ஸ்டெர்லைட் படுகொலை விசாரணை ஆணைய அறிக்கை – மக்கள் அதிகாரம் பத்திரிக்கைச் செய்தி

எய்தவரை விட்டு அம்பை நோகும் ஸ்டெர்லைட் படுகொலை விசாரணை ஆணைய அறிக்கை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு “போலீசார் நடத்திய கொடூரமான செயல்”, “காக்கை – குருவிகளைப் போல மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்” எனக் கூறி அது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், நான்கு ஆண்டுகால விசாரணைக்குப் பிறகு, தனது அறிக்கையை நேற்று (ஆகஸ்டு 18) தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்துள்ளது. 3000 பக்கங்களுக்கும் அதிகமான இவ்வறிக்கை, ஐந்து பாகங்களாக உள்ளது. அதிலிருந்து சில முக்கியமான அம்சங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

 

கடந்த 2018ம் ஆண்டு தூத்துகுடியில் செயல்பட்டு வந்த நாசகர ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 100 நாட்கள் தொடர்ந்து போராடியும் அரசு மக்களின் கோரிக்கைக்குச் செவி கொடுக்காததால், 2018 மே 22 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமைதியான முறையில் முற்றுகையிட்டுப் போராடுவது என முடிவு செய்து ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர்.

இந்தப் போராட்டத்தை எப்படியாவது முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனத் திட்டமிட்டுக் காத்திருந்த அரசு, போலீசை அவிழ்த்துவிட்டு மக்கள் மீது தடியடி தாக்குதல் தொடுத்தது. இதனால் ஏற்பட்ட குழுப்பத்தைப் பயன்படுத்தி போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 15 போராளிகளைப் படுகொலை செய்தது. அதனைத் தொடர்ந்து போலீசு நடத்திய வன்முறையில் நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

அதுமட்டுமன்றி அடுத்த ஒரு வாரத்திற்கு தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதும் போலீசு தனது அராஜக ஆட்சியை அமுல்படுத்தியது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடத்தி, கைது செய்யப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டனர். போலீசின் அராஜகம் வெளிவராமல் தடுக்க ஒருவார காலத்திற்கு அம்மாவட்டம் முழுவதும் இணைய சேவை முடக்கப்பட்டது.

துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்திப் பேசிய அன்றைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, போராட்டத்திற்குள் சமூக விரோதிகள் புகுந்து கலவரம் செய்ததால் போலீசார் தற்காப்புக்காகச் சுட்டதாக கூறினார். அதனைத் தொடர்ந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஸ்டெர்லைட் போராட்டத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவியதால்தான் வன்முறை, துப்பாக்கிச்சூடு நடந்ததாக பிரச்சாரம் செய்தது. நடிகர் ரஜினிகாந்த்தும் பாஜகவின் இதே பொய் பிரச்சாரத்தை செய்தியாளர் சந்திப்பில் வழிமொழிந்தார்.

 

 

ஆனால் தற்போது வெளிவந்துள்ள விசாரணை அறிக்கையில் “எவ்வித ஆத்திரமூட்டலும் இல்லாத நிலையிலும் போராட்டக்காரர்களை, போலீசார் மறைந்து இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.” என்றும் “எந்த ஒரு போலீசாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை” என்றும் “கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. போலீசார் தங்களது வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்“ என்றும் கூறப்பட்டுள்ளது.

“துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதற்கு முன்பு எச்சரிக்கை செய்வது, கண்ணீர்ப்புகை குண்டுகள் பயன்படுத்துவது, தடியடி, தண்ணீர் பீரங்கிப் பிரயோகம், வானத்தை நோக்கிச் சுடுவது என்று எந்த நடைமுறையையும் பின்பற்றவில்லை”, “கலைந்து ஓடியவர்கள் மீதும் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.” என்று கூறியுள்ள நீதிபதி “துப்பாக்கி குண்டு எங்கிருந்து வருகிறது என்பது தெரியாமலேயே போராட்டக்காரர்கள் சிதறி ஓடினர்.” என்றும் கூறியுள்ளார்.

போராட்டத்தின் முன்னணியாளர்களைக் குறிவைத்தே இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றுள்ளது என்பதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக “தொலைவில் இருந்து சுடக்கூடிய துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, உடற்கூராய்வு சோதனையில் உறுதியாகியுள்ளது.” என்றும் “ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது, அருகில் இருந்த ஹெரிட்டேஜ் பூங்காவில் ஒளிந்துகொண்டு போலீசார் போராட்டக்காரர்களின் மீது சுட்டுள்ளனர்.” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

மேலும் “சுடலைக்கண்ணு எனும் போலீஸ்காரர் மட்டும் 17 ரவுண்ட் சுட்டுள்ளார்.” “இவர் ஒருவரை மட்டும் 4 இடங்களில் வைத்து சுட வைத்ததன் மூலம், அவரை அடியாள் போல போலீசு பயன்படுத்தியுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு கொடுத்தது யார் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் “துணை தாசில்தார்கள் சேகர், சந்திரன், கலால் அலுவலர் கண்ணன் ஆகியோரைக் கூடவே வைத்துக் கொண்டு போலீசார் விருப்பம்போல உத்தரவு பெற்றுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பற்றிக் கூறுகையில் “தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை தொடக்கம் முதலே மிக அலட்சியமாக அணுகியுள்ளார் அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன். அவர் வீட்டில் இருந்துகொண்டே சமாதான கூட்டத்திற்கு தலைமை தாங்க உதவி ஆட்சியரை அனுப்பியுள்ளார்.

ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடந்த அன்று தனது பொறுப்புகளை தட்டிக் கழித்துவிட்டு ஆட்சியர் கோவில்பட்டியில் இருந்துள்ளார். எவ்வித யோசனையும் இல்லாமல் முடிவுகளை எடுத்துள்ளார்.” என்றும் கூறப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இது போலீசுத் தலைமையின் அப்பட்டமான தோல்வி எனக் குறிப்பிட்டுள்ளதோடு அப்போதைய தென்மண்டல ஐ.ஜி. சைலேஷ் குமார் யாதவ், நெல்லை சரக டி.ஐ.ஜி, தூத்துக்குடி எஸ்.பி உள்பட 17 போலீசார் மீது கிரிமினல் மற்றும் துறைசார்ந்த நடவடிக்கை எடுக்க நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களைப் படுகொலை செய்த போலீசார் அதற்கு பின்னணியில் இருந்து இயக்கிய அரசு அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து, அவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

தூத்துக்குடி மக்களின் அமைதியான போராட்டத்தை போலீசார் எவ்வாறு வன்முறையைக் கொண்டு ஒடுக்கினார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ள இந்த விசாரணை அறிக்கை, படுகொலைக்கான பழி முழுவதையும் போலீசின் மீதும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் தலையிலும் சுமத்துகிறது. ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் இந்தப் படுகொலைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளது.

இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்பதற்கு பதிலாக போலீசின் நிர்வாகத் திறமையின்மை என்று கூறுகிறது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த போலீசு உயர் அதிகாரிகளான மதுரை ஐஜியையும், திருநெல்வேலி டிஐஜியையும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் மத்தியில் தனியே விட்டுவிட்டு, தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மகேந்திரனும், திருநெல்வேலி எஸ்.பி. அருண் சக்தி குமாரும், சுடலைக்கண்ணு உள்ளிட்ட போலீசுக் கூலிப்படையுடன் பொதுமக்களைச் சுட்டுக்கொண்டிருந்ததை நிர்வாகத் திறமின்மை என்று நியாயப்படுத்த முடியுமா?

 

 

இதே எஸ்.பி. மகேந்திரன், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற மறுதினம், தூத்துக்குடி அண்ணா நகர் பகுதியில் படுகொலையைக் கண்டித்துப் போராடிய இளைஞர்கள் மீது தனது பாதுகாவலரின் துப்பாக்கியைப் பிடுங்கிச் சுட்டு இளைஞர் ஒருவரைப் படுகொலை செய்ததை போலீசுத் தலைமையின் தோல்வி எனக் கூற முடியுமா?

போராட்டம் நடந்த அன்று மக்களைச் சந்தித்துப் பேச வேண்டிய ஆட்சியர் ஓடி ஒளிந்து கொண்டதும், துணை தாசில்தார்களைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு இடத்திலும் துப்பாக்கிச் சூட்டிற்கு உடனடியாக உத்தரவு பெற்றதும் இது திட்டமிட்ட படுகொலை என்பதைக் காட்டவில்லையா?

இராணுவம், மற்றும் துணை இராணுவப் படைகளில் எதிரி நாட்டு வீரர்கள் மீது  பயன்படுத்தும் துப்பாக்கியை, பொதுமக்கள் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு  ஏற்கெனவே திட்டமிட்டு கொண்டு வந்ததும், தொலைதூரத்திலிருந்து சுடும் அந்த துப்பாக்கியை பயன்படுத்த பயிற்சி பெற்ற போலீசான சுடலைக்கண்ணுவை அடியாள் போலப் பயன்படுத்தியதும் எதற்காக?

இந்தக் கேள்விகளுக்குள் எல்லாம் விசாரணை ஆணையம் செல்லவே இல்லை, சென்றிருந்தால் இந்தப் படுகொலையில் ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் உள்ள பங்கு அம்பலமாகிவிடும் அதனால் அதனைக் கவனமாக தவிர்திருக்கிறார்கள்.

தமிழக அரசே:

  • அமைதியாகப் போராடிய மக்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்த போலீசார் மீதும், துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரின் மீதும் உடனே கொலை வழக்கு பதிவு செய்து, விசாரணை கமிட்டி அறிக்கையின் படி தண்டனை வழங்கு!
  • எந்தவித சமூக அக்கறைமின்றியும், ஸ்டெர்லைட் பற்றிய ஆய்வோ அடிப்படை ஆதாரமோ இல்லாமல் போராடிய மக்களையும் அமைப்புகளையும் சமூக விரோதிகள் எனவும் சமூக விரோத அமைப்புகள் எனவும் வதந்தி பரப்பி ஊடகங்கள் வாயிலாக மக்களிடையே பேசு பொருளாக்கி, போராடிய மக்களுக்கு எதிரான மனோநிலையை ஏற்படுத்தி மக்களை இழிவுசெய்த நடிகர் ரஜினிகாந்தையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து அவரின் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்!
  • ஸ்டெர்லைட் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் போலிசின் தடியடி தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கிடு!
  • தூத்துக்குடி பகுதியில் ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய்க்கு ஆளான அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்கிடு!
  • தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் இயற்றி உடனே செயல்படுத்து!

மக்கள் அதிகாரம்

தோழர் முத்துக்குமார்
மாநில செயலாளர்,
தமிழ்நாடு – 9790138614

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன