தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தலும் ஆகாயப் புளுகன் ஆர்.என்.ரவியும்!

பாஜக, தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கவர்னர்களைக் கொண்டே கட்டுப்படுத்தி வருகிறது. உயர்கல்வி உட்பட பல்வேறு துறைகளில் மோடியின் திட்டத்தினை திணிப்பதையும் அம்மாநில பாஜகவின் வளர்ச்சி/ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்வதுவே கவர்னர்களுக்கு மோடி-அமித்ஷா கும்பலால் கொடுக்கப்பட்ட வேலை.

தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கைக்கு (NEP-2020) எதிரான மனநிலை  பரவலாக காணப்பட்டாலும் ஒன்றிய அரசின் ஏஜென்டான ஆளுநர் ரவி கல்விக் கொள்கையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வது தொடர் கதையாகவே உள்ளது. அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக உள்ள ஆளுநர் ரவி தமிழக உயர்கல்வித் துறையில் கல்விக் கொள்கையை புகுத்துகின்ற வேலையையும் சனாதனத்தின் புகழ் பாடுவதையும் கூடவே மோடியின் புகழ் பாடுவதையும் தொடர்ந்து செய்துவருகிறார்.

இரண்டு வாரத்திற்கு முன்பு அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் பேசிய ரவி “தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்பவர்கள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் அதனை நடைமுறைப்படுத்தி வருவதாகவும்”, “நம்முடைய மக்கள் காலனிய மனோநிலையிலிருந்து இன்னும் வெளிவரவில்லை. பிரிட்டிஷ் காலத்தில் கொடுக்கப்பட்ட கல்வி மற்றும் வர்த்தகம் சார்ந்த அறிவுகள் அனைத்தும் நமக்குள் தாழ்வுமனப்பான்மையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே கொடுக்கப்பட்டது.” என்றும் பேசியுள்ளார்.

 

 

ரவியின் கூற்றின் முதல் பகுதியில் உண்மை இல்லாமல் இல்லை. திமுக அரசும் அதன் ஆதரவாளர்களும் பொதுத் தளத்தில் ரவியின் கூற்றைப் பொதுவாக மறுத்துப் பேசினாலும் தேசிய கல்விக் கொள்கையை புறக்கணிப்பதாக இன்றுவரை ஒன்றிய அரசுக்கு  தெரிவிக்கவில்லை. NEPல் சொல்லப்பட்டுள்ள பல அம்சங்களை வேறு பெயர்களில் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தத்தான் செய்கிறது. உதாரணத்திற்கு நான் முதல்வன், நம்ம ஸ்கூல் திட்டங்களைச் சொல்லலாம்.

தமிழகத்தில் கல்வியாளர்கள், மாணவர் இயக்கங்கள், முற்போக்கு அமைப்புகள் மற்றும் சமூக அக்கறையுள்ள பேராசிரியர்கள் தரப்பினரிடமிருந்து NEPக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்தாலும் அதனை அமல்படுத்தப்படுவதற்கு ஆதரவான சூழலும் இருக்கத்தான் செய்கின்றன.

இந்திய அளவில் NEPன் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும் உயர்கல்வியில் அதிக GER கொண்ட மாநிலமான தமிழகத்தில்தான் மற்ற மாநிலங்களை விட NEPன் பரிந்துரைகள் அதிக அளவில் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு பிரதான காரணம் உயர்கல்வியில் புகுத்தப்பட்டிருக்கும் தனியார்மயமே. தமிழ்நாட்டிலுள்ள மொத்தக் கல்லூரிகளில் 80% கல்லூரிகள் தானியாரால் நிர்வாகம் செய்யக்கூடியவை. NEP அதன் உள்ளடக்கத்தில் அதிதீவிர தனியார்மயத்தையே முன்நிறுத்துவதால், ஒன்றிய அரசின் பல சலுகைகள் (தரவரிசை, நிதி ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை, பாடத்திட்டம் மற்றும் கல்விக் கட்டணத்தில் கட்டுப்பாடுகள் தளர்வு உட்பட) NEPஐ அமல்படுத்துவதின் மூலமே பெறமுடியும் என்பதால் கல்விச் சேவை என்ற போர்வையில் பகற்கொள்ளை அடிப்பதை மூச்சாகக் கொண்டு செயல்படும் இத்தனியார் கல்லூரிகள், போட்டி போட்டுக்கொண்டு NEPன் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு ஆதரவு காட்டிவருகின்றனர்.

இரண்டாவதாக, ஆளுநர் ரவி தங்களுடையத் திட்டங்களுக்கு ஆதரவானவர்களையே துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார். இதனால் தமிழ் நாட்டிலுள்ள அரசு பல்கலைக்கழக நிர்வாகிகள் வெளிப்படையாகவே யுஜிசி மற்றும் ஆளுநர் மாளிகையின் ஆதரவாளராகவே செயல்படுகின்றனர். இந்நிர்வாகங்களில் உள்ள ‘மெத்தப் படித்த பேராசிரியர்கள்’ யுஜிசி ன் சுற்றறிக்கைகள் மீதோ அல்லது NEPன் பரிந்துரைகள் மீதோ அல்லது மாநில அரசின் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் குறித்தோ சுய உணர்வோடு வாய் திறப்பதில்லை. இவர்கள் யுஜிசி-ன் சுற்றறிக்கைகளை அமல்படுத்துவதை தலையாய கடமையாக கருதுகின்றனர். ஆகையால் NEP பரிந்துரையின் சமூகப் பாதிப்புகள் குறித்தோ புராண-இதிகாசக் கதைகளை அறிவியலாகவும் வரலாறாகவும் கல்லூரிகளில் போதிப்பதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் அதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவளிக்கின்றனர். மேற்கண்ட காரணங்களினால், NEPக்கு பரவலான எதிர்ப்பு இருந்தாலும் அதன் பரிந்துரைகளை அல்படுத்துவது சாத்தியமாக்கியுள்ளது.  

 

 

ரவி பேசியதில் உள்ள இரண்டாவது பகுதியைப் புரிந்து கொள்ள அவர் பேசி வருகிற பிற விசயங்களையும் சேர்த்து பார்க்கவேண்டும்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேசும் போது, “மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு புதிய தேசிய கல்விக் கொள்கை தவிர்க்கப்படுகிறது. முதலில் அந்தக் கொள்கை என்னவென்று அரசியல் தலைவர்கள் படிக்க வேண்டும். இங்கு யாரும் அதை முழுமையாகப் படிக்கவில்லை. அதை முழுமையாகப் படித்து தெரிந்துகொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கையை முழுமையாக அறிந்து, அதிலுள்ள சிறப்புகளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகே அது தொடர்பான கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்”

தேசிய கல்விக் கொள்கைக்கு இந்திய அளவில் தமிழகத்திலிருந்து தான் அதிக எதிர்ப்பு   கிளம்பியது. NEPஐ அம்பலப்படுத்தி நூற்றுக்கனக்கான அரங்கக்கூட்டங்கள் ஏராளமான வெளியீடுகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், லட்சக்கணக்கான பிரசுரங்கள் என பரவலான அம்பலப்படுத்தல்கள் நடந்தது. NEPல் சொல்லப்பட்டுள்ள பரிந்துரைகள் மீது தகுந்த ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பியும் இன்றுவரை ஒன்றிய கல்வி அமைச்சகமோ அல்லது ஆளுநரோ பதில் சொல்லவில்லை. ஆனால் NEP அறிக்கையையே படிக்காமல் மண்டபத்தில் எழுதிக்கொடுத்ததை மேடைகளில் படிக்கும் ஒரு ‘அறிவா(வி)ளி’ நம்மைப் பார்த்து “யாரும் அதை முழுமையாகப் படிக்கவில்லை” என்று கூறுவது தான் வேடிக்கையாக உள்ளது.

தனது ஆகஸ்ட் 15 உரையில் “காலனியாதிக்கக் கல்வி முறையின் வழியில், வெற்றுப் பட்டதாரிகளையும் மனப்பாடக் கிளிகளையும் மட்டுமே உருவாக்கும் கல்வித் திட்டம் செயல்பட்டது. நம்முடைய கல்வித் திட்டத்தை நவீனப்படுத்தும் புரட்சிகர முன்னெடுப்பே, தேசிய கல்விக் கொள்கை 2020 என்பதாகும்.”

‘புதிய தேசிய கல்விக் கொள்கையால் முன்னேற்றப் பாதையில் நாடு வேகமாகச் செல்லும். கல்விக் கொள்கையை அரசியல்ரீதியாகப் பார்க்கக் கூடாது. நம் கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு ஆகியவை பல அரசுகளால் மறைக்கப்பட்டிருக்கின்றன. மறைக்கப்பட்ட அந்த வரலாற்றை புதிய தேசிய கல்விக் கொள்கையால் மீட்டெடுக்க முடியும்’

மெக்காலே கல்வி முறை நம்மை அடிமைப்படுத்தி விட்டதென்றால் ரவியின் மூதாதையர்களான சாவர்கர், ஹெட்கேவார் தொடங்கி பாஜக வின் ‘அறிவாளிகளான’ பியூஸ் கோயல், மற்றும் நிம்மி மாமி வரை அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்கு சொம்பு தூக்கி சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு இதே பிரிட்டிஷ் கல்வி முறையில் பயின்றதுதான் காரணம் என்பதை ரவி மறந்து விட்டார் போல. ஆங்கிலேயக் கல்விமுறைதான் நாம் முன்னேறாமல் இருப்பதற்கு காரணமென்றால், மோடி தனது குஜராத் GIFT சிட்டியில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் ஆரம்பிக்க பல சலுகைகள் வழங்குவதாக அறிவித்து வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்பதேன்? மென்பொருள் மற்றும் அது சார்ந்த சேவைத்துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது, ஸ்டார்ட்அப்களின் வளர்ச்சிக்கு இந்தியாவில் தான் தகுந்த சூழல் உள்ளது; இந்தியர்கள் வேலை தேடுபவர்களாக இல்லை வேலை தருபவர்களாக மாறிவருகின்றனர் என மோடியும் கவர்னரும் கதைகளை அள்ளி வீசி பெருமைகொள்வதற்கு இதே ஆங்கிலேயக் கல்விமுறைதானே காரணம்.

 

 

தங்களுடையப் பொருளாதர நலன், உயர்பதவிகள், தொழில் தொடங்குவது, அரசியல் அதிகாரம் என்று வரும் போது ஆங்கிலக் கல்விமுறையை இறுகப்பற்றிக்கொள்ளும் பார்பன காவிக் கும்பல்; வரலாறு, தொல்லியல், இலக்கியம், மொழியியல் என்று வரும் போது பிரிட்டிஷ் கல்வி முறையைக் குறை சொல்லுகின்றனர். ஏனெனில் அது வரலாற்றை அறிவியல் பூர்வமாக பார்க்கக் கற்றுத் தருகிறது. பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பல் பரப்பிவரும் வேதகாலம் பொற்காலம் என்ற கதைகளையோ இந்தியா என்பது வேதகாலத்திலேயே இருந்தது என்பதையோ அல்லது அதன் பழங்கால பெருமைகளையோ வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதனை பொய்யென்று ஆதரங்களோடு அம்பலபடுத்துகின்றனர். தங்களுடைய ஒற்றை இந்தியா கருத்திற்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கும் இந்த அறிவியல் அணுகுமுறை இடைஞ்சலாக இருப்பதால் மேற்கத்திய கல்வி முறையால் இந்திய வரலாற்றை விளக்க முடியாதென்றும் அவ்வாறு விளக்குவது தவறென்றும் காவிக் கும்பல் வாதாடுகின்றது. மீறிப் பேசினால் வெளிநாட்டு ஏஜென்டுகள் என்றும் புத்தகங்களை தடைச் செய்ய வேண்டும் என்றும் கூச்சலிடுகின்றனர்.  

தங்களுடைய நிர்வாகத் தேவைகளுக்காகவும் அரசின் செலவினங்களை குறைப்பதற்காகவுமே பிரிட்டிஷ் அரசு இந்தியர்களுக்கு கல்வி கொடுத்தது. இதன் மூலம் நிர்வாகங்களில் இந்தியர்களை பயன்படுத்தி காலனியச் சுரண்டலைத் தொடர்வதையும் மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பை நிறுவனப்படுத்துவதையும் செய்தனர். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியங்களுக்கு சேவைசெய்வதின் மூலம் லாபம் பார்த்த இந்திய தொழில்துறை முதலாளிகள் ஆங்கிலக் கல்விமுறையால் பெரிதும் பயனடைந்ததினால் அதனை ஆதரிக்கச் செய்தனர். இப்போக்குகள் பார்பனரல்லாத பிற சமூகத்தினரும் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கியது. அன்று முதல் இன்று வரையில் இந்தியாவின் பல கல்விக்கொள்கைகள், மோடியின் கல்விக் கொள்கை உட்பட, பிரிட்டிஷ் கொடுத்த கல்விமுறையின் அடிப்படையின் மீது தான் கட்டப்பட்டு வந்திருக்கிறது இது காவி கும்பலுக்கும் தெரியும். இருப்பினும் இந்து-தேசவெறியை தூண்டுவதற்காக மெக்காலே கல்வி முறை நாட்டைப் பாழ்படுத்தியதாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

‘ரிஷிகள், முனிவர்கள் மற்றும் சனாதன தர்மத்தின் ஒளியால் இந்தியா என்ற நாடு உருவாக்கப்பட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய அரசியலைப்புச் சட்டமானது, சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. புத்த மதத் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவைதான். நாட்டின் தலைமைப் பதவியில் உள்ளவர்கள், ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்க வேண்டும்’

“ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டதுதான் ஆரியமும், திராவிடமும். அது இனம் சார்ந்தது அல்ல, இடம் சார்ந்தது”

“ஜி.யு.போப் தனது மொழிபெயர்ப்பில் ஒரு அவமதிப்பை செய்திருக்கிறார் ஒட்டுமொத்த திருக்குறளையும் அவர் ஆன்மீகமற்றதாக ஆக்கியிருக்கிறார். தனது மொழிபெயர்ப்பில் திருக்குறளில் இருந்த ஆன்மீக தாக்கத்தை அவர் தவிர்த்திருக்கிறார்.”

“ரிஷிகள் என்பவர்கள் பிரபஞ்சத்திலிருக்கும் வேதத்தைக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்கள்; இவர்களே தேவர்களையும் அசுரர்களையும் ராட்சர்களையும், மனிதர்களையும் படைத்தவர்கள்; பொதுவாக இவர்கள் பூலோகத்திற்கு மேலே உள்ள சொர்க்க லோகத்தில் வசிக்கக்கூடியவர்கள்”  இதுவே ரிஷிகளுக்கு சனாதனவாதிகள் சொல்லக்கூடிய விளக்கம். இது எவ்வளவு மடத்தனமானது என்று நாம் இங்கு விவரிக்கப்போவதில்லை. ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அண்டவெளியின் படத்தை வெளியிட்டிருந்தது. அதில் ரிஷிகள் வாழும் சொர்க்க உலகம் எது என்று மட்டும் ஆளுநர் காட்டினால் நாமும் அவருடன் சேர்ந்து சந்தோசப்படலாம்.

இந்திய அரசியல் சட்டத்தின் கணிசமான பகுதிகள் பிரிட்டிசாரிடமிருந்தே பெறப்பட்டது. இந்தியாவில் முதலாளித்துவ ஜனநாயகத்தை கொண்டுவர அப்போதைய ஆட்சியாளர்கள் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பெறப்பட்ட சட்டங்களுக்கும் ஜனநாயகத்தையே முற்றிலும் மறுக்கக்கூடிய வருண-சாதி முறைக்கும் (சனாதனத்திற்கும்) என்ன தொடர்பு?

பார்பனிய எதிர்ப்பிலிருந்தே பௌத்தம் உருவானதாக அம்பேத்கார் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் நிறுவியுள்ளனர். ஆரிய-திராவிட மொழிக்குடும்பம் இருந்ததற்கு சான்றாக பல மொழியியல் ஆய்வுகள் வந்துவிட்டன. இதற்கு ஆதரவாக டிஎன்எ ஆய்வுகளும் வந்துள்ளன. மொத்தத்தில் ரவி பேசியிருப்பவைகளனைத்தும் ஒரு பார்பன-ஆர்எஸ்எஸ் காரனுடைய புளுகுமூட்டைகளே.

இந்தியா என்பது வேதகாலத்திலிருந்தே உள்ளது; அந்நிய படையெடுப்புகள் இந்தியாவை கொள்ளையடித்து விட்டன; மெக்காலே கல்விமுறை நம்மை அடிமைப்படுத்தியது; சனாதன தர்மமே அனைத்திலும் சிறந்தது; வேதமே அனைத்துக்கும் மூல ஆதாரம்; ஐரோப்பியர்கள் வரலாற்றை மாற்றி எழுதிவிட்டனர்; போன்றவைகளெல்லாம் ரவியின் பேச்சுக்களில் உள்ள அடிப்படையான விசயங்களாகும். இதிலிருந்து ஆளுநர் போர்வையில் உள்ள ஒரு முழு சங்கியே ஆளுநர் ரவி என்பதை நாம் உணர முடியும்.

பாஜக, தான் ஆட்சியில் இல்லாத மாநிலங்களை கவர்னர்களைக் கொண்டே கட்டுப்படுத்தி வருகிறது. உயர்கல்வி உட்பட பல்வேறு துறைகளில் மோடியின் திட்டத்தினை திணிப்பதையும் அம்மாநில பாஜகவின் வளர்ச்சி/ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்வதுவே கவர்னர்களுக்கு மோடி-அமித்ஷா கும்பலால் கொடுக்கப்பட்ட வேலை. ரவிக்கு இன்னும் கூடுதலாக பெரியார்-திராவிடம் போன்ற கருத்துக்களுக்கு எதிராக பார்பனியம்–சனாதனம் சரியென்று பிரச்சாரம் செய்கிற வேலையையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால்தான் போகிற இடமெல்லாம் சனாதனக் கட்டுக்கதைகளை உண்மை போல பேசிவருகிறார்.

 

 

ரவியின் செயல்பாடுகளை எதிர்க்கும் பெரும்பான்மையினர் அரசியல் அமைப்பு சட்டகத்திற்குள் இருந்து மட்டுமே பிரச்சினையை அணுகுகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்ட ஒருவர் அதை மீறலாமா? ஆளுநரை மாற்ற வேண்டும் என்றெல்லாம் பேசுகின்றனர். ஆனால், ரவியோ, அண்ணாமலையோ பாஜக-ஆர்எஸ்எஸ் கும்பலோ அரசியல் சட்டத்தினை சிறிதளவும் மதித்ததில்லை. தங்களுடைய இந்துராஷ்ட்ரா கனவை அமல்படுத்துவதற்கான கருவியாகவே அதனைப் பார்க்கின்றனர்.

பார்பனியத்தையும் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் பொய் புரட்டுகளையும் NEPஐயும் முறியடிக்க வேண்டுமானால் முதலில் இவற்றுக்கெதிரான அம்பலப்படுத்தல்களை தீவிரமாக்குவதும் மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள், ஜனநாயக அமைப்புகள் மற்றும் பல மக்கள் பிரிவினரை ஒன்று திரட்டுவதும் மிகவும் அவசியமாகும்.

  • அழகு   

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன