நவம்பர்-7 ரஷ்ய சோசலிச புரட்சிநாள் வாழ்க!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
புதிய ஜனநாயக குடியரசு அமைக்க சபதம் ஏற்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிகளின் கீழ் உழைக்கும் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு இல்லை. உலகம் முழுதும் உள்ள உழைக்கும் மக்கள் தங்களை அடக்கி ஒடுக்கும் நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ ஆட்சியை புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து தங்களின் ஆட்சியை நிறுவுவதன் மூலமே தங்களின் கோரிக்கைகள், விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும் என்பதை நடைமுறையில் நிரூபித்து காட்டிய நாள் நவம்பர்-7.

 

 

ஆம், பசி, பட்டினி, ஏழ்மை, துன்பம், மன அழுத்தம், வேலைவாய்ப்பின்மை, வேலை பறிபோகும் அச்சம், சிறு தொழில் அழிதல், எங்கும் அடிமைத்தனம், ஆணாதிக்கம், பாலியல்-இன-சாதி-மதவெறி, திருட்டு, கொலை கொள்ளை குறித்த அச்சம், விலைவாசி உயர்வு, விளைநிலம் பறிப்பு, உத்திரவாதமற்ற தொழில், கடன்பட்டு போண்டியாதல், நிலம், நீர் காற்று நஞ்சாகி கொடிய நோய்கள், லாபவெறியோடு நாடு பிடிக்கும் ஆக்கிரமிப்பு யுத்தங்கள், மக்கள் அகதியாதல். இதுவே இன்று உலகம் முழுதும் ஆதிக்கவெறிகொண்ட, லாபவெறிகொண்ட நிலபிரபுத்துவ முதலாளித்துவ ஆட்சி முறை தோற்றுவித்துள்ள விளைவுகள்.

இதையெல்லாம் ஒழித்து கட்ட இதற்கு நேர்மாறாக உழைக்கும் மக்கள் நலனுக்காக உருவானதுதான் கம்யூனிச சித்தாந்தம். இதை நடைமுறைப்படுத்தி தோழர் லெனின், ஸ்டாலின் தலைமையில் மக்களைத் திரட்டி ஓர் ஆயுதம் தாங்கிய புரட்சியின் மூலம் 1917ல் ரஷ்யாவில் உழைக்கும் மக்களின் ஆட்சியை நிறுவிய நாளே நவம்பர்-7. புரட்சி தினம்.

இதன் மூலம்தான் அங்கு வறுமை, வேலையில்லாத்திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பஞ்சம், பசி பட்டினி உள்ளிட்ட அனைத்து பிரச்சினைக்கும் தீர்வுகாணப்பட்டது. பாலின சமத்துவம், அரசியலிலிருந்து மதத்தை விலக்கி வைக்கும் மதசார்பற்ற கோட்பாடு கடைபிடிக்கப்பட்டது. உழைக்கும் மக்கள் பிரிவின் அனைத்து ஜனநாயக உரிமைகளும் பாதுகாக்கப்பட்டதோடு உழைப்பு சுரண்டல் ஒழிக்கப்பட்டு ஏழை பணக்காரன் இல்லாத, பாலின ஏற்றத்தாழ்வு இல்லாத, கொலை, கொள்ளை, திருட்டு இல்லாத பொன் உலகம் படைக்கப்பட்டது. அனைத்தும் மக்களின் உடைமையாக மாற்றப்பட்டு உண்மையான மக்கள் அதிகாரம் மலர்ந்தது.

இன்று நமது நாட்டில், இந்துராஷ்டிரத்தை அமைப்பது எனும் பெயரில் ஆர்எஸ்எஸ் – பிஜேபி காவி பாசிச கும்பல் நாம் வாழமுடியாதவாறு நம் துன்ப துயரங்களை மேலும் மேலும் அதிகமாக்கிக்கொண்டிருக்கிறது. மக்களுக்கு இலவசம் அறிவிக்க கூடாது அது மோசமான கலாச்சாரம் என்று கூறிக்கொண்டே உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக நமது நிலம், நீர், கனிம வளம், அலைக்கற்றை, பொதுத்துறை என மக்கள் சொத்துக்கள் அனைத்தையும் தனியார்மயம், தாராளமயம் எனும் பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளின் கைகளுக்கு கைமாற்றிக்கொடுத்து உழைக்கும் மக்களை நிர்க்கதியாக்கியுள்ளது.

இரத்தம் சிந்தி போராடி பெற்ற உரிமைகளை எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக பறிக்கின்றனர். வாழவே முடியாத அளவிற்கு அன்றாடம் தொழிலாளர் சட்ட திருத்தம், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, புதிய கல்வி கொள்கை, கிரிமினல் சட்ட திருத்தம், மின்சார சட்டதிருத்தம் என்று ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் அஸ்திரங்களை நம் நெஞ்சை நோக்கி ஏவிக்கொண்டிருக்கிறது. இரத்தம் கசியும் இந்த வாழ்க்கை குறித்து சிந்திக்காமல் இருக்க அனுதினமும் இந்து மதவெறி நச்சுக்கருத்துக்களைக் கக்கி, அதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தி சமூகத்தையே துர்நாற்றமும், ரத்தக் கவிச்சியும் அடிக்கும் நிலையை இப்பாசிச கும்பல் ஏற்படுத்தி வருகிறது.

ஒரே நாடு, ஒரே உணவு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு எனும் பெயரில் இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை அமைப்பதை இலட்சியமாக கொண்டு கொஞ்சநஞ்ச ஜனநாயகத்தையும் இப்பாசிச கும்பல் குழி தோண்டி புதைத்துவருகிறது. நீதித்துறை, நிர்வாகம், கல்வி நிலையங்கள், ஊடகம் மற்றும் சிபிஐ, என்ஐஏ, அமலாக்கத்துறை முதலிய அரசின் அனைத்து உயர் பொறுப்புகளிலும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களை ரகசியமாக நியமித்து சட்டபூர்வமாகவே காவி பாசிசத்தை அரங்கேற்றிவருகிறது.

இதை எதிர்க்கும் ஜனநாயக சக்திகளை கொடிய ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் தள்ளி அடக்கி ஒடுக்குகிறது. மேலும் சனாதன் சன்ஸ்தா போன்ற சட்டவிரோத அமைப்புகளையும் உருவாக்கி காவி கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்க்கும் கல்புர்க்கி, தபோல்கர், பன்சாரே, கவுரிலங்கேஷ் முதலிய ஜனநாயக அறிவுதுறையினரை நாடுமுழுதும் கொலைசெய்கிறது.

அம்பேத்கரும், பூலேவும், வள்ளலாரும் பெரியாரும் எதிர்த்த பார்ப்பன பயங்கரவாதம்தான் இன்று வீரிய ஒட்டுரகமாக கார்ப்பரேட்டுகளுடன் இணைந்து  காவி-கார்ப்பரேட் பாசிசமாக வளர்ந்து உழைக்கும் மக்களான நம் கழுத்தை நெரிக்கிறது.

இதை  நிலவுகின்ற அரசியல் அமைப்பின் துணைகொண்டு வீழ்த்த முடியும் என்பது பகற்கனவாகவே உள்ளது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தைப் போன்ற மக்களின் வீச்சான போராட்டங்களே காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தவல்ல பேராயுதம். இதிலிருந்து பாடம் கற்று அடுத்தகட்டத்திற்கு புரட்சிகரமாக போராட்டத்தை வளர்த்தெடுத்து காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் பாதையில் முன்னேறிச் சென்றிட உறுதியேற்போம்.

மக்கள் அதிகாரம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – 9790138614

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன