முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி: பலியிடப்படும் ஐ.டி. மற்றும் ஸ்டார்ட்-அப் துறை ஊழியர்கள்

முதலாளித்துவ பொருளாதர நெருக்கடியே வேலையின்மைக்கு காரணம் என்பதை மறைத்து மாணவர்களுக்கு போதுமான திறன் இல்லாததால் தான் வேலை கிடைக்கவில்லை எனப் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இச்சூழலில் தனியார் கல்லூரிகளோ, சந்தை கோருகின்ற படிப்பு – சேர்ந்தால் உடனடி வேலை அதுவும் 100 சதவிகித வேலை உறுதி என்று பிரச்சாரம் செய்து பல கோடிகளை கொள்ளையடிக்கின்றன.

ரவி இந்த ஆண்டு பொறியியல் படிப்பு முடித்த மாணவர். ஜனவரி மாதத்தில் தனது கல்லூரியில் நடந்த வளாக நேர்முகத் தேர்வின் (கேம்பஸ் இண்டர்வியூ) மூலம் விப்ரோ நிறுவனத்தால் தேர்தெடுக்கப்பட்டு பணி உத்திரவாதத்திற்கான கடிதத்தையும் பெற்றார். அதன் பிறகு விப்ரோ நடத்திய இரண்டு மாதப் பயிற்சியையும் முடித்து பணியில் சேர்வதற்கான அழைப்பிற்காக காத்திருக்கிறார். ஆனால், படிப்பு முடிந்து பலமாதங்களாகியும் விப்ரொவிலிருந்து பதில் இல்லையென்பதால் தற்பொது நாளென்றுக்கு 300 ரூபாய் சம்பளத்தில் கட்டடவேலை செய்துவருகிறார். ரவி தன்னுடையப் படிப்பிற்காக கல்விக்கடன் வாங்கியிருப்பதால் அக்கடனை எவ்வாறு அடைப்பதென்பதே ரவியின் குடும்பத்தாரின் தற்போதைய கவலை. ரவியை போல பல ஆயிரக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள்(2020-21, 2021-22 கல்வியாண்டு) வளாக நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியில் சேர்வதற்காக காத்திருக்கின்றனர். இதில் பெரும்பான்மையானோர் கல்விக்கடன் வாங்கி படித்தவர்கள்.

விப்ரொ மட்டுமல்லாது டெக்மஹிந்ரா, இன்போசிஸ், கேப்ஜெமினி, ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 2020-21 மற்றும் 2021-22-ம் கல்வியாண்டில் கல்லூரி வளாக நேர்முகத் தேர்வில் தேர்ந்தெடுத்த 30000 மாணவர்களை வேலைக்கு அழைக்கவில்லை. இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை சார்ந்து உள்ளதால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பணவிக்கம், ரசியா-உக்ரைன் போர், இங்கிலாந்து/அமெரிக்காவில் ஏற்படப்போகும் பொருளாதார தேக்க நிலை, தாங்கள் எதிர்பார்க்கின்ற திறன் மாணவர்களிடம் இல்லை போன்ற காரணங்களை கூறி தேவை வரும் போது உங்களை அழைத்துக் கொள்கிறோம் தற்போது வேலைதர முடியாது என இந்நிறுவனங்கள் கூறிவிட்டன.

மாணவர்கள் படித்த கல்லுரி நிர்வாகங்களோ இதில் தாங்கள் எதுவும் செய்யமுடியாது எனக் கைவிரித்து விட்டனர். தற்போது மாணவர்கள் என்ன செய்வதென்றறியாது நடு வீதியில் நிற்கின்றனர். பொதுவாக இளைஞர்களில் பொறியியல் படித்த மாணவர்களின் மத்தியில் தான் வேலைவாய்ப்பின்மை மிக அதிகம் என CMIE புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

 

 

மோடி அரசின் சாதனையாக அதன் சகாக்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஸ்டார்ட்அப் துறைகூட இதற்கு விதிவிலக்கல்ல. 2022ம் ஆண்டில் மட்டும்(ஆக்டோபர் வரை) 16000 பேர் 44 ஸ்டட் அப் நிறுவனங்களில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  இதற்கு போதிய முதலீடுகள் கிடைப்பதில்லை, முதலீட்டாளர்களுக்கு லாபத்தைக் காட்டவேண்டும் என்பது போன்ற சொத்தயான காரணங்கள் கூறப்படுகின்றன. உண்மையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ஆகப் பெரும்பாண்மையானவை தற்போது அதலபாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டுள்ளன. அதங்காரணமாக அவை படிப்படியாக தங்களது ஊழியர்களி பணிநீக்கம் செய்துவருகின்றன.

கொரோனா தொற்று பாதிப்புக் காலத்தில் தகவல் தொழில் நுட்பம். இணையம் மற்றும் ஸ்விகி-ஒலா போன்ற கிக் துறைசார்ந்த ஸ்ரார்டப் வேலைகளுக்கு அதிக தேவை இருப்பதாக கருதப்பட்டது. இந்நிறுவனங்களுக்கு அமெரிக்க-ஐரொப்பிய நாடுகளின் மத்திய வங்கிகள் மிககுறைந்த வட்டிக்கு கடன்களை தந்தன. மேலும் இத்துறை முதலாளிகளிக்கு ஏராளமானச் சலுகைகளையும் கொடுத்தன. இதனால் பல ஆயிரம் கோடி முதலீடுகள் இத்துறைகளில் கொட்டப்பட்டன. இதுறைகளின் எதிர்கால வளர்ச்சியை கணக்கிட்டு பல நிறுவனங்கள் ஆயிரக்கனக்கான பேரை வேலைக்கு எடுத்தன.

ஆனால் தற்போது பணவீக்கம் அதிகரித்து வட்டிவிகிதங்கள் உலகளவில் அதிகரித்து வருவதால் நிதிமூலதனக் கும்பல் லாபம் தரும் மற்ற துறைகளை நோக்கி நகர்ந்துவிட்டன. இதனால் பெரும் பண நெருக்கடியில் தத்தளிக்கும் இந்நிறுவனங்கள் புதிய ஆட்களை வேலைக்கு எடுப்பதை நிறுத்தியிருப்பதுடன், ஏற்கெனவே தங்களது நிறுவங்களில் வேலையில் இருப்பவர்களை பணிநீக்கமும் செய்துவருகின்றனர்.

சர்வதேச பொருளாதார நிலைமைகளோ மிகவும் நிச்சயமற்ற நிலையையில் உள்ளதால் தற்போதைய முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி முன்பு இருந்ததைவிட இன்னும் ஆழமானதாக பெரும்பான்மை மக்களை பாதிப்பதாக இருக்கும். இங்கு வேலைவாய்பென்பது முழுமையாக முதலாளிகளின் லாபபெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது என்பதால் தற்போதைக்கு இந்நிலைமைகள் சரியாகப்போவதில்லை.

 

 

நிலைமை இவ்வாறு இருக்க, மோடியோ மாணவர்களுக்கு திறன் சார்ந்த படிப்புகளை வழங்குவதின் மூலம் பன்னிரெண்டாவது முடித்தவுடன் வேலை கிடைக்க செய்வதே எங்களது நோக்கம், அதையே தேசியக் கல்விக்கொள்கை சொல்கிறது என்று பிரச்சாரம் செய்கிறார். தமிழகத்திலோ தேசியக் கல்விக்கொள்கையின் திறன் மேம்பாட்டுப் பரிந்துரையை நான் முதல்வன் என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தை பொறியியல் கல்லூரிகளில் அமல்படுத்தி வருகிறது திமுக அரசு. இத்திட்டம் 50 கோடி நிதி ஒதுக்கீட்டில் தானியாருடனான கூட்டின் மூலம் கல்லூரிகளில் நடத்தப்பட்டு வருகிறது. சந்தை எதிர்பார்கின்ற திறன் மாணவர்களிடம் இல்லை. மாணவர்களின் திறனை மேம்படுத்துவதற்கான பயிற்ச்சியே நான் முதல்வன் திட்டம் என ஆட்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.

முதலாளித்துவ பொருளாதர நெருக்கடியே வேலையின்மைக்கு காரணம் என்பதை மறைத்து மாணவர்களுக்கு போதுமான திறன் இல்லாததால் தான் வேலை கிடைக்கவில்லை எனப் பொய் பிரச்சாரம் செய்கின்றனர். இச்சூழலில் தனியார் கல்லூரிகளோ, சந்தை கோருகின்ற படிப்பு – சேர்ந்தால் உடனடி வேலை அதுவும் 100 சதவிகித வேலை உறுதி என்று பிரச்சாரம் செய்து பல கோடிகளை கொள்ளையடிக்கின்றனர்.

இங்கே உயர்கல்வி வழங்குவது அரசின் கடமையல்ல. மாணவர்களின் பொருளாதார நிலைமைகளைச் சார்ந்தது. கல்விக்கடனை திருப்பிக் கட்டமுடிந்தால் படி இல்லையேல் கூலிவேலைக்கு போ. முதலாளிகளுக்கு எது தேவையோ அதுவே அறிவு அதுவே படிப்பு. வேலை வழங்குவது அரசின் கடமையல்ல. அது சந்தையைப் பொறுத்தது. இதுதான் உயர்கல்வியில் புதிய தாராளவாதக் கொள்கைகள் ஏற்படுத்தி இருக்கும் நிலை. ஆட்சியாளர்களோ தனியார்மயத்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு தீர்வாக இன்னும் தீவிரமான தனியார்மயத்தையே அமல்படுத்துகின்றனர்.

பொறியியல் படித்த அனைவருக்கும் இங்கே வேலை கிடைப்பதில்லை. அதில் ஒரு சிறு கூட்டத்திற்கு மட்டுமே நான்கு இலக்க சம்பளத்தில் வேலை என்பதே எதார்த்தம். அனைவருக்கும் வேலை கொடுப்பது என்பது முதலாளித்துவத்தில் சாத்தியமில்லை. அடிமட்ட கூலிக்கு வேலைசெய்ய தயாராய் உள்ள ரிசர்வ் பட்டாளத்தை அது எப்போதும் வைத்திருக்கிறது. இதன் மூலமே அது தனது நிலையை உறுதிப்படுத்திக் கொள்கிறது. இந்த முதலாளித்துவ அமைப்பை வீழ்த்தாமல் அனைவருக்கும் வேலை என்பது சாத்தியமே இல்லை.

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன