பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு: தரமற்ற கல்லூரிகளும் கேள்விக்குறியாகும் மாணவர் எதிர்காலமும்

பொறியியல் படிப்பவர்களில் ஒரு சிறு எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வேலை கிடைப்பதை அனைவருக்கும் வேலை என்று ஊதிப் பெருக்கி பல லட்சங்களை கல்விக் கட்டணமாக வசூலிக்கும் இக்கல்விக் கொள்ளையர்கள் மாணவர்களுக்கு பொறியியல் அறிவை பயிற்றுவிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட தங்களுடைய கல்லூரிகளில் உருவாக்குவதில்லை.

பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. கள்ளச் சாராய ரவுடிகளும் அரசியல் பினாமிகளும் கல்வித் தந்தைகளாக பரிணாம வளர்ச்சியடைந்து தமிழ்நாட்டை உயர்கல்வியில் முதன்மை மாநிலமாக்க வேண்டும் என ‘பலன் எதிர்பாராமல்’ செயலாற்றிவரும் நிலையில், மாணவர்களை சிறந்த பொறியாளராக்க வேண்டும் என்ற ‘உயரிய நோக்கத்தோடு’ அவர்களை தங்களது கல்லூரிகளை நோக்கி ஈர்ப்பதற்கான பல கவர்ச்சிகரமான விளம்பரங்களை பத்திரிக்கைகளில் வெளியிட்டு வருகின்றனர்.

 

புகைப்படம் நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா

 

பொறியியல் படிப்பிற்கான நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 434 இணைப்புக் கல்லூரிகள் பங்கெடுக்கப்போவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதில் 394 தனியார் சுயநிதிக் கல்லூரிகள் அடக்கம். இக்கல்லூரிகளுக்கு மொத்தம் 1,96,627 பொறியியல் இடங்களை ஒதுக்கியுள்ளது AICTE. போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் கடந்த சில ஆண்டுகளாகவே பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையும்  பொறியியல் இடங்களும் குறைந்து வந்த நிலையில்(கடந்தாண்டு 1.51 லட்சம்), Data science, Artificial intelligence, Cyber security, Internet of things போன்ற படிப்புகளுக்கு சந்தையில் அதிக தேவை இருப்பதாக ஊதி பெருக்கப்பட்டிருப்பதால் இப்பாடங்களில் அதிக மாணவர்களை சேர்ப்பதற்கான ஒப்புதலை AICTE யிடமிருந்து வாங்கியுள்ளனர்.

பொறியியல் படித்தால் நான்கு இலக்க சம்பளத்தில் உடனடி வேலை, வருங்காலத்தில் லட்சக்கணக்கான பொறியாளர்களுக்கான தேவை இந்தியாவில் உள்ளது, AI, IoT போன்ற படிப்புகளுக்கு நல்ல எதிகாலம் உள்ளது, இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக உருவாக இந்தியாவில் வாய்ப்புகள் அதிகம் போன்ற வண்ணமிகு வார்த்தை ஜாலங்களை ஆளும்வர்க்க அறிவுஜீவிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்கின்றனர்.

ஆனால் எதார்த்தமோ இவர்கள் கூறுவதற்கு எதிராகவே உள்ளது. இந்தியாவில் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அரசே கூறுகிறது. CMIE தரவுகளின் படி பட்டதாரி இளைஞர்களிடையேயான வேலையின்மை விகிதம் 17.8 சதவிகிதமாக உள்ளது. குறிப்பாக பொறியியல் படித்த மாணவர்களிடையேயான  வேலையின்மை விகிதம் இன்னும் அதிகம் என்கிறார் CMIE ன் தலைவர் மகேஷ் வியாஷ். படிப்பிகேற்ற வேலையில்லை என்பதால் சென்னை போன்ற பெருநகரங்களில் Ola, Zomato, Zepto போன்ற இகாமர்ஸ் நிறுவனங்களில் கிக் தொழிலாளர்களாக உள்ளவர்களில் கணிசமானோர் BE/BTech, BSc/BA படித்த பட்டதாரிகளே உள்ளனர்.

 

 

பொறியியல் படிப்பவர்களில் ஒரு சிறு எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வேலை கிடைப்பதை அனைவருக்கும் வேலை என்று ஊதிப் பெருக்கி பல லட்சங்களை கல்விக் கட்டணமாக வசூலிக்கும் இக்கல்விக் கொள்ளையர்கள் மாணவர்களுக்கு பொறியியல் அறிவை பயிற்றுவிப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளைக்கூட தங்களுடைய கல்லூரிகளில் உருவாக்குவதில்லை.

கடந்த மே-ஜூன் மாதம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 467 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், 350 கல்லூரிகள் முழுமையான கட்டமைப்பு வசதிகளின்றி இருப்பதாகக் கூறியுள்ளது. குறிப்பாக 225 தனியார் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான குறைபாடுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அக்கல்லூரிகளில்  தேவையைவிட குறைந்த ஆசிரியர்களே பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் சில கல்லூரிகளில் தரமான ஆய்வக வசதிகள் கூட இல்லை என்றும்  23 கல்லூரிகளில் விதிமுறைகள் மீறப்பட்டு தகுதியற்றவர்கள் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கைக் கூறுகிறது. அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாக பொறியியல் மாணவர்களின் கற்றல் வெளிப்பாடுகள்(learning outcomes) வெகுவாக குறைந்துள்ளதாக அவர்களின் அறிக்கையே கூறுகிறது.  இதுதான் தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் லட்சம். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான் தொடர்கிறது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் இக்கல்லூரிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை. பல்கலைக்கழகம்-தமிழக உயர்கல்வித்துறை-கல்விக் கொள்ளையர் களின் இந்த கூட்டு ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடிகளை மாணவர்களிடமிருந்து கல்விச்சேவை என்ற போர்வையில் பகற்கொள்ளையைடித்து வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் உயர்கல்வி படிக்கின்றவர்களின் விகிதம் அதிகம், இது திராவிட மாடலின் வெற்றி என்று பெருமை கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் உயர்கல்வியின் சீரழிவிற்கும் பகற்கொள்ளைக்கும் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகள்தான் முக்கிய காரணம் என்றும்  திராவிட மாடல் இக்கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறது என்ற உண்மையை முதல்வரோ அல்லது திராவிட மாடல் ஆதரவாளர்களோ பேச மறுக்கிறார்.

வேலை கொடு என்று கேட்டால், பக்கடா போடுவதும் வேலைதானே என பதில் சொல்லுகிறார் பிரதமர் மோடி. பொறியியல் படித்த மாணவர்கள் போதிய திறமையோடு இல்லை அதனால் தான் வேலையின்மை என்று ஏளனம் செய்கிறது  முதலாளி வர்க்கம். புதிய படிப்புகளை படித்தால் வேலை உறுதி என்று  பகற்கொள்ளை அடிக்கிறது தனியார் கல்வி நிலையங்கள். இவர்களிடம் சிக்கித்தவிக்கின்றனர் பொற்றோர்களும்-மாணவர்களும்.

வேலையின்மை என்பது முதலாளித்துவத்தில் தவிக்க இயலாதது. தனது மூலதனப் பெருக்கத்திற்காக தொழிலாளர் ரிசர்வ் பட்டாளத்தை முதலாளித்துவ வர்க்கம் வைத்துக் கொண்டே இருக்கும் என்பதுதான் உண்மை. கூடவே அறிவியல்-தொழில்நுட்பம்-தகவல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சினால் தொழிலாளிப் பிரிவின் கணிசமான பகுதியினரை கிக் தொழிலாளர்களாக வைத்துக் கொள்வதை நிதி மூலதனங்கள் விரும்புகின்றன. சமூக பாதுகாப்புடன் கூடிய கண்ணியமான வேலையை பட்டதாரிகள் அனைவருக்கும் ஆளும்வர்க்கங்கள் ஒருபோதும் வழங்கப்போவதில்லை. இளைங்கர்களுக்கு உடனடி வேலை ஒன்று காத்திருக்கிறது. அது சமூகமாற்றத்திற்கான வேலை. இந்த பகற்கொள்ளையர்களையயும்  அவர்களை தாங்கி நிற்கின்ற இந்த முதலாளித்துவ அமைப்பு முறையையும் வீழ்த்தினால் மட்டுமே அனைவருக்குமான வேலை என்பது சாத்தியம்.

அழகு

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன