முதலாளிக்கு கொடுத்தால் ஊக்கத்தொகை அதுவே மக்களுக்குக் கொடுத்தால் இலவசமா?

மக்களின், சிறு சேமிப்பையும் கூட ஜி.எஸ்.டி என்ற பெயரில் பறித்துக் கொண்டு மறுபுறம் அம்பானி அதானி உள்ளிட்ட தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வரிச் சலுகை, கடன் தள்ளுபடி, மானியங்கள் என வாரிக் கொடுத்துவிட்டு, மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதால்தான் நாட்டின் முன்னேற்றம் தடைபடுக்கிறது என்று கூறுவது அயோக்கியத்தனம் இல்லையா?

“இலவசங்களும் மானியங்களும் மூலதன செலவீனங்களுக்குத் தடையாகவும் எதிர்கால பொருளாதாரத்தைச் சீரிழிப்பதாகவும், நம் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதிப்பதாகவும் நேர்மையாக வரி செலுத்துவோருக்குச் சுமையாகவும் உள்ளன. இதனால் நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை; இந்திய நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும்” என்று பாசிச மோடி ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளிலும் கர்ஜித்து வருகிறார்.

பாசிச ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலும் “மாநில ஆளும் கட்சிகள் தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக அவ்வப்போது மின்சாரம் இலவசம், போக்குவரத்து இலவசம், பெண்களுக்கான, முதியோருக்கான உதவித்தொகை, டி.வி, கிரைண்டர், மிக்சி, இலவசம் போன்ற அறிவிப்புகளும் மேற்கண்ட தடையை, பாதிப்பை, சுமையை அதிகரிக்கவே செய்கிறது“ என்று கூப்பாடு போடுகின்றன.

 

 

இவை போதாதென்று பா.ஜ.க.வின் அஸ்வினி உபாத்தியாய் என்பவரும் இலவசங்களுக்காக மக்களின் வரிப்பணத்தை முறையற்ற வகையில் செலவு செய்யும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கையும் தொடுத்துள்ளார்.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா இதற்கெல்லாம் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை இரத்து செய்வது ஜனநாயக விரோதம் என்று கூறி நிராகரித்துள்ளார். இருப்பினும், இலவசங்கள் வேறு நலத்திட்டங்கள் வேறு என்றும் இலவசங்களை முறைப்படுத்தவில்லை என்றால் பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்றும் ‘எச்சரித்துள்ளார்’.

இலவசங்களுக்கு இவர்கள் விடும் கர்ஜனை, எச்சரிக்கை, அச்சுறுத்தல் எல்லாம் முழு பூசணியை சோற்றில் மறைக்கும் அயோக்கியத்தனமாகும்.

மூலதன செலவீனங்கள் என்பது அரசு – பொதுத்துறை நிறுவனங்களை, அதன் சொத்துக்களைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் பயன்படுத்தப்படும். இவை அனைத்தையும் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளித்தரும்போது, பராமரிக்கவும் மேம்படுத்தவும் என்ன இருக்கிறது.

இந்த உண்மையை மூடி மறைத்துவிட்டு மூலதன செலவீனங்களுக்கு இலவசங்களும் – மானியங்களும் தடை என்று கர்ஜிப்பது அயோக்கியத்தனம் இல்லையா! என்ன செய்வது? மக்களின் மறதிதான் இவர்களை இப்படிப் பேச வைக்கிறது.

மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்றவற்றைப் புறக்கணித்து, அவற்றிற்கான நிதியைப் படிப்படியாக குறைத்து வருகிறது. விலைவாசி உயர்வினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின், சிறு சேமிப்பையும் கூட ஜி.எஸ்.டி என்ற பெயரில் பறித்துக் கொண்டு மறுபுறம் அம்பானி அதானி உள்ளிட்ட தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வரிச் சலுகை, கடன் தள்ளுபடி, மானியங்கள் என வாரிக் கொடுத்துவிட்டு, மக்களுக்கு இலவசங்கள் வழங்குவதால்தான் நாட்டின் முன்னேற்றம் தடைபடுக்கிறது என்று கூறுவது அயோக்கியத்தனம் இல்லையா?  

பெருவாரியான மக்களின் உழைப்பால், உதிரத்தால் பொருளாதாரம் வளரும்போது அதற்கேற்ப மக்களின் வாழ்வாதரம் உயர்ந்திருக்க வேண்டும் அல்லவா? பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமான பெருவாரியான மக்களுக்கு விலைவாசி உயர்வையும், வரிச்சுமையையும் ஏறக்குறைய 60% வரை ஏற்றியுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைக்காக வழங்கப்படும் மானியங்களையும் 50% வரை பறித்துவிட்டது. இதன் மூலம் இருப்பதையும் பிடுங்கி அனைவரையும் வறுமையில் தள்ளி வருகிறது.

 

 

பொருளாதார வளர்ச்சிக்கு உதவாத, உழைக்காத கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 30% லிருந்து 22% ஆகக் குறைத்தும் அவர்களின் கல்லாவில் 1.84 இலட்சம் கோடி ரூபாயை நிரப்பியுள்ளது. மேலும் வங்கிக் கடன் இரத்து, வரித் தள்ளுபடி, அந்நிய செலவாணி சலுகை என்ற பெயரில் கடந்த 8 ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய 10 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அள்ளிக் கொடுத்துள்ளது.

என்ன அருமையான பங்கீடு; பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பை, உதிரத்தைச் சிந்திய மக்களிடமிருந்து பறித்து; உழைக்காத கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் பங்கீடு.

இந்த முறைகேடான பங்கீட்டை – ஒரு கண்ணில் சுண்ணாம்பையும், மறு கண்ணில் வெண்ணையையும் வைக்கும், இந்த வக்கிரத்தைத் தடுக்காமல் அங்கீகரிப்பதன் மூலம் பொருளாதாரப் பேரழிவோ, இலங்கையைப் போல திவாலோ ஆகாதா?

இவற்றில் மட்டும் வாய்மூடி மெளனியாக இருக்கும் நீதிமன்றமும் ரிசர்வ் வங்கியும் இலவசங்களால் மட்டும் பேரழிவும் திவாலும் ஆகும் என்று கூறுவது அயோக்கியத்தனம் இல்லையா?

மேலும், இவர்கள் அனைவரும் கார்ப்பரேட்டுகளுக்கான வரித் தள்ளுபடியை, கடன் தள்ளுபடியை, வரிச் சலுகை, ஊக்கத்தொகை என்று கெளரவப்படுத்துவதை அங்கீகரிக்கின்றனர். மக்களுக்கு அளிக்கப்படும் சலுகையை இலவசங்கள் என்று கேவலப்படுத்துவதை, அசிங்கப்படுத்துவதைப் பற்றி கவலைப்படுவது இல்லை. குறைந்தபட்சம் கண்டனம் கூட தெரிவிப்பது இல்லை. காரணம் வர்க்கப் பாசம்!

மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன