பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மீதான தடை – ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் காவி பாசிச நடவடிக்கையின் அடுத்தக் கட்ட நகர்வு

பாப்புலர் பிரண்ட ஆப் இந்தியா(PFI)  மற்றும் அதோடு சேர்ந்த எட்டு அமைப்புகளை ஊபா சட்டத்தின் கீழ் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்படுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒருவாரமாக பி.எப்.ஐ,  எஸ்.டி.பி.ஐ அலுவலங்களில் நடந்து வரும் சோதனைகளை அடுத்து இத்தடையை அறித்துள்ளது.

கடந்த வாரம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ )மற்றும்  அமலாக்கத் துறை பத்து மாநிலங்களில் உள்ள பி.எப்.ஐ,  எஸ்.டி.பி.ஐ அலுவலங்கள் உள்ளிட்ட 93 இடங்களில் சோதனையை நடத்தியது. இச்சோதனையில் 106 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 45 பேரை தேசிய புலனாய்வு ஆணையம் விசாரணைக்காக எடுத்துள்ளது.

கர்நாடகா, மகாராடிட்ரா உள்ளிட்ட பி.ஜே.பி ஆளுகின்ற மாநிலங்களில் திங்களன்று நடந்த இரண்டாவது கட்ட சோதனையில் 270 க்கும் மேற்பட்டவர்கள் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சோதனைகளில் பி.எப்.ஐ அமைப்பு தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக என்.ஐ.ஏ தெரிவித்திருந்தது.

தற்போது ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “குற்றச் செயல்கள் மற்றும் கொடூரமான கொலைகளின் மூலம்  பொது அமைதியைக் குலைத்து, பொது மக்கள் மனதில் பயத்தை உருவாக்கும் நோக்கில் பி.எப்.ஐ உறுப்பினர்கள் செயல்பட்டுள்ளனர்” என்றும் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் நபர்கள் கொலைகளில் பி.எப்.ஐ சம்பந்தப்பட்டுருப்பதாகவும் கூறியுள்ளது.

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு உள்ளூர்/வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டியது, இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது, அரசின் திட்டங்களை பற்றி மக்களிடம் தவறாக விளக்கி அவர்களிடம் அரசுக்கு எதிரான மனநிலையை உருவாக்குவது, வெளிநாடு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு போன்ற குற்றச்சாட்டுகளும் பி.எப்.ஐ மீது வைக்கப்பட்டுள்ளது.

22-09-22 அன்று என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள குறிப்பில் “பி.எப்.ஐ மீது என்.ஐ.ஏ பதிவு செய்துள்ள ஐந்து வழக்குகள் அதையொட்டி கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறியிருந்தது. ஆனால் இவ்வழக்குகள் மீது நீதிமன்ற விவாதங்கள் கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை. தற்போது பி.எப்.ஐ அமைப்பு ஊபா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டிருப்பதால் அதன் மீது வைக்கப்பட்டுள்ளக் குற்றசாட்டுகளைப்  பொய் என நிருபிப்பது பி.எப்.ஐ ன் கடமையாகியுள்ளது.

ஊபா போன்ற சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகின்ற நபர்/அமைப்பு மீது மோடியின் போலீஸ் அதிகாரிகள் ஜோடிக்கின்ற குற்றங்களுக்கு(எழுதுகின்ற திரைக்கதைகளுக்கு) எல்லையே இருப்பதில்லை. இத்திரைக்கதைகள் பெரும்பான்மையாக அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவோ அல்லது ஆளும் கட்சியினரின் நோக்கத்திற்கு தகுந்தாற் போலவே எழுதப்படும்.

 என்.ஐ.ஏ – உள்துறை அமைச்சகம் முன்வைக்கும் காரணங்களுக்காக பி.எப்.ஐ க்கு தடையென்றால், கடந்த தொன்னூறு ஆண்டுகளாக நூற்றுக்கனக்கான கலவரங்கள், பல குண்டுவெடிப்புகள், ஆயிரக்கணக்கான அப்பாவி முஸ்லீம்கள்/தலித்துகள் கொலை செய்தது, ஆயுதப் பயிற்ச்சி வகுப்புகள், ஏராளமான வெளிநாட்டு நிதி என செயல்பட்டுவரும் ஆர் எஸ் எஸ் மற்றும் துணை அமைப்புகளைத்தான் முதலில் தடைசெய்திருக்க வேண்டும்.

சி.ஏ.ஏ மற்றும் 2020 ல் டெல்லியில் நடந்த கலவரத்திற்கு பிறகே உள்துறை அமைச்சகத்தின் ரேடார் பி.எப்.ஐ மீது விழ ஆரம்பித்தது. கடந்த 2019-2020ல் இந்தியா முழுவதும் நடந்த சி.ஏ.ஏ-என்.ஆர்.சி போராட்டங்களுக்குப் பின்னால் பி.எப்.ஐ இருப்பதாக மோடி அரசு குற்றஞ்சாட்டியது. முஸ்லீம் சமூகத்தினர், மாணவர் இயக்கங்கள் மற்றும் ஜனநாயக-புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்களினால் சி.ஏ.ஏ-என்.ஆர்.சி ஐ அமல்படுத்துவதை தள்ளிவைக்க வேண்டிய நிலைக்கு மோடி அரசு தள்ளப்பட்டது. இதையொட்டி பிஜேபி ஆளுகின்ற உ.பி, கர்நாடகா, குஜராத், மகாராடிட்ரா மாநில அரசுகள் பி.எப்.ஐ ஐ தடை செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகத்திடம் கோரியிருந்தன.

தற்போது நடந்துள்ள கைதுகளில் மூன்றில் ஒரு பங்கு கைதுகள் கார்நாடகா மாநிலத்தில் மட்டுமே நடந்துள்ளது. இன்னும் ஒரு வருடத்திற்குள் தேர்தல் நடக்கவுள்ள கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் பிரச்சனை, மதமாற்றத் தடைச் சட்டம், பள்ளி பாடத்திட்டம் காவிமயம், புல்புல்-சாவர்க்கர் என இந்து-முஸ்லீம் மத முனைவாக்கத்திற்கான வேலைகளை ஆளுகின்ற பிஜேபி அரசு செய்து வருகிறது. இதற்கெதிரானப் போராட்டங்களுக்குப் பின்னால் பி.எப்.ஐ  இருப்பதாக கர்நாடக பிஜேபி தலைமை கூறியதை இக்கைதுகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் பி.எப்.ஐ மீதான நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஆர் எஸ் எஸ்-பிஜேபியின் காவி பாசிசத் திட்டம் இருப்பதை நாம் பார்க்க வேண்டும்.

ஒன்று,  2024 நாடாளுமன்றத் தேர்த்லுக்கு முன்பாக சி.ஏ.ஏ-என்.ஆர்.சி ஐ அமல்படுத்துவது. இதுபற்றி உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஜேபி ஆளுகின்ற மாநில முதல்வர்கள், பிஜேபி தலைவர்கள் தொடர்ச்சியாகப் பேசிவருகின்றனர். இக்கைது நடவடிக்கைகளின் மூலம் முஸ்லீம் சமூகத்தினரிடமிருந் வரக்கூடிய எதிர்ப்பை மட்டுப்படுத்த முடியும்.

இரண்டாவது,  முற்போக்கு ஜனநாயகச் சக்திகளை ஒடுக்குவது. என்.ஐ.ஏ தனது குற்றப்பத்திரிக்கையில் மோடி அரசை எதிர்த்து நடந்த பல போராட்டங்களை பி.எப்.ஐ உடன் தொடர்புபடுத்தி திரைக்கதை எழுதி நீதிமன்றத்தில் சமர்பிக்கும். இதில் முற்போக்கு-ஜனநாய-புரட்சிகர சக்திகளையும் இணைத்து பெரிய அளவிலான கைது மற்றும் ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட வாய்ப்புள்ளது. பீமாகொரேகான் கைதுகள், டெல்லி கலவரக் கைதுகளும் இவ்வாறே நடந்தன.

எல்லா முனைகளிலும் தோற்று, மக்களின் வெறுப்பையும், கோபத்தையும் மென்மேலும் ஈட்டி வரும் மோடி அரசு, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மட்டுமில்லை, யார் யாரெல்லாம் கார்ப்பரேட் கொள்ளையையும், காவி பாசிசத் திட்டத்தையும், பாசிச நடவடிக்கைகளையும் எதிர்க்கின்றார்களோ அவர்களை, பொய் வழக்குகளின் மூலம் சிறை வைப்பது, அமைப்பாகத் திரண்டு போராடினால் அந்த அமைப்புகளை தடை செய்வது என்பதன் மூலம் மக்கள் போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் நீர்த்து போகச் செய்ய முடியும் என மனப்பால் குடிக்கிறது. அது ஒரு போதும் மக்கள் முன்னால் எடுபட போவதில்லை.

– அழகு

தொடரும்…

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன