வேதாந்தா-பாக்ஸ்கான் சிப் உற்பத்தி ஆலை: மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கும் அனில் அகர்வால்

1.54 இலட்சம் கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ள வேதாந்த-பாஸ்கான் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் கோடிக்கு,அதாவது மூன்றில் ஒருபங்கிற்கு, சலுகைகளை வழங்கி முதலாளிகளின் தாசர்களாகவே காட்டிக்கொள்கின்றன ஒன்றிய-மாநில அரசுகள்.

வேதாந்தா நிறுவனம் பாக்ஸ்கானுடன் இணைந்து குறைமின்கடத்திகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 1000 ஏக்கர் பரப்பளவில் குஜராத்தில் அமைக்கப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை குஜராத் மாநில அரசுடன் போட்டுள்ளது. 1.54 லட்சம் கோடி (20 பில்லியன் டாலர்) முதலீட்டில் அமைய உள்ள இத்தொழிற்சாலையில்  60 சதவிகித முதலீட்டை வேதாந்தாவும் 40 சதவிகித முதலீட்டை பாக்ஸ்கானும் முதலீடு செய்கின்றன. மேலும் மொத்த முதலீட்டில் 94,000 கோடியை டிவி, செல்போன்களுக்கான திரை தயாரிப்பிற்காகவும் 60000 கோடியை குறைமின்கடத்தி சிப்கள் (Semiconductor chips) தயாரிப்பிற்காகவும் முதலீடு செய்யப் போவதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஒரு கார்ப்பரேட் நிறுவனம், இவ்வளவு பெரியத் தொகையை முதலீடு செய்வது இதுவே முதல்முறை. வேதாந்தா-பாக்ஸ்கான் முதலீட்டை ஈர்ப்பதற்காக ஒவ்வொரு மாநிலமும் சிறப்புசலுகைகளை இதற்கு முன்பு  அறிவித்திருந்தன. குறிப்பாக மகாராடிட்ரா, குஜராத், ஆந்திரா,தமிழ்நாடு (http://senkanal.com/index.php/2022/08/17/foxconn_vedanta_jv_tn_chip_industry/) ஆகிய மாநிலங்கள் இந்தப் போட்டியில் இருந்தன. ஏறக்குறைய  இத்திட்டம் ,மகாராட்டிரா மாநிலத்தின் தலேகவுன் பகுதியில் அமைய இருப்பதாகவே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இறுதியில் குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்கப்போவதாக வேதாந்தா அறிவித்துள்ளது. 

 இத்தொழிற்சாலை குஜராத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து மகாராட்டிரா மாநில எதிர்கட்சித் தலைவர்கள்(மகாவிகாஸ் அகாடியின் தலைவர்கள்) பிஜேபி ஆதரவு பெற்ற சிண்டே அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  சிண்டேவும் பதிலுக்கு உத்தவ் தாக்கரே மீது குற்றம்சாட்டி வருகிறார். இவர்களுக்கிடையே நடக்கும் இந்த குற்றச்சாட்டுப் போர்கள், முதலாளிகளுக்கு  தங்களில் யார் சிறந்த விசுவாசிகள் என்று தங்களுக்குள் அடித்துக் கொள்வதாகவே உள்ளது. இதில் மகாராட்டிரா முதல்வர் சிண்டே ஒரு படி மேலே சென்று, இத்திட்டம் குஜராத்திற்கு மாற்றப்பட்டதை குறித்து,மோடியிடம் பேசியதாகவும் மோடி இத்திட்டத்தை விட  சிறந்த திட்டத்தை மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ஒதுக்குவதாக உறுதிகளை அளித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

 

வேதாந்தா-பாஸ்கான் குறை மின்கடத்தி உற்பத்தி திட்டத்தினை ஈர்ப்பதற்காக மேற்கூறிய மாநிலங்கள், பல சலுகைகளை வழங்குவதாக வேதாந்தாவிற்கு -பாக்ஸ்கானிற்கு உறுதியளித்திருந்தனர்.மகாராட்டிரா சிண்டே அரசு வேதாந்தா-பாஸ்கான் குறை மின்கடத்தி உற்பத்தி திட்டத்திற்காக 38,831 கோடி ரூபாய் சலுகைளை அறிவித்திருந்தது. இதில் அமையப் போகும் அத்தொழிற்சாலைக்கான ஒருயூனிட்டு மின்சாரம் ஒரு ரூபாய், பயன்படுத்தக்கூடிய நீர் மற்றும் மின்சாரத்திற்கு அதிகமான சலுகைகள் ஸ்டாம் டியூட்டி இல் இருந்து விலக்கு ஆகியவை அடக்கம். கூடவே வேதாந்தா நிறுவனம் செய்யக்கூடிய முதலீட்டில் 30 சதவீதம் வரை சலுகைகள் தருவதாகவும் மகாராஷ்ட்ரா அரசு வேதாந்தாவிற்கு உறுதியளித்திருந்தது. குஜராத் அரசு 1000 ஏக்கர் நிலத்தை 99 வருடத்திற்கு இலவசமாகவும், தொழிற்சாலைக்கான மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு 3 ரூபாய் என 20 வருடத்திற்கு வழங்குவதாகவும்  முதலீட்டில் 25 சதவிகித சலுகைகள் வழங்குவதாகவும் கூறியுள்ளது.

மேலும் ஒன்றிய அரசின் சார்பில் குறை மின்கடத்திகள் தொடர்பான உற்பத்தியை இந்தியாவில் ஊக்குவிப்பதற்கு 76000 கோடி அளவிலான சலுகைகளுக்கு (Production linked incentive for semiconductors) மோடி அமைச்சரவை, கடந்தாண்டு ஒப்புதல் அளித்தது. இதில் முதலீட்டு சலுகைகள் மற்றும் வரி விலக்கு போன்ற சலுகைகளும் அடக்கம். PLI திட்டதின் கீழ் குறைமின் கடத்தி தொழிற்சாலையை தொடங்க வேதாந்தா நிறுவனம் ஒன்றிய அரசிடமிருந்து அனுமதியும் பெற்றுள்ளது.   

குஜராத் அரசை விட அதிகமான சலுகைகளை மகாராட்டிரா அரசு வழங்க ஒப்புக்கொண்ட போதிலும் வேதாந்தா நிறுவனம் தனது குறைமின் கடத்தி தொழிற்சாலையை குஜராத்தில் அமைப்பதற்கு முடிவு செய்ததற்கு காரணம் ஒன்றிய மோடி அரசாங்கத்தின் நிர்ப்பந்தமே என்று பெரும்பாலான பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வருட இறுதியில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் வர இருப்பதால் வேலையின்மை மிக முக்கிய பிரச்சனையாக உருவாகியுள்ள நிலையில் இந்த திட்டத்தின் மூலம் தன்னுடைய இமேஜை ஓரளவு சரி செய்து கொள்ள பிஜேபி அரசுக்கு உதவும் என பத்திரிகைகள் கூறுகின்றன. 

1.54 லட்சம் கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ள வேதாந்தா-பாஸ்கான் நிறுவனத்திற்கு 50 ஆயிரம் கோடிக்கு, அதாவது மூன்றில் ஒரு பங்கிற்கு, சலுகைகளை வழங்கி முதலாளிகளின் மனம் கோணாதாவாறு நடந்து கொள்கின்றன ஒன்றிய-மாநில அரசுகள். இவர்கள் வெளிப்படையாகவே தங்களை முதலாளிகளின் தாசர்களாகவே காட்டிக்கொள்கின்றனர்.

மக்களுக்கு தரமான கல்வி, தரமான சுகாதாரம் ,போக்குவரத்து வசதிகள், குடிநீர் ஆகியவற்றை ஏற்பாடு செய்து கொடுப்பதற்கு போதிய நிதி ஒதுக்குவதில் தயக்கம் காட்டும் மத்திய-மாநில அரசுகள்தான் முதலாளிகள் என்று வரும்போது பல ஆயிரம் கோடிகளை சலுகைகளாக வழங்கி எங்களுடைய மாநிலத்தில் தொழில் தொடங்குங்கள் என்று முதலாளிகளிடம் கையேந்தி நிற்கின்றனர். இதுதான் பொருளாதார வளர்ச்சி என்று வியாக்கியானம் வேறு தருகின்றனர். நிபந்தனையற்ற முறையில் பல்லாயிரம் கோடிகளை முதலாளிகளுக்கு சலுகைகளாக வழங்குவதை தொழிற்வளர்ச்சி என்று சப்பைக்கட்டு கட்டும் இவர்கள் மக்களுக்கு வழங்குவதை இலவசம் என்று கொச்சைப்படுத்த தயங்குவதில்லை. சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, அரசியல் கட்சிகள் தேர்தல் சமயங்களில் அளிக்கக் கூடிய வாக்குறுதிகள் மூலம் கொடுக்கக்கூடிய இலவசத் திட்டங்களால் நாட்டின் முன்னேற்றம் பெரிதாக பாதிக்கப்படுகிறது என்று   பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.  

-அழகு

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன