75-வது ஆண்டு ‘சுதந்திர தின நிறைவு விழா’ : அமுதம் அல்ல; நஞ்சு!

75-வது ஆண்டு, இந்த சுதந்திர தினவிழா இவர்களுக்கு வேண்டுமானால் அமுதமாக இருக்கலாம். ஏழைகளுக்கு அல்ல என்பது நிதர்சனம்.

7,000 பேர் பங்கேற்புடன் அவர்களைச் சுற்றி 10,000 பேர் பாதுகாப்புடன், செங்கோட்டையைச் சுற்றி பரந்த கண்காணிப்புடன் இந்திய நாட்டின் 75-வது ஆண்டு ‘சுதந்திர தின நிறைவு விழா’ ஆகஸ்டு 15 இல் நடைபெற்றுள்ளது. கலந்துகொண்டவர்களும் உணவு, கைப்பை, தண்ணீர் பாட்டில், சிகெரெட் லைட்டர், ரிமோர்ட் கண்ட்ரோல் கார் சாவி, கேமரா, பைனாகுலர், குடை போன்ற பொருட்களைக் கொண்டுவரக் கூடாது என்று கூறுவதன் மூலம் ‘அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்ற பழமொழிக்கு ஒப்பாக நடத்தப்படும் இந்த ‘சுதந்திர தின விழா’வைத்தான் அமுதப் பெருவிழாவாக அறிவித்துள்ளது மோடி அரசு.

மேலும், அனைத்து அலுவலகங்களிலும், வீடுகளிலும், தேசியக் கொடியை ஆகஸ்டு 13 முதல் 15 வரை பறக்க விடுமாறு உத்திரவும் போட்டுள்ளது. கார்ப்பரேட்டுகளும் அவர்களின் கைக்கூலிகளான ஒன்றிய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும், அனைத்து ஓட்டுக் கட்சிகளும், சல்மான்கான், ரஜினிகாந்த், இளையராஜா போன்ற பாலிவுட், கோலிவுட் சினிமா கழிசடைகளும் அவரவர் இல்லங்களில் தேசியக் கொடி ஏற்றுவதை சிரமேற்கொண்டு செய்துள்ளனர்.

 

 

இவர்களுக்கு வேண்டுமானால் இந்த 75-வது ஆண்டு ‘சுதந்திர தினவிழா’ அமுதமாக இருக்கலாம். ஆனால், அன்றாடம் விலைவாசி உயர்வால், ஜி.எஸ்.டி. வரி உயர்வால், பெட்ரோல் டீசல் விலையுயர்வால் வாடி வதங்கி எந்த நேரத்தில் உயிரை விடப் போகிறோம் என்ற நிச்சியமற்ற நிலையில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் ஏழை மக்களுக்கு அது ஒரு நஞ்சு. ஒரே இடத்தில் பிறப்பதுதான் அமுதமும் நஞ்சும்.

ஏழைகளின் உதிரத்தால் பிழியப்படும் அமுதத்தை நுகரும் இந்த கழிசடைகள் உழைக்கமாட்டார்கள். ஏனெனில், கார்ப்பரேட்டுகள் மக்களின் உழைப்பை, வரிப்பணத்தை, வங்கி சேமிப்பை சுரண்டி கல்லா கட்டுகின்றனர். ஏழைகளின் துரோகிகளான ஓட்டுக் கட்சிகள் மக்களின் வரிப்பணத்தில், இலஞ்ச – ஊழல் பணத்தில், அளவுக்கு மீறி சொத்து சேர்த்து உல்லாசமான வாழ்க்கை நடத்துகின்றனர். மக்களின் பொழுதுபோக்கை காசாக்கி, அதற்கும் உரிய வரியைக் கட்டாமல் ஏய்த்து வரும் மேற்படி சினிமா கழிசடைகள் குடியும் கூத்துமாக வலம் வருகின்றனர்.

எனவே, இவர்களால் ஏழைகளின் வலியை – கொஞ்சம் கொஞ்சமாக பறிபோகும் உயிரைப் பற்றி – உணர முடியாது. வேண்டுமானால் நடிக்கலாம்.

ஆகவே, 75-வது ஆண்டு, இந்த சுதந்திர தினவிழா இவர்களுக்கு வேண்டுமானால் அமுதமாக இருக்கலாம். ஏழைகளுக்கு அல்ல என்பது நிதர்சனம். இந்திய சமுதாயத்திற்கான பொருளாதாரத்தை ஈட்ட மூலதனமும் உழைப்பும் இணைந்தே செயல்படுகிறது என்பதில் எவருக்கும் சந்தேகம் இல்லை. இவற்றை பகிர்ந்து கொள்ளும்போது உழைப்பால் உருவாக்கப்பட்ட அமுதத்தை இலாபம் என்ற பெயரில் மூலதனம் உறிஞ்சுகிறது. உழைப்பிற்கேற்ற ஊதியத்தைத் தராமல் உயிர் வாழ்வதற்கான அதாவது மீண்டும் உழைப்பதற்கான கூலியை மட்டுமே தருகிறது.

இதை மாற்றியமைக்காத வரை, அதாவது பெருவாரியான ஏழை மக்களுக்கு சேர வேண்டிய உபரியை – அமுதத்தை – மூலதனம் உறிஞ்சுவதைத் தடுக்காத வரை அவர்களுக்கு உரியதை அவர்களிடம் சேர்ப்பதற்கு அரசியல், பொருளாதார, சமூக சூழலை மாற்றியமைக்காதவரை ஏழை மக்களுக்கு விடிவில்லை.

அதற்குத் தேவை ஒரு சமூகப் புரட்சி. அதுவே புதிய ஜனநாயகப் புரட்சி. இதன் மூலமே உண்மையான சுதந்திரத்தை – பெருவாரியான உழைக்கும் மக்களுக்கான சுதந்திரத்தை பெற முடியும். அதுவரை சுதந்திர தினவிழா என்பது அமுதம் அல்ல; நஞ்சு!

மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன