இது யாருக்கான சுதந்திரம்?
எனக்கான சுதந்திரமும் இல்லை
உனக்கான சுதந்திரமும் இல்லை
இது மோடிகள், அமித்சாக்களுக்கான சுதந்திரம்
அம்பானி, அதானிகளுக்கான சுதந்திரம்
நிதிமூலதனத்திற்கான சுதந்திரம்
சுரண்டுபவர்களுக்கான சுதந்திரம்
மத வெறிக்கான சுதந்திரம்
சாதிய ஒடுக்குமுறைக்கான சுதந்திரம்
ஓட்டு போட சுதந்திரம், ஓட்டு கேட்க சுதந்திரம்
கொலை, கொள்ளையனும் தேர்தலில் நிற்க சுதந்திரம்
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க சுதந்திரம்
மாநில ஆட்சியைக் கவிழ்க்க மக்களாட்சியில் சுதந்திரம்
இயற்கை வளங்களை சூறையாட கார்ப்பரேட்டுகளுக்கு சுதந்திரம்
பொதுநிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்க்க சுதந்திரம்
பாசிச மசோதாக்களை நிறைவேற்ற பாராளுமன்றத்திற்கு சுதந்திரம்
பாதகமாய் நடப்போரைப் பழிவாங்க சுதந்திரம்
அகண்ட பாரதக் கனவு கான ஆர்.எஸ்.எஸ்.க்கு சுதந்திரம்
சிறுபான்மை மக்களை ஒடுக்கவும் அவர்களுக்கே சுதந்திரம்
கோட்சேவைத் தியாகியாக்க சுதந்திரம்
அம்பேத்கரைக் காவியாக்க சுதந்திரம்
கடப்பாரைக்கு சுதந்திரம்
புல்டோசருக்கும் சுதந்திரம்
லத்திக்குச் சுதந்திரம்
திரிசூலத்திற்கும் சுதந்திரம்
ரத்தத்தை வரியாய் வசூலிக்க சுதந்திரம்
வசூலித்த வரியை ஏப்பம் விட சுதந்திரம்
போராடும் மக்களை வேட்டையாட சுதந்திரம்
எதிர்த்துக் கேட்டால் கொட்டடியில் சுதந்திரம்
கள்ளச்சாராயம் விற்றவன் கல்வி வள்ளலாக சுதந்திரம்
ரியல் எஸ்டேட் புரோக்கர் அரசியலில் அண்ணனாக சுதந்திரம்
கூலிப்படைத் தலைவனுக்கு மாவீரனாக சுதந்திரம்
மாபியா கும்பலுக்கு மண்ணை ஆளும் சுதந்திரம்
கொட்டடிக் கொலைக்கு போலீசுக்கு சுதந்திரம்
கொலை கொள்ளைக்கு இராணுவத்திற்கு சுதந்திரம்
வழக்கு போட்டவனையே சிறையில் தள்ள நீதிமன்றத்திற்கு சுதந்திரம்
லஞ்சம் ஊழலுக்கு அதிகாரம் படைத்த அனைவருக்கும் சுதந்திரம்
விவசாயிகளுக்கோ தற்கொலை செய்துகொள்ள சுதந்திரம்
– வேலன்
நல்ல முயற்சி
வாழ்த்துக்கள்