ஐரோப்பாவிலிருந்து அமெரிக்க இராணுவ முகாம்களை அகற்று! பற்றி படரும் மக்கள் போராட்டங்கள்!

அமெரிக்கா நேட்டோ மூலமாக இந்தப் போரைத் தங்கள் மீது திணித்ததுதான், தங்களது பிரச்சனைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் என்பதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இதனால் அமெரிக்க இராணுவ முகாம்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஐரோப்பிய நாடுகளில் பற்றிப் படர்கிறது.

உக்ரைன் – ரஷ்யா போரினைக் காரணம் காட்டி ஜரோப்பிய  நாடுகள், அமெரிக்காவுடன் சேர்ந்து, ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் ரசியாவிடமிருந்து ஜரோப்பிவிற்கு இறக்குமதியாகும் எரிவாயுத் தடை முக்கியமானதாகும். ரசியா மீதான பொருளாதாரத் தடையினால் ஐரோப்பா மக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்வு, எரிசக்தி தட்டுப்பாடு, வேலையிழப்பு, ஊதிய வெட்டு என ஐரோப்பாவின் அனைத்து நாட்டு மக்களும் பிரச்சனைகளால் அவதியுருகின்றனர். 

இதனால் உக்ரைனை ரசியாவிடமிருந்து பாதுகாக்க வந்த “தேவதூதன்” என்ற ஜம்பத்தில் செயல்படும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் தலைமையிலான நேட்டோ படைக்கும் ஐரோப்பிய நாடுகளின் தொழிலாளி வர்க்கத்தினர் மத்தியில் எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் சுமார் 80 நாடுகளில் கிட்டத்தட்ட 750 ராணுவ முகாம்களை அமெரிக்கா அமைத்துள்ளது. தனது முகாம்கள் குறித்த விபரங்களை அமெரிக்கா ரகசியமாக வைத்திருப்பதால் இந்த முகாம்களின் எண்ணிக்கை முழுமையாக தொகுக்கப்படவில்லை. ஐரோப்பியக் கண்டத்திலும் பல முகாம்கள் உள்ளன. ஜெர்மனியில் ராம்ஸ்டின் என்ற இடத்தில் தான் பெரிய முகாம் அமைத்துள்ளார்கள். இங்கு 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலி, கொசோவோ, நெதர்லாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கிரீஸ் மற்றும் பல்கேரியா ஆகிய நாடுகளில் பல அமெரிக்க ராணுவ முகாம்கள் உள்ளன. நேட்டோ பெயரில் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் படைத்தளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

ஐரோப்பிய நாட்டு அரசுகள்,  மக்களின் நலன்களை தியாகம் செய்வதையும், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் நலன்களுக்காக வேலை செய்வதையும் மக்கள் இந்த போரின் மூலம் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் நேட்டோ மூலம் நடத்தும் போரினால்  ஏற்படும்  பாதிப்பு உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்படுவதை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் ஐரோப்பாவின் பிரான்சு, பெல்ஜியம், செக் குடியரசு, ஜெர்மனி, ஹங்கேரி, போன்ற நாடுகளின் முக்கிய நகரங்களில் செப்டம்பர் மாதம் முதல் வலுவடைந்து வருகின்றன.  

உக்ரைனுக்கு அவர்களின் அரசுகள் ஆயுதங்களை வழங்குவதை ஐரோப்பிய மக்கள் எதிர்ப்பதோடு, ஐரோப்பாவில் இருந்து அமெரிக்க இரானுவ முகாம்களை அகற்று! உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்து! என்ற கோரிக்கையோடு ஐரோப்பிய நாடுகளின் பல நகரங்களில் மக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

கிரீசில் மக்கள் போராட்டம்:

கிரீசில், தங்கள் நாட்டு மண்ணை அமெரிக்க ராணுவம் பயன்படுத்தக்கூடாது என்று கோரிக்கையை முன்வைத்து கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைத் திரட்டி வருகிறது. மேலும், பொருளாதரத் தடைகளால் கிரீஸ் பாதிக்கப்படுகிறது என்றும், சுமைகளைத் தங்கள் மக்கள் சுமப்பது சரியல்ல என்றும் அக்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தங்கள் எதிர்ப்பை மீறி அமெரிக்கப் படையினர் வந்தபோது அவர்களை வழிமறித்து மக்கள் திருப்பி அனுப்பினார்கள். கிரீஸ் துறைமுகங்களை அமெரிக்க ராணுவம் பயன்படுத்த முயன்றபோது, கடலில் இறங்கிப் போராடுவோம் என்று எதிர்ப்புக் குரல் எழுந்தது.

தங்கள் நாட்டு துறைமுகத்தில் இருந்து நேட்டோவின் டாங்கிகளை ஏற்றிச்செல்லக்கூடாது  எனவும்  அந்த டாங்கிகளுக்கு சிவப்பு வண்ணத்தை பூசியும்  மக்கள் தங்கள் போராட்டத்தை வெளிப்படுத்தினர்.

கிரீஸில் உள்ள அலெக்ஸாண்ட்ரூபோலிஸ் துறைமுகம், மத்தியதரைக் கடலில்  நேட்டோ போர்க்கப்பல்கள், ராணுவப் பயிற்சியில் ஈடுபடும், கப்பல்துறை தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

செக் குடியரசில் மக்கள் போராட்டம்:

செக் குடியரசின் பிரதமர் பெட்ர் ஃபியலாவின்  தலைமையிலான செக் அரசாங்கம் ரஷ்யாவிற்கு எதிரான ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத் தடைகளில் கையெழுத்திட்டதோடு மட்டுமில்லாமல் உக்ரைன் மீதான படையெடுப்பு தொடர்பாக தீவிர நேட்டோ ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

கார்ப்பரேட நிறுவனங்களுக்கான நிதி உதவி மற்றும் மக்களுக்கான  மின்சார விலை  உயர்வு உள்ளிட்ட பல நடவடிக்கைகளை இது ஏற்றுக்கொண்டுள்ளது. செக் குடியரசின் மக்கள் ரசியா – உக்ரைன் போரினால் கடுமையான பொருளாதர சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

 

 

அந்நாட்டின் தலைநகர் பிராக்கில் நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். உக்ரைனுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு வர்த்தக மற்றும் எரிபொருள் தொடர்பான கொள்கைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள ராணுவ முகாம்கள் அகற்றப்பட்டால் மட்டுமே ஐரோப்பாவில் அமைதி ஏற்படும் என்றும், எரிவாயு விநியோகம் குறித்து உடனடியாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் பேரணியில் பேசியவர்கள் வலியுறுத்தினர். 

”அமெரிக்க முகாம்கள் அமெரிக்காவிலேயே இருக்கட்டும் என்ற முழக்கத்தோடும்,  ரசியா எங்கள் எதிரி அல்ல, போர்வெறி பிடித்த செக் குடியரசே நமது எதிரி என்ற முழக்கத்தோடு  செக் குடியரசு மக்கள் போராடி வருகின்றனர்.

பிரான்சில் தொடரும் மக்கள் போராட்டங்கள்:

பிரான்சின் தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதிய உயர்விற்காக பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். சில ஆண்டுகளாகவே பிரான்சின் பணவீக்கம் 6.2 விழுக்காடாக  உள்ள நிலையில் அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க, 10 விழுக்காடு  வரை ஊதிய உயர்வு வேண்டும் என்ற கோரிக்கையோடு தொழிலாளர்கள்  முன்பு போராடி வந்தனர். ஆனால் பிரான்சு அரசோ மக்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டங்களுக்கு செவிசாய்க்க மறுக்கிறது. அதே சமயத்தில் உக்ரைனுக்கு ஆயுத தளவாடங்களுக்காக பல மில்லியன் டாலர் அளவுக்கு செலவு செய்கிறது

 

 

இதனால் பிரான்சு அரசை எதிர்த்து பிரான்சு மக்கள் போராடி வருகின்றனர். தாங்கள் வாழ்வாதார பிரச்சினைக்கு கஷ்டப்படும் போது, உக்ரேனில் நடைபெற்றுவரும் போர், எரிசக்தி நெருக்கடியை அதிகமாக்கி வருதால் எரிவாயு நிறுவனங்கள், எண்ணெய் மற்றும் எரிவாயுவின் விலையை ஏற்றி கொள்ளை இலாபம் ஈட்டுகின்றன என்பதை அம்பலப்படுத்தி பிரான்சின் பல்வேறு நகரங்களில் தொழிலாளர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெர்மனியில் மக்கள் போராட்டம் :

ஜெர்மனியில் போராட்டக்களத்தில் போராடும் மக்கள், ரசியாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைக் கொள்கை, தோல்வியடைந்து ஜெர்மனி மக்களுக்கு  பேரழிவு தரும் வகையில் இயக்கப்படுகிறது. உக்ரைன் மீதான போர் என்பது, போர் வெறியர்கள், ஆயுத நிறுவனங்களுக்கு தான் ஒரு சொர்க்கம், நேட்டோ போர்வெறியர்கள் ஜெர்மனிக்கும், ரசியாவிற்கும் & உக்ரைனுக்கும் ரசியாவிற்கும் இடையே மோதலை உருவாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.

 

 

ஜெர்மனியிலிருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்யும் ஆயுத உற்பத்தி நிறுவனங்களான  ரெயின்மெடால் (Rheinmetall) மற்றும் டேங்க் உற்பத்தியாளர் கராயுஸ்-மாஃபி வெக்மான் (Krauss-Maffei Wegmann) ஆகியவற்றை  தடை செய்ய கோரி, காசெல் நகரில் போராட்டங்கள் நடந்தன. இத் தொழிற்சாலைகளின்  ஆலை வாயில்களை மறித்து தொழிலாளர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். போரின் மூலம் இந்நிறுவனங்கள் பெரும் இலாபம் ஈட்டி வருவதை அம்பலப்படுத்தி தொழிலாளர்கள் போராடினர்.. ஜெர்மன் பொருளாதாரம் இராணுவமயமாக்கப்பட்டு வருவது எனக் கூறி இத்தொழிற்சாலையின் ஒரு நாள் ஆயுத தளவாட உற்பத்தியை தொழிலாளர்கள் முறியடித்தனர்.  

இவை மட்டுமில்லாமல் பிரிட்டன், ஆஸ்திரியா,இத்தாலி, மால்டோவா போன்ற ஐரோப்பிய நாடுகளில் உள்ள  மக்கள், உக்ரைன் போர் காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளதைக் கண்டித்தும், நேட்டோவிற்கு எதிராகவும் போராடி வருகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஊதுகுழல்களான சர்வதேச ஊடகங்கள், எரிசக்தி விலை உயர்வு, அமெரிக்க ஏகாதிபத்திய நேட்டோவின் போர் வெறி, அதன் ஆதாயம் மற்றும் இப்போரினால், பொருளாதார சுமைக்கு ஆளாகும் மக்களைப் பற்றியும், இதற்கெதிரான, ஐரோப்பிய மக்களின்  போராட்டங்களை பற்றியும்  முற்றிலும் இருட்டடிப்பு செய்துள்ளது.

  • தாமிரபரணி 

 

செய்தி ஆதாரங்கள்:

https://www.ft.com/content/fedc259f-bf96-4a22-b032-bc181d4dd51d

https://www.dw.com/en/germany-police-clash-with-protesters-outside-arms-factory/a-62999853

https://www.reuters.com/world/europe/czech-protesters-call-new-government-direct-gas-talks-with-russia-2022-10-28/

https://theekkathir.in/News/world/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/remove-american-military-bases

https://peoplesdispatch.org/2022/04/04/greek-rail-workers-protest-transport-of-tanks-for-natos-military-ventures/

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன