வெடித்து கிளம்பும் தொழிலாளர்கள் போராட்டங்கள்! அடக்குமுறைக்கு தயாராகும் பிரிட்டன் அரசு!

கோவிட் பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் பிரிட்டன் திண்டாடிய போது, தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், நேரக் கணக்கின்றி வேலை செய்த சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று சம்பள உயர்வு கேட்டுப் போராடும் போது அவர்களை இராணுவத்தை வைத்து ஒடுக்கப்பார்க்கிறது நன்றி கெட்ட பிரிட்டன் அரசு.

பிரிட்டனில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சம்பள குறைப்பு, விலைவாசி உயர்வு, பணவீக்கம், மின்வெட்டு, எரிசக்தி பற்றாக்குறை என பிரிட்டன் மக்கள் சில ஆண்டுகளாகவே அவதியுற்று வருகின்றனர்.  இந்த நிலை உக்ரைன் போருக்குப் பிறகு இன்னமும் மோசமாகிவிட்டது.

இதன் காரணமாக பிரிட்டன் முழுவதும் பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர்கள் போராட ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக சுகாதாரத் துறையை சார்ந்த செவிலியர்கள், துணை மருத்துவர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், மருத்துவ கால்செண்டர் ஊழியர்களின் போராட்டங்களும், தபால் துறை ஊழியர்கள், இரயில்வே துறை ஊழியர்கள், எல்லை காவலர்கள், ஆசிரியர்கள் போராட்டங்கள் என தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களினால் இந்தத் டிசம்பர் குளிரிலும் பிரிட்டன் தகிக்கிறது.

1980களில் நடைப்பெற்ற தொழிலாளர்களின் போராட்டங்களை ஒப்பிட்டு முதலாளித்துவ பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிடுகின்றன. ஏறக்குறைய 10 இலட்சம் வேலை நாட்களை டிசம்பர் மாதத்தில் மட்டும் பிரிட்டன் இழந்துள்ளாதாக  பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் போராட்டங்கள் வரும் மாதங்களிலும் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

 

 

சுகாதாரத்துறையை பொறுத்தவரையில் இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங்கின்  தொழிற்சங்கத்தின் (RCN)  ஒரு லட்சம் சுகாதரத்துறை ஊழியர்களான செவிலியர்கள், துணை மருத்துவர்கள்  டிசம்பர் 15 மற்றும் 20 தேதிகளில் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர்.

ஆம்புலன்ஸ் ஊழியர்களில் 26,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் வரும் டிசம்பர் 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர், இதனால்  மருத்துவ அழைப்புகளுக்கு பதிலளிப்பதிலும், நோயாளிகளை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து வருவதிலும் தாமதம் ஏற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தகவல் தொடர்பு துறையை பொறுத்த வரையில்   1,15,000  தொழிலாளர்கள் ஏற்கனவே டிசம்பர் முதல் வாரத்தில்  வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். தற்போது டிசம்பர் 9, 11, 14, 15, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய வேலைநிறுத்தங்களை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.

போக்குவரத்து துறையில் ரயில், கடல்சார், போக்குவரத்தை சார்ந்த 40,000 தொழிலாளர்கள் டிசம்பர் மாதத்தில் 13, 14, 16 மற்றும் 17 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

ஆனால் உரிமைக்காக போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க மறுக்கும் பிரிட்டன் அரசு, போராட்டம் நடைபெறும் இடங்களில் அவசரநிலையை பிரகடனப்படுத்தி  தொழிலாளர்களை ஒடுக்க தயாராகி வருகிறது.

ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் போராடும் தொழிலாளர்களுக்குப் பதிலாக இரானுவத்தை வைத்து தொழிற்சாலைகளை இயக்கவும், ஆம்புலன்ஸ் ஓட்டவும், எல்லையில்  பணியமர்த்தவும்  அரசின் கையில்  திட்டம்  இருப்பதாக  கூறுகிறார்.

இதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு, இரானுவத்திற்கு பயிற்சி அளிக்கப்படுவதாக ஸ்கை நியூஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் செவிலியர்களின் வேலை நிறுத்தங்களுக்கு எதிராக, சற்று குறைவான நோய்க்குறைப்பாடுகள் உள்ள நோயாளிகளை கவனிப்பதற்கு வேதியியலாளர்களை பயன்படுத்த இருக்கிறார்கள்

பொது மருத்துவரை தவிர்க்கும் பொருட்டு நோயாளிகளுக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரைப்பதற்கும் பிரிட்டன் அரசு திட்டத்தை தன் கைவசம் வைத்துள்ளது.

கோவிட் பெருந்தொற்றை சமாளிக்க முடியாமல் பிரிட்டன் திண்டாடிய போது,  தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், நேரக் கணக்கின்றி வேலை செய்த சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று சம்பள உயர்வு கேட்டுப் போராடும் போது அவர்களை இராணுவத்தை வைத்து ஒடுக்கப்பார்க்கிறது நன்றி கெட்ட பிரிட்டன் அரசு.

1978ம் ஆண்டில் இதே போன்றதொரு டிசம்பர் மாதத்தில் பிரிட்டனின் சுரங்கத் தொழிலாளர்கள் முதல் சவக்குழி தோண்டும் தொழிலாளர்கள் வரை ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கமும் போராடிய போது அவர்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கினார் மார்க்ரெட் தாட்சர். தாட்சரின் வழியில் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தி தொழிலாளர்களை ஒடுக்க நினைக்கிறது தற்போதைய பிரிட்டன் அரசு.

 

 

தொழிலாளர்களின் போராட்ட உரிமைகளை நசுக்க பிரிட்டன் வேலை நிறுத்த எதிர்ப்பு மசோதாவை விரைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இம்மசோதா போரிஸ் ஜான்சன் பிரதமராக இருந்த போதே பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை பயன்படுத்த தற்போதைய ரிஷி சுனக் தலைமையிலான அரசு தயாராகி வருகிறது.

போராடும் தொழிலாளர்களை நிரந்தரமாக வேலைநீக்கம் செய்யவும், அவர்களுக்கு பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கும் முதலாளிகளுக்கு இச்சட்டம் வழிசெய்து கொடுக்கிறது.

 மேலும் ரயில்வே, சுகாதாரத்துறை போன்ற துறைகளில் வேலைநிறுத்தங்களின் போது குறைந்தபட்ச சேவைகளுக்கு (20விழுக்காடு) தொழிற்சங்கங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என மக்களுக்கு பரிந்து பேசுவது போல பம்மாத்து காட்டி, போராடும் தொழிலாளர்களை  மக்களிடமிருந்து பிரிக்க எத்தனிக்கிறது  இம்மசோதா. ஆனால் பிரிட்டன் மக்கள்  மத்தியில்  மேற்கூறிய தொழிலாளர்கள் போராட்டங்களுக்கான ஆதரவு பெருகிவருகிறது.

போராடுபவர்கள் அனைவரும், ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் கைக்கூலிகள் என பொய்ப் பிரச்சாரத்தை ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அவிழ்த்துவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி கிறிஸ்துமஸ் பண்டிகையை  போராடும் தொழிலாளர்கள் முடக்க பார்க்கின்றனர் என பொது மக்களுக்கு எதிராக தொழிலாளர்களை நிறுத்தும் கோயபல்சு பிரச்சாரத்தில் இறங்கி இருக்கிறது பிரிட்டன் அரசு. இதனை முறியடிக்க பல்வேறு தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த வேலை நிறுத்தத்தின் அவசியத்தை பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

வளர்ச்சியடைந்த, பெரும் பணக்கார நாடாக இருந்தாலும் முதலாளித்துவத்தின் உள்முரண்பாடுகளின் காரணமாக பொருளாதார் நெருக்கடி  ஏற்படுவதும் அதனைச் சமாளிக்க தொழிலாளர்களை பலிகடாவாக்குவதும் தொடர்கிறது. முதலாளிகளின் நெருக்கடியைத் தங்கள் முதுகில் ஏற்றுவதை  ஏற்க மறுத்து தெருவில் இறங்கிவிட்டது பிரிட்டன் தொழிலாளி வர்க்கம். அதனை எப்பாடுபட்டாலும் தடுக்க வேண்டும் என அடக்குமுறைக்குத் தயாராகிறது பிரிட்டன் அரசு.

-தாமிரபரணி

செய்தி ஆதாரங்கள்:

https://www.ft.com/content/e8abe985-c454-4b26-8838-ffe1ecc9bbaf

https://www.wsws.org/en/articles/2022/12/04/xsnn-d04.html

https://peoplesdispatch.org/2022/11/07/britainisbroken-trade-unions-and-social-movements-rally-against-tory-government/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன