சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

ஆர்.எஸ்.எஸ்.ன் மண்டல அலுவலகமாக மாறும் ராஜ்பவன்

ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா ராஜ்பவன் மாளிகையில் ராம் கதா என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார். அந்நிகழ்ச்சியில் ராமாயணத்தை தினமும் மாலை மூன்று மணிநேரம் போதிப்பதாகவும் அதற்காக துறவி விஜய் கவுசல் என்ற முன்னாள் ஆர் எஸ் எஸ் பிரச்சாரக்கை ஏற்பாடு செய்துள்ளார் ஆளுநர். கவர்னரும் முன்னாள் பிரச்சாரக் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் இரண்டு பிஜேபி நாடாளூமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டுள்ளனர். அரசு மாளிகையில் மத நிகழ்ச்சிகளை நடத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என பல அமைப்புகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ராஜஸ்தானில் ஆட்சியிலுள்ள காங்கிரஸ் அரசாங்கமோ இது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிகழ்ச்சி பற்றிய விளம்பரத்தை மாநில செய்தித் தொடர்புத் துறையே வெளியிட்டுள்ளது. மோடி-அமித் ஷா ஆட்சியில் ஆளுநர் அலுவலகங்கள் ஆர் எஸ் எஸ்-பிஜேபி ன் திட்டங்களை அமல்படுத்தக்கூடிய மண்டல அலுவலகங்களாக செயல்படுகின்றன. ராஜஸ்தான் மாநிலத்திற்கு கல்ராஜ் மிஸ்ரா என்றால் தமிழகத்திற்கோ ஆர். என். ரவி என்ற ஆர் எஸ் எஸ் கைக்கூலி.

 

தமிழக ஆளுநரான ரவி தான் போகும் இடமெல்லாம் ஆர் எஸ் எஸ் கருத்துக்களையே பேசிவருகிறார். திராவிடம் என்பது வெறும் நிலப்பரப்பை மட்டுமே குறிப்பது ஆரிய-திராவிட வேறுபாடே கிடையாது, தீரன் சின்னமலை உண்மையான சனாதனவாதி, திருக்குறள் கடவுளைப் பற்றி பேசுகிறது ஆனால் அதற்கு விளக்கம் எழுதிய ஜி.யு. போப் அதை மறைத்துவிட்டார் என்று தினமும் புதுப்புதுக் கதைகளை சொல்லி வருகிறார். இராமயணத்திலிருந்து திருக்குறள் வரை இவர்கள் சொல்லும் கதைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. மாநிலங்களின் ஆளுநர்கள் என்ற பெயரில் வந்தமர்ந்துகொண்டு தங்களது பார்பனிய மேலாதிக்கத்திற்காக செயல்பட்டு வருகின்றனர்.


சாவர்கரின் புல் புல் சவாரி

பள்ளி கல்லூரி பாட புத்தகங்களில், வரலாற்றைத் திரித்து இந்துத்துவக் கருத்தியலைப் புகுத்தும் வேலையை காவி பாசிச கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது.  அந்த வகையில் மன்னிப்புக் கடித புகழ் சவார்க்கரைப் புகழும் வகையில் எட்டாவது பாடபுத்தகத்தில் ஒரு பகுதியை கர்நாடக மாநில பிஜேபி அரசாங்கம் சேர்த்துள்ளது.

அதில் ‘ஒரு சிறு துளை கூட இல்லாத சிறை அறையில் தான் சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால், ஒவ்வொரு நாளும் புல்புல் பறவை சாவர்க்கர் அறைக்கு வரும். தாய்நாட்டை பார்ப்பதற்கு அப்பறவையின் இறக்கைகளில் அமர்ந்து பறந்து செல்வார்’ என குறிப்பிடப்படுள்ளது.

முற்றிலும் உண்மைக்கு மாறாக உள்ள இப்பகுதியை நீக்குமாறு பலதரப்பிலிருந்தும் கோரிக்கைகள் வலுத்துள்ளன. சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆர்.எஸ்.எஸ் காரனான விக்ரம் சம்பத் கூட, ‘பாடப்புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது உண்மைக்கு மாறானது’ என்று கூறியுள்ளான். ஆனால் கார்நாடக மாநில பள்ளி கல்வி அமைச்சரோ, ‘சாவர்க்கரை எவ்வளவு மிகைப்படுத்திக் கூறினாலும் அவரது தியாகத்திற்க்கு ஈடாகாது’ என்று பேசியுள்ளார். அதேவேளையில் திப்பு சுல்தான், பெரியார், பகத்சிங்க், பசவன்னா, நாராயணகுரு ஆகியோர் பற்றிய பாடங்களை நீக்குவது அல்லது அளவினை குறைக்கும் வேலையில் கர்நாடக பிஜேபி அரசு இறங்கியுள்ளது.

 

சாவர்க்கர் ஒரு கோழை. பிரிட்டீஷ் அரசுக்கு எதிராக போராடப்போவதில்லை என்று பல மன்னிப்புக்கடிதங்கள் எழுதி உயிர்பிச்சை பெற்று பிரிட்டீஷ் அரசுக்கு ஆதரவாக வேலை செய்த ஒரு ஏகாதிபத்திய கைக்கூலி. இந்துத்துவா என்ற பாசிசக் கொள்கையை முன்வைத்த மக்கள் விரோதி. இத்தகைய கேடுகெட்ட பண்புகளைக் கொண்ட ஒருவனை உத்தமனாக முன்நிறுத்தும் பிஜேபி  பிரிட்டீஷாரை சமரசமின்றி எதிர்த்த போராடிய திப்புவையும், பகத் சிங்கையும், சாதி ஒழிப்பு பெண்விடுதலைக்காகப் பாடுபட்ட பெரியாரையும் பாடபுத்தகத்திலிருந்து நீக்குவதிலிருந்தே ஆர் எஸ் எஸ் – பிஜேபி கும்பலின் யோக்கியதையை நாம் புரிந்து கொள்ளலாம்.   

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன