பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 5 பேரை உடனே விடுதலை செய்! மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி!

மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

22 வகையான அரிய கனிம வளங்களை காட்டு வேட்டை என்ற பெயரில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரை வார்த்தனர். இதற்கு எதிராகவும் பாஜகவின் இந்து மதவெறி மற்றும் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை கண்டித்தும் தொடர்ந்து போராடியவர்தான் டெல்லி பல்கலைகழகத்தில் ஆங்கில துறை பேராசிரியராக பணியாற்றிய சாய்பாபா.

இதற்காகவே, பழிவாங்கும் வகையில், மாவோயிஸ்டுகளோடு தொடர்பில் இருப்பதாக பொய் வழக்கில் 2014 ல் கொடிய ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 2017 ல் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவர் வீட்டில் சர்ச் வாரண்ட் என்று நுழைந்து, இவரது கணிணியை போலிசு கைப்பற்றியது, சில நாட்கள் கழித்து அவரிடம் அவரது கடவுசொல்லைக் கேட்டுபெற்றது. பின்னர் 8 மாதம் கழித்து கல்லூரிக்கு காரில் சென்றுகொண்டிருந்தவரை வழிமறித்து கைது செய்து இவரை இந்த வழக்கில் சேர்த்தது உள்ளிட்ட பல விஷயங்களில் எந்த சட்ட விதிகளும் கடைபிடிக்கவில்லை. என்பதே உண்மை.

இவர் 90 சதவீதம் ஊனமானவர். சக்கர நாற்காலி உதவியின்றியோ இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு கூட பிறருடைய உதவியின்றியோ இவரால் அன்றாட வேலைகள் எதையும் செய்யமுடியாதவர். இவருக்கு முறையாக கொரானா தொற்று ஏற்பட்ட போதும் மற்ற நேரத்திலும் முறையாக மருத்துவம் வழங்க கோரியும், படிப்பதற்கு புத்தகம் வழங்க கோரியும், மேலும் 24 மணி நேரமும் சிறையிலேயே தன்னைக் கண்காணிக்க வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமாராவை அகற்றக்கோரியும், தனது மோசமடைந்து வரும் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தனக்கு பிணை வழங்க கோரியும் அல்லது வீட்டுக்காவலில் வைக்க கோரி என பல சட்டபோராட்டம் மற்றும் சிறையிலேயே உண்ணாவிரத போராட்டம் என்று பல போராட்டங்களை மேற்கொண்டுவருகிறார். தனது தாய்மொழியான தெலுங்கில் கூட குடும்ப உறவினர்களுக்கு கடிதம் எழுத சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.

இவரோடு இதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறுபேரில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டு உரிய நேரத்தில் அவருக்கு மருத்துவம் தரப்படாததால் இறந்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி இரு நீதிபதி கொண்ட நாக்பூர் உயர்நீதி மன்ற அமர்வு, பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட 6 பேர் மீது போடப்பட்டிருப்பது பொய்வழக்கு என்று கூறி விடுதலை செய்ய உத்தரவிட்டது. குறிப்பாக அந்த இரு நீதிபதிகள் தங்களது உத்தரவில், ஊபா சட்டத்தில் இவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது தகுதியற்றது; தேசபாதுகாப்பு என்ற பலிபீடத்தில் நீதி பரிபாலன முறைகளை பலிகொடுக்க முடியாது என்று கூறி மற்ற வழக்குகளில் இந்த 5 பேரும் இல்லை என்றால் அவர்களை காலம் தாழ்த்தாமல் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

இது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்று பேராசியர் சாய்பாவின் வழக்கறிஞர் ரத்தோட் குறிப்பிட்டிருந்தார். அனைத்து ஜனநாயக சக்திகளும் இயக்கங்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது குடும்ப உறுப்பினர்கள் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால் அந்த மகிழ்ச்சி சிறிது நேரமே நீடித்தது. உடனடியாக மகாராஷ்டிர அரசு மேல்முறையீடாக உச்சநீதி மன்றத்திற்கு சென்றது. உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பில் மகாராஷ்டிர உயர்நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. அதோடு மகாராஷ்டிர உயர்நீதி மன்றம் முக்கியத்தும் வாய்ந்த இந்த வழக்கில் அதன் பொருண்மைக்குள் செல்லவில்லை. தர்க்க ரீதியிலும் இயந்திரகதியிலும் இந்த வழக்கை மேலோட்டமாக பார்த்துள்ளது என்று விமர்சித்துள்ளது. பல பாலியல் பொறுக்கிகளான இந்துமத வெறியர்களையும், கொலைகாரர்களையும் விடுதலை செய்யும் உச்சநீதி மன்றம் மக்களுக்காக போராடுவோரை பழிவாங்கும் பாஜகவின் நோக்கத்திற்கு சேவை செய்யும் ஒரு அமைப்பாகவே உள்ளது.

பாசிச பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்ததிலிருந்து தன்னை விமர்சிப்பவர்களை பழிவாங்குவது, தனது கார்ப்பரேட் விசுவாசத்தை அறிவுபூர்வமாக அம்பலபடுத்துவோரை சிறையில்தள்ளி சித்தரவதை செய்வது என்பதை செய்துவருகிறது. பீமா கொரேகான் வழக்கில் பல அறிவுத்துறையினர் இணைக்கப்பட்டு கொடும்சிறைகளை சந்தித்து வருகின்றனர். மேலும் சனாதன் சன்ஸ்தா போன்ற தனது மதவெறி அமைப்புகளை ஏவி கொலைசெய்வது வாடிக்கையாக வைத்துள்ளது.

ஒரு புறம் தேசத்தையே கார்ப்பரேட் முதலாளிகளுக்கு விற்றுவிட்டு மறுபுறம் தேசபாதுகாப்பு என்ற பெயரில் அதை விமர்சிப்போரை காவி பாசிசத்தின் அங்கமாக நீதி மன்றங்களைப் பயன்படுத்தி சிறையில் தள்ளுகின்றனர்.

இது போன்ற அநீதிகளுக்கு எதிராக வீதியில் இறங்கி நடத்தும் போராட்டம் மட்டுமே மக்களுக்கான அறிவுத்துறையினரை விடுவிக்க வழிவகுக்கும். ஆகவே, பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்டோரின் விடுதலைக்காக ஜனநாயக சக்திகளும் புரட்சிகர இயக்கங்களும் வீதியில் இறங்கி போராடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
தோழமையுடன்
முத்துக்குமார்,
மாநில செயலாளர்
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு
97901 38614

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன