நட்சத்திரம் நகர்கிறது : அடையாள அரசியல் எனும் புளித்த மாவில் சுட்ட ‘புரட்சிகர’ தோசை (பாகம்-1)

மக்களை தனித்தனியாக அடையாளப்படுத்தி பிரிப்பதன் மூலம் வர்க்க ஒற்றுமையைத் துண்டாடி ஏகாதிபத்தியங்களுக்கும் பிற்போக்குச் சக்திகளுக்கும் சேவை செய்யும் பின்நவீனத்துவ சித்தாந்தத்தின் அரசியல் வெளிப்பாடுதான் அடையாள அரசியல். அதனால் அதன் ஆன்மாவே கம்யூனிச வெறுப்புதான். இந்த அடையாள அரசியல் பெற்றெடுத்த பிள்ளைதான் நட்சத்திரம் நகர்கிறது எனும் இத்திரைப்படம்.

நட்சத்திரம் நகர்கிறது எனும் திரைப்படம் வெளிவந்ததையொட்டி பல்வேறு விவாதங்கள் இணையவெளியில் கிளம்பியுள்ளன. ஒரே படத்தில் சாதிய எதிர்ப்பு, தன்பாலின ஈர்ப்பாளர்களின் காதல், திருநங்கைகளின் காதல், சாதிய ஆணவப் படுகொலை – என இவற்றையெல்லாம் இரஞ்சித் பேசியுள்ளதாகவும், அதனால் இப்படத்தை மிகப்பெரிய ‘புரட்சிப்’ படமாகக் கருத வேண்டும் எனவும் இரஞ்சித்தின் ரசிகர்களும் ‘தலித்திய அறிவுஜீவிகளும்’ கூறி வருகின்றனர். காலச்சுவடு எழுத்தாளரும் நாவலாசிரியருமான பெருமாள் முருகனோ, இப்படம் “பிரம்மிப்பைத் தருவதாகவும்” “பல விசயங்களைக் குறியீடுகளாகச் சொல்வதாகவும்” “காதல், பாலினம் தொடர்பான பிற்போக்கு சமூக மரபுகளை, விழுமியங்களை உடைத்துள்ளதாகவும்” “இன்னும் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும்” ஆஹா ஓஹோவென்று புகழ்ந்துள்ளார்.[i]

‘எல்லோரும் கொண்டாடுவோம்’ என்று இவர்கள் நம்மையும் இந்த பஜனைக்குள் இழுக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், ஆப்கான் மீதான ஆக்கிரமிப்புப் போரின்போது ‘எங்களை ஆதரிக்காதவர்கள் பயங்கரவாதிகளின் பக்கம் உள்ளனர்’ என்று அமெரிக்க மேல்நிலை வல்லரசு பிரகடனம் செய்ததைப் போல, ‘இரஞ்சித்தையும் இந்தப் படத்தையும் ஆதரிக்காதவர்கள் சாதிய சிந்தனை உள்ளவர்கள்’ என்று இவர்கள் பிரகடனம் செய்துமுள்ளனர்.

 

 

ஆனால் படம் வெளிவந்து மூன்று வாரங்களாகியும் இவர்கள் கொண்டாடுவதைப் போல பிற்போக்குச் சக்திகளுக்கும், கருத்துக்களுக்கும் எதிரான எந்தப் பெரிய விவாதத்தையும் இப்படம் கிளப்பவில்லை. ‘பெரும்பூனையான’ ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. பார்ப்பன பாசிசக் கும்பலோ அல்லது ‘நாட்டுப் பூனைகளான’ சாதிவெறிக் கட்சிகளோ இப்படத்தைத் துளியளவும் எதிர்க்கவில்லை. தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக “நாடகக் காதல்” என்ற விசப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்ட பா.ம.க.வைச் சேர்ந்த வன்னிய சாதி வெறியர்களோ, ஜெய்பீம் திரைப்படத்தை எதிர்த்ததில் கடுகளவு கூட இப்படத்தை எதிர்க்கவில்லை.

மாறாக, சினிமா கழிசடையும் பார்ப்பன பாசிசக் கும்பலின் பாதந்தாங்கியுமான ரஜினிகாந்த் இப்படத்தை “பா.இரஞ்சித்தின் படைப்புகளிலேயே மிகச்சிறந்த படைப்பு” என்று உச்சி முகர்ந்து பாராட்டியுள்ளார். பல பார்ப்பனப் பத்திரிக்கைகளும், ஊடகங்களும் இப்படத்தை வரவேற்றுதான் எழுதியுள்ளன. உண்மையில் விவாதமானது இரஞ்சித்தும் நீலம் பண்பாட்டு மையத்தின் இதர தலித்திய அறிவுஜீவிகளும் மகிழும் வண்ணம், கம்யூனிஸ்டுகளுக்கும் கம்யூனிச சித்தாந்தத்துக்கும் எதிராகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

 

 

கம்யூனிச விரோதம் என்பதுதான் அடையாள அரசியலின் ஆன்மா

ஏகாதிபத்தியங்களால் ஸ்பான்ஸர் செய்யப்பட்டு, என்.ஜி.ஓ.க்களால் கடைவிரிக்கப்பட்ட ‘அடையாள அரசியல்’ என்பது அடிப்படையிலேயே, வர்க்க அணிதிரட்டலுக்கு எதிராக ஒவ்வொரு நாட்டின் தன்மைக்கேற்ப இனம், நிறம், பாலினம், சாதி, மதம் என மக்களை அடையாளப்படுத்தி அணிதிரளச் செய்து வர்க்க ஒற்றுமையைக் கூறுபோடுவதாகும். வர்க்கப் போராட்டம், புரட்சி, வர்க்க ஒற்றுமை, கம்யூனிசம், சோசலிசம் என்பதையெல்லாம் பெருங்கதையாடல் என்று கூறி நிராகரித்துவிட்டு, மக்களை மேற்படியாக அடையாளப்படுத்தி அணிதிரளச் செய்து வர்க்க ஒற்றுமையைத் துண்டாடி ஏகாதிபத்தியங்களுக்கும் பிற்போக்குச் சக்திகளுக்கும் சேவை செய்யும் பின்நவீனத்துவ சித்தாந்தத்தின் அரசியல் வெளிப்பாடுதான் அடையாள அரசியல். அதனால் அதன் ஆன்மாவே கம்யூனிச வெறுப்புதான். இந்த அடையாள அரசியல் பெற்றெடுத்த பிள்ளைதான் இத்திரைப்படமும்.

இத்திரைப்படத்தை ஒட்டி இணையவெளியில் நடக்கும் விவாதங்களில், “நீங்க ஒரு கம்யூனிஸ்டா? என்ற கேள்விக்கு அம்பேத்கரைட் என்று பதிலளிப்பது எப்படி கம்யூனிச விரோதமாகும்” “ஒரே ஒரு வசனத்துக்காக இரஞ்சித்தை எதிர்த்து இவ்வளவு பேசும் நீங்கள் மற்றவர்கள் திரைப்படங்களில் ஏன் அம்பேத்கரைக் காட்சிப்படுத்தவில்லை என்று கேட்பதுண்டா” என்று சீறுகின்றன இரஞ்சித்தின் ரசிகர் பட்டாளங்கள். பேட்டியொன்றில் இவ்வசனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இரஞ்சித்தும் “நான் அம்பேத்கர் ஆதரவாளன்தான் கம்யூனிச எதிர்ப்பாளன் அல்ல, இங்கு அம்பேத்கரை ஆதரிப்பதே கம்யூனிச எதிர்ப்பாகப் பார்க்கப்படுகிறது.” என்று கூறினார். இரஞ்சித்தை மறுத்து பொதுவெளியில் பேசும் பல்வேறு கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இரஞ்சித் ஏதோ தவறான புரிதலில் செயல்படுவது போல அவருக்கு அறிவுரை கூறுகின்றனர். ஆனால் கம்யூனிச வெறுப்புதான் இரஞ்சித்தின் உள்ளக்கிடக்கை என்பதை இத்திரைப்படத்தில் மட்டுமல்ல முந்தைய படங்களிலிருந்தும் நாம் கூற முடியும்.

பொதுவாகவும் முற்போக்காகவும் படம் எடுப்பது போலக் காட்டிக் கொள்ளும் இரஞ்சித் தன்னுடைய படங்களில் தலித், தலித் அல்லாதோர் என்ற பிளவை நயவஞ்சகமாக உருவாக்குகிறார். அதேபோல கம்யூனிச எதிர்ப்பையும் வெளிப்படையாக அன்றி நயவஞ்சகமாகப் பல்வேறு குறியீடுகள், வசனங்கள் மூலம் வைக்கிறார். உதாரணமாக காலா திரைப்படத்தில், ரஜினியின் மகனாக வரும் லெனின் “விழித்தெழு” என்ற இயக்கத்தை நடத்துபவராகவும் பல காட்சிகளில் சிவப்பு சட்டை அணிந்திருப்பவராகவும் காட்டப்படுவார். இந்தக் குறியீடுகளின் மூலமும், அவரைப் பார்த்து “புரட்சியாளர்” என்று ரஜினி கிண்டல் செய்வதன் மூலமும் லெனின் ஒரு கம்யூனிஸ்டாக சித்தரித்திரிக்கப்பட்டிருப்பார். தாராவி மக்களின் நிலத்தை ஹரிதாதா என்ற ரியல் எஸ்டேட் மாஃபியா கும்பல் கைப்பற்றிக்கொள்வதற்காக, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்துகொண்டு லெனின் வேலை செய்வார். பின்னர் ஹரிதாதாவுக்கு சோரம் போய் சொந்த மக்களுக்கு துரோகம் செய்வார். (பல்வேறு காட்சிகளில் நீல நிறச் சட்டை அணிந்து வரும்) ரெளடியான ரஜினி இதை எதிர்ப்பார்.

ரஜினிக்கும் லெனினுக்கும் ஏற்பட்ட இந்த முரண்பாட்டுக்குப் பின்னர், லெனினைப் பார்த்து “மண்னையும் மக்களையும் பற்றி எந்தப் புரிதலும் இன்றி, நாலு புத்தகம் படித்துவிட்டு ‘மாற்றம்’ ‘புரட்சி’ என்று வந்துவிட்டார்கள்” என்பார் ரஜினி. பதிலுக்கு லெனின், தாராவி மக்களைப் பார்த்து “மட்டமானவர்கள், சேரியில் வாழ்பவர்கள். இவர்களுக்காக இனி எதையும் செய்ய மாட்டேன்” என்று கோபப்படுவார். ரஜினியின் மனைவியான ஈஸ்வரிராவின் (செல்வி) மறைவுக்குப் பின்னர் லெனின் திருந்தி ரஜினியுடன் வந்து சேர்வார். அந்தக் காட்சியில் லெனின் நீலநிறச் சட்டை அணிந்திருப்பார். செல்வியின் “நினைவு பகிர்தல் விழா” பேனரும் நீல நிறத்தில் அமைந்திருக்கும். இப்படி லெனின் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் கம்யூனிஸ்டுகள் நேர்மையற்றவர்கள், சாதிய சிந்தனையுள்ளவர்கள், துரோகம் செய்பவர்கள், இந்த மண்னைப் பற்றிப் புரிதலற்றவர்கள் என்ற அபிப்பிராயத்தைப் பார்வையாளர்களுக்கு உருவாக்கும்படி காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

உண்மையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களின் குடிசைப்பகுதியிலிருந்து உழைக்கும் மக்கள் விரட்டியடிக்கப்படும் போதெல்லாம் அதை எதிர்த்துப் பல்வேறு போராட்டங்களை நடத்துபவர்கள், அதற்கு எதிராககக் குரல் கொடுப்பவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். தலித் அறிவு ஜீவிகள்தான் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் கூடிக் குலாவுகிறார்கள். “நிலமே எங்கள் உரிமை” என்று சினிமாவில் முழங்கும் இரஞ்சித்தும், நீலம் பண்பாட்டு மையமும் உழைக்கும் மக்கள் தங்கள் சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடிக்கப்படும் போதெல்லாம் எவ்வித உறுதியான எதிர்ப்பையும் தெரிவித்ததில்லை. உண்மை இப்படியிருக்க லெனின் என்ற கதாப்பாத்திரத்தைக் கோமாளியாக்கியதன் மூலம், கம்யூனிஸ்டுகளைக் கேவலப்படுத்தி, மட்டம்தட்டி, மதிப்பிழக்கச் செய்திருப்பார் இரஞ்சித். தலித்துகள் கம்யூனிஸ்டு கட்சியிலிருந்து வெளிவந்தால்தான் உருப்படுவார்கள் என்ற கருத்தையும் நைச்சியமாகக் கடத்தியிருப்பார். இவையெல்லாம் தற்செயலான காட்சிகள் அல்ல, கம்யூனிஸ்டுகளுக்கும் கம்யூனிசத்திற்கும் எதிராகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டவை.

இதேபோலத்தான் நட்சத்திரம் நகர்கிறது திரைப்படத்திலும், கம்யூனிச சிந்தனை கொண்டவனான இளைஞன் இனியனுக்கும் ‘அம்பேத்கரைட்டான’ ரெனேவுக்குமான முரண்பாடு படம் முழுவதும் திட்டமிட்டுக் காட்சிப்படுத்தப்படுகிறது. இனியனின் ஹெல்மட்டில் சிவப்பு நிற நட்சத்திரங்கள் இருப்பது, தனது முகநூல் பக்கத்தில் ‘வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியும்’ என்று பதிவிட்டுருப்பது என்பது போன்ற குறியீடுகளின் மூலம் அவனை ஒரு கம்யூனிஸ்டாக இரஞ்சித் சித்தரித்திருப்பார்.

நினா சிமோன் என்ற அமெரிக்கப் பாடகரை விரும்பிக் கேட்கும் இனியனுக்கு ‘தலித்தான’ இளையராஜாவின் பாடல் எரிச்சலூட்டுகிறது. இளையராஜாவின் பாடலை திரும்பத் திரும்பப் பாடும் ரெனேவைப் பார்த்து ‘என்ன இருந்தாலும் உங்க [சாதி] புத்தி மாறாது’ என்று சாதிய சிந்தனையுடன் கோபப்படுகிறான் ‘கம்யூனிஸ்டு’ இனியன். தேயிலைத் தோட்டத்தின் அழகை இனியன் ரசிக்கும்போது அதற்குப் பின்னால் உள்ள உழைப்புச் சுரண்டலைப் பற்றி ஒரு ‘கம்யூனிஸ்டுகே’ ரெனே வகுப்பெடுக்கிறாள். இளவரசன் படுகொலையை தற்கொலை என்று இனியன் கூறும்போது அது கொலை என்று ரெனே கோபத்துடன் சீறுகிறாள். சாதிய சிந்தனையுடன் நாடகக் குழுவிற்கு வந்த அர்ஜீனை ‘கம்யூனிஸ்டான’ இனியன் வெறுக்கிறான். ஆனால், ‘அம்பேத்கரைட்டான’ ரெனே அவனைத் திருத்துகிறாள். இவ்வாறாக படம் முழுவதும் ஆணாதிக்க, சாதியவாதியான ‘கம்யூனிஸ்டு’ இனியனுக்கு எதிராக, ‘அம்பேத்கரைட்டான’ ரெனே காட்சிப்படுத்தப்படுகிறாள். ரெனேவின் கதாபாத்திரம் மிகவும் வலிமையாகவும் கச்சிதமாகவும் (Perfection) அதேசமயம் இனியனின் கதாப்பாத்திரம் பலவீனமாகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் நீட்சியாகத்தான் “வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியும் என்பதில் எனக்கெல்லாம் நம்பிக்கையே கிடையாது” என்ற வசனத்தை ‘கம்யூனிஸ்டு’ இனியனை நோக்கி ஏளனமாக உதிர்க்கிறாள் ரெனே. (உண்மையில் ரெனே-வின் மூலம் இரஞ்சித் தான் இக்கருத்தைக் கூறுகிறார்) வர்க்க ஒற்றுமை, வர்க்கப் போராட்டம், புரட்சி, கம்யூனிசம் ஆகிய கருத்துக்களைக் கேவலப்படுத்தும், கேவலமாகப் பார்க்கக் கற்பிக்கும் விதத்தில் வைக்கப்பட்டுள்ள இவ்வசனம் உள்ளிட்ட படத்தின் காட்சிகள் தற்செயலானவை அல்ல. அடையாள அரசியலின் கருப்பையான கம்யூனிச வெறுப்பிலிருந்து பிறப்பவை. சமீபத்தில் உக்ரைன் மீதான இரசிய ஆக்கிரமிப்புப் போரின் போது, “தலித் முரசு” பத்திரிக்கையின் அதிகாரப்பூர்வ முகநூலில் வெளியிட்ட ஒரு பதிவு தெற்றென இதைக் காட்டுகிறது.

“பத்துநாள் புரட்சியில் உலகத்தைக் குலுக்கிய செஞ்சேனை பள்ளிக்கூடங்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் வெடிகுண்டுகளைக் கொத்துக் கொத்தாய் வீசுகிறது… ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் நியாயத் தீர்ப்பையும் இந்தியக் கம்யூனிஸ்டுகளின் கள்ள மெளனத்தையும் கடந்து அமைதியாய்க் கேட்கிறது அண்ணலின் குரல்… புத்தரா? காரல் மார்க்ஸா?” – தலித் முரசு.

ரசியா ஒரு முதலாளித்துவ ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசாக இருக்கிறது. கம்யூனிசத்தை அதன் வாடை கூட இல்லாமல் ஒழித்துக்கட்டியுள்ளது. அங்கே கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் உலகறிந்த விவகாரங்களாய் இருக்கும்போதே, ரசியாவைக் கம்யூனிச நாடென்றும், ரசிய இராணுவத்தை செஞ்சேனையென்றும் எழுதுவது அறியாமையா? அயோக்கியத்தனமா? அமெரிக்க ஏகாதிபத்திய அடிவருடித்தனமா?

 

 

தலித் முரசின் சிந்தனைக்கும் பா.இரஞ்சித்தின் சிந்தனைக்கும் எந்தவித வேறுபாடுமில்லை. இரண்டின் கருவறையும் கம்யூனிசத்தின் மீதான வெறுப்புதான். இவ்வசனம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இரஞ்சித் “நான் கம்யூனிச விரோதி அல்ல. அம்பேத்கரிய ஆதரவாளன்” என்று நழுவினார். இப்படம் வெளிவந்த பின் தான் அளித்த பேட்டிகளில் தனக்குப் பின்னால் “மூலதனம்” “மாவோ வரலாறு” ஆகிய நூல்கள் இருக்குமாறும், அவற்றையெல்லாம் தான் படிப்பது போலவும் காட்டிக் கொண்டு பேட்டி கொடுத்தார்.[ii] இதுமட்டுமல்ல பல்வேறு மேடைகளிலும் “கம்யூனிசம் அற்புதமான தத்துவம்” “மனித அதிகாரத்தை உடைக்கக் கூடிய தத்துவம்” “மனிதனை மனிதனாகப் பார்க்கக் கற்பிக்கிறது” “முதலாளி தொழிலாளி என்ற ஏற்றதாழ்வை உடைக்கிறது” “கம்யூனிசமும் அம்பேத்கரிசமும் சேர்ந்துதான் சாதியை ஒழிக்க முடியும்” என்றெல்லாம் இரஞ்சித் பேசியுள்ளார்.[iii]

ஒருபுறம் வெளிப்படையன பேட்டிகள், மேடைகளில் தான் ஒரு கம்யூனிச ஆதரவாளன், கம்யூனிசத்தை ஏற்பவன் என்பதுபோலக் காட்டிக் கொண்டு, மறுபுறம் தன் திரைப்படங்களில் கம்யூனிசத்திற்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் எதிரான காட்சிகளை நயவஞ்சகமாக திட்டமிட்டு நுழைக்கும் உத்தியை இரஞ்சித் கையாள்கிறார்.

“ஒருவர் தன்னை அம்பேத்கரைட் என்று அடையாளப்படுத்திக் கொள்ள உரிமையில்லையா” என்று சீறும் இரஞ்சித்தின் இரசிகர் பட்டாளங்களிடம் நாம் கேட்கும் கேள்வி இதுதான். அம்பேத்கரைட் என்று கூறிக் கொள்ள மட்டுமல்ல, கம்யூனிசம் தவறு, மார்க்சியம் தவறு, வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியாது, கம்யூனிஸ்டுகள் ஆனாதிக்கவாதிகள், சாதியவாதிகள் என்றெல்லாமும் வெளிப்படையாகக் கூறக் கூட உரிமையுள்ளதுதானே. பிறகு ஏன் இரஞ்சித் பொது வெளியில் அப்படிக் கூறாமல், தன்னைக் கம்யூனிச ஆதரவாளராக, கம்யூனிசத்தை ஏற்பவராகக் காட்டிக் கொள்கிறார். ஏனென்றால், அம்பேத்கரை வாசிக்கும் பல இளைஞர்கள் மார்க்சையும் கம்யூனிசத்தையும் வாசிக்கிறார்கள், இச்சூழலில் வெளிப்படையாகத் தன் கருத்துக்களைக் கூறினால் அம்பலமாவோம் என்ற அச்சம்தான் இரஞ்சித்தை இப்படி நடந்துகொள்ள வைக்கிறது.

சரி. “வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழியாது” என்று கூறும் ரெனே-வோ, இரஞ்சித்தோ வேறு எப்படி சாதியை ஒழிப்பது என்று விவாதிக்கத் தயாராயிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அதற்கு முன்னதாக “நான் உன்னுடன் விவாதிக்கவெல்லாம் தயாராயில்லை” என்று இனியனைப் பார்த்து ரெனே உதிர்க்கும் வசனம் இரஞ்சித்தின் மனநிலையை அம்பலப்படுத்துகிறது. ‘தான் ஒரு கருத்தைக் கொண்டிருப்பேன், அதைப் பரப்பவும் செய்வேன், அதை விவாதிக்கவெல்லாம் தான் தயாரில்லை, விவாதிக்க வேண்டிய அவசியமுமில்லை’ என்பதுதான் இந்த வசனத்தின் பொருள். வார்த்தைக்கு வார்த்தை ‘உரையாடல்’ ‘உரையாட வேண்டும்’ என்று கூறும் இரஞ்சித்தின் உண்மையான மனநிலையும் இதுதான். இதே மனநிலையைத்தான் பார்வையாளர்களுக்கும் உருவாக்க விரும்புகிறார்.

இத்திரைப்படம் வெளிவந்த பின்பு, பாதுகாப்பான வாழ்வை உத்திரவாதப்படுத்திக் கொண்டு, சொந்த வாழ்க்கையில் எந்த இழப்பையும் ஏற்காமல் வாழும் ‘தலித்தியத் தியாகிகள்’ எல்லாரும் கூச்சமின்றி ஒரே குரலில், “கம்யூனிஸ்டுகள் சாதி ஒழிப்பிற்கு என்ன கிழித்தார்கள்” என்று கேள்வியெழுப்பினர். உண்மையில் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் எல்லாவிதமான ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் கம்யூனிஸ்டுகள்தான் முன்னணியில் நின்று போராடுகின்றனர்.

தஞ்சையில் தோழர் சீனிவாசராவ் தலைமையிலான செங்கொடி இயக்கம்தான் அங்கே சவுக்கடி, சாணிப்பால் கொடுமையை ஒழித்துக் கட்டியது. “இடுப்புத் துண்டைத் தோளில் ஏற்று, உன்னை அடித்தால் திருப்பி அடி” என்று பண்ணையார்களுக்கெதிராக தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டியது செங்கொடி இயக்கம். அன்றைய காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி என்பதையே மக்கள் “பள்ளுப் பறையன் கட்சி” என்றுதான் அழைத்தார்கள். 80-களில் தருமபுரிப் பகுதிகளில் இரட்டைக் குவளை முறை, கந்துவட்டிச் சுரண்டல் ஆகியவற்றை ஒழிப்பு, சாதிமறுப்புத் திருமணங்கள் என சாதியக் கொடுமைகளை எதிர்த்துத் தன் இன்னுயிரையும் கொடுத்துப் போராடியவர்கள் நக்சல்பாரிகள். தருமபுரியில் நக்சல்பாரிகளை ஒழித்துக்கட்டும் வரை அங்கே சாதியை வைத்துப் பிழைப்பு நடத்தும் ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், கட்சிகள் தலையெடுக்கவே முடியவில்லை. இவையெல்லாம் மக்களை வர்க்க ரீதியாக அணிதிரட்டிய கம்யூனிஸ்டுகள் சாதித்தவற்றுள் சில. ஆனால், அடையாள அரசியலோ மக்களைச் சாதியாக அணிதிரளச் செய்து சாதிய முனைவாக்கத்தைக் கூர்மைப்படுத்தியதோடு, ஆதிக்க சாதிவெறி சங்கங்கள், கட்சிகள் வளரவும் காரணமாயிருந்துள்ளது. இந்த வராலாற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்து கம்யூனிஸ்டுகளைக் கேவலப்படுத்தி, மட்டம்தட்டி, மதிப்பிழக்கச் செய்யும் திருப்பணியைத்தான் அடையாள அரசியல் பேசுவோர் செய்துவருகிறார்கள்.

இந்தக் கேள்வி எழுந்த பிறகு பல கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்களும் மேற்படி பதில்களைக் கொடுத்தபோதும், இதற்கு நேர்மையாக பதிலளிக்காத இவர்கள், இந்த பதிலடிகளைச் சகித்துக் கொள்ள முடியாமல் பல்லவியை மாற்றினர். “கம்யூனிஸ்டுகள் செய்வதைச் சொல்லிக் காட்டுகிறார்கள்”, “ஆண்ட பரம்பரை மனநிலையில் [தலித்துகளுக்கு] இருக்க இடம் கொடுத்தோம், படுக்கப் பாய் கொடுத்தோம் என்ற ரீதியில் பேசும் இவர்கள் கம்யூனிஸ்டுகளா” ‘இப்படிப் பேசுவதே கம்யூனிஸ்டுகளின் சாதிய சிந்தனையைக் காட்டுகிறது’ “தலித்துகள் கம்யூனிச இயக்கத்துக்கு எந்தப் பங்களிப்பும் ஆற்றவில்லையா” என்று பேசினர். இன்னும் ஒருபடி மேலேபோய் “இப்படம் எழுப்பும் முக்கியமான விசயங்களை விவாதிக்க விடாமல் திசைதிருப்பத்தான் இத்தகைய விவாதங்கள் எழுப்பப்படுவதாகவும்” “வழக்கமாக சாதிய சிந்தனை உள்ளவர்கள் செய்யும் பணியை இப்போது கம்யூனிஸ்டுகள் இப்போது செய்வதாகவும்” அறிவித்தனர்.[iv]

கம்யூனிஸ்டுகள் சாதியை ஒழிக்க என்ன கிழித்தார்கள் என்று கேட்பது, கம்யூனிஸ்டுகளின் செயல்பாடுகளைப் பட்டியலிட்டால் அதை நேர்மையாகப் பரிசீலிக்காமல் ‘ஆண்ட பரம்பரை மனநிலையில் தலித்துகளுக்குச் செய்ததையெல்லாம் சொல்லிக் காட்டுகிறார்கள்’ என்று கூறுவது; இதுதான் இவர்களின் உத்தி. இது கம்யூனிசத்தின் மீதான வெறுப்பன்றி வேறென்ன.

மேலும், சென்னைப் பல்கலைக் கழகத்திலும் சென்னை ஐ.ஐ.டி. வளாகத்திலும் புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இணைந்து நடத்தி வந்த, பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய “அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம்” மாட்டுக்கறி தடைக்கெதிரான போராட்டம், பல்கலை வளாகத்துக்குள் பேச வந்த இலகனேசன் என்ற பார்ப்பன பாசிஸ்டை வளாகத்திலிருந்து விரட்டியடித்த போராட்டம் தொடங்கி, சி.ஏ.ஏ. & என்.ஆர்.சி. எதிர்ப்புப் போராட்டம் வரை பல்வேறு போராட்டங்கள், கருத்தரங்குகளை ஒருங்கிணைத்து நடத்தியதை நாடறியும். அதனால் பார்ப்பன பாசிஸ்டுகளின், அரசின், நிர்வாகத்தின் பல்வேறு எதிர்ப்புகளைச் சந்தித்ததையும் நாடறியும்.

 

 

அப்படிப்பு வட்டத்தின் மீது வன்மத்தைக் கக்கும் கட்டுரை ஒன்றை நீலம் பண்பாட்டு மையத்தின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டாடியுள்ளது. மேலும் அக்கட்டுரை “முற்போக்காளர்கள் அம்பேத்கரை பெரியார், மார்க்சோடு இணைத்து தீட்டுக் கழிக்கிறார்கள்” என்றும் “அம்பேத்கரின் படைப்புக்கு அருந்ததிராய் முன்னுரை எழுதினால்தான் உயர் சாதியினர் ஏற்றுக் கொள்வார்கள் என்ற மனநிலை உள்ளது” என்றும் வெறுப்பையும் வன்மத்தையும் கக்கியுள்ளது.[v] இது கம்யூனிஸ்டுகள் பெரியாரியவாதிகளின் மீதான வெறுப்பு மட்டுமல்ல, முற்போக்கு, ஜனநாயக சிந்தனை உடையவர்களையும் தலித்துகளையும் தனித்தனியாகப் பிளக்கும் செயலுமாகும்.

(தொடரும்…)

ரவி

 

தகவல் உதவி ஆதாரங்கள்

[i] ரஞ்சித்தின் இயக்கம் பிரம்மிப்பைத் தருகிறது – பெருமாள் முருகன் https://youtu.be/HZMYZ1xFapo

[ii] பா.ரஞ்சித் நேர்காணல், https://youtu.be/Ifuk0mQVSe4

[iii] கம்யூனிசமும் அம்பேத்கரிசமும் நமக்கு அவசியம், பா.இரஞ்சித் https://youtu.be/gMUHqI02UVk

[iv] “சாதிப் புனிதம்” “சாதிப் பெருமை” வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் சாதியத்தின் பங்கு, “ஆணவப் படுகொலை” என நட்சத்திரம் நகர்கிறது படம் பேசுகிற முக்கியமான விசியங்களை மறக்கடிக்கத்தான் படத்திற்கு எதிராக இவ்வளவு பேசுகிறார்களா தோழர்கள்? என்ற இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு திரைப்பட இயக்குனர் அதியன் ஆதிரை அவர்களின் கட்டுரை – நீலம் பண்பாட்டு மையம் முகநூல் பக்கம், https://www.facebook.com/1005810882903221/posts/pfbid02PhyeNzepyS4jPacCuoUaUP6S2FyraSBMwjXGKGE1fT2Ni6adeQeXW5z5eYpRjqiol/?sfnsn=wiwspwa

[v] “அம்பேத்கருக்குத் தீட்டுக் கழிக்கும் முற்போக்கு ஆண்டைகள்” என்ற ரா. முகமது இலியாஸ் அவர்களின் கட்டுரை, நீலம் பண்பாட்டு மையம் முகநூல் பக்கம், https://www.facebook.com/1005810882903221/posts/pfbid0j2apF2XYF6ebD65Ny2vqt3xor8BoEPFN9ED2UJo8ygXgfL34DyzinUGBYXYA2W8Ll/?sfnsn=wiwspwa

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன