மா.பெருமாள் கவுண்டர் எலும்பு முறிவு சட்ட விரோத மருத்துவமனையை இழுத்து மூடு!

பென்னாகரம் வட்டம் நல்லாம்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மா.பெருமாள் கவுண்டர் எலும்பு முறிவு மருத்துவமனை என்ற போலி மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் திருப்பதி என்ற 29 வயது இளைஞரின் கால் அகற்றம் !
சட்ட விரோத மருத்துவமனையை இழுத்து மூடு!
போலி மருத்துவர்களை கைது செய்!

பென்னாகரம் வட்டாட்சியர் அலுலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்!

மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்து தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாதிக்கப்பட்ட இளைஞர் திருப்பதியின் உறவினர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

கடந்த 11.6.2022 அன்று பென்னாகரம் வட்டம் சின்னபள்ளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்ற 29 வயது இளைஞர், தன்னுடைய நிலத்தில் நீர் பாய்ச்சி விட்டு வீட்டிற்கு வரும்போது வயலில் கால் இடறி தவறி விழுந்து விட்டார். இதில் அவருக்கு காலில் சதை பிடிப்பு ஏற்பட்டது. இந்த சதை பிடிப்பிற்காக நல்லாம்பட்டியில் உள்ள மா.பெருமாள் கவுண்டர் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு கட்டுபோட சென்றுள்ளனர். அப்போது, அவர் காலில் மூங்கில் தப்பைகளை வைத்து மிக இறுக்கமாக கட்டு போட்டுள்ளனர். இதனால் காலுக்கு செல்ல வேண்டிய இரத்த ஓட்டம் தடைபட்டு திருப்பதியின் கால் நான்கு நாட்களில் அழுகி விட்டது. காலை அகற்றினால் தான் உயிரை காப்பாற்ற முடியும் என்று கோவை கங்கா மருத்துவமனை மருத்துவர் கூறியதை தொடர்ந்து கால் அகற்றப்பட்டது.

நல்லாம்பட்டி மருத்துவமனை பாரம்பரிய மருத்துவம் என்கிற பெயரில் அரசு அனுமதி இல்லாமல் செயல்படுகிற சட்டவிரோத மருத்துவமனை ஆகும். மேற்கண்ட மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க முறையாக மருத்துவம் படித்தவர்களையோ, எலும்பு முறிவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவம் படித்தவர்களோ நியமிக்காமல் பத்தாம் வகுப்பு கூட படிக்காத இளைஞர்களை வைத்துக்கொண்டு மருத்துவம் பார்க்கின்றனர். மருத்துவம் தொடர்பான, எந்த அறிவும் இல்லாமல் தவறாக கட்டுப்போட்டு காலை இழப்பதற்கான காரணமாக இருந்துள்ளது அந்த போலி மருத்துவமனை. மேலும், இங்கு படிக்காத நபர்கள் தான் ஆங்கில மருந்துகளும், மாத்திரைகளும்கூட சரளமாக கொடுக்கின்றனர். மா.பெருமாள் கவுண்டர் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் திருப்பதியின் கால் எடுக்கப்பட்டு அந்த இளைஞர் இன்று முழு ஊனமாக்கப்பட்டுள்ளார். மருத்துவ அறிவு இல்லாத பாமர மக்களும் தினந்தோறும், இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். இது போன்ற தவறான கட்டு கட்டும் முறையினால் உடல் உறுப்பு இழப்புகள் தொடர்ச்சியாக இந்த மருத்துவ மனையில் நடந்து வருகிறது.

இது குறித்து புகார் கொடுத்தாலும் அரசு தரப்பில் விசாரித்து மேற்கண்ட மருத்துவமனையின் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. சேவை என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை இன்று பல கோடிகளை சுருட்டும் வசூல் ராஜாவாக சீரழிந்துள்ளது. இந்த மருத்துவமனையின் நிர்வாகி கதிர்வேல் என்பவர் தன்னுடைய அசுர பணபலத்தை கொண்டு யார் வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிற வகையில் அனைவரையும் பணத்தைக் காட்டி அடக்கி வைக்கின்றார்.

தவறான சிகிச்சை அளித்து திருப்பதியை ஊனம் ஏற்படுத்திய நல்லாம்பட்டியில் செயல்படும் மா. பெருமாள் கவுண்டர் சட்டவிரோத மருத்துவமனையை அரசு உடனடியாக இழுத்து மூட வேண்டும். கதிர்வேல் உள்ளிட்ட போலி மருத்துவர்களை கைது செய்ய வேண்டும். கால் இழந்த இளைஞர் திருப்பதிக்கு அரசு தலையிட்டு உரிய நட்டஈடு பெற்று தர வேண்டும். என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, நேற்று 27.9.2022 காலை 11 மணிக்கு பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார செயலாளர் தோழர். சிவா அவர்கள் தலைமை தாங்கினார். பென்னாகரம் வழக்கறிஞர், தோழர். மாதையன், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பென்னாகரம் தொகுதி செயலாளர் தோழர். கருப்பண்ணன், திராவிடர் விடுதலை கழகம், தர்மபுரி மாவட்ட செயலாளர்.தோழர். சந்தோஷ், மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல செயலாளர் தோழர்.ராஜா, மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர் தோழர் கோபிநாத், ஆகியோர் கண்டன உரையாற்றினார். இறுதியாக மக்கள் அதிகாரம் தோழர். சத்தியநாதன் வட்டாரக்குழு உறுப்பினர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

                 

 

             

 

தகவல்:
தோழர்.சிவா
வட்டார செயலாளர்
மக்கள் அதிகாரம்
பென்னாகரம்
9790138614.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன