத்துவதில்லை என்கிறார் ஜெப்ரி ஸ்மித்.

 

 

அமெரிக்காவின் மரபினி பயிர்களை பற்றிய அமெரிக்க அரசின் FDA (Food and Drug Administration, USA) கொள்கை  1992 ஆம் ஆண்டு வெளியானது. அச்சமயத்தில் இவ்வமைப்பின் பல விஞ்ஞானிகள், மரபினி பயிர்களால் மக்களுக்கு பல பக்க விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து வந்தனர். ஆனால் விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள் இரகசியாமகவே வைக்கப்பட்டன. பின்னர் 1997 ஆம் ஆண்டு வெளியான FDA புதிய கொள்கை அறிக்கையிலிருந்து மரபினி பயிர்கள் பற்றிய 44000 பக்கங்கள் அடங்கிய விஞ்ஞானிகளின் எதிர்மறை அறிக்கை ரகசியமாக நீக்கப்பட்டன. பின்னர் வெள்ளை மாளிகை மூலம் மான்சான்டோவின் துணைத்தலைவரான மைக்கேல் டெய்லர் FDA நிறுவனத்திற்குள் சேர்க்கப்பட்டு அவ்வமைப்பு விஞ்ஞானிகளின் எச்சரிக்கைகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன.

பிரிட்டன் அரசு GM பயிர்களின் அனுமதிக்கான நெறிமுறைகளை உருவாக்குவதற்காக 1990களில் ஒரு சில விஞ்ஞானிகளின் குழுவை அமைத்தது. இவ்விஞ்ஞானிகள் மூன்று ஆண்டுகள் தங்களது ஆராய்ச்சியை தொடர்ந்தனர். ஆராய்ச்சியின் முடிவில் மரபினி உருளைக்கிழங்கு, எலிகளுக்கு உடல்நலக் கேடுகளை விளைவித்தது என கூறியவுடன் பிரிட்டன் அரசு, இக்குழுவின் மூத்த விஞ்ஞானியை பணிநீக்கம் செய்ததோடு அக்குழுவையே கலைத்தது என்கிறார் ஜெப்ரி ஸ்மித்.

இண்டிபென்டன்ட் சயின்ஸ் பேனல் என்ற அமைப்பின் விஞ்ஞானிகள் தயாரித்த அறிக்கையில், கிடைமட்ட மரபணு பரிமாற்றத்தில் அறிவியல் ஆதாரங்களை தவறாக சித்தரித்துள்ள வரலாறு தான் மரபனு தொழிற்நுட்பத்தில் உள்ளது என்றும், இதில்  முக்கிய பரிசோதனைகள் செய்யத் தவறிவிட்டதாகவும் கூறுகின்றனர். GM உருளைக்கிழங்கை உண்ணும் இளம் எலிகளின் வளர்ச்சிக்கு மரபணு மாற்றம் காரணமா என்பது பற்றிய விசாரணைகள் உட்பட பல சோதனைகள் தொடர்ந்து கொண்டுசெல்லப்படாமல் கைவிஃபப்பட்டன..

இந்தியாவை பொறுத்தவரை மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கு உதவுவதற்காக உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  விஞ்ஞானியான பேராசிரியர் புஷ்பா பார்கவா நமது நாட்டில் மரபனு பயிர்களின் சுற்றுச்சூழல் அனுமதி நெறிமுறைகள் குறித்து ஏற்கனவே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

இந்தியாவில்  பி.டி. கத்தரிக்காய் அனுமதிக்கப்பட்ட போது, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கு ஒரு நிறுவனம் குறைந்த பட்சம் 30 பரிசோதனைகளை மேற்கொண்டு இருக்க வேண்டும், ஆனால் மான்சான்டோ இந்த பரிசோதனைகளில் பத்துக்கும் குறைவான சோதனைகளை மட்டுமே செய்திருந்தது.

இந்த சோதனைகள் கூட பெரும்பாலும் மான்சான்டோ நிறுவனத்தால் வெளிநாடுகளில் செய்யப்பட்டன. மேலும் சோதனைகள் உண்மையில் செய்யப்பட்டதா என்பதை தீர்மானிக்க கூட நாட்டில் எந்த வசதியும் இல்லை. மான்சான்டோ நடத்திய சோதனைகளில் கூட பல அறிவியல் பிழைகள் இருந்தன என்றார் பார்கவா.

மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு இதன் மீது ஒரு அறிக்கையை தயாரிக்க பார்கவா உள்ளிட்ட ஒரு விஞ்ஞானிகள் குழுவை அமைத்தது. ஆனால் இந்த அறிக்கை மீது தங்களது கருத்தை தெரிவிக்க இவ்விஞ்ஞானிகள் குழுவிற்கு மரபணு தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு கொடுத்த அவகாசம் ஒரு நாள் மட்டுமே. பார்கவா கால அவகாசத்தை நீட்டிக்க கோரியும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  இப்படிதான் இந்தியாவில் பி.டி. கத்தரிகாய்க்கு அவசர அனுமதி கொடுக்கப்பட்டது.

அமெரிக்கா, கனடா, ஐரோப்பா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 புகழ்பெற்ற விஞ்ஞானிகள் குழு 2009 இல் இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தனர். அதில் பன்னாட்டு நிறுவனங்களின், இயல்பான அறிவியல் நடத்தைக்கு முரணான ஆராய்ச்சியை அப்படியே ஏற்றுக்கொண்டு வணிக அனுமதிக்கு இந்தியா பரிந்துரைப்பதை கண்டித்துள்ளனர்.

 

 

உலகின் பல்வேறு நாட்டு அரசுகள் மரபீனி பயிர்களை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு சார்பாக அறநெறியற்ற முறையில் சந்தைப்படுத்த முனைகிறது.  ஆனால் பல விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் GM பயிர்களுக்கு எதிராக தங்களுடைய எதிர்ப்பை  தொடர்ந்து பதிவு செய்து கொண்டு இருக்கிறார்கள்,

இந்திய விஞ்ஞானியான பார்கவா, இதுவரை வெளிவந்த மரபினி அறிவியியல் ஆராய்ச்சிலிருந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், மனிதன், விலங்குகள் மற்றும் தாவரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றில் மரபணு மாற்றுப் பயிர்களால் ஏற்படும் தீங்க்கு குறித்த ஆராய்ச்சி முடிவுகளை  500க்கும் மேற்பட்ட  நேர்மையான விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர் என்கிறார். உதாரணமாக, இந்திய விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வறிக்கை, பருத்தி மற்றும் கத்தரி இரண்டிலும் உள்ள பி.டி மரபணுவானது, தாவரத்தின் வளர்ச்சியைத் தடுக்க வழிவகுக்கிறது என்கிறது. மறுபுறம் GM பயிர்களை ஆதரிக்கும் ஒவ்வொரு ஆராய்ச்சியும் நம்பகத்தன்மையற்ற சந்தேகத்திற்கு இடமான விஞ்ஞானிகளால் ஆனது என்கிறார் பார்கவா.

GMO பன்னாட்டு நிறுவனங்கள் அறிவியியலை எப்போதும் ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. 2020 ஆம் ஆண்டு GM பயிர் மற்றும் விதை சந்தைகளின் மதிப்பு 30.6 பில்லியன் டாலராக இருக்கிறது எனவும் இதுவே 2027 ஆம் ஆண்டு சுமார் 46 பில்லியன் டாலராக உயரும் என GMO நிறுவனங்கள் எதிர்ப்பார்க்கின்றன.   120 கோடிக்கும் மேல் உள்ள மக்கள் வாழும் இந்தியாவைத் தன் சந்தையில் சேர்த்து விட்டால் இம்மதிப்பு 46 பில்லியனை தாண்டும் என GMO பன்னாட்டு நிறுவனங்கள் திட்டம் தீட்டுகின்றன. இதில் முதல் தொடக்கம் தான் மரபினி கடுகு. மற்ற  உணவுப் பயிர்களுக்கு GMO பன்னாட்டு நிறுவனங்கள் குறிவைத்து காத்து இருக்கின்றன.

நாடு முழுவதும் எழுந்த விவசாயிகளின் எதிர்ப்பின் காரணமாக பி.டி.கத்திரியை மைய அரசு நிரந்தரமாகத் தடை செய்தது. நேர்மையான விஞ்ஞானிகளின் முயற்சிகளோடு,  இது போன்ற மக்களின் போராட்டங்களின் மூலமாக நம் எதிர்கால சந்ததிகளை மரபினி பயிர்களில் இருந்து நாம் பாதுகாக்க முடியும்.

-தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன