விலைவாசி உயர்வை சகித்துக்கொள்! வரி உயர்வை கழுதைபோல் சுமந்துசெல்! பாசிச மோடி அரசின் ‘கீதா உபதேசம்’

நிலவும் அரசியல், பொருளாதார கட்டமைப்புக்குள்ளேயே சில சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்க பொருளாதார அறிஞர்கள் கூறும் ஆலோசனைகள், பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எட்டிக்காயாய்க் கசக்கிறது. இப்பரிந்துரைகள் தமது எஜமானர்களின் பகாசுர சுரண்டலுக்கு ஊறுவிளைவிக்கும் என்று புறந்தள்ளிவிட்ட பாசிச மோடி அரசோ கோடான கோடி உழைக்கும் மக்களைப் பார்த்து விலைவாசி உயர்வைச் சகித்துக்கொள்ளவும், வரி உயர்வை கழுதைபோல சுமந்துசெல்லவும் ‘கீதா உபதேசம்’ செய்கிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.92 ஆக வீழ்ச்சியடைந்து விட்டது. இதனால், அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு உழைக்கும் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனைச் சமாளிப்பதற்கு கூலியோ, சம்பளமோ உயரவில்லை. கூலியையும், சம்பளத்தையும் உயர்த்திக் கேட்டுப் போராடினால் இருக்கின்ற வேலையும் பறிபோகும் என்ற நிலையே உள்ளது.

விலைவாசி உயர்வினால் மக்களின் வாழ்க்கைத்தரம் மோசமடைந்துள்ள நிலையில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி, பருப்பு, தயிர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீது புதிதாக ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. வரியை உயர்த்தியுள்ளது.

இக்கொடுமையிலிருந்து விடுபட மக்கள் கூடுதலாக உழைக்கின்றனர். அதற்கான வாய்ப்பு இல்லாத போது, கடும் வட்டிக்குக் கடன் வாங்கி ஈடு செய்கின்றனர். கடனைக் கட்ட இயலாதபோது, மானத்தைக் காக்க தற்கொலையை நாடுகின்றனர். தற்கொலைக்கு தள்ளிய மோடி அரசோ எந்தவித குற்றவுணர்வின்றி விலை உயர்வை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்குக் பின்வரும் காரணங்களைக் கூறிவருகின்றனர்.

 

 

அதாவது, உள்நாட்டுச் சந்தையில் அதிவிரைவாக அந்நிய முதலீடுகள் வெளியேறுவதும், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேறுவதும், ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரிப்பது போன்ற காரணங்களினால் அந்நிய செலாவணி குறைந்து விலைவாசி உயர்கிறது.

அப்படியென்றால் வெளியேறும் அந்நிய முதலீட்டை, கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தை, விலைவாசி உயர்வைத் தடுக்க முடியாதா? முடியாது என்கிறது மோடி அரசு.

ஆனால் பொருளாதார அறிஞர்களோ, வெட்டுக்கிளிகளைப் போல அந்நிய முதலீடுகள் வெளியேறுவதைத் தடுத்து உள்ளே வந்த முதலீடுகள் வெளியே செல்வதற்கு காலவரையறையைத் தீர்மானிக்க வேண்டும், தீர்மானிக்கப்பட்ட கால இலக்கிற்கு முன்பே வெளியேறும்பட்சத்தில் அதற்கான இழப்பீட்டைக் கோர வேண்டும், இவற்றை ஏற்காத பட்சத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது குறித்தும், தொடர்வது குறித்தும் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும், இந்தியப் பெருமுதலாளிகள் வெளிநாடுகளில் முதலீடு செய்வதைத் தடுத்து உள்நாட்டிலேயே முதலீடு செய்வதைக் கட்டாயப்படுத்த வேண்டும், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கச்சா எண்ணெய் உற்பத்தியை, இறக்குமதியை அரசே ஏற்று நடத்த வேண்டும், சர்வதேச சந்தையை விட விலை மலிவாகத் தரும் ஈரான், ரசியா போன்ற நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிரந்தரமாக்க வேண்டும், மலிவாகத்தரும் நாடுகளை நாட வேண்டும், இதன் மூலம் கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும் என்கின்றனர்.

கடந்த நிதியாண்டில் சரக்கு ஏற்றுமதி 33.60 இலட்சம் கோடி டாலர். இறக்குமதியோ 48.96 இலட்சம் கோடி டாலர். 15.36 இலட்சம் கோடி டாலர் அதிகரித்ததன் விளைவு வர்த்தகப் பற்றாக்குறை ஏற்பட்டது. மேலும், அந்நிய செலாவணி 600 பில்லியன் டாலராக (60.000 கோடி டாலராக) குறைந்ததால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.

கார் உற்பத்திக்கான 20% உதிரி பாகங்களும், மின்னனு சாதனங்களுக்கான 60% உதிரி பாகங்களும் இறக்குமதி செய்யப்படுவதுதான் வர்த்தகப் பற்றாக்குறைக்கு பிரதான காரணமாகச் சொல்லப்படுகிறது. எனவே இவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்தியிருக்க முடியும் என்கின்றனர். மேலும் சிறு, குறு, நடுத்தர உற்பத்தியாளர்களின் ஏற்றுமதிக்கான உற்பத்தியை ஊக்கப்படுத்தி ஏற்றுமதியை அதிகரிப்பதன் மூலமே அந்நிய செலாவனியை பெரும் அளவில் ஈட்ட முடியும் என்கின்றனர்.

மேலும், ஏற்றுமதியை அதிகரிக்கிறோமோ இல்லையோ இறக்குமதியை அதிகரிக்காமல் குறைப்பது அவசியம் என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.

நிலவும் அரசியல், பொருளாதார கட்டமைப்புக்குள்ளேயே சில சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் வைக்க பொருளாதார அறிஞர்கள் கூறும் மேற்கண்ட ஆலோசனைகள், பன்னாட்டு உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எட்டிக்காயாய்க் கசக்கிறது. இப்பரிந்துரைகள் தமது எஜமானர்களின் பகாசுர சுரண்டலுக்கு ஊறுவிளைவிக்கும் என்று புறந்தள்ளிவிட்ட பாசிச மோடி அரசோ கோடான கோடி உழைக்கும் மக்களைப் பார்த்து விலைவாசி உயர்வைச் சகித்துக்கொள்ளவும், வரி உயர்வை கழுதைபோல சுமந்துசெல்லவும் ‘கீதா உபதேசம்’ செய்கிறது. இதைவிட வக்கிரம் வேறென்ன இருக்க முடியும்.

 

keralakaumudi.com

 

எனவே அரசின் நோக்கம் தனது எஜமானர்களாகிய கார்ப்பரேட்டுகளின், தரகுப் பெருமுதலாளிகளின் வருமானத்தைப் அதிகரிப்பதற்கும், பாதுகாப்பதற்குமேயற்றி விலைவாசி உயர்வால் வாடும் மக்களைப் பற்றிக் கவலைப்படுவது அல்ல என்பதை மக்கள் அனைவரும் உணரவேண்டும்.

தற்போதுகூட, 4 இலட்சத்து 30 ஆயிரம் கோடி மதிப்பிலான 5G அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்.லுக்கு கொடுக்காமல் திட்டமிட்டுத் தவிர்த்து, ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடபோன் – ஐடியா, அதானி ஆகிய கார்ப்பரேட் கும்பல்களுக்கு அடிமாட்டு விலைக்கு, அதாவது 1 இலட்சத்து 50 ஆயிரத்து 173 கோடிக்கு வாரிக் கொடுத்து தனது எஜமான விசுவாசத்தைக் காட்டியுள்ளது பாசிச மோடி அரசு.

இதன்மூலம், அரசு கஜானாவிற்கு சேர வேண்டிய 2 இலட்சத்து 79 ஆயிரத்து 827 கோடி மக்கள் பணத்தை தன்னுடைய எஜமானர்களின் பையை நிரப்புவதற்கு வழிவகுத்துக் கொடுத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் பொதுத்துறை – அரசுத்துறை சொத்துக்களை தேசிய பணமயமாக்கல் திட்டத்தின் கீழ் அடிமாட்டு விலைக்கு தாரைவார்க்க ஏற்கனவே வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது சொல்லுங்கள்; இந்த அரசு யாருக்கானது? வரிசையில் நின்று வாக்களித்த ஆகப்பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கா? அல்லது தேர்தலுக்கு நிதியளிக்கும் கார்ப்பரேட் மற்றும் தரகுப் பெருமுதலாளிகளுக்கா? இப்படி ஜனநாயகத்தைக் கேளிக்கு உள்ளாக்கும் பாசிச மோடி தலைமையிலான காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பலைத் தூக்கியெறியாதவரை விலைவாசி உயர்வில் இருந்து மட்டுமல்ல கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம் போன்ற எதையும் நம்மால் பாதுகாத்துக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து போராடத் தயாராகுவோம்.

 

மோகன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன