சூப்பர் பக்ஸ் – மனித இனத்தை அச்சுறுத்தும் நோய்க்கிருமி

இயற்கை மீது மனிதன் பெற்ற வெற்றி நிலையானதாக இல்லை. இயற்கை நம்மை பழி வாங்கத் தொடங்கியுள்ளது. பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சார்ஸ், எபோலா என வைரஸ் கிருமிகள் பரிணமித்து, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகின்றன. கொரானா வைரஸ் கிருமியின் தாக்குதலின் வீரியத்தால் உலகமே ஸ்தம்பித்து நிற்க, பல லட்சம் மக்களைப் பறிகொடுத்த பின்பும் கூட இன்னும் அதனை முழுமையாக ஒழிக்க முடியவில்லை.

“இயற்கையின் மீது நமது மனித வெற்றிகளை வைத்துக் கொண்டு நம்மை நாம் அளவு கடந்து தற்புகழ்ச்சி செய்துகொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் இப்படிப்பட்ட வெற்றி ஒவ்வொன்றுக்கும் இயற்கை நம்மைப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலாவதாக நாம் எதிர்பார்க்கிற விளைவுகளை நிகழ்த்துகிறது என்பது உண்மையேயாயினும் இரண்டாவது, மூன்றாவது நிலைகளாக நாம் எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட பலன்களையும் அளிக்கிறது; இவை பல தடவைகளிலும் முதலில் கூறியதை ரத்து செய்துவிடுகின்றன.”

– பிரெட்ரிக் எங்கெல்ஸ் (இயற்கையின் இயக்கவியல் 1876)

1928ல் அலெக்சான்டர் பிளமிங் பெனிசிலின் கண்டுபிடித்தது முதல் ஆன்டிபயோட்டிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், மனிதர்களை நோயிலிருந்து மீட்கும் அருமருந்தாக பயன்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளாக, மனித இனத்தை கொத்துக் கொத்தாகக் கொன்று குவித்த கொள்ளை நோய்களைத் தடுப்பூசிகள் தோற்கடித்து விட்ட நிலையில், மனிதனின் உயிரைக் குடித்த காயங்களும், நோய்த் தொற்றுகளும் மிக விரைவில் குணமாகும் அளவிற்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருத்துவம் வளர்ந்து விட்டது.

ஆனால் இயற்கை மீது பெற்ற இந்த வெற்றி நிலையானதாக இல்லை. இயற்கை நம்மை பழி வாங்கத் தொடங்கியுள்ளது. பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், சார்ஸ், எபோலா என வைரஸ் கிருமிகள் பரிணமித்து, உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து வருகின்றன. கொரானா வைரஸ் கிருமியின் தாக்குதலின் வீரியத்தால் உலகமே ஸ்தம்பித்து நிற்க, பல லட்சம் மக்களைப் பறிகொடுத்த பின்பும் கூட இன்னும் அதனை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. பல ஆண்டுகளுக்கு அதன் தாக்கம் நீடிக்கும்  என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

சூப்பர் பக்ஸ்

 

இப்படி புதிது புதிதாக உருவாகிவரும் கொள்ளை நோய்கள் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் மலேரியா, டைபாய்டு, நிமோனியா, காசநோய் போன்ற நோய்களுக்குக் காரணமான நோய்க்கிருமிகள், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட மருந்துக்கு கட்டுப்படாத அளவிற்கு பரிணமித்து, வீரியமடைந்து வருகின்றன. “சூப்பர் பக்ஸ்” என்று நுண்ணுயிர் ஆய்வாளர்களால் அழைக்கப்படும் இந்த வகை நோய்க்கிருமிகள் மனித இனத்திற்கே மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகின்றன.

2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் ருமேனியாவின் மகப்பேறு மருத்துவமனையில் மருந்துகளுக்குக் கட்டுப்படாத “சூப்பர் பக்” நோய்க்கிருமியின் காரணமாக 39 குழந்தைகள் பாதிக்கப்பட்டதால் அந்த மருத்துவமனையே மூடப்பட்டது. காசாவில் இஸ்ரேலியப் படையினர், ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை துப்பாக்கியால் சுட்டனர். அந்தக் காயங்களில் ஏற்பட்ட நோய்த்தொற்றுகள் மருந்துகளூக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்களைக் கொண்டிருந்தன. பாகிஸ்தானில் கடந்த மூன்றாண்டுகளில் மட்டும், மருந்துகளுக்குக் கட்டுப்படாத ஒரு வகை டைபாய்டு காய்ச்சலால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 2017-18 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மட்டும், மருந்துகளுக்குக் கட்டுப்படாத “கெ நிமோனியா” வகை சூப்பர் பக்ஸ் கிருமிகளால் பாதிக்கப்பட்ட 27 பேரில் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த பாக்டீரியாக்கள் ஆரம்பத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளால் எளிதாகக் கொல்லப்பட்டாலும் நாளடைவில் அவை மருந்துகளுக்கு எதிராகத் தம்மை தகவமைத்துக் கொண்டன. இதனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு குறிப்பிட்ட பாக்டீரியாக்களுக்கு எதிரான மருந்துகள் செயலிழந்து விடுகின்றன. அவற்றிற்கு பதிலாக இன்னும் வீரியமான புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, எல்லா வகையிலான பாக்டீரியாக்களையும் கொல்லும் “கொலிஸ்டின்” போன்ற வீரியமிக்க மருந்துகளைக் கண்டுபிடித்து, அதை உயிருக்கே ஆபத்து என்கிற சூழ்நிலைகளில் பயன்படுத்தி வருகின்றனர். மறுபக்கத்தில் பாக்டீரியாக்களும், மேலும் மேலும் பரிணமித்து, எவ்வித நுண்ணியிர் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கட்டுப்படாத “சூப்பர் பக்ஸ்” ஆக உருவெடுத்துள்ளன.

கால்நடைகள் அதிக எடையுடனும், விரைவாகவும் வளர்ச்சியடைய, கால்நடைத் தீவனங்களில் மிக அதிக அளவில் ஆண்டிபயோட்டிக் மருந்துகள் சேர்க்கப்படுகின்றன. இது அந்தக் கால்நடைகளை உணவாக உட்கொள்ளும் மனிதர்களையும் பாதிக்கின்றது. 2015-ம் ஆண்டு MCR-1 என்ற மரபணுவை கொண்ட பாக்டீரியாவை கோழி மற்றும் பன்றி இறைச்சிக் கூடங்களில் கண்டுபிடித்தனர். இந்த பாக்டீரியாக்கள் “கொலிஸ்டின்” மருந்துக்கு கூட கட்டுப்படாதவையாக இருக்கின்றன.

இந்தியா மற்றும சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆண்டிபயோடிக் மருந்துகளைத்தான் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் உள்ள மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்கிறார்கள். கடந்த 30 ஆண்டுகளில் மேற்கத்திய நாடுகள் தங்களது மிகப்பெரிய மருந்து உற்பத்தி நிலையங்களை மூடிவிட்டு சீனா, இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் (outsource) வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் தங்களது தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன. மேலும் இந்த நாடுகளில் மருத்து உற்பத்தியை முறைப்படுத்துவதற்கான சட்டங்களும், தொழிலாளர்கள் சட்டங்களும் கார்பரேட் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதால், முதலீடு இல்லாமல் லாபம் கொழிப்பதற்கு இந்தகைய நாடுகளையே விரும்புகின்றன.

இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு முதலாளிகள் பன்னாட்டு கார்பரேட் நிறுவனங்களுக்கு மருந்து தயாரித்து கொடுக்கின்றனர். இவற்றில் 200 உற்பத்தி நிலையங்களில், மேற்கத்திய நாடுகளில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பெயரில் ஆண்டிபயோட்டிக் மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.

இத்தகைய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், தங்களது உற்பத்தி செலவுகளைக் குறைப்பதற்காக தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிப்பதில் தொடங்கி கழிவுப்பொருட்களை பொது இடங்களில் அப்படியே கொட்டிவைப்பது வரை அனைத்து முறைகேடுகளையும் செய்கின்றனர். இவற்றைத் தடுக்கவேண்டிய அதிகாரிகளோ லஞ்சம் வாங்கிக்கொண்டு தொடர்ந்து அனுமதித்து வருகின்றனர். இவ்வாறு சுத்திகரிக்கப்படாமல் பொது இடத்தில் கொட்டப்படும் கழிவுகளின் காரணமாக பாக்டீரியாக்கள் பரிணாம வளர்ச்சி அடைகின்றன.

 

 

2007-ம் ஆண்டு ஹைதராபாத் நகரில் உள்ள ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலையில், மருந்து நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவுகளின் மூலம் பாக்டீரியாக்கள் ஆற்று நீர் உட்பட பல்வேறு நீர்நிலைகளிலும் கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தப் பாக்டீரியாக்கள் அனைத்து ஆண்டிபயோட்டிக் மருந்துகளுக்கும் கட்டுப்படாதவையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த நீர்நிலைகளில் நாளொன்றுக்கு 45 கிலோ அளவிற்கு மருந்துகள் கொட்டப்படுகிறது. இதன் மூலம் மக்களின் பொழுதுபோக்கிற்காக கட்டப்பட்ட ஏரிகள் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் குப்பை தொட்டியாக மாற்றப்பட்டுள்ளன. மேலும் இத்தகைய நீர் நிலைகளைப் பயன்படுத்தும் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இந்தியா போன்ற நாடுகளில், உடல்நிலை சரியில்லை என்றால் மக்கள் உடனடியாக நாடுவது மருந்து விற்பனை நிலையங்களைத்தான். அங்கே மருந்துக்கடைக்காரர் கொடுக்கின்ற மருந்தினை வாங்கி உண்கின்றனர். பல சமயங்களில் மிகவீரியம்மிக்க ஆண்டிபயோடிக் மருந்துகளையே கொடுகின்றனர். ஆண்டிபயோடிக் மருந்தை உரிய விகிதத்தில், உரிய நாட்களுக்கு கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்; இல்லாவிடில் பாக்டீரியாக்கள் பரிணாம வளர்ச்சியடைந்து எந்தவொரு ஆண்டிபயோடிக் மருந்தாலும் குணமாக்க முடியாத நிலைக்கு வளர்ச்சி பெற்று விடுகிறது. இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலக அளவில் ஒட்டுமொத்த மனித குலமும் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். ஆனால், இன்றளவும் நம் அரசாங்கம் இதனை மிகவும் மெத்தனமாகவே அணுகிக் கொண்டிருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், மருந்துகளுக்குக் கட்டுப்படாத நோய்க்கிருமிகள் அதிகரித்து மிக விரைவில் மருத்துவத்தில் ஒரு அவரச நிலை ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது.

உலகம் முழுவதிலும் தயாரிக்கப்படும் ஆண்டிபயோட்டிக் மருந்துகளின் கட்டுப்பாடு ஜான்சன் & ஜான்சன், நோவார்ட்டில், மெர்க், ரோச்சே மற்றும் பைசர் ஆகிய ஐந்து நிறுவனங்களின் கைகளில்தான் உள்ளது. ஆனால் இந்த நிறுவனங்கள் தற்பொழுது “சூப்பர் பக்ஸ்” பாக்டீரியக்களுக்கு மருந்து தயாரிப்பதை நிறுத்திவைத்துள்ளன. மேற்கத்திய நாடுகளில் ஆண்டிபயோட்டிக் மருந்தின் பின்விளைவுகள் குறித்து மக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இருக்கிறது. அங்கு மருத்துவர்களின் பரிந்துரையில்லாமல் ஆண்டிபயோட்டிக் மருந்துகளை வாங்க முடியாது. இதுவே ஏழைநாடுகளில் தலைகீழாக உள்ளது, மாற்றுமருந்துகளை கண்டுபிடிப்பதற்கு தேவையான நிதியை முழுவதுமாக ஒதுக்கீடு செய்வதில்லை எனவே இத்தகைய மருந்துகளுக்கு பன்னாட்டு நிறுவனங்களின் தயவை நம்பியிருக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

 

 

இத்தகைய அசாதரணமான சூழ்நிலைக்கு நடுவே, இரண்டு வகையான நோயாளிகள் உள்ளனர். ஒன்று, வழக்கமான மருந்துகளை கொண்டு கட்டுப்படுத்தும் நோய்களைக் கொண்டவர்கள். மற்றொன்று, புதிய மருந்துகளுக்கு கட்டுப்படும் நோய்களைக் கொண்டவர்கள். இத்தவகை நோய்கள் பருவகாலத்தில் மட்டுமே மக்களைத் தாக்குவதால், இதுபோன்ற நோய்களுக்குக் காரணமான “சூப்பர் பக்ஸ்” பாக்டீரியாக்களை கட்டுப்படுத்துவதற்கு மருந்து கண்டுபிடிப்பதில்லை.

ஒரு மருந்தைக் கண்டுபிடித்து, சோதனை செய்து அதனை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவுகளுக்கு மேல், தாங்கள் எதிர்பார்க்கும் லாபவிகிதங்களைப் பெறுவதற்கு வசதியாக காப்புரிமைச் சட்டத்தின் மூலம் 20 ஆண்டுகளுக்கு விற்பனை செய்வதற்கான உரிமையை வைத்திருக்கின்றன. ஆனால், அம்மருந்து விற்பனைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே, பாக்டீரியாக்கள் பரிணாம வளர்ச்சியடைந்து விடுவதால் தாங்கள் எதிர்பார்க்கும் லாபத்தைப் பெறமுடிவதில்லை. இதனால் புதிய ஆண்டிபயோடிக் மருந்துகளுக்கான ஆராய்ச்சிக்கு முதலீடு செய்வதில்லை. எனவே “சூப்பர் பக்ஸ்” பாக்டீரியாக்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு தேவையான ஆண்டிபயோட்டிக் மருந்துகள் தற்பொழுது சந்தையில் கிடைப்பதில்லை.

உடனடி லாபத்தை மட்டுமே இலக்காகக் கொண்டு செயல்படும் முதலாளித்துவம், தங்களது புதிய கண்டுபிடிப்புகளின் மூலம் அனைத்து நோய்களையும் குணமாக்கி விடமுடியும் என்று மக்களை பல ஆண்டுகளாக நம்பவைத்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் பாக்டீரியா பரிணாம வளர்ச்சியடைந்து, வழக்கமான மருந்துக்கு கட்டுப்படாதபோது, புதிய மருந்தைக் கண்டுபிடித்து மக்களின் நம்பிக்கையைப் பெற்றார்கள். தற்பொழுது பாக்டீரியாக்களின் பரிணாம வளர்ச்சியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், இயற்கையின் முன்னால் தோற்றுப்போய் மண்டியிட்டிருக்கும் முதலாளித்துவம், தங்களது இலாப விகிதங்களையும், நம்பிக்கையையும் மக்களிடம் இழந்து வருகிறது..

இதே நிலை நீடித்தால் 2050ம் ஆணடில் சூப்பர் பக்ஸ் தாக்குதலால் வருடத்திற்கு ஒரு கோடி பேர் உயிரிழப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இவ்வாறு உயிரிழப்பவர்கள் பெரும்பாலும் ஏழை நாட்டு மக்களாகத்தான் இருப்பார்கள். மேற்கத்திய நாடுகளைப் போல சுகாதாரக் கட்டமைப்பு இல்லாத, ஊட்டச்சத்தில் மிகவும் பின்தங்கியுள்ள, பன்னாட்டு நிறுவனங்களின் கழிவுகளை கொட்டும் இடமாக உள்ள மூன்றாம் உலகநாடுகளில்தான் அதிக அளவிற்கு “சூப்பர் பக்ஸ்” தாக்குதல் இருக்கும். அந்நாட்டு அரசுகளுக்கோ இதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கு முதலீடு செய்யும் அளவிற்கு வசதி இல்லை. அதே சமயம் மருந்து உற்பத்தித் துறையைக் கையில் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கோ தங்களது லாபத்தை விட மக்களின் உயிர் முக்கியமல்ல. அவர்களுக்கு ஏழை நாட்டு மக்கள் வெறும் சோதனைச்சாலை எலிகள் மட்டுமே.

-அறிவுமதி.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன