இதுதாண்டா இந்தியா என்று கற்றுக்கொடுக்கும் மூதாட்டி நல்லம்மாள்

“இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு கவலையில்லை” என்று எந்த ஒரு சமூகப்பிரச்சினையாக இருந்தாலும், அதற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிச் செல்லும் இதே காலகட்டத்தில்தான், பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள நன்னை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள் என்பரும் இருக்கிறார்.

இந்த நன்னை கிராமம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை, பியான் ஏரி, சாம்பன் குளம், நல்ல தண்ணி குளம் என்று செழிப்பாகத்தான் இருந்துள்ளது. கடந்த 25 ஆண்டுகளாக ஏரி மற்றும் இதற்கு வரும் வாய்க்கால் என கிட்டத்தட்ட 45 ஏக்கருக்கும் மேலான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மூதாட்டி நல்லம்மாள் இந்த ஆக்கிரமிப்பை எதிர்த்து தனது 72 வயதிளும் சலைக்காமல் போராடி வருகிறார்.

இது தொடர்பாக 25 ஆண்டுகளாகத் தான் அளித்த மனுக்கள், 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஏரியின் வரைபடத்துடன் தனது கிராமத்தின் இயற்கை வளம் மீட்கப்பட்டுவிடாதா என்ற ஏக்கத்தில் தாசில்தார் அலுவலகம், கலெக்டர் அலுவலகம், சர்வ கட்சி அரசியல் தலைவர்கள் மற்றும் நீதிமன்றங்கள் என்று தொடர்ச்சியாகப் போராடிவருகிறார்.

அவரது வார்த்தைகளிலேயே கூறுவதானால் ‘‘சோறு திங்கணும்னா, நெல்லு வெளையணும். அந்த நெல்லு வெளையணும்னா தண்ணி வேணும். ஆனா, ஏரி, குளத்துக்கு தண்ணி வரக்கூடிய வழியையும்கூட ஆக்கிரமிச்சு வீடு கட்டிட்டா மனுசன் வாழ முடியுமா சொல்லு… பியான் ஏரி, சாம்பன் குளம், நல்ல தண்ணி குளம்னு எங்க நன்னை கிராமமே ஒருகாலத்துல செழிப்பா இருந்தது. இப்ப இதுகளுக்குத் தண்ணி வர்ற வரத்து வாய்க்காலையெல்லாம் ஆக்கிரமிச்சு வீடு கட்டிட்டாங்க. போதாக்குறைக்கு அரசுக்குச் சொந்தமான 45 ஏக்கர் நெலத்தையும் ஆக்கிரமிப்பு செஞ்சிருக்காங்க. (என்றபடி ‘மேப்’பை விரித்துக் காட்டுகிறார்.) இந்த ஆக்கிரமிப்பைப் பூரா அகற்றி, எங்க ஏரியை மீட்டுத் தாங்கன்னு வி.ஏ.ஓ., தாசில்தாரு, கலெக்டரு, சி.எம்-னு எல்லாருக்கும் மனு போட்டேன். எதுவும் நடக்கலை. ‘பேசாம ஒதுங்கிப்போயிடு’ன்னு சிலர் என்னைய மிரட்டுனாக. அ.தி.மு.க முன்னாள் எம்.பி சந்திரகாசியும், கட்சிக்காரங்க சிலரும் ‘நீ கேக்குற எடத்துலே ஒனக்கு வீடுகட்டி சாவி தாறோம். தனியா ரெண்டு ஏக்கர் நெலமும், பணமும் தாறோம். இந்தப் பிரச்னையை விட்டு விலகிக்கோ பாட்டி’ன்னு சொன்னாக. ‘சல்லிக்காசு எனக்கு வேணாம். ஏரி, குளத்தை முழுசா மீட்டுத் தாங்க சாமி’ன்னு சொல்லிட்டு வந்துட்டேன். அதுக்கப்புறமா, என்னைய கொல்றதுக்கு ரெண்டு மூணு தடவை முயற்சி நடந்துச்சு. பொதுமக்கள்தான் என்னைக் காப்பாத்துனாங்க’’

‘‘தனி ஆளா நான் போறாடுறதைப் பார்த்துட்டு அப்போ கலெக்டரா இருந்த தாரேஸ் அகமதும், அதுக்கப்புறம் வந்த நந்தகுமாரும் ஆக்கிரமிப்பை எடுக்கிறதுக்கு முயற்சி பண்ணு னாங்க. ஆனா, அவங்களை மாத்திட்டு, தங்களுக்குச் சாதகமான ஒரு கலெக்டரைக் கொண்டு வந்தாங்க அ.தி.மு.க-காரங்க. அவங்க வந்தவுடனேயே, நீர்நிலைப் பகுதிகள்ல உள்ள ஆக்கிர மிப்புகளை உடனே எடுக்கணும்கிற உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த நீர்நிலை புறம்போக்கை, நத்தம் புறம்போக்கா வகைமாற்றம் செஞ்சு, ஆக்கிரமிப்பாளர் களுக்குப் பட்டாவே போட்டுக் குடுத்துட்டாங்க. இந்தப் பிரச்னைக்காக மெட்ராஸ் ஹைகோர்ட்ல வழக்கு தொடுத்தேன். அதில், ‘ஆறே வாரத்துலே ஏரி ஆக்கிரமிப்பையெல்லாம் அகற்றணும்’னு 2013-ம் வருசமே கோர்ட் ஆர்டர் போட்டது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவை அதிகாரிங்க யாரும் மதிக்கலை.

மறுபடியும், கலெக்டர், சி.எம்-னு பத்து வருஷமா நேரா போயே மனு கொடுத்துட்டு வந்தேன். இப்போ தி.மு.க கவர்மென்ட்டு வந்த பின்னாடிதான், ‘பிரச்னைக்குரிய அந்த ஏரிப்பகுதியை அளந்து அனுப்புங்க’னு கலெக்டருக்கு உத்தரவு போட்டிருக்காங்க. ஆனா, இப்பவும் ஆக்கிரமிப்பு எடத்தையெல்லாம் விட்டுட்டு, எஞ்சியிருக்கிற ஏரியை மட்டும் அளக்க அதிகாரிங்க முயற்சி பண்றாங்க. 25 வருசத்துக்கு முன்னாடி இருந்த வரைபடத்தின்படிதான் ஏரியை அளக்கணும். அப்பத்தான் எங்க ஏரி எந்த அளவுக்கு ஆக்கிரமிக்கப்பட்டிருக்குனு தெரியும். அதுக்கப்புறம் எல்லா ஆக்கிரமிப்பையும் அகற்றி, ஏரியை முழுசா மீட்கணும்… அதுக்காகவே சொந்த ஊரைவிட்டு சொந்தக்காரங்க வீட்ல தங்கியிருக்கேன். ஏரியை மீட்ட பிறகுதான் நான் ஊருக்குள்ளேயே போவேன். இது சத்தியம்” என்றபடி ஓங்கித் தரையில் அடித்துள்ளார் மூதாட்டி நல்லம்மாள்.

இந்த ஆக்கிரமிப்பு குறித்து அ.தி.மு.க முன்னாள் எம்.பி சந்திரகாசியிடம் கேட்டால் “அதிகாரிகள்தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும், பெரம்பலூர் ஆட்சியர் வெங்கட ப்ரியாவிடம் கேட்டால் ‘நல்லம்மாவின் நீண்ட நெடிய போராட்டம் பாராட்டுக்குரியது. அதிகாரிகளிடம் கலந்து ஆலோசனை செய்து, கண்டிப்பாக நீதிமன்ற உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்கிறார்.

 

 

ஆனால் 2013ஆம் ஆண்டே, ஆறே வாரத்தில் ஏரி ஆக்கிரமிப்பையெல்லாம் அகற்றனும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த‌ 25 வருடங்களாக, திமுக வும், அதிமுகவும் மாறி மாறி வந்தாலும், பல்வேறு அதிகாரிகள் வந்து மாறினாலும், இந்த ஏரி ஆக்கிரமிப்பு மட்டும் அப்படியே இருக்கிறது. உழைக்கும் மக்களின் குடியிருப்புகளை ஆக்கிரமிப்பு என்று கூறி அவர்களை அப்புறப்படுத்த துணியும் இந்த அரசால், மக்களின் வாழ்நிலையை, இயற்கை வழங்களைச் சூறையாடும் கார்ப்பரேட்டுகளையும், பண முதலைகளையும் ஒன்றும் செய்யமுடியாது. கதவை இருகப்பூட்டி திருடன் கையில் சாவியைக் கொடுத்தது போலத்தான் இந்த அரசிடமும் அரசியல்வாதிகளிடமும் நியாயத்தை எதிர்பார்ப்பது.

இந்த அமைப்பு முறைக்குள்ளேயே நமக்கான தீர்வை தேடிச் சென்றால், 25 ஆண்டுகளல்ல, எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அடையமுடியாது. இவையே மூதாட்டி நல்லம்மாள் அனுபவம் நமக்கு உணர்த்துவது.

நன்றி: ஜூனியர் விகடன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன