சுதந்திரத்தின் வாசமறியா நாட்டில் சுதந்திரதினம்

மக்களால் மக்களுக்காக, மக்களே நடத்தும் அரசு என்பது இந்தியா முழுவதும் பலவகைகளில் கேலிக்கூத்தாகிவிட்டது. இது என்றுமே மக்களுக்கான அரசாக இருந்தது கிடையாது. இத்தகைய‌ அரசு எது செய்தாலும் அது அவர்களது அதிகார நலனுக்கானது மட்டுமே. தன்னுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் எதையும் விட்டுவைக்காது.தனது இருப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது.

இந்தியா தான் உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்களால், மக்களுக்காக நடத்தப்படுவது தான் ஜனநாயக இந்தியா.  இத்தகைய பெருமை மிகு இந்தியாவின் 75 வது சுதந்திர அமிர்தப் பெருவிழா இது என்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேற்றுவரை இந்திய ஜனநாயகம் மூச்சுவிடமுடியாமல் ஐ.சி.யூவில் திணறிக் கொண்டிருக்கிறது, நம் கண்முன்னாலேயே செத்துக்கொண்டிருக்கிறது என்று கூச்சல் போட்டவர்களெல்லாம் ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்று எதுவும் நடக்காதது போல் இனிப்பு வழ‌ங்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பெரும்பான்மை உழைக்கும் மக்களோ, வேலையின்மை பிரச்சினையாலும், தொடர்ந்து எறிவரும் விலைவாசியாலும், வாழ வழியில்லாமல் சுழற்றி அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். அதேசமயம் தங்களது வாழ்க்கை ஆதாரத்திற்காக அன்றாடம் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டே தான் இருக்கின்றனர். இது தவிர்க்க முடியாதது, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான கசப்பு மருந்து என்று இருமாப்புடன் நக்கலடிக்கின்றனர் இந்த ஆளும் வர்க்கத்தினர்.

செவிடன் காதில் சங்குச் சத்தம் கேட்காமல் போகலாம், ஆனால் மக்களின் வீரியமான அரசியல் போரட்டங்கள் அச்சுறுத்தத்தான் செய்யும். அப்படிப்பட்ட அரசியல் போரட்டங்களை ஒடுக்குவதற்காக, அதில் ஈடுபடும் முன்னணியாளர்களையும், ஆதரவளிக்கும் அறிவு ஜீவிகளையும், அப்பாவி மக்களையும் எவ்வித ஈவிரக்கமின்றி அழித்தொழித்துக் கொண்டிருக்கிறது மக்களுக்காக, மக்களால் நடத்தப்படும் இந்த சுதந்திர அரசு.

ஆங்கிலேயக் காலனிய ஆட்சிக் காலத்தில் பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிராகத் துரோகம் செய்வதாகக் குற்றஞ்சாட்டி, விடுதலைப் போராளிகளைத் தண்டிக்க 1860-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டதுதான் 124-ஏ தேசதுரோகச் சட்டம். 162 ஆண்டுகளுக்குப் பிறகும் அதை ஏவி, அரசு எதிர்ப்புப் போராளிகளை மட்டுமல்ல, அப்பாவி மக்களையும் காராகிருகத்தில் தள்ளப் பயன்படுத்தி வருகிறது, “சுதந்திர இந்தியஅரசு”.

“பிரிவினைவாத, தீவிரவாத, பயங்கரவாதப் பீதியூட்டி, தேசிய வெறியைக் கிளப்பி ஆதாயம் அடைவதே பார்ப்பன பாசிச அரசியல் தந்திரமாகவுள்ளது” என்பதை நீண்ட காலமாகக் கண்டு வருகிறோம். அந்த வகையில் பார்ப்பன பாசிசத்தின் தயார்நிலை சட்ட ஆயுதமாக உள்ளது, இந்த 124-ஏ தேசத்துரோகச் சட்டம்.

124-ஏ மட்டுமல்ல, ஊபா, அப்சா, தடா, பொடா, மிசா, மினி மிசா, அந்தந்த மாநில தடுப்புக் காவல் சட்டங்கள் என்று எவ்வளவோ சட்டங்களை சிறுவர்கள், பெண்கள், முதியோர்கள் மீது அற்பக் காரணங்கள் கூறி இப்படித்தான் பலமுறை ஏவிவிடப்படுகின்றன.

தேசபக்தி, தேசப் பாதுகாப்பு, தேசத்தின் வளர்ச்சி என்பன போன்ற பித்தலாட்டமான கருத்தாக்கங்கள் மூலம் மக்களின் மீது செலுத்தும் ஒடுக்குமுறைகள், போலி மோதல் கொலைகள், போலீசு கொட்டடி கொலைகள், எந்த ஒரு விசாரனையுமின்றி பத்தாண்டுகளுக்கு மேலாக சிறையிலடைத்து எண்ணற்ற மக்களின் வாழ்க்கையையே சிதைப்பது போன்றவை அன்றாடம் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன.

நமது சமகால வரலாற்றில் இது தொடர்ச்சியாக நடந்தேறிவருகிறது. சமீபத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு சத்தீஸ்கரிலும், ஜார்கண்டிலும் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு எதிராக  பச்சை வேட்டை என்கிற பெயரில் ஓர் உள்நாட்டுப்போரைத் தொடுத்தது. அந்தப் போரில், மூன்று குழந்தைகளுக்கு தாயான சோனி சோரி மற்றும் லிங்காராம் என்பவர்கள் மீது மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி சோனி சோரி மீது 8 வழக்குகளையும் மற்றும் லிங்காராம் மீது 2 வழக்குகளையும் தொடுக்கப்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டுவரும் எஸ்ஸார் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து 15 இலட்சம் ரூபாயைப் “பாதுகாப்பு பணமாக”ப் பெற்று மாவோயிஸ்டுகளிடம் கொடுக்கும் தரகர்களாகச் செயல்பட்டனர்” என்பது இவ்விருவர் மீதும் போடப்பட்ட வழக்குககளில் மிக முக்கியமானது ஆகும். இத்தனை பொய் வழக்குகள் இவர்கள் மீது போட்டதற்கான காரணம், இவர்கள் போலீசின் ஆட்காட்டிகளாகச் செயல்பட மறுத்தனர் என்பதைத்தவிர வேறொன்றும் இல்லை.

சிறைச்சாலையில் சோனி சோரி  மிக மிக கொடுஞ்சித்திரவதைக்கு ஆளானார். அவர் மீது நடத்தப்பட்ட பாலியல் ரீதியான சித்திரவதைகள் அனைத்தும் டெல்லி எயிம்ஸ் மருத்துவமணை நடத்திய பரிசோதனையின் போது அம்பலமாகின.

இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த மார்ச் 2022 அன்று சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் உல்ள சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. போதிய ஆதாரங்கள் மற்றும் சாட்சிகள் இல்லாததால் இவ்வழக்குகளிலிருந்து அவர்களை விடுவிப்பதாக அறிவித்தது.

இப்பொய் வழக்குகளில் 12 ஆண்டுகளாக கொடுஞ்சித்திரவதைகளை அனுபவித்து இப்போது வெளியே வந்திருக்கும் சோனி சோரி நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி ” என்னுடைய 12 ஆண்டு வாழ்க்கையை அவர்களால் திரும்ப கொடுக்க முடியுமா?” என்பதுதான்.

பழங்குடியின மக்களுக்கு எதிராக  நடத்திய இந்த பச்சை வேட்டை என்கிற உள்நாட்டு போரை எதிர்த்து மனித உரிமைப் போராளியும், புரட்சிகர ஜனநாயக முன்னணி என்கிற அமைப்பின் இணைச்செயலாளராகவும் இருந்த பேராசிரியர் சாய்பாபா பல போராட்டங்களை முன்னெடுத்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியராக அறிவுத் துறையினரிடையே அறியப்பட்டவரும், மனித உரிமைப் போராளியுமான அவரை ஒழித்துக்கட்ட தருணம் பார்த்துக் கொண்டிருந்தது ஒன்றிய அரசு.

2014-ம் ஆண்டு ஜனவரி 9-ம் தேதி பேராசிரியர் சாய்பாபாவை விசாரிக்கும் போலீசார், அதே ஆண்டு மே 9-ம் தேதி நீதிமன்றப் பிடி வாரண்டு ஏதுமின்றி அவரது காரை வழிமறித்து கடத்திச் சென்றது. கைது செய்த போதும் சரி, அதற்குப் பின்னும் சரி பின்பற்றியிருக்க வேண்டிய சட்ட நடைமுறைகள் அனைத்தையும் மதிக்காத போலீசார், சக்கர நாற்காலியின் துணையின்றி நடமாட முடியாத, இன்னொருவரின் உதவியின்றிக் கழிவறைக்குக் கூட செல்ல முடியாத மாற்றுத் திறனாளியான பேராசிரியர் சாய்பாபாவைக் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளது.

சட்டவிரோதமாக பேராசிரியர் சாய்பாபாவைக் கடத்திய அரச பயங்கரவாதிகள், அவரை நாக்பூர் சிறையில் அடைக்கிறார்கள். அரசியல் கைதியான சாய்பாபாவை சாதாரண கிரிமினல்களுடன் அடைத்த போலீசார், பிறர் உதவியின்றி நகரக் கூட முடியாத அவரை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தரையில் தர தரவென இழுத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே உடல் இயக்க குறைபாட்டுடன் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் உள்ளிட்ட உபாதைகளோடு போராடி வந்த பேராசிரியர் சாய்பாபாவின் உடலின் மேல் போலீசார் கட்டவிழ்த்து விட்ட குரூரமான சித்திரவதையின் விளைவால் அவரது இடது கை முடமானது.

அரசு தரப்பால் பேராசிரியர் சாய்பாபாவுக்கு எதிராக சோடிக்கப்பட்ட எந்த ‘ஆதாரங்களையும்’ சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவ முடியாத நிலையில், குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கு எதிராகவும் தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.இயற்கை வளங்களை கூறு போட்டு விற்கும் அரசின் ‘கொள்கைகளை’ எதிர்க்கும் எவருக்கு எதிராகவும் இது போல் ஆயிரக்கணக்கான பொய்யான குற்றச்சாட்டுகளைப் புனையும் ஆற்றல் போலீசாருக்கு உள்ள நிலையில், எந்த தர்க்க நியாயமும் சட்டவாத அதனடிப்படையும் இன்றி தண்டனை வழங்க நீதிமன்றங்கள் தயாராக உள்ளன என்பதை இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

சாய்பாபா 90 சதவீதம் முடமானவர் என்பதைக் கணக்கில் கொண்டு அவருக்கு கருணை காட்ட முடியாது எனத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், அவர் உடல் ரீதியாக ஊனமுற்றவராக இருந்தாலும் சிந்தனை ரீதியாக உறுதியானவரெனவும் எனவே தண்டனை பெற்றாக வேண்டுமெனவும் எனத் தெரிவித்துள்ளனர். அதாவது, ஒருவர் அரசுக்கு எதிராக துப்பாக்கி ஏந்த வேண்டுமென்பதில்லை – சிந்தித்தாலே சிறை தான் என கொக்கரிக்கிறது இத்தீர்ப்பு. ஒருவரின் மூளைக்குள் இன்னது தான் இருக்கிறது என்பதை நிரூபிக்க போலீசார் அளிக்கும் “பென் டிரைவுகளும்” அதில் அவர்களே நிரப்பிக் கொடுக்கும் “ஆதாரங்களுமே” போதுமானவை என்கிற கேலிக்கூத்தான முன்னுதாரணத்தை துவங்கி வைத்துள்ளது இத்தீர்ப்பு.

கடந்த 2018 மே மாதம்  தூத்துக்குடியில், தூய காற்றுக்காக தண்ணீருக்காகவும் தொண்ணூற்றி ஒன்பது நாட்கள் போராடிய போதும் செவிடாக கிடந்த அரசை தட்டி எழுப்புவதற்காக நூறாவது நாள் லட்சம் பேர் கூடி ஸ்டெர்லைட் மூடுவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்தப் போராட்டத்தை சீர்குலைப்பதற்கு, திட்டமிட்டு போலீசும் வேதாந்தா நிறுவனமும் சேர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூடு தடியடியில் 15 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். பலரின் சொத்துக்களை திட்டமிட்டு சூறையாடியது போலீசு.

கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் எல்கர் பரிஷத் வழக்கில் கைதான, 81 வயது செயல்பாட்டாளரும் கவிஞருமான வரவர ராவ், சிறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வயோதிகம் காரணமாக சுயமாக முடிவுகள் எடுக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் வைரஸ் தொற்று சிகிச்சைக்கு முழுமையான சிகிச்சை அளிக்காமல் மீண்டும் அவரை சிறைக்கு அனுப்பியது மனித உரிமை மீறல் எனவும் அவருடைய குடும்பம் நீதிமன்றம் சென்றது. பல முறை அவருடைய பிணை மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், குறைந்தபட்ச கரிசனத்தோடுகூட சிகிச்சை கோரும் மனுவை நீதிமன்றம் அணுகவில்லை. வழக்கு விசாரணைக்கு வருவதே இழுத்தடிக்கப்பட்டிருக்கிறது.

இதே வழக்கில் 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் பழங்குடியின செயல்பாட்டாளர் 83 வயதான ஸ்டான் சுவாமி கைது செய்யப்பட்டுள்ளார். வயோதிகம் காரணமாகவும், பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் தன்னால் ஒரு கோப்பை நீரைக்கூட நடுக்கம் இல்லாமல் பிடித்து, குடிக்க முடியாது எனக் கூறி, நீரை உறிஞ்சி குடிக்க ஸ்டிரா பயன்படுத்த அனுமதிக்குமாறு நீதிமன்றம் சென்றார். கொடூர குற்றங்கள் புரிந்தோருக்கும் மனித உரிமை உள்ளதாகக் கூறும் ஜனநாயகத்தின் கீழ் இயங்கும் நீதிமன்றம், போலீசின் பொய்க் குற்றச்சாட்டில் கைதான பழங்குடிகளுக்காக உழைத்த, சமூகத்தில் மதிப்பிற்குரிய ஒரு மனிதருக்கு ஸ்டிரா வழங்கும் வழக்கைக்கூட விசாரிக்க முனையவில்லை. 20 நாட்களுக்கு அந்த வழக்கு தள்ளி வைக்கப்பட்ட‌து. சரியான அடிப்படை வசதிகளும், மருத்துவமும் அளிக்காததால் கடந்த 2021 ஜூலையில் அவரது உடல்நிலை மோசமடைந்து சுவாமி இறந்தார். இல்லை சுதந்திர அரசால் கொல்லப்பட்டார்.

2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர், இடதுசாரி சிந்தனையாளர் கோவிந்த் பன்சாரே, கல்வியாளர் எம்.எம். கல்புர்கி, பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் சனாதன் சன்ஸ்தா என்ற இந்து பயங்கரவாத அமைப்பால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கான பல்வேறு ஆதாரங்கள் கடந்த ஐந்தாண்டுகளாக வெளிவந்த கொண்டிருந்த போதிலும், இந்தப் படுகொலைகளை நடத்திய ‘சனாதன் சன்ஸ்தா’ சுதந்திர அமைப்பாகவே ‘சேவை’ ஆற்றிக்கொண்டிருக்கிறது.

மேலே எடுத்துக்காட்டியவை அனைத்தும் வகை மாதிரிகளே.  மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் அரசு என்பது இந்தியா முழுவதும் பலவகைகளில் கேலிக்கூத்தாகிவிட்டது. இது என்றுமே மக்களுக்கான அரசாக இருந்தது கிடையாது. இத்தகைய‌ அரசு எது செய்தாலும் அது அவர்களது அதிகார நலனுக்கானது மட்டுமே. தன்னுடைய இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் எதையும் இது விட்டுவைக்காது. தனது இருப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயங்காது.

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் மகாராஷ்டிரா, குஜராத் உழைப்பாளர்கள் மீதும், “எங்கள் ஊரில் அணு உலைவேண்டாம்” என்று போராடும் கூடங்குளம் மக்கள் மீதும், “எங்கள் காடுகளின் கனிம வளங்களைச் சூறையாடாதீர்கள் – எங்கள் வாழ்வுரிமைகளைப் பறிக்காதீர்கள்” என்று மறிக்கும் சோடாநாகபுரி மலைவாழ் பழங்குடி மக்கள் மீதும் தேசத்துரோகச் சட்டத்தைக் காட்டி இந்திய ஆயுதப் படைகளின் கொலைகாரத் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

காஷ்மீரையும் வடகிழக்கு இந்திய மாநிலங்களையும் இந்தியாவில் இருத்திக் கொள்வதற்காகவும் அம்மக்களின் உரிமைப் போராட்டங்களை ஒடுக்கி வைப்பதற்கும் இந்திய ஆட்சியாளர்களின் தயார்நிலை ஆயுதந்தான் ஆயுதப் படைச் சிறப்பு அதிகாரச் சட்டம்.

இப்போது சொல்லுங்கள், நாம் இருப்பது சுதந்திர நாட்டிலா?

விடுதலைப்போர் இன்னும் முடியவில்லை, இன்னும் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. அன்று பிரிட்டிஷ் அரசு இன்று ஏகாதிபத்திய வல்லூறுகளுக்கும், அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளுக்கும் சேவை செய்யும் இந்த காவி கார்ப்பரேட் பாசிச அரசு. இவர்களை முறியடித்து கோடானு கோடி உழைக்கும் மக்களின் நலன் காக்கும் ஒரு அரசு உருவாகும் நாள்தான் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உண்மையான சுதந்திர தினம்.

– அப்பு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன