குஜராத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காவியில் புரளும் கேஜ்ரிவால்

காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கும் அதன் ஒடுக்குமுறை, சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் ஆட்சி செய்ப தங்களில் யார் சிறந்த பிரதிநிதிகள் என்று போட்டியிடுகிறார்கள் ஓட்டுக்கட்சிகள்

குஜராத் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரசுக்கு போட்டியாக மூன்றாவது அணியாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது அரவிந்த கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி.

தில்லியிலும் பஞ்சாப்பிலும் சட்டமன்ற தேர்தலை வென்றதைப் போல குஜராத்திலும் வென்று ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என தீவிரமாக வேலை செய்கிறது ஆம் ஆத்மி கட்சி.  ஆனால் பஞ்சாப்பை போல் வளர்ச்சி சலுகைகள் குறித்து மட்டும் பேசாமல், குஜராத்தில் பா.ஜ.க வீழ்த்த இந்துத்துவா அரசியலைக் கையில் எடுத்திருக்கிறது!

சென்ற தேர்தலின் போது ராகுல் மேற்கொண்ட கோயில் யாத்திரையை கிண்டல் செய்த பா.ஜ.கவினர் இந்த முறை வாயடைத்து போகும் அளவிற்கு கேஜ்ரிவால் இந்துத்துவ அரசியலில் உருண்டு புரளுகிறார்.

குஜராத் சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி  ஆட்சி அமைத்தால், குஜராத்தில் இருந்து அனைத்து மக்களுக்கும் “அயோத்தி ராமர் கோவிலுக்கு இலவச பயண வசதி செய்யப்படும்” என்கிறார்.  தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்  பேசும் போது பா.ஜ.க தலைவர்களை போலவே ஜெய் சீறீ ராம் என தவறாமல் முழக்கமிடுகிறார்.  இந்திய ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி படங்களை போட்டால் பொருளாதார பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்கிறார். இராமாயணத்தில் ராமர் கூறியபடியும், மகாபாரதத்தில் கிருஷ்ணர் கூறியபடியும் செயல்படுவதே ஆம் ஆத்மியின் நோக்கம் என்கிறார்.

மிதவாத இந்துத்துவம் கேஜ்ரிவாலுக்கு புதிதல்ல. தில்லியில் ஜெ.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட போதும், ஷாகின் பாக் போராட்டம் மற்றும் சி.ஏ.ஏ. எதிர்ப்புப் போராட்டங்கள், அதனை ஒடுக்குவதற்கு காவி பாசிச கும்பல் நடத்திய தில்லி கலவரம் ஆகியவற்றின் போது மவுனம் சாதித்தது மட்டுமன்றி, போராட்டக்காரர்களுக்கு எதிராகவும் பேசினார்.

தில்லி கலவரத்தின்போது வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக காவிக் கும்பல் குற்றம்சாட்டிய ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனை கேஜ்ரிவால் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கினார். ஆனால் தற்போது தாஹிர் உசேன் மீதான வழக்கை, பொய் வழக்கு எனக் கூறி தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பஞ்சாப் தேர்தலின் போது அம்பேத்கரும் பகத்சிங்கும் எங்களது வழிகாட்டிகள் என கூறிய கேஜ்ரிவால், தில்லியின் ஆம் ஆத்மி அமைச்சர் ராஜேந்திரபால் கெளதம் இந்து தெய்வங்களை பிரார்த்தனை செய்ய மாட்டோம் என கூறி, 10,000 பேர் பெளத்த மதத்திற்கு மாறும் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார் என்பதால் அவரை பதவியில் இருந்தே தூக்கி எறிந்துள்ளார்.

 

 

பாஜகவிற்கு மாற்று நாங்கள்தான் எனக் கூறிக்கொண்டு, பாஜகவின் அரசியலை இந்துத்துவ அரசியலை உயர்த்திப் பிடிக்கிறார். மக்களது  வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கின்ற பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு  போன்ற பல பிரச்சினைகள் நாட்டில்  இருக்கும் போது, அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, குஜராத்தில் இந்து சமூகத்தினரின் மத உணர்வை தூண்டி ஓட்டாக மாற்றிட, கேஜ்ரிவால் இந்துத்துவ அரசியலை கையில் எடுத்துள்ளார்.  

சமூகத்தினை மத ரீதியில் பிளவுபடுத்தி வெறுப்பையும், பயத்தையும் உருவாக்கி மதவெறியைப் பரப்புவதுதான் காவி பாசிஸ்டு கும்பல்களின் நோக்கம். ஆனால் அதை வீழ்த்துவதற்கு களம் புறப்பட்டுள்ளதாக கூறும் கேஜ்ரிவாலோ, அதே இந்துத்துவ அரசியலை, அவ்வரசியலின் கருத்தியலை கையில் எடுத்திருப்பது வெட்கக்கேடு.

இந்துத்துவ கருத்தியலுக்கு மக்கள் ஆட்பட்டு இருப்பதை சித்தாந்த ரீதியாகவும், காவி பாசிஸ்டுகளின் மீதான பயத்தை நடைமுறை ரீதியாகவும் விடுவிக்க கூடிய திராணி, சாத்தியம் கேஜ்ரிவாலுக்கோ இல்லை  இந்துத்துவ எதிர்ப்பு கட்சி என்று சொல்லிக் கொள்ளும் மற்ற ஓட்டுக் கட்சிகளுக்கோ இருக்கிறதா?

இல்லை என்பதை ஓட்டுக்கட்சிகளின் நடைமுறைகளே நிருபித்து வருகின்றன.

தேர்தல் அரசியலில் பா.ஜ.கவை வீழ்த்தும் திறனுள்ளவர் என கூறப்பட்ட திரிணமூல் காங்கிரசு கட்சியின் மம்தா பானர்ஜியின் நடைமுறையோ இந்துத்துவா அரசியல் நோக்கியே நகர்கிறது.  

மேற்கு வங்கத்தில் நடைபெறும் கங்காசாகர்  எனும் பல்லாயிரக் கணக்கானோர், கங்கையில் குளிக்கும் நிகழ்ச்சியில் மம்தா கலந்து கொள்கிறார். திரிணமூல் காங்கிரஸ் சார்பில் பார்ப்பனர் மாநாடு நடத்தப்பட்டு ஆயிரக்கணக்கான அர்ச்சகர்கள் கவுரவிக்கப்படுவதோடு அவர்களுக்கு பகவத் கீதை மற்றும் ராமகிருஷ்ணர், சாராதா தேவி படங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மே.வங்க சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மம்தா, நானும் ஒரு இந்துப் பெண் தான், பிராமணப்பெண், எனக்கு இந்து தர்மத்தை பற்றி பாஜக பாடம் எடுக்க வேண்டாம் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அனைவரும் மோசமானவர்கள் இல்லை. அது அந்த அளவுக்கு கெட்ட அமைப்பும் இல்லை. பா.ஜ.க செய்யும் அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்காதவர்களும் அங்கு உள்ளனர் என்று மே.வங்க தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா பேசினார். துர்கா பூஜை நடத்தும் கிளப்புகளுக்கு மானியத்தை வருடாவருடம் அதிகரித்து இந்த வருடம் 258 கோடி ரூபாய் அரசு நிதியிலிருந்து ஒதுக்கியுள்ளார்.  

இந்துத்துவா அமைப்புகள் மூலம் ராமநவமி ஊர்வலங்கள் தங்கு தடையின்றி மே.வங்கத்தில் நடைபெற்றுவருகின்றன. வாக்குகளை கவர்வதற்காக சில நேரம் இந்துக்களுக்கு ஆதரவாகவும், சில நேரம் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவும் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் மம்தா.

நாங்கள் இந்துத்துவாவாதிகள் அல்ல என்று மற்ற  ஓட்டுக்கட்சிகள் உருவாக்கும்  பொய் தோற்றத்தை தேர்தல் நேரத்தில் அவர்கள் பேசும் இந்துத்துவா அரசியல் அம்பலபடுத்திவிடுகிறது.  ஆம் ஆத்மி, திரிணமூல் போன்ற கட்சிகள்  நடைமுறையில் ஒரு போதும் இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்ததில்லை. தங்களின் செயல்பாடுகள் மூலம் அதை ஊட்டி வளர்க்கவே செய்கின்றனர்.

காவி பாசிசம் என்பது இஸ்லாமிய எதிர்ப்பு மட்டுமில்லை, சாதிய, இன, மொழி ஒடுக்குமுறைகள் அடங்கிய பார்ப்பனிய கொடுங்கோன்மையும்  மற்றும் தரகு முதலாளித்துவ, ஏகாதிபத்திய சார்பு கொண்ட புதிய தாராளவாதமும் ஒன்று கலந்தது. இதற்கு தேவை வர்க்கச்சுரண்டல் மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு.  

இந்த வரம்புக்கு உட்பட்டு தான் கெஜ்ரிவாலும் மம்தாவும் அரசியல் செய்கிறார்கள். அதனால் பா.ஜ.க வை வீழ்த்த அவர்களின் ஆயுதமான இந்துத்துவா அரசியலை கையில் எடுக்கிறார்கள்.  ஆனால் பாஜகவை வீழ்த்துவதற்கு இந்துத்துவாவை கையில்  எடுப்பது காவி பாசிச சக்திகள் வளர்வதற்குத்தான் வழி செய்து கொடுக்கும்

பார்ப்பன பாசிசம் என்பது பாஜக கொண்டுவந்தது அல்ல, அது மக்கள் மத்தியில் கருத்துக்களாக பரப்பபட்டிருக்கிறது. அதனை வீழ்த்துவது என்பது பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டாலோ அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஐ தடை செய்து விட்டால் மட்டும் போதாது.

காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கும் அதன்  ஒடுக்குமுறை, சுரண்டலுக்கும் ஏற்ற வகையில் ஆட்சி செய்ப தங்களில் யார் சிறந்த பிரதிநிதிகள் என்று போட்டியிடுகிறார்கள் ஓட்டுக்கட்சிகள்.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை தேர்தல் களத்தில் ஒரு போதும் முறியடிக்க முடியாது. அதற்கு வெளியே தான் முறியடிக்க முடியும்  என்பதை ஓட்டுக்கட்சிகளின் நடைமுறைகளே உணர்த்தி விடுகின்றன. இந்துத்துவ பாசிச நடவடிக்கைகளாக இருக்கட்டும், புதிய தாராளவாதக் கொள்கைகளின் தாக்குதல்களாக இருக்கட்டும் அவற்றை எதிர்த்து சமரசமில்லாமல் களத்தில் நின்று போராடுபவர்கள் மக்கள் தான்.

மக்களுக்கு ஓட்டுக்கட்சிகள் போல எந்த வரம்பும் இல்லை. காவி- கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகள் மக்களை வாழத் தகுதியற்ற நிலைக்கு தள்ளி வருகிறது.  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மக்கள் தான் முறியடித்தார்கள். இது போன்ற மக்கள் களத்தில் தான் காவி-கார்ப்பரேட் பாசிச நடவடிக்கைகளை முறியடிக்க முடியும்! தேர்தல் களத்தில் ஒரு போதும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க முடியாது!

 

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன