குஜராத் படுகொலை – கொலைகாரர்கள் விடுதலை, பார்ப்பனர்கள் தவறு செய்யமாட்டார்களாம்.

குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் இருந்த கோத்ராவின் பாஜக எம்.எல்.ஏ.விடம் இது குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட போது, “அவர்கள் அனைவரும் பிராமணர்கள், எனவே அவர்கள் தவறு எதுவும் செய்திருக்க மாட்டார்கள் அப்படியே அவர்கள் ஏதாவது செய்திருந்தாலும் கூட அதற்கு தகுந்த காரணம் இருக்கும் அதனால்தான் அவர்களது விடுதலைக்குப் பரிந்துரைத்தோம்.” என்று கூறியிருக்கிறார்.

குஜராத் இனஅழிப்பு கலவரத்தின் போது இஸ்லாமியர்களைக் கொன்றுகுவித்த, இஸ்லாமிய பெண்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 11 கொலைகாரர்கள் அம்மாநில அரசால் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பில்கிஸ் பானு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த இந்த 11 பேரும் 75வது சுதந்திர தினத்தன்று வெளியே வந்துள்ளனர்.

2002ம் ஆண்டு கோத்ரா சம்பவத்திற்கு பிறகு இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலில் பில்கிஸ் பானுவும் அவரது உறவினர்களும் அவர்களது அண்டை வீட்டாராலேயே தாக்கப்பட்டனர். அதில் பில்கிஸ் பானுவின் 2½ வயதுக் குழந்தை உட்பட 14 பேர் கொல்லப்பட்டனர்.

ஆர்.எஸ்.எஸ்.சின் பாசிச சித்தாந்தத்தால் தூண்டப்பட்டு, மதவெறி போதை தலைக்கேறியிருந்த இந்த ஈவு இரக்கமற்ற கொலைகாரர்கள் பானுவின் பிஞ்சுக் குழந்தையின் தலையைப் பாறையில் அடித்துக் கொன்றனர். 5 மாத கர்ப்பிணியாக இருந்த பானு கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டார்.

 

 

கேட்கவே பயங்கரமாக இருக்கும் இந்தப் படுபாதகச் செயலைச் செய்த இந்த காட்டுமிராண்டிகள் தண்டிக்கப்படுவதற்கு பில்கிஸ் பானு பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.

நெருப்பாற்றில் நீந்திக் கடப்பது என்று கூறுவார்கள், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, தன் கண்முன்னே படுகொலைகளை நிகழ்த்திய கொலைகாரர்கள் தண்டிக்கப்பட வேண்டி பானு உண்மையிலேயே நெருப்பாற்றை நீந்திக் கடந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

2002ல் படுகொலைக்குப் பிறகு உடனடியாக தேசிய மனித உரிமை ஆணையத்தை பானு அனுகினார். உச்சநீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. ஆனால் குற்றவாளிகளைக் 2004ம் ஆண்டுவரை சி.பி.ஐ. கைது செய்யவே இல்லை. அதற்குப் பிறகும் வழக்கு விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாகப் பிணையில் வெளிவந்தனர்.

தடையங்களை அழிப்பதிலும், சாட்சிகளை மிரட்டுவதிலும் போலீசும், இதர அரசு அதிகாரிகளும் தீவிரமாக இருந்தனர். இதற்கிடையில் வழக்கிலிருந்து பின்வாங்குமாறு பில்கிஸ் பானு பலமுறை மிரட்டப்பட்டார்.

 

 

ஆனால் இதற்கெல்லாம் அஞ்சாமல் பானு உறுதியாக போராடினார். அகமதாபாத்தில் நடைபெற்றுவந்த வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்ற பானுவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு வழக்கை மும்பைக்கு மாற்றிய பிறகே வழக்கில் உண்மையான விசாரணை நடைபெற்றது.

2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மும்பை சி.பி.ஐ. நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகு தண்டிக்கப்பட்ட கொலைகாரர்கள்தான் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ராதேஷியாம் ஷா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தனக்கு மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி தொடுத்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் அது குறித்து முடிவெடுக்கும் உரிமை குஜராத் மாநில அரசுக்கே உள்ளது எனத் தீர்ப்பளித்தது. அதற்கு பிறகு அம்மாநில அரசால் அமைக்கப்பட்ட கண்துடைப்புக்குழுவின் ஏகோபித்த முடிவின்படி குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குற்றவாளிகளை விடுதலை செய்ய பரிந்துரைத்த குழுவில் இருந்த கோத்ராவின் பாஜக எம்.எல்.ஏ.விடம் இது குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட போது, “அவர்கள் அனைவரும் பிராமணர்கள், எனவே அவர்கள் தவறு எதுவும் செய்திருக்க மாட்டார்கள் அப்படியே அவர்கள் ஏதாவது செய்திருந்தாலும் கூட அதற்கு தகுந்த காரணம் இருக்கும் அதனால்தான் அவர்களது விடுதலைக்குப் பரிந்துரைத்தோம்.”  என்று கூறியிருக்கிறார்.

 

கோத்ரா பாஜக எம்.எல்.ஏ. ராகுல்ஜி

 

இதுதான் ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பல் அமைக்க போவதாக கூறும் இந்துராஸ்டிரத்தின் யோக்கியதை. பார்ப்பனன் கொலையே செய்திருந்தாலும் அவனை தண்டிக்க முடியாது எனும் வர்ணாஸ்ரம தர்மத்தை அமுல்படுத்துவதன் மூலம் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை நிலைநாட்டி, ஏனைய அனைத்து சாதிகளுக்கும் மேலாக நின்று பார்ப்பனர்கள் ஆட்சி செய்வதே இந்துராஷ்டிரம். அதை சாதிக்கத்தான் ஆர்.எஸ்,எஸ். பூனூல் கும்பல் கனவு காண்கிறது.

தங்களுக்கு  எதிரான வழக்கில், குற்றப்பத்திரிக்கை கூடத் தாக்கல் செய்யப்படாமல், ஆண்டுக் கணக்கில் பிணை கிடைக்காமல் சிறையில் வாடும் லட்சக்கணக்கான சிறைவாசிகளுக்கு மத்தியில், சிபிஐ நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட இந்த கொடூரக் கொலைக் குற்றவாளிகள், பார்ப்பன பாசிஸ்டுகள் என்ற ஒரே காரணத்திற்காக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் முற்போக்கு சக்திகள் வியந்தோதும், பாதுகாக்க வேண்டும் எனத் துடிக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதே குஜராத் படுகொலைகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது உள்ளிட்ட உதவிகளைக் களத்தில் இறங்கிச் செய்த சமூக செயற்பாட்டாளரான தீஸ்தா செதல்வாத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன், குஜராத் படுகொலையை மோடி அமித்ஷா கும்பல் திட்டமிட்டு நிறைவேற்றியதை அம்பலப்படுத்திய குஜராத் போலீசு அதிகாரிகள் ஆர்.பி.சிறீகுமார் மற்றும் சஞ்சீவ்பட் ஆகியோரும் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

படுகொலையை நடத்திய கொலைகாரர்கள் வெளியே சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருக்க பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்ற ஜனநாயக சக்திகளோ பொய்வழக்குகளில் அடைக்கப்பட்டுள்ளனர். காவி-கார்ப்பரேட் பாசிசம் தனது நடவடிக்கைகள் அனைத்தையும் நாட்டின் சட்டத்திற்கு உட்பட்டே செய்து வருகிறது. இந்துராஷ்டிரத்திற்கான பாதையில் காவி கார்ப்பரேட் பாசிசம் தொடர்ந்து முன்னேறிவருகிறது. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கான வலிமையுடன் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஓரணியில் திரட்டி அமைக்கவேண்டியுள்ளது.

  • அறிவு.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன