தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரையே நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டம்

திமுக அரசு பொது வெளியில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் காட்டிக்கொண்டாலும் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளில் பள்ளி மேலாண்மைக் குழு, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் பவுன்டேசன் என வெவ்வேறு பெயர்களில் தேசிய கல்விக் கொள்கையின் பல பரிந்துரைகளை அமல்படுத்தி வருகிறது

அரசுப் பள்ளிகளில் படித்த முன்னால் மாணவர்களிடம் நிதி திரட்டி, அப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது தான் நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டமாகும். இதன் மூலம் கிடைக்கும் பணம் முழுவதையும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று இத்திட்டத்தை தொடங்கி வைத்து ஸ்டாலின் பேசியுள்ளார்.

இத்திட்டம் ஆரம்பித்த இரண்டு நாட்களுக்குள் 50 கோடி நிதி கிடைத்திருப்பதாக பள்ளி கல்வித் துறை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அசோக் லைலேண்டு நிறுவனம் 19 கோடியும், எல்&டி நிறுவனம் 11 கோடியும், ஐ.ஒ.சி 4 கோடியும், ஹுண்டாய் நிறுவனம் 2 கோடியும் இத்திட்டத்திற்காக கொடுத்துள்ளது. இத்திட்டத்தின் தலைவராக டிவிஎஸ் நிறுவனத்தின் கௌரவத் தலைவரான சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.  

 

 

இத்திட்டத்தின் நோக்கமாக “இச்சமூகத்திற்கு திருப்பியளிக்க நினைக்கும் தனிநபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்று சேர்த்தல்; புதிய, லட்சியமிக்க தலைமுறையை உருவாக்கும் நோக்கத்தோடு பங்களிப்பு செய்ய விரும்புவோர் அனைத்து சமூக-பொருளாதார வர்க்கங்களும் தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை நோக்கித் திரும்ப வேண்டும் என்பதே நம் நோக்கம்” என்று அதன் இணையத்தளத்தில் சொல்லப்பட்டுள்ளது.

இதன் மூலம் தனியார் நிறுவனங்களின் கொடையளிப்பு மற்றும் முன்னாள் மாணவர்களின் பங்களிப்பு நிதியைக் கொண்டு பள்ளிகளைப் பராமரிப்பது என்பது கொள்கை முடிவாகியுள்ளது. இதனால் வரும் காலங்களில் பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பெருமளவில் வெட்டிவிட்டு அப்பள்ளிகளை தனியாரின் நிதியுதவிகளைக் கொண்டே சமாளிப்பது அல்லது தனியாரின் கட்டுப்பாட்டில் விட்டுவிடுவது என்ற நிலையை நாம் விரைவில் எதிர்பார்க்கலாம். தனியார் நிறுவனங்கள் தொழில் தொடங்க கண்ணை மூடிக்கொண்டு வரிச்சலுகைகளை வழங்கும் திமுக அரசு பள்ளிகளை மேம்படுத்த வரிகட்டும் மக்களிடமே பணம் கேட்கிறது. இதனைச் சொல்வதற்கு பொருளாதார அறிஞர்களின் குழு வேறு.  

இத்திட்டம் அப்பட்டமாக தேசிய கல்விக் கொள்கையின் மறுவடிவமே. தேசிய கல்விக் கொள்கை 2019 அறிக்கையில் A1.3-கல்வி மற்றும் தரத்தை மேம்படுத்துவதற்கான உயர் முதலீட்டிற்கான கொள்கை (ப.406)  என்ற தலைப்பில் சொல்லப்பட்டுள்ள A1.3.1.3, A1.3.3.1, A1.3.3.4, A1.3.4.1, A1.3.4.2 பரிந்துரைகளின் அடிப்படையிலேயே இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனச் சட்டம் 2013-ல், ஒரு நிறுவனம் 500 கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்தாலோ அல்லது 1000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டினாலோ அல்லது 5 கோடிக்கு மேல் லாபம் ஈட்டினாலோ அந்நிறுவனம் தனது மொத்த வருவாயில் 2 சதவிகிதத்தை கல்வி மேம்பாடு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை உருவாக்குதல் போன்றவற்றிற்கு செலவிட வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்நிதியை பள்ளி/உயர் கல்விக்காக செலவிட வேண்டும் எனவும் பள்ளியின் முன்னாள் மாணவர்களிடம் நிதி திரட்டி பள்ளியின் தேவை பூர்த்தி செய்யலாம் என A1.3 ல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். போன்ற மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் அமல்படுத்தி வந்த இப்பரிந்துரைகளை தற்போது பள்ளிகளுக்கு நீடித்துள்ளது திமுக ஸ்டாலின் அரசாங்கம்.

திமுக அரசு பொது வெளியில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டாலும் ஆட்சிக்கு வந்த இரண்டாண்டுகளில் பள்ளி மேலாண்மைக் குழு, இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், வானவில் மன்றம், நம்ம ஸ்கூல் பவுன்டேசன் என வெவ்வேறு பெயர்களில் தேசியக் கல்விக் கொள்கையின் பல பரிந்துரைகளை அமல்படுத்தி வருகிறது இத்திட்டங்கள் அனைத்தும் தன்னார்வலர்களையும் தனியார் கல்வி அமைப்புகளையும் கொண்டே நடத்தப்படுகிறது.

இத்திட்டத்தின் தலைவரான டிவிஎஸ் சீனிவாசன் கோவில் சிலை திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்து ஜாமின் பெற்றவர். இவர் ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியின் நெருங்கிய நண்பரும் கூட. இத்தகைய பின்புலத்தைக் கொண்டவரை திராவிட மாடல் ஆட்சி தனது கல்வித் திட்டத்திற்கு தலைவராக ஏன் நியமிக்க வேண்டும்.     

தமிழகத்தில் மொத்தம் 37000 அரசுப் பள்ளிகள் உள்ளன. பெரும்பான்மையான மாணவர்கள் இப்பள்ளியில் தான் படிக்கின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை மற்றும் ஆய்வகங்கள் போதாமை, கழிப்பறை வசதியின்மை என ஏராளமான பிரச்சனைகள் உள்ளன. இவற்றை சரிசெய்ய மத்திய/மாநில அரசுகள் தேவையான நிதி ஒதுக்குவதில்லை. இது கடந்த இருபது ஆண்டுகளில் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்கு சாதகமான சூழலையே உருவாக்கியுள்ளது. இது உலகமயம்-தனியார்மயம்-தாராளமயம் கொள்கைகளின் விளைவுகளேயாகும். இதனை மறைப்பதற்கு மத்திய/மாநில அரசுகள் பல ஜிகினா வேலைகளைச் செய்து அரசுப் பள்ளிகளின் பாதுகாவலர்களாகக் காட்டிக்கொள்கின்றனர். இதற்கு திராவிட மாடல் ஆட்சியும் விதிவிலக்கல்ல.

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய மாநில அரசுகளோ அரசுப் பள்ளிகளை கைகழுவுகின்ற வேலையை தொடர்ச்சியாக செய்து வருகிறது. ஆரம்பத்தில் கல்விக்கான நிதியைக் குறைத்தார்கள் அடுத்து அரசு-தனியார் கூட்டு என்றார்கள் இப்போது முன்னாள் மாணவர்கள்-தனியார் நிறுவனங்களின் (Corporate Social Responsibility-CSR) பங்களிப்புகளின் மூலம் பள்ளிகளை மேம்படுத்துவது என்று கதையளக்கிறர்கள். இப்படியே தொடர்ந்தால் வருங்காலங்களில் அரசுப் பள்ளிகளின் நிர்வாகம் மட்டுமே அரசிடம் இருக்கும், மொத்தப் பள்ளியும் தனியார்-கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் செல்வது திண்ணம்.  

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன