மக்கள் போராட்டங்களை ஒடுக்க வரும் கொலைகார ரோபோக்கள்.

கொலைகார டிரோன்களை போர்க்களத்தில் மட்டும் பயன்படுத்தி வந்த அமெரிக்க அரசு தற்போது அதனை தனது சொந்த நாட்டு மக்கள் மீதும் பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

தனது உலக மேலாதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்ள தினந்தோரும் உலகின் ஏதாவதொரு மூலையில் அமெரிக்கா போர் புரிந்துகொண்டுதான் இருக்கிறது. இந்தப் போர்களில் பல அமெரிக்க வீரர்கள் தங்களது உயிரை இழக்கின்றனர். அமெரிக்க வீரர்கள் அதிகளவு உயிரிழப்பது என்பது பல சந்தர்ப்பங்களில் அந்நாட்டு அரசிற்கு உள்நாட்டில் மிகப் பெரிய பிரச்சனையாக உருவாகியிருக்கிறது. வியட்நாம் முதல் ஆப்கான் வரை போருக்கெதிரான அமெரிக்க மக்களின் போராட்டம் வலுப்பெறுவதற்கு அமெரிக்க இராணுவ வீரர்களின் உயிரிழப்பு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

அதுமட்டுமன்றி இராணுவ வீரர்களை பயிற்றுவிப்பது, பராமரிப்பது, ஓய்வு பெறுபவர்களுக்கு பென்சன் வழங்குவது என உலகை ஆதிக்கம் செய்ய ஒரு பெரிய இராணுவத்தை வைத்திருப்பதென்பது அதிக செலவு பிடிப்பதாகவும் இருக்கிறது.

ஆகையால் தனது இராணுவத்தை நவீனமாக்குவதை அமெரிக்கா தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. போர் முனையில், சண்டையிடும் வீரர்கள் தவிர்த்து மற்ற வேலைகளில் ஈடுபடுபவர்களை மூன்றாம் உலக நாடுகளில் இருந்து கான்டிராக்ட் மூலம் பணிக்கு அமர்த்திக் கொள்வது, நாய்களையும் மற்ற விலங்குகளையும் பணிக்கு அமர்த்துவது, பாதுகாப்புப் பணிக்கு பிளாக் வாட்டர்ஸ் போன்ற தனியார் இராணுவங்களைப் பயன்படுத்திக் கொள்வது, ஆளில்லாத உளவு விமானங்கள் மூலம் ஏவுகணைகளைப் பயன்படுத்திக் தாக்குதலில் ஈடுபடுவது என இராணுவத்தில் அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து பல முயற்சிகளை எடுத்துள்ளது.

அதேசமயம் களத்தில் இறங்கிச் சண்டையிடுவதற்கு போர் வீரர்களுக்கு பதிலாக இயந்திரங்களை, அதாவது ரோபோக்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்டகாலக் கனவு. இந்தக் கனவை மக்கள் மத்தியில் விதைப்பதற்காக பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் சண்டையிடும் ரோபோக்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் முதலாக ஆயுதந்தாங்கிய தானியங்கி ரோபோக்களை லிபியப் போரில் அமெரிக்கா பயன்படுத்தியது. இதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட டிரோன்கள் உலகின் ஏதாவதொரு மூலையில் இருக்கும் அதன் கட்டுப்பாடு மையத்தில் இருக்கும் ஒரு மனிதன் மூலமாக இயக்கப்பட்டன. ஆனால் தானியங்கி ரோபோக்கள் மனிதர்களின் உதவியின்றி சுயமாக போர் நடக்கும் இடங்களுக்குப் பறந்து சென்று, கொல்ல வேண்டிய நபரைத் தேர்வு செய்து சுட்டுக்கொல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

லிபியப் போரில் பயன்படுத்தப்பட்ட “கார்கு” தானியங்கி டிரோன்.

அமெரிக்கா மட்டுமன்றி உலகின் பல நாடுகள் தங்களது நாட்டு இராணுவத்தை இதுபோன்ற ரோபோக்களைக் கொண்டு நிறப்பி வருகின்றன. உக்ரைன் போரில் ரஷ்ய “காமிகேஸ்” வகை டிரோன்கள் பெரும் அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்திய இராணுவம் கூட இது போன்ற தானியங்கி ரோபோக்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயன்படுத்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒப்பந்தம் கோரியுள்ளது.

கொலைகார டிரோன்களை போர்க்களத்தில் மட்டும் பயன்படுத்தி வந்த அமெரிக்க அரசு தற்போது அதனை தனது சொந்த நாட்டு மக்கள் மீதும் பயன்படுத்த அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் சான்ஃபிரன்சிஸ்கோ மற்றும் ஓக்லாந்து நகரங்களில், மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும் சூழ்நிலைகளில், அவர்களைக் காப்பாற்ற வேறு எந்த மாற்று வழியும் இல்லாதபோது, ஆயுதந்தாங்கிய, கொலை செய்யக்கூடிய ரோபோக்களைப் பயன்படுத்த போலீசுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இங்கே பொத்தம் பொதுவாக மனித உயிர்கள் ஆபத்தில் இருக்கும் போது என்று கூறப்பட்டுள்ளது. இதனை தீவிரவாத தாக்குதல் சூழ்நிலைகள் என்று மட்டும் சுருக்கிப் பார்க்க முடியாது. ஏனென்றால் போராட்டக்காரர்களையும், அரச எதிர்ப்பாளர்களையும் கண்காணிக்க, தனது சொந்த நாட்டு குடிமக்கள் மீதே இத்தகைய இராணுவ டிரோன்களை ஏற்கெனவே அமெரிக்க அரசு பயன்படுத்தியுள்ளது.

நவீன தாராளமயத்தின் தோல்வி மூன்றாம் உலக நாடுகளை மட்டுமல்லாமல், ஏகாதிபத்திய நாடுகளையே கூட நிலைகுலையச் செய்துள்ள இன்றைய நிலையில், அதன் பாதிப்பு முழுவதும் உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மீது திணிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வும், வேலையில்லாத் திண்டாட்டமும் ஐரோப்பிய நாடுகளில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் அச்சுறுத்தலை விடவும் உள்நாட்டில் கொதிப்புற்றிருக்கும் மக்கள் திரள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் இந்நாட்டு அரசுகளை கவலைகொள்ளச் செய்துள்ளது. ஆகையால் மக்கள் போராட்டங்களைக் கண்காணிப்பதும், அரச எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதும் அவர்களுக்கு அதிமுக்கியமானதாக மாறியுள்ளது.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டால் வரும் காலங்களில் போராட்டங்களை ஒடுக்க இத்தகைய ஆயுதந்தாங்கிய ரோபோக்களை அமெரிக்க அரசு பயன்படுத்தும் முன்னோட்டமாகத்தான் இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

இந்திய அரசும் அமெரிக்காவை அடியொற்றி சொந்த நாட்டு மக்களை வேவு பார்ப்பதற்கு டிரோன்களைப் பயன்படுத்தி வருகிறது. சமீபத்தில் தமிழநாட்டில் முத்துராமலிங்கம் குருபூசை விழாவில் கண்காணிப்புப் பணிக்கு 14 டிரோன்கள் பயன்படுத்தப்பட்டன.

தற்சமயம் நமது நாட்டில் கண்காணிப்புப் பணிகளில் மட்டுமே இந்த டிரோன்கள் பயன்படுத்தப்பட்டாலும் அமெரிக்காவின் வழியில் சீக்கிரத்தில் கொலைகார டிரோன்கள் போலீசில் சேர்க்கப்படும். தூத்துக்குடியில் நாசகர ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதியாகப் போராடிய மக்களை குறிபார்த்துச் சுட்டுக்கொன்றது போல கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க இத்தகைய ரோபோக்கள் களமிறக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.

  • மகேஷ்

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன