விநாயகர் சதூர்த்தி: மதப் பண்டிகையல்ல மக்களைப் பிரிக்கும் அரசியல் சதி

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் கும்பல் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வேலை செய்வதில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் அதன் பிரத்யேகத் தன்மைக்கு ஏற்றவாறு மக்களைப் பிரித்து கலவரம் செய்வதை அவர்கள் திட்டமிட்டு செயல்படுத்திவருகிறார்கள். அந்த வகையில் தமிழகத்தைப் பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியைப் பயன்படுத்தி கலவரச் சூழலை உருவாக்குவதை அவர்கள் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை 1983-லிருந்து இந்து முன்னணி நடத்திவருகிறது. அன்று முதல் இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டாலே முத்துப்பேட்டை, சென்னை திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் கலவரச் சூழலை உருவாக்கிவிடுகிறார்கள். ஒவ்வொரு தெருவிலும் விநாயகர் சிலையை வைப்பது தொடங்கி, கடைசியில் சிலையை ஊர்வலமாகக் கொண்டுசென்று கரைப்பது வரை அப்பகுதி மக்களை பதற்றத்துடனே வைத்திருக்கின்றனர். மசூதி இருக்கும் தெரு வழியில் சிலையைக் கொண்டு செல்வது, இஸ்லாமிய எதிர்ப்பு கோஷமிடுவது, மசூதிக்குள் கல்லெறிந்து பிரச்சனை செய்வது என காவிகளின் அராஜகம் இன்றும் தொடர்கிறது.

 

புஷ்பா விநாயகர்

 

இவ்வாறு மசூதி வழியாகவும், இஸ்லாமியர் குடியிருப்பு வழியாகவும் ஊர்வலம் போய் பிரச்சனை செய்வதைத் தங்களது பிறப்புரிமை போல இந்து முன்னணி உள்ளிட்ட காவிக் கும்பல் கருதுகிறது. அவ்வாறு ஊர்வலம் போக போலீசு அனுமதி மறுக்கும் போது தங்களது மதச் சுதந்திரம் பறிபோய்விட்டதாக கூக்குரலிட்டு, நீதிமன்றம் வரை போய் வாதிடுகிறது.

இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தியைக் கையில் எடுப்பதற்கு முன்புவரை, அது மக்களின் தனிப்பட்ட நம்பிக்கையாகவும், விருப்பமாகவும் இருக்கும் வரை, இவ்விழாவினால் மக்களிடம் பதற்றமோ, பொது இடங்களில் அமைதியின்மையோ ஏற்படவில்லை. மேலும் மக்கள் லட்சகணக்கில் பெருந்திரளாகப் பங்கெடுக்கும் மதுரை சித்திரைத் திருவிழாவோ, திருவண்ணாமலை கிரிவலமோ, பழனி பாதயாத்திரையோ எந்தப் பதற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் 1983-ல் சென்னை தி.நகரில் உள்ள அயோததியா மண்டபம் பகுதியில் தான் முதன் முதலில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது. இந்த இடத்தின் பெருமையை தனியாக குறிப்பிட்டுத்தான் வாசகர்கள் தெரிந்துகொள்ள முடியும் என்ற அவசியமில்லை என்று கருதுகிறோம். அதனைத் தொடர்ந்து திருவல்லிக்கேனி, சவுக்கார்பேட்டை என விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

 

இதில் திருவல்லிக்கேனி கலவரத்திற்கு பிறகுதான் மக்களிடம் பதட்டமும், பொது அமைதி கெடுவதும் நடந்தேறியுள்ளது. இந்த கலவரத்தை ஒட்டி நடந்த வழக்கில் மக்கள் கலை இலக்கிய கழகமும் ஒரு வாதியாக சேர்க்கப்பட்டது. “பொது இடங்களில் சிலைகளை வைப்பது மத நடவடிக்கை கிடையாது மாறாக இது ஒரு அரசியல் நடவடிக்கை” எனவே இதனை அனுமதிக்கக் கூடாது என அன்று மகஇக வாதிட்டது அதனடிப்படையில் இது ஒரு அரசியல் நடவடிக்கை தான் என்பது அன்றைய தீர்ப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து முன்னணி என்பது மதுரை ஆதினம், காஞ்சி சங்கரமடம் போன்று மதத்தை அடிப்படையாக கொண்ட அமைப்பு கிடையாது. இது தனது பெயரில் இந்து என வைத்துக் கொண்டாலும் அதன் சித்தாந்தம் மத்தின் பெயரால் மக்களைப் பிரித்து அரசியல் அதிகாரத்தை அடையத் துடிக்கும் ஆர்.எஸ.எஸ்-சின் பாசிச சித்தாந்தமாகும்.

எனவே இந்து முன்னணி மத அமைப்பு கிடையாது என்பதும், அது முன்னெடுக்கும் விநாயகர் ஊர்வலம் ஒரு மத விழா அல்ல என்பதும் தெளிவாகிறது. பிறகு எதற்காக இவ்விழா தொடர்ந்து கொண்டாட அனுமதிக்கப்படுகிறது. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள் என்ற அடிப்படையில் ஓட்டுக்கட்சிகள் தங்களது வாக்குகளை இழந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக இதனை தொடர்ந்து அனுமதித்து வருகின்றனர்.

 

கலவர விநாயகர்

 

இதனை அரசியல் நடவடிக்கை எனத் தெரிந்தும் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் தொடர்ந்து அனுமதித்து வருவது சர்வ நிச்சயமாக மக்களிடம் பிளவையும், கலவரத்தையும் ஏற்படுத்துவதாகவே அமையும் என்பது திண்ணம்.

1981-ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தில் பட்டியலினத்தை சேர்ந்த 180 குடும்பங்கள் இஸ்லாத்திற்கு மாறியதைத் தொடரந்து அஙகே ஒரு கலவரத்தை நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து 1982-ல் குமரியில் உள்ள மண்டைக்காடு எனும் ஊரில் விநாயகர் விழாவை ஒட்டி கிரிஸ்துவ மீனவர்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே கலவரத்தை நடத்தினார்கள்.

இப்படி மதங்கலவரங்களை நடத்துவதைத்தான் மத நடவடிக்கை எனக் கூறி மற்ற மதத்தினருக்கு பிரச்சாரம் செய்வதற்கும், தொழுகை நடத்துவதற்கும் அனுமதித்ததுபோல் தங்களையும் பொது இடங்களில் அனுமதி வேண்டும் என வம்புக்கு இழுக்கிறார்கள். இது அடிப்படையில் இந்துமதத்தை காப்பதற்காகவோ, பரப்புவதற்காகவோ ஏற்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல என்பதை நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இருப்பினும் இதனை ஒரு மந்திரம் போல மீண்டும் மீண்டும் இந்து முன்னணியினர் கூறிவருகின்றனர்.

எனவே உண்மையில் மதநம்பிக்கை கொண்டவர்கள், விநாயக பக்தர்கள் இவர்களை இனங்கண்டு ஒதுக்கிவைக்க வேண்டும் எனக் கோருகிறோம். அவ்வாறு ஒதுக்கி வைக்கும் பொழுதுதான் மண்டைக்காடு கலவரம் போன்று மீண்டும் ஒரு கலவரம் தமிழகத்தில் நடைபெறாமல் தடுக்கமுடியும்.  

– ஞானதேசிகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன