பாசிச மோடி அரசின் அடுத்தகட்ட இலக்கு நகர்ப்புற நக்சல்களும் – மக்களுமே!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் ‘வளர்ச்சித்’ திட்டங்களுக்கு  ‘நகர்ப்புற நக்சல்கள்’ தடையாக உள்ளனர் என்று மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்கள்  மாநாட்டில் திருவாய் மலர்ந்துள்ளார் பாசிச மோடி. மேலும் அரசின் ஏனைய திட்டங்களுக்குத் தடையாக இருப்பதால், அவர்களின் செயல்பாட்டைத் தடுக்க வேண்டும் என மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

இத்துடன், குஜராத் சர்தார் சரோவர் அனைக்கட்டுமானத் திட்டம் – அதாவது, இந்திய அளவில் கவனம் ஈர்த்த நர்மதா அணைத் திட்டத்தை நிறைவேறுவதற்குத் தடையாக இருந்த சமூக ஆர்வலர் மேதா பட்கரையும் ‘நகர்ப்புற நக்சல்கள்’ வரிசையில் சேர்த்துள்ளார்.

இதற்கு காரணம் தற்போது குஜராத்தில் அமையவிருக்கும் கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தாவின் சிலிகான் தொழிற்சாலைக்கு மக்களின் வரிப் பணத்திலிருந்து ரூ. 80,000 கோடி சலுகை அளித்துள்ளது மோடி அரசு. எனவே நர்மதா அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடியது போல இதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கக்கூடும் என்றஞ்சி முன்னெச்சரிக்கையாக மேதா பட்கரையும் நகர்ப்புற நக்சலாகச் சித்தரிக்கிறது.

குஜராத்தில் அமையவிருக்கும் கொலைகார ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தாவின் சிலிகான் தொழிற்சாலைக்கு மக்களின் வரிப் பணத்திலிருந்து ரூ. 80,000 கோடி சலுகை அளித்துள்ளது மோடி அரசு

மேலும், இவரைப் போன்றவர்கள் பல்வேறு நிறுவனங்கள் அரசியல் கட்சிகள் மூலம் நிதியையும், நீதித்துறை, உலகவங்கி போன்றவர்களின் ஆதரவையும் பெற்றுள்ளனர். எனவே சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பெயரில் வளர்ச்சித் திட்டங்களைத் தடுத்து வருவதாகக் கூறி, இவற்றுடன் எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல், இவர்களின் ‘சதியை’ முறியடிக்க வேண்டும் என மோடி கதையளந்துள்ளனர்.

இதற்கு முன்பு கம்யூனிசத்தை, அம்பேத்கரியத்தை, பெரியாரியத்தை கொள்கையாகக் கொண்டுள்ள அறிவுத்துறையினரை மட்டுமே நகர்ப்புற நக்சல்கள்களாகச் சித்தரித்தது. இன்று ஜனநாயக சக்திகளையும், முற்போக்கு சக்திகளையும், சமூக ஆர்வலர்கள் – சமூக செயல்பாட்டாளர்களையும் அந்த வரிசையில் சேர்த்துவிட்டார் பாசிச மோடி. இந்தச் சித்தரிப்பு 2019 தேர்தலுக்கு முன்பே தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நகர்ப்புற நக்சல்களின் செயல்பாட்டிற்கு பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நிதியை வாரி வழங்குவதாகவும், நீதித்துறையும் உலக வங்கியும் இதற்கு ஆதரவு தருவதாகவும் மோடி கூறுவது உண்மையா என்பது கோயபல்சு வாரிசுகளுக்குத்தான் வெளிச்சம்.

அதானி, அம்பானி, சிவ்நாடார், டாடா, பிர்லா போன்ற கார்ப்பரேட்டுகள் 2014 மற்றும் 2019 தேர்தலின் போது கொடுக்கப்பட்ட நிதியின் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வை பணம் பலம் படைத்த கட்சியாக உருவாக்கி வைத்துள்ளதை நாடே அறியும்.

 

இதற்கு கைமாறாகத்தான் வரிச்சலுகைகளையும், வங்கிக் கடன்கள் தள்ளுபடிகளையும், அடிமாட்டு விலைக்கு பொதுத்துறை நிறுவனங்களையும் வாரி வழங்கியுள்ளது. தற்போதுகூட, மாநில சுற்றுச்சூழல் அமைச்சர்களிடம் பழைய வாகன உடைப்புக் கொள்கையை விரைவுபடுத்தும்படி வலியுறுத்தி-யுள்ளார். இதன்மூலம் வாகன உற்பத்தியாளர்களின் வளர்ச்சிக்கும், இலாபத்-திற்கும் வழிவகுத்துக் கொடுத்துள்ளார் என்பதை அறிய முடியும்.

இந்த வாகனப் பெருக்கம் சுற்றுச் சூழலைப் பாதிக்கும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்பினால், அவர்கள் அனைவரும் நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தி ஒன்றிய தலைமை அமைச்சரைக் கொல்ல சதி செய்யத் திட்டமிட்டதாகவும் தேசத்துரோகிகள் என்றும் வழக்கைப் பதிவு செய்து அதற்கான ‘ஆதாரங்களை’ தயாரித்து தடா, பொடா, ஊபா போன்ற கொடிய சட்டங்களின் கீழ் கைது செய்து பிணையில் வராத வகையில் நிரந்தரமாக சிறையில் அடைத்து விடுவார்கள். ஆனால், கோடிக்கணக்கில் தேசிய சொத்தையும், வருவாயையும் கொள்ளையடித்துவிட்டு நாட்டைவிட்டு ஓடியவர்களைப் பாதுகாப்பார்கள்.

இது ஒருபுறமிருக்க, தற்போது ‘நகர்ப்புற நக்சல்களின்’ நடவடிக்கையை தடை செய்ய வலியுறுத்துவதற்கு காரணம் 2019 தேர்தலுக்கு முன்பாக லோக்நிதி சி.பி.டி.எஸ் – ஏ.பி.பி (CDBS – ABP) என்ற நிறுவனம் வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் பா.ஜ.க.வும், மோடியும் கணிசமான அளவுக்கு செல்வாக்கை இழந்துள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகளுக்கான மக்கள் ஆதரவைக் குறைப்பதற்காக இரக்கமற்ற, கருணையற்ற முயற்சிகளை மேற்கொண்டது. இதனடிப்படையில் கைதுகள், வெடிகுண்டுத் தாக்குதல்கள், படுகொலைகள், அடித்துக் கொல்வது, மதக் கலவரங்களைத் தூண்டுவது எனத் திட்டமிட்டு நடத்தியது.

இதன் துவக்கமாக, எதிர்ப்புகள் வரும் என்று தெரிந்தே பீமா கோரேகான் வழக்கில் வரவரராவ், சுதா பரத்வாஜ், ஆனத் தெல்தும்டே, கெளதம் நவ்லகா, அருண் ஃபெரைரா போன்றவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், பீமா கோரேகான் நிகழ்வில் கலந்துகொண்ட தலித் மக்கள் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இதனை நக்சல்கள் மீதான தாக்குதல் என்று கூறி மறைத்து விட்டது. இந்தப் பரிணாம வளர்ச்சியில்தான் எதிர்வரும் 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறாமல் தடுக்க, இவர்களின் எசமானர்களான கார்ப்பரேட்டுகள் அள்ளிக்கொடுத்த மிதமிஞ்சிய பணத்தைக் கொண்டு குதிரை பேரம் நடத்துவதையும், அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கிப் பணியவைத்து மக்களின் செல்வாக்கை இழக்கவும் செய்கிறது.

மேலும் காவிகளின் எளிய இலக்கான இசுலாமிய அமைப்பினரை அடமுறைக்கு உட்படுத்தும் வகையில் தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றின் மூலம் அவர்களின் அலுவலகங்களிலும், வீடுகளிலும் புகுந்து அச்சுறுத்தி வருகிறது.

நகர்ப்புற நக்சல்கள் என்ற நடவடிக்கையின் அடுத்தகட்ட நகர்வு கடவுள் மறுப்பையும், சாதி, மத, மறுப்பையும் கொண்ட ஜனநாயக சக்திகளின் மீது இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை

அந்த வரிசையில் தேர்தல் முறைக்கு உட்பட்ட எஸ்.டி.பி.ஐ-யையும் (SDPI), பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா-வையும் (PFI) தனது பழிவாங்கும் நடவடிக்கைக்கு உட்படுத்தி வருகிறது. இது மதச் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல நகர்ப்புற நக்சல்களுக்கும் பொருந்தும் என்பதை மாநில சுற்றுச் சூழல் அமைச்சர்களின் கூட்டத்தில் பாசிச மோடி பேசியுள்ளதை நினைவில் கொள்ளவும்.

நகர்ப்புற நக்சல்கள் என்ற நடவடிக்கையின் அடுத்தகட்ட நகர்வு கடவுள் மறுப்பையும், சாதி, மத, மறுப்பையும் கொண்ட ஜனநாயக சக்திகளின் மீது இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஏனெனில், பீமாகோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டிற்கு போலிசு துறையின் தேடுதல் வேட்டையை மேற்கொண்டபோது, “உங்கள் வீட்டில் பூலே, அம்பேத்கர் படம் உள்ளது. சாமிபடங்கள் இல்லையே; உங்கள் நெற்றியில் குங்குமம் (பொட்டு) இல்லையே” போன்ற கேள்விகளை எழுப்பி அடுத்த நகர்வு உங்களுக்குத் தான் என்பதை அச்சுறுத்தல் மூலம் நினைவூட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவெனில், காவி – கார்ப்பரேட்டுகளை எதிர்த்தால் கல்புர்கி, பன்சாரே, தபோல்கர், கவுரி லங்கேஷ், உமர் மாலிக் போன்றவர்களைப் போல காவிகளின் நிழல் இராணுவங்களால் கொல்லப்படலாம் அல்லது நகர்ப்புற நக்சல் என்று சொல்லி பிணையில் வெளிவர முடியாதபடி வழக்குகளைச் சோடித்து கைது செய்து சிறையில் அடைக்கப்படலாம்.

காவி-கார்ப்பரேட் பாசிசத்தின் இந்தப் பரிணாம வளர்ச்சியைக் கண்டு அஞ்சி ஒதுக்குவதா? அல்லது பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டி மோதி வீழ்த்துவதா என்பதை முடிவு செய்யும் தருணம் இது.

மோகன்
30.09.2022

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன