பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை – காவி கும்பலை வீழ்த்தாமல் தீர்வில்லை!

மோடி அரசின் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளினால் (பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கோவிட்-19, விலைவாசி உயர்வு) இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  தொழில்கள் நசிவடைந்து நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பிஜேபி ஆளும் குஜராத்தும் அடக்கம். இந்த ஆண்டின் இறுதியில் குஜராத் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் பிஜேபிக்கு  எதிரான மனநிலை குஜராத் மக்களிடையே பரவாலாக உள்ளது.  இதனைக்கருத்தில் கொண்டு தனது இரத்தத்தில் ஊரிப்போன முஸ்லீம் வெறுப்பு அடிப்படையிலான பிரச்சனைகளைக் கையில் எடுக்கத் தொடங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல்.  பில்கிஸ்பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை 75-வது சுதந்திர தினத்தன்று குஜராத்தின் பிஜேபி அரசு விடுதலை செய்தது இதன் தொடக்கமாகும்.

பில்கிஸ் பானுவின் நீண்டநெடிய போராட்டம்:

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, குஜராத்தில் முஸ்லீம்களைக் குறிவைத்து சங்கப்பரிவாரக் கும்பல்கள் நடத்திய படுகொலை  என்பது 1947-க்கு பிறகு இந்தியாவில் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய இனப்படுகொலையாகும். இதில் 2000-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். 

இக்கலவரத்தையொட்டி பில்கிஸ் பானு, அவரது தாயார் மற்றும் மூன்று பேர் இந்துமத வெறியர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். பில்கிஸின்  மூன்று வயது மகளை செவுற்றில் அடித்துக் கொலை செய்தனர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 6 பேரைக் காணவில்லை. பில்கிஸ் சுயநினைவிழந்து போனதால், அவர் இறந்துவிட்டார் என்று நம்பி காவிக் கும்பல் சென்றுவிட்டது, எனவே இவர் பிழைத்துகொண்டார். அதனைத் தொடர்ந்து சுமார் 6 ஆண்டுகள் சட்டப்போராட்டத்திற்கு பிறகே குற்றம் நிருபிக்கப்பட்டு காவிக் கும்பல் 11 பேருக்கும் ஆயுள் தண்டனை கிடைத்தது.

பில்கிஸ் பானு வழக்கின் முதல் கட்ட விசாரணை அகமதாபாத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், போலீசு, டாக்டர் மற்றும் குற்றக்கும்பல் கூட்டுச்சேர்ந்து கொண்டு சாட்சிகளை அழித்ததாலும், சாட்சியங்களை சேதப்படுத்தியதாலும் இந்த வழக்கு மும்பைக்கு மாற்றப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கும் 2008-ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. கடந்த 2018-ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றம் இவர்களின் தண்டனையை உறுதி செய்தது.

பிரதமர் அன்றும் இன்றும்: 

குஜராத்தின் அன்றைய முதலமைச்சரும், இன்றைய இந்தியாவின் பிரதமருமான நரேந்திர மோடி சுதந்திர இந்தியாவை தலைகுனியச்செய்த இந்த இரக்கமற்ற செயலுக்காக இன்றுவரை வருத்தமோ, கவலையோ தெரிவிக்கவில்லை. 

இவர்தான் அமுதப் பெருவிழாவில் பெண் சக்தி குறித்து “இந்தியாவின்வளர்ச்சிக்கு நாம்நமது பெண்சக்திக்கு துணையாகஇருக்க வேண்டும். பெண்களுக்கு மரியாதைகொடுக்க வேண்டும். அதுவே இந்தியவளர்ச்சிக்கான தூண். நம் பேச்சிலும், செயலிலும் பெண்களின்மாண்பைக் குறைக்கும்சிறிய வெளிப்பாடுகூட இருக்கக்கூடாது. நம்தேசத்தின் மகள்கள், தாய்மார்கள் நாட்டுக்காகபெரும் பங்களிப்பைகொடுத்து வருகின்றனர். சட்டம், கல்வி, அறிவியல், காவல்துறைஎன நம்தினசரி வாழ்வின்ஒவ்வொரு துறையிலும்பெண் சக்தியின்பங்களிப்பு அளப்பரியதாகதிகழ்கிறது“, வாய்கிழியப் பேசியிருக்கிறார். பேசிய ஒலி அடங்குவதற்குள்ளே  11 பேரை குஜராத் அரசு விடுதலை செய்திருப்பதிலிருந்தே பெண்களை பிஜேபி–ஆர்.எஸ்.எஸ் கும்பல் மதிக்கும் லட்சணத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

தலைமை நீதிபதியின் வாதம்:

“பில்கிஸ் பானு வழக்கில் 11 பேரையும் விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை” என்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறுகிறார். ஆனால் ஏன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டபோது நடைமுறையில் இருந்த, 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் குற்றவாளியின் மனுவைப் பரிசீலிக்குமாறு குஜராத் அரசுக்கு உத்தரவிட்டார்? என்பது இரகசியமானது. எனவேதான்  இது குறித்து கண்டனங்களும், பொதுநல வழக்குகளும் வந்தபிறகு மத்திய அரசும், குஜராத் அரசும் 1992-ம் ஆண்டு தண்டனைக் குறைப்பு கொள்கையின் கீழ் முடிவெடுத்தது குறித்து உரிய பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறார்.

வழக்குறைஞர், ரிஷி மல்ஹோத்ராவின் வாதம்:

11 குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷ்யாம் பகவான்தாஸ் ஷா-வின் வழக்குறைஞர் ரிஷி மல்ஹோத்ரா கூறுகையில் “2008-ம் ஆண்டு இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டபோது, 2014-ம் ஆண்டில் கொள்கை உருவாக்கப்படவேயில்லை” என்கிறார். ஆனால் தண்டனை குறைப்பு குறித்த முடிவுகளின் போது, விசாரணை நீதிமன்றங்களில் குற்றம் உறுதிசெய்யப்பட்ட சமயத்தில் இருந்த கொள்கையின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கலாம் என்று 2003-ம் ஆண்டுக்குப் பிறகு, ஏராளமான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்புகள் வழங்கியுள்ளது. இதை உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பில் மீண்டும் உறுதி செய்துள்ளது” என்கிறார். சட்டத்தின்படி சரி என்றால், பிறகு ஏன் மத்திய அரசும், குஜராத் மாநில அரசும் பதிலளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது? என்பது இரசியமானது.

குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலர் (உள்துறை) ராஜ்குமாரின் வாதம்:

குற்றவாளிகள் 14 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்துள்ளனர். எனவே இது முன்கூட்டியே விடுதலை செய்வது என்ற அடிப்படையில் வராது. ஆயுள் தண்டனைக் காலம் 14 ஆண்டுகள் என்பதால், இவர்கள் விடுதலை கோரி விண்ணப்பிப்பதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். இருந்தபோதிலும் குற்றவாளிகளை 2014-ம் ஆண்டு கொள்கையின்படி விடுதலை செய்ய முடியாது எனவே மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றபோது குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட நாளில் நடைமுறையில் இருந்த கொள்கையின் கீழ் நீங்கள் முடிவு எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில்தான் 1992-ம் ஆண்டு அமலில் இருந்த கொள்கையின்படி குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதாகக் கூறுகிறார்.

இப்படி குஜராத் அரசு நீதிமன்றத்தின் மீதும், நீதிமன்றம் குஜராத் அரசின் மீதும் ஏட்டறிவும், எழுத்தறிவும் அன்ற பாமரர்கள் போல ஒருவர் மீது மற்றொருவர் பலி போட்டுத் தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

மேலும் இவ்வழக்கு சிபிஐ-ஆல் விசாரிக்கப்பட்டதால், விடுதலையை ஒன்றிய அரசு அளிப்பதா? மாநில அரசு அளிப்பதா? என்ற கேள்வி எழுந்தவுடன், உடனடியாக ஒன்றிய அரசுடன் ஆலோசனை நடத்தினோம். அதில் மாநில அரசே முடிவெடுத்து கொள்ளலாம் என்று கூறியதால்  குஜராத் அரசு 11 பேருக்கும் விடுதலை வழங்கியது என சட்டவாதம் பேசுகிறார். 

எனவே நீதிமன்றம், ஒன்றிய அரசு, குஜராத் மாநில அரசு என மூன்று அமைப்புகளும் 1992-ம் ஆண்டு அமலில் இருந்த கொள்கையின் அடிப்படையில்  இந்த 11 கோடூர்களை விடுதலை செய்யக் காரணம் என்ன?

1992-ம் ஆண்டு அமலில் இருந்த கொள்கையில் குறிப்பிட்ட குற்றங்களுக்கோ, குறிப்பிட்ட தண்டனைப் பிரிவுகளுக்கோ விடுதலை வழங்கக் கூடாது என்று குறிப்பிடவில்லை. மேலும் 14 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தால் விடுதலையைப் பற்றி பரிசீலிக்க முடியும் என்று மட்டுமே உள்ளது என்று ராஜ்குமார் கூறுகிறார். இது ஒன்றுதான் மூன்று அமைப்புகளையும் இணைக்கும் மையப்புள்ளி. அதாவது குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கான ஓட்டைகள்.

1946-ம் ஆண்டு டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டத்தின் கீழ் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் சிபிஐ-க்கு வழங்கப்பட்டுள்ளது. பில்கிஸ் வழக்கை சிபிஐ தான் விசாரித்தது. எனவே 1946-ன் கீழ் குற்றம் நிறுபிக்கப்பட்டவர்களின் தண்டனையை மன்னிக்கவோ அல்லது முன்கூட்டியே விடுதலை செய்யவோ முடியாது என்று இக்கொள்கை கூறுகிறது. ஆனாலும், மக்களைக் காக்கும் இம்மூன்று அமைப்புகளும் இச்சட்டம் குறித்து  கவலைபடவில்லை.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜூன் 10-ம் தேதி எல்லா மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில் ஆயுள் தண்டனை மற்றும் பலாத்கார வழக்குகளில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் மன்னிக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது. இவை 15 ஆகஸ்டு 2022, 26 ஜனவரி 2023 மற்றும் 15 ஆகஸ்டு 2023 என மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இவ்வளவு தெளிவாக ஒரு கடிதத்தை அதுவும் ஜூன் மாதம் அனுப்பிவிட்டு ஒன்றிய அரசும், குஜராத் மாநில அரசும் 11 பேர் விடுதலைக்கான சட்ட சிக்கல்களை கண்டறிந்து அதனை ஆராய்வதற்காக ஆலோசனை நடத்தினார்களாம். மேலும் ஒன்றிய அரசு அனுப்பியது தண்டனையை ரத்து செய்வது சம்பந்தமானது. ஏற்கனவே 14 ஆண்டுகளுக்கு மேல் தண்டனையை அனுபவித்த இந்த ஆயுள் தண்டனை மற்றும் பலாத்கார வழக்குகளில் தண்டனை பெற்ற 11 பேருக்கு ஒன்றிய அரசின் கடிகம் பொருந்தாது என்கிறார் குஜராத்தின் கூடுதல் செயலர் ராஜ்குமார்.

தீர்ப்பை ஆதரிக்கும் காவிக்கும்பல் மற்றும் வலதுசாரிகள்:

உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் 11 பேர் விடுதலையை முடிவு செய்வதற்காக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அதில் இருவர் பாஜகவின் எம்எல்ஏக்கள், ஒருவர் பாஜக முன்னாள் நகர்மன்ற உறுப்பினர், மற்றொருவர் பாஜக மகளிர் அணி உறுப்பினர், நீதிபதி மற்றும் துறைசார் அதிகாரிகள்.

குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு, கோத்ரா தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ.வான சி.கே. ரவுல் ஜி (10 பேர் கொண்ட குழுவின் ஒரு உறுப்பினர்), குற்றவாளிகள் குறித்து பேசியபோது, “தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள். அவர்கள் நல்ல கலாசாரம் கொண்டவர்கள். அவர்கள், ‘தவறான நோக்கங்களால்’ கூட தண்டனை பெற்றிருக்கலாம்” என்று கூறினார். “முடிவெடுக்கும் குழுவில் இருந்த யாரும் இந்த முடிவில் வேறுபடவில்லை” என்றும் கூறியிருக்கிறார். 

விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு சிறைச்சாலைக்கு வெளியே ஆரத்தி எடுக்கப்படுவதையும், திலகம் இடப்படுவதையும், இனிப்புகள் வழங்குவதையும், வாழ்த்துகள் கூறப்படுவதையும், காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதையும் படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளிவந்துள்ளன.

நாட்டின் விடுதலைக்காக போராடி சிறை சென்றதற்காகவா இந்த வரவேற்பு. இதனைப் பார்க்கின்ற பில்கிஸ் பானுவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும், அக்கிராமத்தில் உள்ள உறவினர்களுக்கும், இஸ்லாமிய மக்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தாதா? அச்சத்தில் பல இஸ்லாமியக் குடும்பங்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேறுவதாக செய்திகள் வந்துள்ளன. இவற்றைப் பற்றியெல்லாம் சிஞ்சித்தும் கவலைப்படாமல் எந்தவித குற்றவுணர்வின்றி இருக்கும் 11 கொலைகாரர்களை விடுதலை செய்ததற்காக நீதிமன்றமும், ஒன்றிய அரசும், குஜராத் மாநில அரசும் வெட்கி தலைகுனிய வேண்டாமா? 

இப்படி புழுத்து நாறும் இவ்விடுதலையை, வாசனை திரவியம் என நுகரும் வலதுசாரி கும்பல்கள் தமிழக தொலைக்காட்சி விவாதங்களில் எழுப்புகின்ற கேள்விகளும் – பதில்களும் கேட்பதற்கு சகிக்க முடியாதவையாக உள்ளன. 11 குற்றவளிகள் விடுதலை குறித்து பில்கிஸ் பானு எழுப்பும் கேள்விகளுக்கு இவர்களால் பதில் சொல்ல முடியுமா?

தீர்ப்பை எதிர்க்கும் முற்போக்கு சக்திகளும், ஜனநாயகசக்திகளும்:

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரை குஜராத் அரசு விடுவித்ததற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் ஆகஸ்ட் 27, அன்று பெங்களூரு, ஹைதராபாத் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் பல எதிர்ப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு இதுவரை 6000-க்கும் மேற்பட்டோர் கடிதம் அனுப்பியிருக்கின்றனர்

காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், இடசாரிகள், இஸ்லாமிய அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பெண்ணியவாதிகள், அமீரக இளவரசி என பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

11 பேர் விடுதலையை பல மாநில கட்சிகள் விமர்சித்திருந்தாலும் பிஜேபி-யின் முஸ்லீம் விரோதப் போக்கை இவர்கள் கண்டிக்கவில்லை. பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிரான பொது மனநிலை குஜராத் மக்களிடம் இருப்பதால் அதனைப் பயன்படுத்தி வெற்றி பெறலாம் என்ற கணக்குடன் களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி கட்சியோ 11 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்து வாய்திறக்கவில்லை. 

ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜூன் 10-ம் தேதி எல்லா மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தது. அதில் ஆயுள் தண்டனை மற்றும் பலாத்கார வழக்குகளில் தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் மன்னிக்கப்படக்கூடாது என்று கூறப்பட்டிருந்ததை எந்த மாநில அரசுகளும் குறிப்பாக பிஜேபி-யை எதிர்பதாக சொல்லிக்கொள்ளும் எந்தக் கட்சிகளும் வாய்திறக்கவில்லை. தமிழகத்தின் திராவிட மாடல் அரசும் இதற்கு விதிவிலக்கல்ல.

11 பேர் விடுதலை குறித்து  அமீரக இளவரசி ஹெந்த் அல் காசிமி ட்விட்டரில் பக்கத்தில், “வெறுப்பு பேச்சுகளால் கொலைகாரர்களாக, பாலியல் பலாத்கார குற்றவாளிகளாக மாறியவர்களது விடுதலை செய்தி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்குவதை பார்த்து கோபப்பட நீங்கள் பெண்ணியவாதியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இஸ்லாமோபோபியா என்பது உண்மை. இந்த அரக்கர்கள் 5 மாத கர்ப்பிணி பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து அவரது 3 வயது குழந்தையின் தலையை நசுக்கி கொன்றவர்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

USCIRF அமைப்பின் துணை தலைவர் ஆப்ரகாம் கூப்பர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2002 குஜராத் கலவரத்தின் போது கர்ப்பிணி முஸ்லீம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததற்காகவும், பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிராக கொலை செய்ததற்காகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை நியாயமற்ற முறையில் விடுதலை செய்ததை USCIRF கடுமையாக கண்டிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், USCIRF கமிஷனர், “2002 குஜராத் கலவரத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளை பொறுப்பேற்கத் தவறியது நீதியின் கேலிக்கூத்து. இது மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இந்தியாவில் தண்டனை விதிக்கும் முறையின் ஒரு பகுதியாகும்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

*****

மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தங்களது ஆட்சி அதிகாரத்தின் மூலம் பெரும்பான்மை மக்களுக்கு எதிரான பல்வேறு திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றனர். அதேபோல் ஆர்.எஸ்.எஸ்-சின் மூததையர்களான கோல்வால்கர், ஹெட்கேவர், கோட்சே ஆகியோர்களின் வழியில் பிஜேபி எனும் கட்சியை கேடயமாகப் பயன்படுத்திக்கொண்டு ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனும் அகண்ட பாரதக் கனவை நிறைவேற்றும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகின்றனர். இதனை எந்த ஓட்டுக் கட்சிகளும் குறைந்தபட்சம் தங்களது ஓட்டிற்காகவாவது வெளிப்படையாக மக்களிடம் இதுகுறித்து பிரச்சாரம் செய்வதில்லை. மேலும் பெரும்பான்மை மக்களின் ஓட்டு தங்களுக்கு கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக ஒரு வரம்புக்கு உட்பட்ட அளவில் மட்டுமே தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவிக்கின்றனர். எனவே ஓட்டுக்கட்சிகளை நம்புவதும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதும் வேறுவேறல்ல. பிற அமைப்புகள், குழுக்கள் தங்களால் முடிந்த அளவுக்கு எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர். எனினும் இது கடலில் கரைத்த பெருங்காயமாகவே உள்ளது. எனவே இந்த கார்ப்பரேட்-காவி பாசிசத்தை எதிர்த்து மோத வேண்டுமானால் இந்திய அளவில் ஒன்றுபட்ட கட்சியை கட்டியமைப்பது முன்நிபந்தனையாகும். இதனை உணர்ந்து முற்போக்கு சக்திகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து மக்களை இக்காவிக்கும்பலுக்கு எதிராக அணிதிரட்டாமல்  வீழ்த்தமுடியாது.

 

செய்திஆதரங்கள்:

‘Wrong; Very Bad Precedent Set’: Judge Who Convicted 11 Men in Bilkis Bano Case on Their Release

‘Justice for Bilkis’: In Protests Across India, a Singular Demand

Understanding the Remission Policy That Led to the Release of Bilkis Bano’s Rapists

Bilkis Has Struggled Long Enough. The Fight for Justice Is Now India’s Burden to Discharge.

பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கு: 11 குற்றவாளிகளை விடுவிக்க சட்டம் வளைக்கப்பட்டதா?

குஜராத் பில்கிஸ் பானோ வழக்கு: “என் நிம்மதி மற்றும் அச்சமற்ற வாழ்வுக்கான உரிமையைத் திருப்பிக் கொடுங்கள்” பில்கிஸ் பானோ அறிக்கை

பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு: குற்றவாளிகள் நுழைந்ததை கொண்டாடிய கிராமத்தினர் – கள நிலவரம்

பில்கிஸ் பானு வழக்கு | குஜராத் அரசுக்கும், மத்திய அரசுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

பில்கிஸ் பானு வழக்கு.. 11 குற்றவாளிகள் விடுதலை ஏன்? குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

பில்கிஸ் பானு வழக்கு: குஜராத், மத்திய அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

பில்கிஸ் பானு வழக்கு.. 11 கொலையாளிகளை விடுதலை செய்த பின்னணியில் பாஜக எம்எல்ஏக்கள்- ப.சிதம்பரம்

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன