வீட்டுப்பணியாளர்கள்: நவீன கொத்தடிமைகளா? நமது சக தொழிலாளர்களா?

பொருளாதாரத் தேவைகளுக்காக பிற குடும்பங்களில் வீட்டு வேலை செய்து தங்களது குடும்பத்தை பராமரிப்பதுடன், பெண் என்பதால் தங்களுடைய வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்யும்படி இந்தியக் கலாச்சாரம் இவர்களை அழுத்துகிறது. இப்படி இந்தச் சமூகத்தினால் இரட்டைச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்

பிற்போக்குக் கலாச்சாரத்தில் ஊறிக் கிடக்கும் இந்தியக் குடும்பங்களில் வீட்டு வேலைகளைச் செய்வது இன்றைக்கும்கூட பெண்களின் பொறுப்பு என்ற எழுதப்படாத விதி உள்ளது. வீட்டைச் சுத்தம் செய்வது, பாத்திரங்கள் கழுவுவது, சமைப்பது, குழந்தைகள், முதியவர்களைப் பராமரிப்பது என அனைத்தும் குடும்பத்துப் பெண்களின் கடமை என இந்தச் சமூகம் வரையறுத்துள்ளது. வேலைக்குப் போகும் பெண்களாக இருந்தாலும் கூட வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு பணிக்குச் செல்ல வேண்டும்.

நடுத்தர, உயர்நடுத்தர பொருளாதார வசதி கொண்ட குடும்பங்களில் மட்டும் வீட்டு வேலைக்கு பெண்களை அமர்த்திக் கொள்ளும் வாய்ப்பும் வசதியும் இருக்கிறது. அப்படி வீட்டு வேலை செய்ய வரும் பெண்களின் பொருளாதார நிலைமையோ மிகவும் மோசமானதாக இருக்கிறது.

இது போன்ற  வீட்டு வேலைகளைச் செய்யும் வீட்டுப் பணியாளர்களின் எண்ணிக்கை இந்தியா முழுக்க  50 லட்சம் வரை இருக்கும்  என்று அதிகாரப்பூர்வ புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இதில் பெரும்பான்மையானவர்கள் திருமணமாகி குழந்தைகளுடன் இருக்கிறார்கள். எனவே பொருளாதாரத் தேவைகளுக்காக பிற குடும்பங்களில் வீட்டு வேலை செய்து தங்களது குடும்பத்தை பராமரிப்பதுடன், பெண் என்பதால் தங்களுடைய வீட்டு வேலைகளையும் சேர்த்துச் செய்யும்படி இந்தியக் கலாச்சாரம் இவர்களை அழுத்துகிறது. இப்படி இந்தச் சமூகத்தினால் இரட்டைச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இந்திய தொழிலாளர் துறை, ,இவர்களை முறைசாரா தொழிலாளர்கள் என்ற பிரிவின் கீழ் வைத்திருக்கிறது. மற்ற தொழிலாளர்களுக்கு காகிதத்தில் இருக்கும்  சட்டங்கள் கூட இவர்களுக்கு இல்லை.  50 லட்சம் பேர் வீட்டுப் பணியாளர்களாக இருக்கும்  இந்தியாவில் சங்கமாக  கூட இவர்கள் அணிதிரட்டப்படாமல் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 10 மட்டுமே குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின் அட்டவணையில் இவர்களை  சேர்த்துள்ளன.

 

 

தமிழ்நாடு அரசு இவர்களுக்கென குறைந்தபட்ச ஊதியம் எதையும் நிர்ணயிக்கவில்லை, இருந்தாலும் தமிழக அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்திலேயே மிகவும் குறைந்தபட்சமான நாளொன்றுக்கு 371 ருபாய் அதாவது  மாதம் 9700 ருபாய் சம்பாதிக்க தினமும் இவர்கள் 7 முதல் 8 வீடுகளில் வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

ஒரு வீட்டின் பராமரிப்பு வேலைகளைச் செய்வதே பெரும்பாடாய் இருக்கிறது. இதில் அன்றாடம் 8 வீடுகளின் வேலைகளைச் செய்வது என்பது உண்மையில் மிகப்பெரிய உடல்வலிமை இருந்தால் கூடச் செய்ய முடியாது. இந்தக் கடும் உழைப்பிற்கு ஈடு செய்யும் வகையிலான சத்தான உணவுகளைக் கூட இந்தப் பெண்களால் சாப்பிட முடியாது.  நீண்ட நாட்களுக்குக் இந்தக் கடும் உழைப்பைக் கொடுக்கும் இந்தப் பெண்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.

வாரத்தில் 6 நாட்களும் வேலை, விடுப்பு எடுக்கவே முடியாது, உடல்நிலை சரியில்லை என விடுப்பு எடுத்துக் கொண்டால் அதற்கான சம்பளம் பிடித்தம் செய்யப்படுவது என கொத்தடிமை நிலையிலேயே இவர்கள் பெரும்பாலும் பணிபுரிகின்றனர்.

 

 

புதிய தாராளவாதக் கொள்கைகள் அமுலுக்கு வந்த பின், பெண்களின் மலிவான உழைப்பைச் சுரண்டவும், கேள்விகேட்காமல் அடங்கிவேலை செய்யவேண்டும் என இந்தப் பிற்போக்கு சமூகம் அவர்களைப் பழக்கியுள்ளதைப் பயன்படுத்திக் கொள்ளவும் பெண்களை வேலைக்கு அமர்த்துவது அதிகரித்து வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் வீட்டின் வெளியில் தினக்கூலிகளாக, விற்பனையாளராக, கணக்கராக, அலுவலக உதவியாளராக , ஐ.டி துறை, கால்சென்டர் ஊழியராக,  ஆலையில் காண்ட்ராக்ட் தொழிலாளியாக, உழைக்கும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்தப் பெண்கள் எல்லோரும் குடும்ப பராமரிப்பு எனும் பிற்போக்குச் சுரண்டலிருந்து விடுவிக்கப்படாமலேயே முதலாளிகளின் சுரண்டலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களையெல்லாம் நவீன தாராளவாதம் நேரடியாகச் சுரண்டுகிறது என்றால், அதன் வரையரைப் படி ‘திறனற்ற’ தொழிலாளர்களாக முத்திரை குத்தப்பட்டுள்ள வீட்டுப் பணியாளர்கள் மறைமுகமாக சுரண்டப்படுகின்றனர்.

இப்பெண்கள் தங்கள் ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் வியர்வையாய் சிந்துகிறார்கள். பன்னிரெண்டு மணிநேரத்திற்கு குறையாமல் வேலை பார்ப்பதால் அன்பையும் அரவணைப்பையும் தன் குழந்தைகளுக்கு கொடுக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால் இவர்களது குழந்தைகள் கவனிப்பாரின்றி, கல்வியில் நாட்டமின்றி சிறுவயதிலேயே வேலைக்கு செல்லும் நிலைக்கு ஆளாகின்றனர்.

ஹோட்டல்களில் பாத்திரம் கழுவி, உணவு தயாரிக்கும் ஆண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம் கூட இப்பெண்களுக்கு கிடைப்பதில்லை. இவர்கள் செய்யும் பணிகள் ஒட்டுமொத்த சமுகத்திற்கும் பயனற்றதாக இப்பெண்களை சுரண்டும் இச்சமூகம் கருதுகிறது

இப்பெண்களின் உழைப்பை சுரண்டும் இச்சமூகம் மாற்றமின்றி அப்படியே நீடிக்கும் வரை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இப்பணியாளர்கள் வேலை செய்யும் வீடுகளில் இவர்கள் வந்து துடைப்பதற்கென்று தூசிகள் படிந்து இருக்கும், சமையலறையில் எச்சில் பாத்திரம் இவர்களுக்காக காத்திருக்கும், முதியோர்கள், குழந்தைகள் பராமரிப்பு வேலைகள் நிறைந்திருக்கும்.

ஒரு ஆலைத்தொழிலாளி தொழிற்சாலையில் தான் வேலைபார்க்கும் வேலை நேரங்களில் மட்டும்  சுரண்டப்படுகிறான். ஆனால் வீட்டுப் பணியாளர்கள் வீட்டிலும் வெளியிலும் இச்சமூகத்தால் முழுநாளும் தொழிலாளியாக சுரண்டப்படுகின்றனர்.

 

 

இச்சுரண்டல் சமூகத்தில் ஒரு பெண் தன் தேவைகளைப் பெறவும், நிறைவேற்றிக் கொள்ளவும், தனிமனிதனை சார்ந்திருப்பதால் அவர் தன் வாழ்நாள் முழுவதும் சுரண்டப்படுகிறார். ஆனால் சுரண்டலற்ற சோசலிச சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி தோழர் அலெக்சாண்டர் கொலண்டாய் கூறியுள்ளதை இங்கே பொருத்திப் பார்க்க வேண்டியுள்ளது.

சோசலிச சமூகத்தில் பெண் என்பவர் சமூகத்தைச் சார்ந்திருப்பதால் அவர்களின் வாழ்க்கை பிரகாசமாக, சந்தோசமாக, ஆரோக்கியமானதாக, அழகாக இருந்தது. பெண் இந்த அடிமை வேலைக்காக மணிக்கணக்காக உழைக்க வேண்டியதில்லை

உழைக்கும் பெண்ணின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் வீட்டு வேலைகள்  சோசலிச சமூகத்தால் பகிர்ந்து கொள்ளப்படும். உழைக்கும் பெண் இதற்கு மேலும் துணி துவைத்துக் கொண்டும், பாத்திரம் கழுவிக் கொண்டும், வீட்டைப் பெருக்கிக் கொண்டும் அடிமையாக வாழ வேண்டியதில்லை.

குடும்பத்தைப் பராமரிக்கும் இந்த வேலைகள் அனைத்திற்கும் சமூகத்தின் மற்ற வேலைகளுக்கு கொடுக்கப்படும் மதிப்பும், சம்பளமும் கொடுக்கப்பட்டு ஒரு வேலைப்பிரிவாக மாற்றப்படும்.

சோசலிச சமூகத்தில் பெண் இனி தன்னைத்தானே நம்பி வாழ்வாரேயன்றி கணவனை நம்பி அல்ல. தன்னால் செய்யக் கூடிய வேலையைத் தேடிக்கொண்டு தன் வாழ்வாதாரத்தைச் சார்ந்து வாழ்வார். சோசலிச சமூகத்தில் மட்டுமே  பெண் உழைப்பாளர்கள் தங்கள் மகிழ்ச்சியான  சமூக உழைப்பு மூலம் அவர்களின் வாழ்க்கையை கொண்டாட முடியும்!

இப்படிப்பட்ட சோசலிச சமூகத்தைப் படைக்கும் பயணத்தில்தான், இந்தப் பிற்போக்குச் சமூகத்தின் கடைக்கோடியில் கொத்தடிமைகளாக உழலும் வீட்டுப்பணியாளர்களின் துயரைத் துடைக்க முடியும்.

 

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன