மாணவி ஸ்ரீமதி மரணம் : எது வன்முறை? யார் வன்முறையாளர்கள்?

மாணவி ஸ்ரீமதியின் மரணத்தைத் தொடர்ந்து ஜுலை 17 ஆம் தேதி நடந்த போராட்டத்தை வன்முறையாகவும் கலவரமாகவும் அராஜகமாகவும் சித்தரிப்பதிலும், அந்த அருவருக்கத்தக்க பெருங்கூச்சலுக்குள் மாணவியின் மரணத்தை தற்கொலை என்று புதைத்துவிட்டதில் வெற்றி கண்டுள்ளன தமிழக அரசும் நீதிமன்றங்களும். இச்சம்பவம் தொடர்பாக போலிசு எதைச் செய்தியாக்க விரும்பியதோ அதை மட்டுமே வெளியிட்டு, வர்க்கப் பாசம் வழிந்தோட தனியார் கல்விக் கொள்ளையர்களைத் தழுவிக் கொண்டனர் ஊடக வியாபாரிகள்.

மாணவியின் மரணம் தற்கொலையல்ல என்பதற்கான ஆதாரங்கள் சமீபத்தில் வெளிவரத் தொடங்கியுள்ளன. எனினும் ஸ்ரீமதியின் மரணம் தற்கொலையோ கொலையோ இரண்டில் எதுவாக இருந்தாலும் அது தனியார் கல்விக் கொள்ளையர்களும் அவர்களைப் பாதுகாக்கும் அரசுக் கட்டமைப்பும் செய்திருக்கும் கூட்டுப் படுகொலைதான். தனியார் கல்விக் கொள்ளையர்கள் நாள் தோறும் மக்கள் மீதும் மாணவர்கள் மீதும் தொடுத்துவரும் சொல்லொனா வன்முறையின், சித்திரவதையின் நீட்சியே மாணவி ஸ்ரீமதியின் மரணம். இந்த வன்முறையாளர்களெல்லாம் கல்வித் தந்தைகளாகிவிட்ட தேசத்தில், போராடும் மக்கள் வன்முறையாளர்களாக்கப்படுவதில் வியப்பேதுமில்லை.

ஜுலை 17 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தை ‘வன்முறை’ ‘கலவரம்’ ‘அராஜகம்’ என்றெல்லாம் இழிவுபடுத்தும் பத்திரிக்கைகளும், ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளும், தனியார் கல்விக் கொள்ளையர்கள் அடிக்கின்ற பகற்கொள்ளையையும், அதற்காக மக்களை அவர்கள் ஆகக் கேவலமாக நடத்துவதையும், தங்கள் பள்ளி அதிக மதிப்பெண் பெற்ற பள்ளியாக மாறவேண்டும் அதைக் காட்டிக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களைச் சித்திரவதை செய்வதையும், அதனால் எண்ணிலடங்கா மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதையும் ஒரு பொருட்டாக மதித்ததில்லை. நியாயமான கோரிக்கைக்காகப் போராடும் மக்களை கலவரக்காரர்களாகச் சித்தரிக்கும் இவர்கள் நாள்தோறும் இந்துமதவெறியர்கள் நாடு முழுவதும் நடத்திவரும் வெறியாட்டங்களை, பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளை தப்பித் தவறிக்கூட இப்படி எழுதுவதில்லை.

 

ஸ்ரீமதியைப் போல எண்ணிலடங்கா மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கிஞ்சித்தும் கண்கலங்காத ஊடகங்களும், ஆட்சியாளர்களும் ஒரு முதலாளியின் சொத்துக்கள் (அவை கூட காப்பீட்டில் திரும்பப் பெற்றுக் கொள்ளப்படும் வாய்ப்பிருந்தும் கூட) சேதப்படுத்தப்பட்டதற்காக ஒப்பாரி வைத்து அழுதன. தமிழக அரசோ அதையே பயன்படுத்தி மக்கள் மீது கொடிய அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டு, தன் நன்றி விசுவாசத்தைக் காட்டியது. ஜுலை 17 போராட்டத்தைத் தொடர்ந்து பள்ளியின் தாளாளரின் மனைவி சாந்தி, மாணவர்களின் சான்றிதழ்கள், படிக்க வைத்திருந்த மேசைகள் இவையெல்லாம் சேதப்படுத்தப்பட்டது மனவருத்தமளிப்பதாக நீலிக் கண்ணீர் வடித்தார். ஸ்ரீமதியின் தாய் தனது மகளை இழந்த துயரம் தாளாமல் நெஞ்சு வெடித்துக் கதறிய வீடியோவைப் பகிர்ந்தவர்கள் வன்முறையைத் தூண்டியவர்களாக்கப்பட்டனர். ஆனால் சாந்தி கக்கியதை தமிழகம் முழுதும் தங்கத் தட்டில் சுமந்து சென்று பரப்பிய ஊடகங்களோ அமைதியின் தூதுவர்களாகிவிட்டனர். சில தினங்கள் கழித்து சாந்தி கூறியதையே அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் கூறினார். நீண்ட நாட்கள் கழித்து தூக்கத்திலிருந்து எழுந்தாற்போல, ‘ஒரு மாணவியின் மரணத்துக்காக 3000 பேரின் சான்றிதழ்களை எரிக்கலாமா’ என்று எதோ அந்தச் சான்றிதழ்கள் திரும்ப அச்சடிக்கவே முடியாதவை போல அறச்சீற்றத்துடன் பொங்கினார்.

மாணவியின் மரணத்திற்குப் பிறகு மாவட்ட ஆட்சியாளர் கூட சம்பவ இடத்தைப் பார்வையிட வரவில்லை. ஆனால், ஜுலை 17 போராட்டத்தைத் தொடர்ந்து பள்ளிகளை மூடுவோம் என்று தனியார் பள்ளி கூட்டமைப்பு திமிறாக மிரட்டியது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கு 987 தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தன. அரசை வெளிப்படையாக மிரட்டி, விடுமுறை அறிவித்த கல்விக் கொள்ளையர்கள் மீதோ அவர்களது பள்ளிகள் மீதோ நடவடிக்கை எடுக்கத் துப்பில்லாத தமிழக அரசு தனியார் பள்ளி கூட்டமைப்பை சாந்தப்படுத்த அடுத்த நாளே 4 அமைச்சர்களை கள்ளக்குறிச்சிக்கு ஆனுப்பியது.

தனியார் பள்ளி கூட்டமைப்பு என்ற பெயரில் அரசை மிரட்டும் கல்வி கொள்ளை கும்பல்
தனியார் பள்ளி கூட்டமைப்பு என்ற பெயரில் அரசை மிரட்டும் கல்வி கொள்ளை கும்பல்

மாணவி மரணம் கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் எந்தக் கருத்தையும் சொல்லாத, அதைப் பற்றி அக்கறை கொள்ளாத சென்னை உயர்நீதிமன்றம் ‘வன்முறை திட்டமிட்டு நடத்தப்பட்டது’ என்று தீர்ப்பெழுதி ‘வன்முறையாளர்களை’ வேட்டையாட போலிசை ஏவியது. நீதிமன்றத்தின் வழிகாட்டலுக்குப் பின், போராடிய மாணவர்கள், இளைஞர்களை மட்டுமின்றி வாட்சாப் ஸ்டேடஸ் போட்டவர்களைக் கூட தேடித் தேடி நரவேட்டையாடியதுடன், அவர்களின் கை கால்களை முறித்து கழிவறையில் வழுக்கி விழுந்ததாகக் கதையெழுதியது போலிசு.

மாணவி இறந்து 3 நாட்களாகியும் ஏன் யாரையும் கைது செய்யவில்லை என்ற கேள்விக்கு, “ஆசிரியர்களை விசாரனையின்றி உடனடியாகக் கைது செய்ய முடியாது” என்று கூறினார் டி.ஜி.பி. ஆனால், போராடியவர்கள், ஸ்டேடஸ் போட்டவர்களை எந்த விசாரணையும் இன்றி கைது செய்து எலும்பை முறித்தது போலிசு. இச்சம்பவத்தை எதிர்த்து வாய்திறக்க முடியாத அளவுக்கு தமிழகத்தில் போலிசு இராஜ்ஜியம் கட்டவிழ்த்துவிடப்பட்டது.

இவையெல்லாம தனியார் கல்விக் கொள்ளையர்களின் ஏவலாளாக அரசும் நீதிமன்றங்களும் மக்கள் மீது ஏவிய வன்முறைகள் இல்லையா?

போராடியவர்களில் சிலர் சக்தி மேல்நிலைப் பள்ளியிலிருந்து மேசை நாற்காலிகள் எடுத்துச் சென்றதைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத மாவட்ட நிர்வாகம், தண்டோரா மூலம் மக்களை அச்சுறுத்தி தனியார் முதலாளிக்கு தன் விசுவாசத்தைக் காட்டியது. மக்களும் தாங்கள் எடுத்துச் சென்ற பொருட்களைக் கொண்டுவந்து பள்ளி வளாகத்தில் போட்டனர். ஊடகங்ளும் தன்பங்கிற்கு இதைக் கூச்சமே இன்றித் ‘திருட்டு’ என்றும் ‘திருடர்கள்’ என்றும் எழுதின. சுற்றுவட்டார மக்களின் ஈரக்குலையை அறுத்துச் சேகரித்த ஒரு தனியார் கல்விக் கொள்ளையனின் பொருட்களை, மக்கள் எடுத்துச் சென்றதை இப்படி எழுதும் பத்திரிக்கைகள், இந்துமதவெறியர்கள் கலவரம் நடத்தும் இடத்திலிருந்து பிரியாணி அண்டாவைத் திருடிச் சென்றதையும், அப்பாவி இசுலாமியர்களின் பொருட்கள் உடைமைகளைச் சூறையாடிச் சென்றதையும் இப்படி எழுதுவார்களா? அரசால் ‘நிர்ணயிக்கப்பட்ட’ கல்விக் கட்டணத்தை தாண்டி நன்கொடை, சீருடை, புத்தகங்கங்கள் எனப் பல்வேறு பெயர்களில் மக்களிடமிருந்து பிடுங்கும் தனியார் கல்விக் கொள்ளையர்கள் இவர்களின் காமலைக் கண்களுக்குத் திருடர்களாகத் தெரியவில்லையா?

தன் மகன் / மகளின் மாற்றுச் சான்றிதழைப் (TC) பெற முயலும் – குறிப்பாக 9 ஆம் வகுப்பிலிருந்தோ 11 ஆம் வகுப்பிலிருந்தோ – மாற்றுச் சான்றிதழைப் பெற முயலும் பெற்றோர்களை, அந்த இடத்திற்கு (seat) யாரும் வரமாட்டார்கள் என்று கூறி சில ஆயிரங்கள், இலட்சங்கள் கேட்டு மிரட்டுகின்றன தனியார் பள்ளிகள். அதேபோலத்தான் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்புவரை சக்தி மெட்ரிக் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதியை கல்விக் கட்டணத்தின் சுமை தாங்க முடியாமல் அவளின் பெற்றோர் 12 ஆம் வகுப்பிற்கு வேறு பள்ளியில் சேர்த்துள்ளனர். ஆனால் சக்தி மெட்ரிக் பள்ளி நிர்வாகமோ மாற்றுச் சான்றிதழைக் கூடக் கொடுக்காமல் மிரட்டி, ஸ்ரீமதியை மீண்டும் அதே பள்ளியில் சேர்க்க வைத்துள்ளது. இவ்வாறு மிரட்டிப் பணம் பறிக்கும் சக்தி மெட்ரிக் பள்ளியும் அதைப் போன்ற தனியார் கொள்ளையர்களும் வன்முறையாளர்களோ திருடர்களோ இல்லையா?

ஸ்ரீமதியின் உடலை மீண்டும் உடற்கூராய்வு செய்யும் போது, தனது தரப்பு மருத்துவர் ஒருவர் உடனிருக்க வேண்டும் என்ற சாதாரண கோரிக்கையைக் கூட மறுத்தன உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும். அவ்வாறு மறுத்ததுடன், பிணத்தைப் பெற்றுக் கொள்கிறாயா? இல்லை போலீசை வைத்து எரிக்கச் சொல்லட்டுமா? என்று மிரட்டி உடலை வாங்க வைத்தது உயர் நீதிமன்றம். மாணவியின் உடலை வைத்துக் கொண்டு விளையாடுவதாக ஸ்ரீமதியின் பெற்றோர் மீது இரக்கமே இன்றிப் பழிதூற்றியது, ஊடகங்களுக்குப் பேட்டி கொடுக்கக் கூடாது என மிரட்டி வைத்தது.

இவ்வாறு அவசர அவசரமக மாணவியின் உடலோடு உண்மையையும் சேர்த்துப் புதைக்க தமிழக அரசும், நீதிமன்றமும் மேற்கொண்ட முயற்சிகள் இப்போது அம்பலமாகி வருகின்றன.  மாணவியின் முதல் உடற்கூராய்வின்படி, அது தற்கொலையாக இருக்க வாய்ப்பில்லை என்ற உண்மையை அம்பலப்படுத்தியுள்ளார் ஸ்ரீமதிக்காக வாதாடிய மூத்த வழக்கறிஞர் சங்கர சுப்பு. மாணவியின் வலது மார்பில் பற்களால் கடித்தாற் போன்ற காயம், வலது தோள்பட்டையில் காயம், பின்னங்கழுத்தில் இரும்பால் அடித்தது போன்ற காயம் இருப்பதாக உடற்கூராய்வு கூறுகிறது. மேலும் அவர் பாலியல் வல்லுறுவுக்கு உள்ளாக்கபட்டாரா என்பதை பெண்ணுறுப்பின் திரையை (Hymen tissue) ஆய்வு செய்து கூறாமல் வெறுமனே பெண்ணுறுப்பின் மேற்பரப்பு காயமின்றி இருப்பதாகக் கூறியுள்ளது அவ்வறிக்கை. மேலும் மாடியிலிருந்து ஒருவர் குதிக்கும்போது ஏற்படும் பாரசூட் விதியின் படி முதலில் உள்ளங்கையிலும் கால்களிலும்தான் அடிபட வேண்டும் ஆனால் ஸ்ரீமதியின் உள்ளங்கை, கால்கள் அடிபடவில்லை. இவற்றையெல்லாம் கொண்டு பார்க்கும்போது இது தற்கொலையாக இருக்க வாய்ப்பே இல்லை என்கிறார் சங்கர சுப்பு.

மேலும் முதல் உடற்கூராய்வில் உரிய தடயவியல் மருத்துவத்தில் தேர்ச்சி பெற்ற மருத்துவர்களைக் கொண்டல்லாமல் கீழ்நிலையிலுள்ள மருத்துவர் ஒருவரைக் கொண்டும், மகப்பேறு மருத்துவர் ஒருவரைக் கொண்டும் உடற்கூராய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இது முற்றிலும் விதி மீறல் என்றும் கூறுகிறார் சங்கர சுப்பு. மாணவி எழுதி போலிசு கைப்பற்றியதாகக் கூறப்படும் தற்கொலைக் கடிதத்தில் இருக்கும் கையெழுத்து தனது மகளுடையது அல்ல என்று கூறி போலிசின் முகத்தில் கரியைப் பூசியுள்ளார் ஸ்ரீமதியின் தாய். இந்த உண்மைகளையெல்லாம் சமூக வலைத்தளங்கள், சில யூடியூப் சேனல்களைத் தவிர எந்த ஊடகமும் பிரசுரிக்கவில்லை.

இச்சம்பவங்களைத் தொகுத்துப் பார்த்தால், தடயவியல் துறை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை நிர்வாகம், போலிசுத்துறை, நீதிமன்றங்கள், ஊடகங்கள் இவையனைத்தும் ஒரு தனியார் பள்ளியின் அடியாளாகச் செயல்பட்டு, கூட்டாகச் சேர்ந்து ஸ்ரீமதியின் மரணத்தைத் தற்கொலை என்று கதையெழுதி, அம்மாணவியை மீண்டும் ஒருமுறை  படுகொலை செய்தன என்று கூறாமல் வெறெப்படிக் கூறுவது? இந்தக் கொடிய வன்முறையைக் காட்டிலும் சக்தி மெட்ரிக் பள்ளியின் கட்டிடத்திற்கு தீவைத்த மக்களின் நியாயமான கோபம் அராஜகமானதா? இரண்டில் எது பயங்கரவாதம்?

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்துப் போராடிய இளைஞர்கள் வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்று சித்தரிக்கப்பட்டதும், அவர்கள் 290 கோடி மதிப்புள்ள இரயில்வே துறையின் சொத்துக்களை அழித்துவிட்டதாகவும் ஒப்பாரி வைத்தனர் ஊடகங்களும் ஆளும் வர்க்க அறிவு ஜீவிகளும். இவர்கள் தான் கோடிக்கணக்கான மக்களின் வியர்வையாலும் இரத்தத்தாலும் நூறாண்டுகளாக உருவாக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதரத்துக்கு அடிப்படையாகவும் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவும் இருக்கும் இரயில்வே துறையை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பதை ‘வளர்ச்சி’ என்று புளகாங்கிதம் அடைபவர்கள். மக்களின் நியாயமான போராட்டம் ‘பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக’ கூப்பாடு போடும் இவர்கள், அப்பாவி இசுலாமியர்கள் வாழ்நாளெல்லாம் உழைத்து உருவாக்கிய வீடுகள் பாசிச பயங்கரவாதிகளின் புல்டோசர்களால் தரைமட்டம் ஆக்கப்படுவதைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாதவர்கள்.

 

 

ஆளும் வர்க்கங்களும் அவர்களின் அடிவருடிகளும் கிளப்பிவிட்ட ‘வன்முறை வன்முறை’ என்ற அருவருக்கத்தக்க கூச்சலுக்கு பலியாகியும் அஞ்சியும் சிலர், “வன்முறையில் ஈடுபட்டவர்களை சிசிடிவி வைத்துக் கைது செய்ய வேண்டும்” என்றும் “கலவரக்காரர்கள், தீவைத்தவர்களைக் கைது செய்து கொள்ளுங்கள், வாட்சாப்பில் போட்டவனையெல்லாம் ஏன் கைது செய்கிறீர்கள்” என்று இரண்டாகப் பிரித்தும் பேசுகின்றனர். இத்தகையை பேச்சுக்கள் இடது கையால் புறந்தள்ளப்பட வேண்டியவை.

நாள்தோறும் மக்கள் மீது தொடுக்கப்படும் அரச பயங்கரவாதத்தையும் பாசிச பயங்கரவாதத்தையும் எதிர்த்த மக்களின் வன்முறை தவிர்க்க முடியாததும் அதன் எதிர்வினையானதும் மட்டுமல்ல, சரியானதும் நியாயமானதும் கூட.

மாணவியின் ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் எனப் போராடியவர்கள் சிறையில் உள்ளனர். ‘வன்முறையைத் தூண்டியவர்களை’ நரவேட்டையாட அமைக்கப்பட்ட சிறப்புப் புலனய்வுக் குழுவில் மேலும் 56 அதிகாரிகள் இணைக்கப்பட்டு அரச வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. ‘வன்முறை’ என்ற பெருங்கூச்சலுக்கு மத்தியில் எல்லா உண்மைகளையும் போட்டுப் புதைத்துவிட்டன தமிழக அரசும் நீதிமன்றங்களும். மாணவி ஸ்ரீமதி இறந்த இரத்தக் கறையும் அவளின் பெற்றோரின் முகத்தில் வடியும் கண்ணீரும் கூட இன்னும் ஈரம் காயவில்லை. ஆனால், அதற்குள்ளாக சக்தி மெட்ரிக் பள்ளியைத் திறக்கத் துடிக்கிறது தமிழக அரசு. என்ன செய்யப் போகிறோம்?

  • ரவி

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன