உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டிக் கொழுக்க, ஏகாதிபத்திய முதலாளிகள் நடத்தும் மந்திராலோசனைக் கூட்டமே ஜி20 மாநாடு!

கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைச் சேவகம் செய்வதைத் தனது பாக்கியமாக கருதும் காவிக் கும்பல் இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பு மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என புளங்காகிதமடைகிறது. அத்துடன் இந்தியா லோக குருவாக மாறும் காலம் வந்துவிட்டது, இந்தியாதான் ஜனநாயகத்தின் தாய் என உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டதாக பிதற்றித் திரிகிறது.

அடுத்த ஜி20 நாடுகளின் மாநாட்டை தலைமையேற்று நடத்தும் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2023ம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் புதுதில்லியில் மாநாடு நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்களும், ரிசர்வ் வங்கி கவர்னர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இவர்களுடன் உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) அதிகாரிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.

2023 செப்டம்பரில் நடக்கும் உச்சிமாநாட்டிற்கு முன்பு நாட்டின் பல்வேறு நகரங்களில் பல்வேறு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிதித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் மாநாடுகள் நடைபெறும். இவை அனைத்திலும் உலக வங்கி மற்றும் ஐ.எம்.எப் அதிகாரிகள் கலந்துகொண்டு நெறிப்படுத்துவார்கள்.

 

 

உலக மக்கள் அனைவருக்கும் ஒரு நல்ல எதிர்காலத்தை, அதாவது சிறந்த உலகத்தை உருவாக்குவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுவதாக இவர்கள் கூறிக்கொண்டாலும் உண்மையில், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், நிதியாதிக்க கும்பல்களுக்கும் சிறப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கவே இது நடத்தப்படுகிறது.

சொல்லப்போனால் தொழிலாளர்களையும் ஏழை எளிய மக்களை இன்னும் எப்படியெல்லாம் சுரண்டி, ஏகாதிபத்திய நிறுவனங்களின் பணப்பெட்டியை நிரப்பலாம் என திட்டமிடுவதற்காகவே இத்தகைய மாநாடுகள் நடத்தப்படுகின்றன.

1970களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க நவீன தாராளவாத கொள்கைகள் கொண்டுவரப்பட்டன. அதனை உலகம் முழுவதும் கொண்டு செல்ல, ஆரம்பத்தில் ஜி8 என உலகின் முதல் 8 பணக்கார ஏகாதிபத்திய நாடுகள் மட்டும் இணைந்து உருவாக்கியிருந்த கூட்டமைப்பைப் பயன்படுத்தித்தான் திட்டங்களைத் தீட்டுவதும், நடைமுறைப்படுத்துவதும் நடந்தது.

ஆனால் 1997ல் நவீன தாராளவாதக் கொள்கைகள் காரணமாக, ஆசியப் புலிகள் என அழைக்கப்பட்ட ஹாங்காங், சிங்கப்பூர், தெங்கொரியா மற்றும் தாய்வான் ஆகிய கிழக்காசிய நாடுகளின் வீழ்ச்சியுடன் தொடங்கிய பொருளாதார நெருக்கடி, உலகவங்கி, மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவற்றின் ஆணிவேரையே அசைத்துப் பார்த்தது. இதன் காரணமாக ஜி8 நாடுகள் இன்னும் சில வளரும் மூன்றாம் உலக நாடுகளையும் தங்களுடன் இணைத்துக் கொண்டு ஜி20 கூட்டமைப்பை உருவாக்கின. இதன் மூலம் பொருளாதார நெருக்கடியைச் சமாளிப்பதுடன் மூன்றாம் உலகநாட்டு தொழிலாளி வர்க்கத்தையும், இயற்கை வளங்களையும் சுரண்டிக் கொழுத்திடும் திட்டங்களைக் கொண்டுவர இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றன.

 

 

2008ம் ஆண்டின் இறுதியில் தோன்றிய கட்டமைப்பு நெருக்கடி இன்னமும் தீர்க்கப்படாத நிலையில்,  கொரோனா பெருந்தொற்று, உக்ரைன்-ரஷ்யா போர், ஆகியவை உலகப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம், கட்டுக்குள் அடங்க மறுக்கும் பணவீக்கம், ஐரோப்பிய நாடுகளைப் பிடித்தாட்டும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி (cost of living crisis) என அனைத்தையும் தாண்டி பன்னாட்டு நிதிமூலதனக் கும்பல்களின் நலனைப் பாதுகாப்ப்து எப்படி, அதிக லாபம் கிடைக்கும் நாடுகளில் எவ்வித தடையும் இன்றி அவர்களது மூலதனம் வந்து செல்ல வழி செய்வது எப்படி என இந்தியாவில் நடக்கவிருக்கும் இந்த மாநாட்டில் விவாதிக்க இருக்கிறார்கள்.

இவை எல்லாவற்றையும் மறைத்துவிட்டு, ஜி20 மாநாட்டை நடத்தும் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளதை மிகப்பெரிய அங்கீகாரமாக, பெருமையாக கருதி அதற்காக நாடு முழுவதும் பெரிய அளவில் விளம்பரம் செய்து வருகிறது மோடி அரசு. உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் ஒரு ஆண்டு தலைமையேற்று நடத்த வேண்டும் என்ற மரபு கடைபிடிக்கப்பட்டு வரும் இந்த கூட்டமைப்பில் பிரேசில் தவிற மற்ற நாடுகள் அனைத்தும் ஒரு முறை மாநாட்டு தலைமையை ஏற்று நடத்திவிட்ட காரணத்தால் கடைசியாக இந்தியாவிற்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

 

கார்ப்பரேட்டுகளுக்கு அடிமைச் சேவகம் செய்வதைத் தனது பாக்கியமாகக் கருதும் காவிக் கும்பலோ இந்த மாநாட்டை நடத்தும் பொறுப்பு மோடியின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என புளங்காகிதமடைகிறது. அத்துடன் இந்தியா லோக குருவாக மாறும் காலம் வந்துவிட்டது, இந்தியாதான் ஜனநாயகத்தின் தாய் என உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது என பிதற்றித் திரிகிறது.

ஆனால் கடந்த காலங்களில் லண்டன், டொரொண்டோ, ஹம்பர்க் என எங்கெல்லாம் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றதோ அங்கெல்லாம் அந்த நாட்டு உழைக்கும் வர்க்கம் அணிதிரண்டு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தி, ஏகபோக முதலாளிகளின் கபட நாடகத்தை வெள்ளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றனர். காவி பாசிச கும்பலின் போலி தேசியவாத போலி பெருமிதப் பிரச்சாரத்தைப் புறந்தள்ளி ஜி20 மாநாட்டின் உண்மை நோக்கத்தை நம் நாட்டு உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் கொண்டு செல்வோம். பன்னாட்டு நிதியாதிக்க கும்பல்களையும் அவர்களின் அடிமைகளான காவி பாசிசக் கும்பலையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிப்போம்.

 

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன