தொடர்ந்து அதிகரிக்கும் வேலைவாய்ப்பின்மை விகிதம்! மோடி அரசின் கையாலாகாத்தனம்!

ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மோடி வாக்குறுதி கொடுத்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் படி பார்த்தால் 16 கோடி பேருக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் வேலையின்மையின் அளவானது இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தை எட்டியுள்ளது. அக்னீபாத் திட்டத்தின் கீழ் கடற்படையில் உள்ள 30000 பணிகளுக்கு 7.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதை இதற்கு சான்றாகக் கூறலாம். வேலையின்மை பிரச்சினையால் கோடிக்கணக்கான இந்திய குடும்பங்கள் தங்கள் வாழ்க்கையை நகர்த்த முடியாமல் திணறுகின்றன. மோடியின் பொய் வாக்குறுதியும். பா.ஜ,கவின் வெற்றுக் கூச்சலும், இந்திய உழைக்கும் மக்களின் வாழ்நிலைமைகளும் இரு வேறு துருவங்களாக உள்ளன.

வரும் ஒன்றறை ஆண்டுகளில் பத்து இலட்சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று பிரதம மந்திரி அலுவலகம்  சமீபத்தில் அறிவித்துள்ளது. இதை ஒரு வரலாற்று நிகழ்வு என மோடியின் சகாக்கள் பேசிவருகின்றனர். ஆனால்  இரண்டு கோடி வேலைவாய்ப்பு எங்கே என்று கேட்டால் பக்கோடா விற்பதும் வேலைதான் என்று பதிலளிக்கிறனர்.

சமகால வேலைவாய்ப்பு பற்றி விவரங்களை CMIE நிறுவனம் ஜூலை மாதத்தில் வெளியிட்டது அதில் 2022 -மே மாதத்தில் 40.4 கோடியாக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கை 2022- ஜீன் மாதத்தில் 39.1 கோடியாக சரிந்து உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதாவது ஓரு மாதத்தில் 1.3 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.

கூடவே, LPR –  labour participation ratio இந்தியாவில் மே மாதத்தில் 39.91% லிருந்து ஜூன் மாதத்தில் 38.3% ஆக குறைந்துள்ளது. LPR ஆனது இந்தியாவில் வேலையில் உள்ளோர் மற்றும் வேலை தேடுவோர் ஆகியோரை உள்ளடக்கியதாகும். கரோனா பாதிப்புகளுக்கு பிறகு கடந்த இரண்டாண்டுகளில் ஜீன் 2022 மாதம் தான்  குறைந்த LPR விகிதத்தை இந்தியா பெற்றுள்ளது. அதாவது இந்திய இளைஞர்களில் கணிசமானோர் வேலை தேடுவதையே விட்டுவிட்டனர் என்று அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாக வேலையில்லாதவர் விகிதம் (un employment ratio)  மே மாதத்தில் 7.1% லிருந்து ஜூன் மாதத்தில் 7.8% ஆக உயர்ந்துள்ளது.  கடந்த ஜூன் மாதத்தில் வேலை இழந்த 1.3 கோடிபேரில், 80 இலட்சம் பேர் விவசாயம் சார்ந்த தொழில்களில்  ஈடுபடுபவர்கள், குறிப்பாக விவசாய கூலித் தொழிலாளர்கள்,சிறு/குறு விவசாயிகள்  என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் பல பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யாததால் நெற்பயிர் விதைப்பு கடந்த ஆண்டைவிட 24% குறைந்துள்ளதாகவும்  இதனால் கரீப் பருவ விதைப்பு குறைந்து போய் விவசாயத் துறையை சார்ந்த 80 இலட்சம் பேர் வேலை இழந்திருக்கின்றனர் என்று முதலாளித்துவப் பொருளாதாரப் பத்திரிக்கைகள் விளக்கங்கள் கூறுகின்றனர்.

 (https://economictimes.indiatimes.com/news/economy/agriculture/paddy-sowing-down-by-24-oilseeds-20-so-far-due-to-less-rains-in-some-parts-govt-data/articleshow/92754823.cms)

ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயத்துறையில் வேலைவாய்ப்பு தேக்க நிலையில் உள்ளதென்பதை CIMEன் அறிக்கைகள் கூறுகின்றன. 2016-17 ல் இருந்து 2018-2019 வரையில் விவசாயத் துறை வேலைவாய்புகள் படிபடியாக  குறைந்து வந்துள்ளதை அதன் புள்ளிவிவரங்கள் காட்டுக்கின்றன. அடுத்த இரண்டாண்டுகள் கொரோனா ஊரடங்கு என்பதால் (2019-20 லிருந்து 2020-21 வரை) பெரும்பான்மையினர் விவசாயம் உள்ளிட்ட கிராமப்புறம் சார்ந்த வேலைகளில் பங்கெடுத்தனர். இதனால் இக்காலகட்டத்தில் விவசாயக் கூலிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனோடு கூடவே மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலைவேண்டி பதிந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆனால் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியையும் மோடி அரசு  கணிசமாக குறைத்திருந்தது.

 

 

What data has been telling us: The job crisis is real

2021-22 நிதியாண்டிற்காக பட்ஜெட்டில், 73000 கோடியை மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்காக ஒதுக்கினார்கள். பிறகு 98000 கோடி என மறுமதிப்பீட்டில் உயர்த்தப்பட்டது. ஆனால் 2022-23 ஆண்டு பட்ஜெட்டில், விண்ணப்பித்திருந்தோர் எண்ணிகை அதிகரித்திருந்த போதும், இத்திட்டத்திறாக 73000 கோடி தான் ஒதுக்கியிருந்தனர். (https://thewire.in/government/union-budget-rise-demand-mgnrega-allocation-unchanged)

2022-23  ஆண்டிற்கான பட்ஜெட்டை சமர்பித்தி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரத்தை வழிநடத்துவதற்கான அடித்தளம் என்றார். இதில் உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்காக (பிரதமரின் அதிவிரைவு சக்தி – PM Kati Sakthi) சாலைப் போக்குவரத்து, நீர்வழித்தடங்கள், இரயில்வே ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது. பருவமழை தவறுதல் மற்றும் விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு, கொரோனா  பெருந்தோற்று முடக்கம், புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்புதல், வேலையின்மை போன்ற பிரச்ச்சினைகளால் அல்லல்படும் இந்தியக் குடும்பங்களின் உயிராதாரமானப் பிரச்சனைகளை பற்றி நிதியமைச்சர் பெரியதாக எதுவும் கண்டுகொள்ளவில்லை.

https://www.livemint.com/budget/news/budget-misses-out-on-short-term-consumption-boost-11643721256213.html

விவசாயம் சார்ந்த தொழில்கள் மட்டுமில்லாமல் மாத ஊதியம் பெறும் தொழிலாளர்களில் 25 இலட்சம் பேர் ஜூன் மாதத்தில் மட்டும் வேலை இழந்துள்ளனர். மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் உற்பத்தியையும் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கும் என்று கூறி இத்திட்டத்தினை மோடி அறிமுகப்படுத்தினார். ஆனால் 2016-17ல் 5.1 கோடியாக இருந்த உற்பத்தித் துறையைச் சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை  46% சரிந்து, 2020-21 ல் 2.73 கோடியாக உள்ளது. கடந்த ஐந்து வருடங்களில் ஏறத்தாழ 50 சதவிகத வேலையிழப்புகள் தொழில்துறையில் நடந்துள்ளன.

மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையினால் தொழிலாளர்களின் வேலை உத்திரவாதம் , வேலை பாதுகாப்பு என்பது காகிதத்தில் கூட இல்லாமல் உள்ளது. திருத்தப்பட்ட  நான்கு தொழிலாளர் நல குறியீடுகள் அமுல்படுத்தப்படும் போது தொழிலாளர்கள் மீதான சுரண்டல்கள் இன்னும் தீவிரமடையும்.

இது குறித்து கேரள அரசின் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன் குட்டி குறிப்பிடும் போது, தொழிலாளர்களை அதிக திறன் வாய்ந்தவர்கள், திறன் வாய்ந்தவர்கள், அரை திறன் வாய்ந்தவர்கள், திறனற்றவர்கள் என்று நான்காகப் பிரிப்பது அவர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை வகுப்பதை சிக்கலாக்குகிறது. 300 க்கும் குறைவான தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலைகளில் வேலையை விட்டு நீக்கும் அனுமதி, 12 மணி நேர வேலை போன்றவை புதிய தொழிலாளர் சட்டத்தில் உள்ளதாகக் கூறுகிறார்.

https://www.thehindu.com/news/national/kerala/new-labour-codes-do-not-recognise-legitimate-rights-of-workers-sivankutty/article65593321.ece

கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு cost cutting என்ற பெயரில் தொழிலாளர் ஊதியக்க்குறைப்பு ஆட்குறைப்பு, போன்றவற்றை செய்து வருகின்றன. புதியதாக ஆட்களை தேர்வு செய்வதை குறைத்து வருகின்றன தனியார் தொழிற் நிறுவனங்கள்.

https://www.thehindu.com/opinion/op-ed/create-more-jobs-revamp-employment-policy/article65632376.ece

இந்தியக் குடும்பங்களின் வாங்கும் சக்தி குறைந்திருப்பது,  வேலையின்மை ஆகியவை உச்சத்திலிருக்கும் இதே காலகட்டத்தில்தான் இந்திய முதலாளிகளின் லாபமும் வரலாறு காணத அளவு அதிகரித்திருக்கிறது. அதானி உலகின் நான்காவது பெரும் பணக்காரராக உயர்ந்திருக்கிறார்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் (4700 நிறுவனங்கள்) மொத்த லாபம் 2020-21 ல் 5.5 இலட்சம் கோடியிலிருந்து 2021 -22ல் 9.3 இலட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.  மக்கள் இதே காலக்கட்டத்தில் வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டு உள்ள அதே சமயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில்  மக்களின் துயரத்துக்கு காரணமான இந்த காவி- கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவது தான் நமது முதல் வேலை.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன