கட்டாய மதமாற்றம்! நீதிபதிகளின் கருத்து!! காவிகள் மூட்டிய தீயில் ஊற்றிய எண்ணெய்!!!

"கட்டாய மதமாற்றம் உண்மையிலேயே நடந்துள்ளது என்பதைக் கண்டறிய" என்று கருத்துக் கூறிய நீதிபதிகளே, கட்டாய மாதமாற்றம் நடந்துள்ளதா என்பதை விரிவாக விசாரித்து முடிவுக்கு வராமலே அவர்கள் தங்கள் சொந்த அபிப்பிராயத்தை, விருப்பத்தைக் கருத்தாக வெளிப்படுத்துவது எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் எனபது நீதிபதிகளுக்கே வெளிச்சம்.

கட்டாய மதமாற்றத்தைக் கட்டுப்படுத்தவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் அஸ்வினி குமார் உபாத்யாயா என்கிற பா.ஜ.க. வழக்கறிஞர் வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார். இவ்வழக்கில் இவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மிரட்டல், அச்சுறுத்தல், பரிசுகள் வழங்குதல் போன்றவைகள்.

பா.ஜ.க. வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா

இதுகுறித்து “மத்திய அரசு தரப்பில்” என்ன நடவடிக்கை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கோரிய போது, இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துசார் மேத்தா,

“அரசியல் நிர்ணய சபையில் கூட இந்தப் பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. வஞ்சகம், மோசடி, பணம் போன்றவற்றால் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதைத் தடுக்க, ஒடிசா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இயற்றப்பட்ட சட்டங்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனைக்கு வந்துள்ளன. அந்த சட்டங்கள் செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.”

“பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் கட்டாய மதமற்றங்கள் அதிகமாக நடக்கின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் கிரிமினல் குற்றத்துக்கு உட்பட்டவர்கள் என்பதை பல நேரங்களில் அறிந்திருப்பது இல்லை. தங்களுக்கு தொடர்ந்து உதவிகள் கிடைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.”

என்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதையொட்டி, நீதிபதிகள் “மதசுதந்திரம் இருக்கலாம். ஆனால், அளவுக்கு அதிகமான மதச் சுதந்திரம் கூடாது. கட்டாய மதமாற்றாம் மிகவும் தீவிரமான பிரச்சனை. இது தேசத்தின் பாதுகாப்பையும் மதச்சுதந்திரத்தையும் குடிமக்களின் மனசாட்சியையும் பாதிக்கலாம். எனவே, மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது தொடர்பாக பதில் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளனர். (ஆதாரம், இந்து தமிழ் நாளிதழ் 15.11.2022)

ஆனால், மிரட்டிய, அச்சுறுத்தியதற்கான ஆதரங்களை எந்தளவிற்கு பா.ஜ.க. வழக்கறிஞர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்தும், அதன் மீதான நீதிபதிகளின் விசாரனைகள் குறித்தும் தெரியவில்லை. இருப்பினும், இவர் (பா.ஜ.க. வழக்கறிஞர்) கூறுவதில் ‘உண்மை இருக்குமானால்’ என்ற கொக்கியைப் போட்டுக் கூறிய கருத்துக்களைத்தான் பத்திரிக்கைகள் மேற்கோள் காட்டி எழுதியுள்ளன.

இதிலிருந்து ஒன்றுமட்டும் நமக்குப் புலனாகிறது. விரிவான, பருண்மையான விவரங்களில் இருந்து பரிசீலிப்பது, அதிலிருந்து உண்மைகளைக் கண்டறிவது அந்த உண்மையில் இருந்து ஒரு முடிவுக்கு வருவது என்ற அடிப்படையில் விசாரணையை நடத்தவில்லை என்பதை நீதிபதிகள் கூறிய கருத்துக்களிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

கட்டாய மதமாற்றம் உண்மையிலேயே நடந்துள்ளது என்பதைக் கண்டறிய என்று கருத்துக் கூறிய நீதிபதிகளே, கட்டாய மாதமாற்றம் நடந்துள்ளதா என்பதை விரிவாக விசாரித்து முடிவுக்கு வராமலே அவர்கள் தங்கள் சொந்த அபிப்பிராயத்தை, விருப்பத்தைக் கருத்தாக வெளிப்படுத்துவது எந்தவித பாதிப்பை ஏற்படுத்தும் எனபது நீதிபதிகளுக்கே வெளிச்சம்.

இருப்பினும், கட்டாய மதமாற்றமோ, விருப்பப்பூர்வமான-மனப்பூர்வமான மதமாற்றமோ எதனுடைய எதிர்விளைவு என்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். பார்ப்பன மதவெறி புகுத்திய தீண்டாமைக் கொடுமையின் விளைவுதான் மதமாற்றம் என்ற எதிர்விளைவு என்பதை நீதிபதிகள் அறியாதவர்கள் அல்ல.

பெரும்பான்மை பலம் கொண்ட மதப்பிரிவினரை – பா.ஜ.க. வழக்குரைஞர் வாதிடுவது போல – இந்து மதப் பிரிவினரை சிறுபான்மை மதப்பிரிவினர் மிரட்டினாலோ, அச்சுறுத்தினாலோ கட்டாய மதமாற்றம் செய்ய வாய்ப்பே இல்லை. வேண்டுமானால் தீண்டாமையின் கொடுமையில் அன்றாடம் ஆதிக்க சாதி இந்து மதவெறியர்களால் அவதிப்படுவதைவிட சிறுபான்மையினர்களின் மதப்பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட மக்கள் – தங்களைச் சகோதர்களாக மதிக்கும், கல்விக்கும் வேலைக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் இருந்ததால் அவர்கள் மனமுவந்து மதம் மாறுவது இயல்புதானே. இதையே கட்டாய மதமாற்றம் என்றால் கர்வாப்சி என்ற பெயரில் வலுக்கட்டாயமாக, வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுத் தாய்மதத்திற்கு மாறும்படி வற்புறுத்துவது கட்டாய மதமாற்றம் இல்லையா?

மேலும் இந்தக் காவிக் கும்பல் ஆளும் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத்தடைச் சட்டத்தைக் கொண்டுவந்து, விருப்பப்பூர்வமான-மனப்பூர்வமான மதமாற்றத்தைக் கூடத் தடைசெய்வதோடு, அப்படி ஈடுபடுபவர்களையும் சட்டப்பூர்வமாக ஒடுக்கிய கொடுமைகள் ஏராளம்.

இதன் தொடர்ச்சிதான், ஹிஜாப், பர்தா, சிலுவை போன்ற மதச் சின்னங்களை அணிபவர்களையும், பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் தலித் மக்களையும் கும்பலாகத் தாக்குவது, கொலைசெய்வது என்பது அன்றாடம் அரங்கேறிவருகிறது. இவையனைத்தும் காலிகளான காவிகளின் காட்டுமிராண்டித்தனம் என்பதை நாடே அறியும். கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை.

இவர்களின் தீண்டாமையின் கொடுமையால் மதம்மாறுவதும் தீண்டாமைக்குட்பட்ட மக்களை – தீண்டாமையால் வதைபடும் மக்களை – அதிலிருந்து மீட்டெப்பதும் மதம் மாற்றுவதும் நாட்டுக்கு ஆபத்து என்றால், அதைவிட அவர்களை (மதம் மாறியவர்களை) மீண்டும் கட்டாயப்படுத்தி துன்புறுத்தி அடக்குமுறை செலுத்தி தாய் மதத்திற்குத் திரும்பும்படி பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் வற்புறுத்துவது, அதற்காக நாட்டைக் கலவர பூமியாக்குவது மிகமிக ஆபத்தானது. கொடூரமானது. கொடுமையானது.

இவர்களைவிடக் கொடுமை, மேற்கண்ட பாசிசக் கும்பல் ஆளும் ஒன்றிய அரசிடமே கட்டாய மதமாற்றத்தைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்கும்படி கோருவது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக அமைந்துவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

இனி என்ன? அவிழ்த்துவிட்ட காளைகளைப் போல சிறுபான்மை மக்களையும், அவர்களுக்கு ஆதரவானவர்களையும் பிரித்து மேயும். இதை முறியடிக்க வேண்டுமெனில் சட்டப்பூர்வமான வழிமுறைகளை நம்பிப் பயனில்லை என்பதை பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலின் நடைமுறையும் இவற்றிற்கு எதிரான எதிர்க்கட்சிகளின் நடைமுறையும் நிரூபித்து வருகின்றன. எனவே, சாதி, மதவெறியை வெறுத்து ஒதுக்கும் சாதி-மத வெறியர்களின் உறவுகளை உதறியெறியும் உண்மையான ஜனநாயகமான சக்திகளின் – உழைக்கும் மக்களின் கூட்டணி தேவை.

இது காவி – கார்ப்பரேட் பாசிச எதிர்ப்புக் கூட்டணியாக உடனுக்குடன் களத்தில் இறங்கிப் போராடும் கூட்டணியாக, அடக்குமுறைகளுக்கு அஞ்சாத கூட்டணியாக அமைய வேண்டும்.

-மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன