பரந்தூர் விமான நிலையம் – தமிழக மக்கள் ஏன் எதிர்க்க வேண்டும்?

“இந்த விமான நிலையம் பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதார பிரச்சினை, நிலப்பிரச்சினை, ஏரி பிரச்சினை என்பதையும் தாண்டி இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை சுரண்டுவதற்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கு உழைக்கும் மக்கள் பலியிடப்படுவதை தீவிரப்படுத்தவுமே, கார்ப்பரேட்களின் கைப்பாவையான ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து கொண்டுவருகின்றன என்பதை உணர வேண்டியுள்ளது.”.

சென்னையில் இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது முதல், பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் இவ்விமான நிலையம் அமைந்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், தாங்கள் இக்கிராமங்களிலிருந்து வெளியேற்றப்படுவோம் எனவும் கூறி இத்திட்டத்தை எதிர்த்து பல நாட்களாகப் போராடி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், “பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத் திட்டத்தை செயல்படுத்துவது என்பது நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கானப் படிக்கட்டு. தமிழ்நாட்டை  ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உருவாக்கும் உயர்ந்த குறிக்கோளை எட்டுவதற்கான பயணத்தில் இது மற்றொரு மைல் கல்லாகும்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

தமிழக முதல்வரின் அறிக்கையை வழிமொழியும் விதமாக இவ்விமான நிலையம் அமைப்பதைப் பற்றி பல வாதங்கள் வைக்கப்படுகிறது. அதில் குறிப்பாக தமிழகத்தின் தொழில்வளர்ச்சிக்கு தற்போது இருக்கும் ஒரு விமான நிலையம் மட்டும் போதாது. கூடுதலாக ஒரு விமான நிலையம் இருந்தால் தான் விமான போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும்,

விமான நிலையம் அமையப் போகும் கிராமங்களை சுற்றி வேலை வாய்ப்பு பெருகும். மாநிலத்தின் தொழிற்வளர்ச்சி பெருகும், இதனால் நாட்டின் முதலீடு பெருகும் எனவும் நிலம் கையகப்படுத்துவதற்காக பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு வேறு இடங்களை ஒதுக்குவதாகவும், நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட மூன்று மடங்கு விலை அதிகமாக தருகிறோம் என பல வாதங்களை ஆளும் தரப்பில் முன்வைக்கிறார்கள்.

தமிழகத்தின் முதல்வர் இவ்விமானநிலையம் அமைந்தால் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு படிக்கட்டு என்கிறார். ஆனால் பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்களுக்கோ இத்திட்டம்  அவர்களின் வாழ்வில் விழுந்த பாறாங்கல்லாக இருக்கிறது.

பரந்தூரில் பேருந்து நிலையம் இல்லாதிருந்து ஒரு வேளை அதை தமிழக அரசு அமைக்க போவதாக முன்வந்தால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் பரந்தூர் விமான நிலையத்தால் இப்பகுதி மக்களுக்கு ஒரு சல்லி காசு பிரயோஜனமில்லை. அத்துடன் இதற்கு அவர்கள் கொடுக்கும் விலையும் தமிழக உழைக்கும் மக்களாகிய நாம் கொடுக்கும் விலையும் மிகப் பெரியது. 

முக்கியமாக 4,791 ஏக்கர் நிலம் அதில், 2605 ஏக்கர்கள் நஞ்சை நிலம் மற்றும் இக்கிராமங்களை சுற்றியுள்ள ஏரிகள் இவ்விமான நிலையத்தால் காணமால் போகும். அதே சமயம் இப்பிரச்சனையை நிலம் பறிபோவதற்கு எதிரான விவசாயிகளின் கோபம் என்று மட்டும் சுருக்கி பார்க்காமல் இத்திட்டம் ஒட்டுமொத்தமாக உழைக்கும் மக்களுக்கு எதிரானது என்பதையும் நாம் சேர்த்து பார்க்க வேண்டும்

இந்த விமான நிலையத் திட்டம் என்பது பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருளுற்பத்திக்காகவும் அந்நிறுவனங்களின் இலாபத்திற்காகவும் உருவாக்கப்படுகிறது என்பதைப் புரிந்து கொண்டால்தான் இவ்விமான நிலையம் அமைக்க அரசு ஏன் இவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.

 

 

கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 15 அன்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சகமும் முதலாளிகள் கூட்டமைப்பான பிக்கியும் (FICCI) இணைந்து இந்திய விமான போக்குவரத்து துறைக்கான “விஷன் 20240“ என்ற நீண்ட கால தொலை நோக்கு திட்டத்தை உருவாக்கியிருக்கின்றனர்.  

2018 ஆம் ஆண்டில் இந்தியாவில் விமானப் போக்குவரத்து மூலம் 3.4 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளதாகவும். இச் சரக்குகள் 2040 ஆண்டில் 1.7 கோடி டன்களாக உயரும் என விஷன் 2040 திட்டம் மதிப்பிட்டிருக்கிறது. உலக வங்கியின் படி 2018 ஆண்டில் இந்தியா சரக்குகளை கையாளும் மதிப்பீட்டில் (world logistics index) 44வது இடத்தில் உள்ளது. இதை 2040 க்குள் முதல் பத்து இடங்களுக்குள் உயர்த்த வேண்டும் என கூறுகிறது இந்த விஷன் 2040 திட்டம்.

விமான நிலையங்களில் சரக்குகளை ஏற்றுமதி, இறக்குமதி செய்வது என்பதை சாதாரண உழைக்கும் மக்கள் செய்யப் போவதில்லை. இந்தியாவிலிருக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் முதலாளித்துவ நிறுவனங்களும் இந்தியாவில் சரக்குகளை உற்பத்தி செய்வதற்காகவும், உற்பத்தி செய்த சரக்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காகவும் பயன்படுத்துகின்றன.

விமான நிலையம் என்பது முதலாளித்துவ  விரைவு பொருளுற்பத்திக்கும்,  அந்த உற்பத்தி முறை உருவாக்கும் சரக்குகளை விரைவாக கையாளுவதற்குமான ஒரு முனையம். அச்சரக்குகளை எவ்வித இடர்ப்பாடுகள் இல்லாமல் கொண்டு சென்று தங்களுடைய முதலாளித்துவ பொருளுற்பத்தியை பெருக்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் இந்திய விமான துறை அமைச்சகத்தின் “விஷன் 2040” திட்டம்.

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், இச்சரக்குகளை இந்தியாவிலிருக்கும் உழைக்கும் மக்களின் உழைப்பு சக்தியை சுரண்டி மலிவான கூலியில் உற்பத்தி செய்து தங்களது இலாபத்தை பெருக்கி கொள்கின்றன. அவர்களது இலாபம் மேலும் கொழிக்க, முதலாளித்துவ பொருளுற்பத்தி சரக்குகள் தங்கு தடையின்றி உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடுத்து செல்லத்தான் இந்த பரந்தூர் விமான நிலையம்!

 

 

தனியார் மயம், தாராளமயம், உலக மயம் வந்த பிறகு இந்தியாவின் கூலித்தொழிலாளர்கள் மலிவு கூலியில், வெளிநாடுகளில், தொழிற்சாலையிலிருந்து தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள் வரை வேலை பார்த்து வருவது அதிகமாகி வருகிறது. 1996ம் ஆண்டு நாட்டின் மொத்த விமான பயணிகளின் எண்ணிக்கை 2.4 கோடியிலிருந்து 2018ம் ஆண்டு 18.4 கோடியாக உயர்ந்திருக்கிறது. விஷன் 2040 திட்டம் 2040 ஆம் ஆண்டில் நாட்டின் விமான பயணிகளின் எண்ணிக்கை  112. 4 கோடியாக உயரும் (30.3 கோடி வெளிநாட்டு விமான பயணிகள்) என மதிப்பிட்டிருக்கிறது இந்த விஷன் 2040 திட்டம். இதில் சுற்றுலா பயணிகளை தவிர்த்து பெரும்பான்மையான மக்கள், மலிவு கூலிக்காக தங்கள் சொந்த ஊரை விட்டு வெளிநாடுகளில் வேலை பார்ப்பதற்காக பயணம் செய்கின்றனர். 

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வாரத்திற்கு, 62,500 விமான பயணிகள் சென்றுவரும் வகையில் அமீரக விமானங்கள் இந்தியாவுக்கு இயக்கப்படுகிறது. இந்த அளவு போதாது என சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து ஆணையம்,  இந்திய அரசுக்கு அளித்த வேண்டுகோளில், இந்தியாவின் அமிர்தசரஸ், திருச்சி, கோவை, கண்ணூர், கோவா, புவனேஸ்வர், கவுகாத்தி மற்றும் புனே போன்ற எட்டு விமான நிலையங்களிலிருந்து கூடுதலாக 50000 விமான பயணிகள் சென்று வரும் வகையில் அமீரக விமானங்களை இயக்க அனுமதி கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலை நாடுகளில் உள்ள தொழிலாளர்களின் கூலி அதிகமாக இருப்பதால், இந்தியா போன்ற நாடுகளில் உள்ள ஒயிட் காலர், புளு காலர் தொழிலாளர்களை தங்களது நாட்டில்  குறைந்த கூலியில் வேலைக்கு அமர்த்திக் கொண்டு, அவர்களை சுரண்டி பன்னாட்டு நிறுவனங்கள் இலாபத்தை  பெருக்கிக் கொள்கிறது என்பது அனைவரும் அறிந்தது. இந்த சுரண்டலை மேலும் தீவிரப்படுத்த, அதிக இலாபம் ஈட்ட இந்தியா போன்ற நாடுகளில் உள்ள தொழிலாளர்கள் அந்நிறுவனங்களுக்கு தேவைப்படுகிறது. இதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுக்க  நாட்டில் தற்போது இருக்கும் 99 இந்திய விமான நிலையங்களை 2040 க்குள் 160 முதல் 180 வரை உயர்த்த திட்டமிட்டு இருக்கிறது இந்த விஷன் 2040 திட்டம். இதன் ஒரு பகுதியாக  நாட்டின் 33 நகரத்தில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் எனவும்  விஷன் 2040 திட்டம் மதிப்பிட்டிருக்கிறது.

மைய அரசு,  மேலை நாடுகளின் முதலாளித்துவ பொருளுற்பத்திக்காக, குறைந்த கூலி பெறும் இந்திய மக்களை சுரண்டுவதற்கு இத்திட்டத்தை செயல்படுத்துகிறது. இதற்குதான் இந்த பரந்தூர் விமான நிலையம்!

 

 

இந்த விமான நிலையம் பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்களின் வாழ்வாதார பிரச்சினை, நிலப்பிரச்சினை, ஏரி பிரச்சினை என்பதையும் தாண்டி இந்தியத் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை சுரண்டுவதற்காகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்கு உழைக்கும் மக்கள் பலியிடப்படுவதை தீவிரப்படுத்தவுமே, கார்ப்பரேட்களின் கைப்பாவையான ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து கொண்டுவருகின்றன என்பதை உணர வேண்டியுள்ளது.

இதற்கு அத்தாட்சியாக, தில்லியில் அண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.இ.ஒக்கள் கலந்துக் கொண்ட அசோசெம் நிகழ்ச்சியில் பேசிய மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பல விபரங்களை தெரிவித்திருக்கிறார்.

வரும் ஐந்தாண்டுகளில் இந்தியாவிலுள்ள விமான நிறுவனங்களிடம் 1200 விமானங்கள் இருக்கும். வரும் பத்தாண்டுகளில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 40 கோடியாக உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த தேவைகளை நிறைவு செய்யும் வகையில் சிறிய ரக விமான நிலையங்கள் உட்பட 220 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை இலாபத்திற்காக பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ஒரு சரக்கு கேந்திரமாக மாற்றும் முயற்சியை தடுத்து நிறுத்தவும், தமிழக வளத்தை கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்தவும் பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு தோள் கொடுப்போம்! இவ்விமான நிலையத் திட்டத்தை முறியடிக்க பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களை ‘மக்கள் களமாக ‘மாற்றுவோம்!

  • தாமிரபரணி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன