அன்று பாபர் மசூதி இன்று ஞானவாபி – வழிபாட்டுத் தலங்களை மதவெறியைத் தூண்டப் பயன்படுத்தும் காவி பாசிஸ்டுகள்

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரி தில்லியைச் சேர்ந்த 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மசூதிக்குள் ஆய்வு நடத்தி வீடியோ பதிவு செய்ய மாவட்ட நீதிமன்றம் ஒரு குழு அமைத்தது. அந்தக் குழு ஆய்வு செய்தபொழுது மசூதியின் நுழைவாயிலில் அமைந்துள்ள நீர் தேக்கும் தொட்டியில் சிவலிங்கம் இருப்பதாக தெரிவித்ததால் பெரும் சர்ச்சை எழுந்தது..

தற்பொழுது வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுளை வருடத்திற்கு ஒருமுறை பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர். எனினும் தினம் வழிபட அனுமதிக்க வேண்டும் என்பது வழக்குத்தொடுத்த 5 பெண்களின் கோரிக்கை எனில் வெளிப்புற சுவரை மட்டும்தானே ஆய்வு நடத்தியிருக்க வேண்டும். அதனைவிடுத்து இந்த வழக்குக்கு சம்மந்தம் இல்லாத நுழைவாயில் குளத்தை ஆய்வு செய்வது உள்நோக்கம் கொண்டது.

 

 

இதில் வேடிக்கை என்னவென்றால், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991 படி ஆகஸ்ட் 15, 1947 அன்று வழிபாட்டுத் தலங்கள் (இந்து, முஸ்லிம், கிருஸ்துவம், புத்தம், சைனம்) எப்படி இருந்ததோ, அப்படியே தொடர வேண்டும் எனக் கூறுகிறது. அதேபோல் சட்டத்தின் பிரிவு 3 வழிபாட்டுத் தலங்களை மாற்றுவதைத் தடுக்கிறது. மேலும் இது பாபர் மசூதி வழக்குக்கு பொருந்தாது ஏனென்றால் சட்டம் இயற்றும் பொழுது இவ்வழக்கு நிலுவையில் இருந்ததால் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

மசூதிக்குள் ஆய்வு நடத்துவதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991-ன் படி மசூதிக்குள்  ஆய்வு நடத்துவதை தடுத்திருக்க முடியும். அதனை விடுத்து, வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்கலாம் எனக் கூறி உச்ச நீதிமன்றம் இவ்வழக்கில் இருந்து விலகிக் கொண்டது. இதனை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் 12.09.2022 அன்று இவ்வழக்கு, வழிபாட்டு உரிமையைக் கோருகிறது எனவே இது வழிபாட்டு தல சட்டத்தையோ, வக்ஃபு வாரியச் சட்டத்தையோ மீறவில்லை ஆகவே இது விசாரணைக்கு உகந்தது என்று மாவட்ட நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

ஞானவாபி மசூதியில் சிவலங்கம் கண்டறியப்பட்டதாக கூறப்படுவது, தாஜ் மஹாலை தேஜோ மஹாலயா கோயில் என்றும் அங்கு பூட்டப்பட்டிருக்கும் 22 அறைகள் சர்ச்சைக்குரிய பின்னணியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படுவது, குதூப் மினார் வளாகத்தில் உள்ள குவ்வதுல் இஸ்லாம் மசூதியில் பூஜையும், அர்ச்சனையும் நடத்த வேண்டும் என்று கோருவது, கிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான வழக்கின் மனுவை ஏற்று விசாரிக்க மதுரா மாவட்ட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது, டெல்லி ஜாமா மசூதியில் இந்து கடவுள்களின் சிலைகள் உள்ளன என இந்து மகாசபை கூறுகிறது. அந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய கடிதம் எழுதப்பட்டது. இப்படி அனைத்தும் விசாரணைக்கு உகந்ததாக இனி மாறும்.

அயோத்தி பாபர் மசூதியை வைத்துக் கொண்டு மக்கள் மத்தியில் மதப் பிரிவினையை விதைத்து, கலவரங்கள் மூலம் தங்களது அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொண்ட  காவி பாசிசக் கும்பல் தற்போது அதே பாணியில் நாடு முழுவதும் பிரச்சனைகளைக் கிளப்பி கலவரம் செய்ய திட்டமிடுகிறார்கள்.

  • மதி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன