இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் – கருத்தரங்கம்

இந்தி-சமஸ்கிருதத் திணிப்பைத் தகர்த்தெறிவோம்!
இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!

 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
ஜனநாயக சக்திகளே! கல்வியாளர்களே!

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவானது, ஒன்றிய கல்வி நிலையங்களில் இந்தியைக் கட்டாயப் பயிற்று மொழியாகவும், மாநிலங்களுக்கிடையேயான இணைப்பு மொழியாகவும் திணிக்கும் நோக்கிலும்; ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு இந்தியைத் திணிக்கும் வகையிலும் பரிந்துரைகளை செப்டம்பர் மாதம் குடியரசுத் தலைவருக்கு அளித்துள்ளது.

2014-இல் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். பாசிசக் கும்பல் ஆட்சியில் அமர்ந்ததிலிருந்தே, ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு இந்தியில் மட்டும் பெயர் வைப்பது, ரயில் நிலைய பதாகைகள், நெடுஞ்சாலை மைல்கற்களில் இந்தியைத் திணிப்பது; கல்வி நிலையங்களில் சமஸ்கிருதம்-இந்தியைத் திணிப்பது, சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது, பல மாநிலங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயல்வது, வடகிழக்கு மாநிலங்களின் கிளைமொழிகளின் எழுத்துக்களை சமஸ்கிருத-தேவநாகிரி வடிவத்துக்கு மாற்றி அம்மொழிகளையே அழிப்பது – என்று சதித்தனமாக பல வழிகளில் இந்தியைத் திணித்து வருகிறது.

தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன் மூன்றாவதாக ஒரு மொழியைப் படித்தால் என்ன? அந்நிய மொழியான ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழியாகவும் அலுவல் மொழியாகவும் கொண்டுவந்தால் என்ன பிரச்சனை? என்று தேசபக்த நாடகமாடும் காவி பாசிசக் கும்பல் கிளப்பிவிட்ட பிரச்சாரத்தில் பலரும் ஆட்பட்டுள்ளனர். ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே தேர்தல், ஒரே கல்விக் கொள்கை என்பதன் தொடர்ச்சியாக ஒரே மொழியாக இந்தியைத் திணிக்க முயல்கிறது. இவையெல்லாம் காவி பாசிசக் கும்பலின் தனித்தனியான முன்னெடுப்புகளல்ல. இந்தியாவை ஆரிய பார்ப்பன தேசமாக மாற்றுவதற்கான முன்னெடுப்புகளே!

நாடு முழுவதும் ஒரே மொழியைத் திணிப்பது,  கார்ப்பரேட்டுகளின் சந்தை நலனையும் உள்ளடக்கியதே ஆகும். இதற்காகவே சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தியைத் திணித்து பிற தேசிய இன மொழிகளின் கலாச்சாரத்தை, வரலாற்றை, அடையாளத்தை, தனித்துவத்தைக் குழிதோண்டிப் புதைத்து, கலாச்சார இந்து-தேசியத்தை நிலைநாட்டும் வேலையில் மூர்க்கமாகவும் வெறித்தனமாகவும் காவி பாசிசக் கும்பல் இறங்கியுள்ளது.

இந்தித் திணிப்பை எதிர்க்கும் கட்சிகளை ‘ஆங்கிலத்தைத் தூக்கிப் பிடிக்கும் அந்நியக் கைக்கூலிகள்’ என்று கூறி, தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை சமமாக பாவிப்பதுபோல இக்கும்பல் கபட நாடகம் ஆடுகிறது. ஆனால், வெறும் 13,000 பேர் பேசுகிற, எந்த நிலப்பரப்பும் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு, 2017-20 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டும் 643 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தமிழ் உள்ளிட்ட 5 இந்திய செம்மொழிகளின் வளர்ச்சிக்கும் சேர்த்து மொத்தமாகவே பிச்சைக்காசாக வெறும் 22 கோடி ரூபாய்தான் ஒதுக்கியுள்ளது.

கோவிலுக்குள்ளும், கருவறைக்குள்ளும் தமிழ் நுழைந்தால் தீட்டு, தமிழ் நீசபாஷை என இழிவுபடுத்தும் இக்கும்பலால் பார்ப்பன எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழை எதிர்த்து அழிக்க முடியவில்லை. எனவே அதை உறவாடிக் கெடுக்கும் தந்திரத்தில், திருக்குறளையும், தமிழையும் மதிப்பதாக நாடகமாடுகிறது. இச்சதித்திட்டத்தின் தொடர்ச்சிதான் காசி தமிழ்ச் சங்கமம்.

பார்ப்பன கும்பலின் நலனுக்காகவும், தரகு முதலாளிகளின் சந்தை நலனுக்காகவும் இந்தியாவின் ஒற்றை மொழியாக இந்தியைத் திணிப்பதற்கான நடவடிக்கைகள் நூற்றாண்டுக்கு முன்பே துவங்கிவிட்டது. முதலில் இந்தி ஒருபடித்தான மொழி அல்ல. உருது, பாரசீகம், அரபு, மைதிலி, மாகி போன்ற எண்ணற்ற மொழிகள் கலந்துதான் இந்தியை பல வடிவங்களில் நூற்றாண்டுக்கு முன் இந்து-முசுலீம் மத வேறுபாடின்றி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இன்றும் இந்தி மொழியானது 48-க்கும் மேற்பட்ட வடிவங்களில் இந்தி பேசும் மாநில மக்களால் பேசப்பட்டு வருவதே அதற்குச் சான்று. இந்தியாவை இந்து தேசமாக்கக் கனவு கண்ட பார்ப்பன கும்பல், முசுலீம், சூத்திரர்கள் மீதான வெறுப்புடன் அவற்றையெல்லாம் நீக்கி சமஸ்கிருதச் சொற்களைச் சேர்த்து இந்தியைப் பார்ப்பனமயமாக்கியது. அதேபோல இந்தியின் வரிவடிவங்களை சமஸ்கிருத-தேவநாகிரி வரிவடிவத்துக்கு மாற்றியது. இவ்வாறுதான் பார்ப்பன-இந்து தேசியத்துக்கான மொழியாக 19-ஆம் நூற்றாண்டில் இந்தி மாற்றியமைக்கப்பட்டது.

இவ்வடிப்படையில், பல்வேறு தேசிய இனங்கள் வாழும் நம் நாட்டில், 1949-க்குப் பின் அரசியலமைப்பின் படியே மேலிருந்து வெகு சொற்பமானவர்கள் பேசிய சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்தி ஆட்சி மொழியாகத் திணிக்கப்பட்டது. 15 ஆண்டுகள் ‘இந்தியை வளப்படுத்தும் வரை’ ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடருமென முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, 1965-இல் இந்தியைத் திணிக்க இந்திய அரசு முயன்றது. இதை எதிர்த்து தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மொழிப்போர் தியாகிகள் வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தித் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். அதன் விளைவாக, இந்தி பேசாத மாநிலங்கள் இந்தியை ஏற்காதவரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடரும் என்று கூறி நேரு அரசு தற்காலிகமாகப் பின்வாங்கியது.

இந்தித் திணிப்பை எதிர்க்கும் கட்சிகள் இந்திய அரசமைப்பே மொழியுரிமை, தேசிய இன உரிமைகளுக்கு எதிராக இருப்பதைப் பற்றிப் பேசுவதில்லை. அதனால், இந்திய அரசமைப்பு ஜனநாயகப் பூர்வமானது என்ற மாயை சமூகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில், இந்திய அரசியலமைப்பின் அடிப்படையே இந்து-இந்தி-இந்தியா என்ற பார்ப்பனியக் கண்ணோட்டமாகும். தேசிய இனங்களைச் சிறைப்படுத்துவதாகும்.

1963 அலுவல் மொழிச் சட்டத்தின்படி, 1976 இல் உருவாக்கப்பட்ட அலுவல் மொழிக்குழுவின் முதன்மை நோக்கமே இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை ‘ஏற்றுக் கொள்ளவைக்கும்’ (திணிக்கும்) வேலையைச் செய்வதுதான். மதம், சாதி, பாலினம், பிறந்த இடம் இவைகளின் அடிப்படையில் அனைவரும் சமம், பாகுபாடு கூடாது என்று கூறும் அரசமைப்புச் சட்டமானது, அனைத்து மொழிகளும் சமம் என்றோ, மொழி அடிப்படையில் பாகுபாடு கூடாது என்றோ வார்த்தையளவில் கூடக் கூறவில்லை. மிகமுக்கியமாக, அரசமைப்புச் சட்டப்பிரிவு 351 ‘இந்தி மொழியைப் பரப்புவதையும், ஊ3க்குவிப்பதையும், சமஸ்கிருதத்தில் இருந்து சொற்களைச் சேர்த்து இந்தியை வளப்படுத்துவதையும் இந்திய அரசு செய்ய வேண்டும்’ என்று கட்டளையிடுகிறது. காங்கிரசோ, பா.ஜ.க.வோ அல்ல எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும் இதைத்தான் அமுல்படுத்தியாக வேண்டும் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் கண்ணோட்டமாகும். இதன்படி இந்தி திணிக்கப்பட்டதன் விளைவாக, அவதி, மைதிலி, போஜ்பூரி, மாகி போன்ற 57 இந்திய மொழிகள் அழிந்து போயுள்ளதாக மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவின் பன்முகத்தன்மையானது, இந்து ராஷ்டிரத்தை நிறுவத்துடிக்கும் பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு பெருந்தடையாக இருப்பதால், பாசிச நோகத்துடன் இந்தியைத் தீவிரமாகத் திணித்து வருகிறது. அலுவல் மொழியாகவும் பயிற்று மொழியாகவும் இந்தி திணிக்கப்படும் பட்சத்தில், சமஸ்கிருத வேத புராணக் குப்பைகளை, பார்ப்பனியக் கலாச்சாரத்தை அதிகாரப் பூர்வமாகவே கல்வி நிலையங்களிலிருந்து சகல இடங்களுக்கும் கொண்டு சென்று தமிழ் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களின், மொழிகளின் தனித்தன்மையைச் சிதைத்து நாசமாக்கவும் அதன் மூலம் மக்களைக் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் முடியும். அதைச் சட்டப்பூர்வமாகவே செய்ய, மேற்சொன்ன அரசியல் சட்டப் பிரிவுகளும் அலுவல் மொழிச்சட்டம் 1963-உம் அவர்களுக்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.

எனவே, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் என்பது இனியும் வெறும் மொழிப்போரட்டம் மட்டுமல்ல. காவி-கார்ப்பரேட் பாசிசத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டமாகவும், தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்த அரசுக் கட்டமைப்பை தூக்கியெறிந்துவிட்டு எல்லா தேசிய இனங்களின் மொழிகளையும் சமமாகப் பாவிக்கின்ற மக்கள் ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான போராட்டமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும். 

  • அறிவியல் விரோத, ஜனநாயக விரோத மும்மொழி, இருமொழிக் கொள்கைகளைப் புறக்கணிப்போம்! தாய்மொழி-ஒருமொழிக் கொள்கையை உயர்த்திப் பிடிப்போம்!
  • மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
  • அனைத்து தேசிய இன மொழிகளையும் பயிற்றுமொழி, அலுவல் மொழியாக்கப் போராடுவோம்! இந்தித் திணிப்பைத் தகர்த்தெறிவோம்!
  • தேசிய இன மொழி உரிமைகளை ஒடுக்கி, இந்தி-சமஸ்கிருதத்தைத் திணிக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை நீக்கப் போரடுவோம்!
  • அனைத்து தேசிய இனங்களின் சம உரிமையை நிலைநாட்ட காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! மக்கள் ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!

 

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு. 97801 38614

 

பிரசுரத்தைப் பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும்

 

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன